காதோடு மௌனங்கள் – 1.2

பன்னிரெண்டரை மணிக்கு மதிய உணவு தயாரானதும் ஆட்கள் குவியத் தொடங்கினர். சஷ்டிகா உணவகம் கிழக்குத் தாம்பரத்தில் அமைந்திருந்தது. அருகே பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம் என ஆட்களுக்கு பஞ்சமில்லாமல் எப்போதும் உணவகம் நிரம்பி வழியும். ஜீவாவிற்குத்தான் தினமும் வேலை நெட்டி முறித்தது.

முன்பெல்லாம் இந்தளவிற்கு கூட்டம் வராது. இப்போது அலைபேசியை வைத்துக்கொண்டு இன்ஃப்ளூயன்ஸர்கள் என்ற பெயரில் இளைஞர் பட்டாளம் கிளம்பியிருக்க, இணையதள உதவியுடன் அவர்கள் உணவகம் மெல்ல அந்தப் பகுதியில் பிரசித்திப் பெற ஆரம்பித்தது.

முதலில் மேன்சன் ஆட்கள் மட்டும் தினமும் உணவுண்ண வருவார்கள். இப்போதெல்லாம் வெவ்வேறு பகுதியிலிருந்து ஆட்கள் குவியத் தொடங்கினர். முன்பு மூன்றே பேரைக் கொண்டு இயங்கிய உணவகம், இப்போது ஏழு பேர் இருந்தும் சமாளிக்க முடியாமல் திணறினர். ஜீவாதான் எல்லோரையும் அதட்டி வேலை வாங்கியபடியே, தானும் பம்பரமாய் சுழல வேண்டியிருந்தது.

மதிய உணவு நேரம் முடிந்ததும் சற்று நேரம் ஆசுவாசம் செய்தவள், அலைபேசியை எடுத்து அதில் கண்களை ஓட்டினாள். கேலிக்கை காணொளிகள் வந்த வண்ணமிருந்தன.

“இயக்குநர் தேவ்பிரசாத் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான டம்பிள் திரைப்படம் மெஹா ஹிட். இத்தோடு இந்த வருடத்தில் அவருக்கு இது இரண்டாவது பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்!” எனத் தொடர்ந்து அந்த இயக்குநரைப் பற்றியும் திரைப்படத்தைப் பற்றியுமே செய்திகளும் காணொளிகளும் படத்தின் துணுக்குகளோடு வந்தன. இவள் ஒவ்வொன்றாகத் தள்ளிவிட்டுப் பார்த்தாள்.

கோமதியும் நந்தினியும் உள்ளே தரையில் பாய் விரித்துப் படுத்து சற்று நேரம் ஓய்வெடுக்க, அசார் வெளியே சென்றுவிட்டார். பாபு அலைபேசியில் யாருடனோ குசுகுசுவென பேசினான். இவள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தேவ்பிரசாத்தைப் பற்றிய செய்தியைப் பார்த்தாள். பின்னர் நேரமானதை உணர்ந்து, சூடாக தேநீர் வடையுடன் அனைவரையும் துரிதப்படுத்தியவள், இரவு உணவு பட்டியலுக்குத் தயார் செய்தாள்.

“அக்கா…” கீச்சுக் குரலில் தனக்குப் பின்னே கேட்ட குரலை அலட்சியம் செய்து ஜீவா உணவு பரிமாற, வேலு அவள் போகும் இடத்திற்கெல்லாம் நடந்தான்.

“அக்கா… ப்ளீஸ்கா. ஹாஃப் அன் அவர் வொர்க் பண்றேன். ஒரு பிஃப்டி ரூபீஸ் வேணும்கா!” என அவன் கூற,

“ஹோம் வொர்க் முடிச்சிட்டியா?” அவள் கண்டிப்புடன் கேட்டபடியே வேலை பார்த்தாள்.

“ச்சு…‌ அதெல்லாம் எப்பவோ முடிச்சுட்டேன். எனக்கு ஏதாவது வேலை குடு…” அவன் அடமாக நின்றான்.

“வாரத்துல நாலு நாள் என்கிட்டே காசு கேட்டு வந்துடுற. காலைல அம்மாட்டருந்து வாங்கிட்டு போற. அப்படி என்னதான்டா இந்த வயசுல உனக்கு செலவு?” அவள் அதட்டலாகக் கேட்டாள்.

“அக்கா… நான் ஒன்னும் சும்மா கேட்கலை. பசங்க இந்த வருஷத்துக்கு ஜெர்சி அடிக்கப் போறானுங்க. அதுக்கு ஐநூறு ரூபா வேணும். அதான் சேர்த்து வச்சிட்டுருக்கேன். ஜெர்சி இல்லாம நான் மட்டும் எப்படி கிரவுண்ட்ல விளையாட முடியும். நல்லா இருக்காதுக்கா!” அவன் மீண்டும் கெஞ்ச,

பெருமூச்சுடன் நிமிர்ந்தவள், “சரி… நைட்டு நான் காசு தரேன். நீ வேலை எதுவும் பார்க்க வேணாம். போய் ஹோம் வொர்க் பண்ணு…” என்றாள் சின்ன குரலில்.

“தேங்க்யூகா… தேங்க்யூ சோ மச்!” எனத் துள்ளி குதித்தவன், வீட்டுப் பாடம் செய்ய ஓடிவிட்டான். சஷ்டிகா எட்டு மணி போல வந்தாள்.

“அசார் அங்கிள்… எனக்கு ஒரு நெய் ரோஸ்ட். கொஞ்சமா பொடி போடுங்க!” என அவரிடம் கூறிவிட்டு தாயோடு கல்லாவில் அமர்ந்தாள். வந்ததும் உடை மாற்றி, முகம் கழுவி, ரெட்டை ஜடையை அவிழ்த்துப் ஒற்றையாய்க் குதிரை வாலிட்டிருந்தவள், முகத்தில் ஏதோ முகப்பூச்சைப் பூசி பளபளவென்றிருந்தாள்.

தாய் காலையிலிருந்து பார்த்த வரவு செலவு எல்லாம் சரியாக உள்ளதா எனப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டவள், ஏதோ புத்தகம் வாங்க வேண்டுமென அவரிடம் இருநூறு ரூபாய் தாளை வாங்கிவிட்டு அகன்றாள்.

வேலுவைப் போல சின்னவளுக்கு ஜீவாவிடம் பெரிதாக ஓட்டுதல் இல்லை. இவளுக்கும் அவர்களுக்கும் இடையே பதிமூன்று வருட இடைவெளி. வேலுவை ஜீவாதான் தூக்கி வளர்த்தாள். சஷ்டிகாவையும் கூட அவள்தான் பார்த்துக் கொண்டாள். ஆனால் சின்னவன் ஜீவாவிடம் உரிமையோடு பழகுவான், பேசுவான். நம்முடைய உணவகம் என எந்த வேலையையும் முகம் சுளிக்காமல் எடுத்து செய்வான்.

ஆனால் சஷ்டிகாவிற்கு அதெல்லாம் வராது. ம்கூம்… பிடிக்காது என்பதே தகும். அவளுக்கு சாப்பிடும்போது உடையில் சாம்பார் கறை பட்டு விட்டாலே அது ஏதோ பெரிய குத்தம் போல முகத்தைத் தூக்குவாள். உடனே சென்று உடை மாற்றி வருவாள். வீட்டிலிருந்து கடைக்கு வருவதற்கு ஒரு ஆடை, இரவு தூங்குவதற்கு வேறு வகையான உடை என அவள் எப்போதும் நேர்த்தியாக இருப்பாள்.

வேலு அவளுக்கு எதிர்மாறான குணம் உடையவன். கலகல சுபாவம், எல்லோருடனும் எளிதில் ஒட்டிக் கொள்வான். ஜீவா அவர்கள் இருவரிலும் சேர்த்திக் கிடையாது. தேவைக்குப் பேசுவாள். வாடிக்கையாளரிடம் முயன்ற அளவு புன்னகை முகமாக நடந்து கொள்வாள். அவளுக்குப் பிடிக்கவில்லை எனினும் கூட யாரிடமும் முகத்தைக் காண்பிக்காமல் பொறுமையாக நடந்து, அனைத்து வாடிக்கையாளரையும் மீண்டும் இங்கு வருமளவிற்கு கவனிப்பாள்.

ஆனால் தனிப்பட்ட முறையில் அவள் அமைதிப் பேர்வழி. குணமான பெண் என்றாலும் கண்டிப்பு அதிகம். தம்பியை அதட்டி படிக்கச் சொல்லுவது, வேகமாக சாலையில் செல்லக் கூடாது எனக் கண்டிப்பது என அவனைத் தன் பார்வையிலே வைத்திருப்பாள். சஷ்டிகா இவளிடம் என்ன என்பது போல பட்டும்படாமலும் நடந்து கொள்வாள். அதே போல மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு வைத்துக் கொள்ள மாட்டாள். ஓரளவிற்குப் படிப்பிலும் கெட்டி. மனிதர்களையும் கணித்து அவர்களுக்கு ஏற்ப நடப்பாள். அவளுக்கு யாரும் தன்னை அதட்டுவது பிடிக்காது. அதனாலே ஜீவாவிடம் ஒதுக்கம் காண்பிக்க, பெரியவளும் அதைப் புரிந்து தனது எல்லைக்குள்ளே நின்று கொண்டாள்.

வேலு வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டு வந்து கடையில் அமர்ந்துவிட்டான். ஆட்கள் வருகை வெகுவாகக் குறைய, மூத்த பெண்கள் எப்போதோ சமைத்த பாத்திரத்தைக் கழுவி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றிருக்க, அசாரும் அகன்றார். கடைசியாய் உண்ட ஒருவருக்கு உணவு வைத்த பாபு இவளிடம் கையைக் காண்பித்துவிட்டு, அலைபேசியைக் காதிற்கு கொடுத்தவாறு நடந்தான்.

மீதமிருந்த பாத்திரங்களை ஜீவா கழுவ, கிரிஜா கல்லா பெட்டியைப் பூட்டினார். வேலு எழுந்து தமக்கையிடம் சென்றான்.

“டைம் என்னாச்சு… நீ தூங்காம இங்கயே இருக்க? நான்தான் காசு தரேன்னு சொன்னேன்லடா?” என அவனை அதட்டினாள் ஜீவா.

“ப்ம்ச்… காசுக்காக ஒன்னும் இல்ல நான். நீயும் அம்மாவும் தனியா இருக்கீங்கன்னு உங்க சேஃப்டிக்காக இருக்கேன் நான்!” அவன் ரோஷத்துடன் கூற, இவளிடம் புன்னகை முளைத்தது.

“ஆமாடா… இதே அக்கறையை நாளைக்குக் காட்டுறீயான்னு நானும் பார்க்குறேன். அப்பாவை எழுப்பி வீட்டுல படுக்க சொல்லு. நான் ஹோட்டலை அடைச்சிட்டு வரேன்!” என இவள் கூற, கிரிஜா கணவரை எழுப்பி வீட்டிற்கு செல்லப் பணித்தார். ஜீவா கதவை இழுத்துப் பூட்டிவிட்டு தாய், தம்பியுடன் இருப்பிடத்தை அடைந்தாள்.

“வேலு…” என அவனைத் தாயறியாமல் அழைத்து ஐநூறு ரூபாய் தாளைக் கொடுத்தாள் தமக்கை. அவன் முகம் மலர்ந்தது.

“தேங்க்யூகா… ஜெர்சி அடிச்சு வந்ததும் உன்கிட்டேதான் ஃபர்ஸ்ட் காட்டுவேன்!” அவன் உற்சாகத்துடன் அகல, இவள் தோளில் கட்டியிருந்த துப்பட்டாவைக் கழட்டித் தூர எறிந்தாள். மசாலா மணம் அவள் உடையை ஆக்கிரமித்திருந்தது. அலுப்புத் தீரக் குளித்து நைட்டி ஒன்றை உடுத்தியவள், உடல் அசதியில் முகம் கூடத் துடைக்காமல் படுக்கையில் விழ, எந்த யோசனைக்கும் துளியளவு இடம் கொடுக்காமல் உறக்கம் அவளை வாரியணைத்துக் கொண்டது.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top