‘வேறு புடவையே இவளுக்கு கிடைக்காதா? நான் என் காதலைத் தெரியப்படுத்தும் போதுதான் இப்படி உடுத்தி வருவாளா?’ மனம் கடுப்பில் காய்ந்தது.
“ஷ்… ஏதாவது காபி ஷாப், ரெஸ்டாரண்ட் ஆர் சம்திங் எங்கேயாவது இருக்கும். உங்களோட ஆள் கிளம்பிட்டாங்களா?” செல்லும் இடத்தைப் பற்றி அவள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவன் பதில் கூறாமல் ஒரு பல்பொருள் அங்காடியின் முன்னே வாகனத்தை நிறுத்திவிட்டு அவளோடு உள்ளே சென்றான். இங்குதான் அந்தப் பெண்ணை தேவா வரச் சொல்லியிருக்கக் கூடுமென எண்ணி ஜீவா மெதுவாகப் பார்வையால் அளந்தாள்.
“இந்த பொக்கே எப்படியிருக்கு ஜீவா?” தேவாவின் குரலில் அவனைப் பார்த்தாள் இவள். அவன் கையில் சிவப்பு நிற ரோஜா பூங்கொத்து ஒன்றிருந்தது. ஒரு நொடி எதற்கெனப் புரியாமல் பார்த்தவள், பின்னர் புரிந்ததும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள். தேவா அவளை முறைத்தான்.
“சாரி… சாரி தேவா சார். ரொம்ப டிபிகலா இருக்கீங்களா நீங்க. சட்டுன்னு எனக்குச் சிரிப்பு வந்துடுச்சு. பட், பொக்கே கொடுத்து ப்ரபோஸ் பண்றதுதானே காலங்காலமா நடக்குது. அதுல என்ன தப்பிருக்கு? அன்பை வெளிப்படுத்துறதுக்கு நாகரிகமா எந்த முறையிலயும் செய்யலாம்!” எனப் புன்னகைத்தவள், அந்தப் பூங்கொத்தை வைத்துவிட்டு ஊதா நிற ஆர்கிட் பூக்கள் நிரம்பிய ஒரு கொத்தை எடுத்தாள்.
“இது பார்க்க ரொம்ப ப்ளசன்டா இருக்கு. ஸ்மெல் கூட சூப்பரா இருக்கு!” அந்தப் பூக்களை வருடியபடியே ஜீவா கூற, அவன் முகத்தில் முறுவல் பூத்தது. அவள் வருடியதை ரசித்துப் பார்த்தான். தன்னால் அவளை இந்தளவிற்கு உரிமையோடு ரசிக்க முடிகிறதே என மனம் வியந்தது.
“உனக்குப் பிடிச்சிருக்குல்ல? அப்போ வாங்கலாம்!” என்றான் மறுபேச்சின்றி. என்னவோ இந்தப் பெண் கேட்டால் எதையும் வாங்கித் தரலாம் என மனம் சினிமா வசனம் பேச, சங்கடத்துடன் பிடரியைக் கோதினான். இந்த உணர்வு புதிது. அது அவனுக்கு நிரம்ப பிடித்திருந்தது. அருகிலிருக்கும் பெண்ணையும் பிடித்து தொலைத்தது. தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளிலும் அடங்காமல் தள்ளி நிற்கும்போது கூட அவள் மீதான அவன் பிரியம் ஏன் இத்தனைப் படுத்துகிறது எனத் தெரியவில்லை. இன்றைக்கோடு இந்தக் கண்ணாய் பூச்சி ஆட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
“எனக்குப் பிடிக்கிறது முக்கியம் இல்ல. உங்க ஆளுக்குப் பிடிக்கணும். அவங்க டேஸ்ட் என்னென்னு எனக்குத் தெரியாதே!” அவள் இடுப்பில் கை வைத்தாள். தேவா அவளைக் கண்டு கொள்ளாமல் அந்தப் பூங்கொத்திற்குப் பணம் கொடுத்தான்.
அவன் வேகமாகத் தாள்களை உருவியெடுத்துக் கொடுக்க, ஆயிரம் ரூபாயை விழுங்கியது அந்தக் கொத்து. ஜீவா இப்போது அந்தப் பூங்கொத்தையே இன்னுமே மெதுவாகத் தாங்கிப் பிடித்தாள். அதன் விலையிலேயே அவளது அணுகுமுறை மாறிற்று. மனிதர்களும் அது போலத்தானே என நினைத்துச் சிரித்தும் கொண்டாள்.
“உங்காளுக்கு இந்த பொக்கே பிடிக்கலைன்னா என்னைக் குத்தம் சொல்லக் கூடாது தேவா சார். நான் ஜஸ்ட் பார்த்ததும் கண்ணைப் பறிக்குதேன்னு வாங்கிட்டேன். மத்தபடி ஒவ்வொருத்தர் டேஸ்டும் வேற வேற!” அவள் கூற, தேவா நேரே சென்று பெசன்ட் நகர் கடற்கரை முன்பு நின்றான். முன்னிரவுக்கே உரிய சோம்பலுடன் சூரியன் மெல்ல மறைய, ஆங்காங்கே மக்கள் இரைச்சல். மற்றபடி வழக்கம் போல ஜென் இசட் தலைமுறையைச் சேர்ந்த காதல் ஜோடிகள் நாகரிகம் என்ற வார்த்தையைக் காற்றில் பறக்கவிட்டிருந்தனர். அது தொண்ணுறுகளும் அடக்கமே.
“பீச் ரொம்ப நல்ல ப்ளேஸ் தேவா சார். பொக்கே, பீச், பெர்ஃபெக்டா மேட்சாகுது. என்ன, யார் அந்தப் பொண்ணுன்னு பார்க்கத்தான் நான் ரொம்ப ஆர்வமா வெயிட்டிங். நம்மூர்க்கார புள்ளைன்னு வேற சொல்லிட்டீங்க. யாருன்னு ரொம்ப நாளா யோசிக்கிறேன்…” என அவள் கூற,
“டென் மினிட்ஸ்ல உனக்கே அந்தப் பொண்ணு யாருன்னு தெரியும் ஜீவா. நான் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன். நீ நட…” என்றவனுக்குத் தலையசைத்து மண்ணில் கால் புதைய நடந்தாள். அவள் சென்று சில பல நிமிடங்கள் கடந்தும் தேவா வராது போக, திரும்பிப் பார்த்தாள். எப்படியும் அவன் ஒரு பெண்ணிடம் தன் விருப்பத்தை தெரியப்படுத்தப் போகிறான். அதற்குத் தகுந்தாற்போல் அவள் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் சென்று நின்றாள்.
மெல்ல சூரியன் மறையும் திசையில் தேவா நடந்து வர, கையில் பூங்கொத்து, அவன் அணிந்திருந்த உடை, தோற்றம் என அந்த மாலைப் பொழுது அவனைப் பேரழகனாய்க் காண்பித்தது. முன்பைவிட இன்னுமே தேவாவின் முகத்தில் வசீகரம் கூடிப் போயிருந்தது.
‘வயது ஏற ஏற ஏன் இந்த
ஆண்கள் மட்டும் இத்தனை அழகாகத் தெரிந்து தொலைக்கின்றனர்?’ அவள் மனம் நினைத்துச் சிரித்தது.
‘மூவி ஹீரோஸுக்கே டஃப் கொடுப்பாரு போல!’ அவள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டே அவனை ரசித்துப் பார்த்தாள். தேவா அவள் சிரித்த முகத்தைப் பார்த்தவாறே அவளை நெருங்கினான்.
“பையன் ரெடி, பொக்கே ரெடி. க்ளைமேட் கூட ரொம்ப ஆப்டா இருக்கு. ஆனால் பொண்ணு இன்னும் வரலையேப்பா!” அவள் கேலியாக இழுக்க, தேவா அவளை மென்மையாய் முறைத்தான்.
“அங்க என்ன ஜீவா, டால்பினா?” கடலைப் பார்த்து அவன் கேட்க,
“டால்பினா? அதுவும் இங்கேயா. சான்சே இல்ல?” என அவள் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்து, அது இல்லையென உணர்ந்து, “சின்ன புள்ளை மாதிரி என்னை ஏமாத்த பார்க்காதீங்க தேவா சார்!” என்ற அதட்டலுடன் அவன் முகம் பார்த்தாள். அந்த சின்ன இடைவெளியில் தேவா அவள் முன்னே மண்டியிட்டு பூங்கொத்தை நீட்டியபடி தரையில் முட்டிப் போட்டுருந்தான்.
“ஐ’யம் இன் லவ் வித் யூ ஜீவா. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அட்ராக்சனா, லவ்வான்ற ஆராய்ச்சியே வேணாம். ஐ நீட் டூ ஸ்பென்ட் ரெஸ்ட் ஆஃப் மை லைஃப் வித் யூ ஜீவா. டோன்ட் சே நோ. என்னால உன்னைத் தாண்டி போக முடியாதுன்னு தோணுது!” அவன் மென்குரலில் தயங்கி, பிடரியைக் கோதியபடியே கூற, ஜீவாவின் முகத்தில் சிறு முறுவல் மெல்ல விரிந்து மலர்ந்து பெரிதானது.
“செம்மையா இருக்கு தேவா சார். உங்க மூவி ஹீரோஸைவிட உங்க எக்ஸ்ப்ரஷன் ரொம்ப சூப்பர். ஆனாலும் சப்போர்டிங் ரோலுக்கு கூட்டிட்டு வந்து என்கிட்ட ரிகர்சல் பார்த்துட்டீங்க. பட், இருந்தாலும் எனக்கு உங்க வே ஆஃப் அப்ரோச்சிங் ரொம்ப பிடிச்சிருக்கு. கையைக் கொடுங்க, எழுந்திருங்க. அந்தப் பொண்ணு வந்ததும் இதே மாதிரி மனசுல உள்ளதை சொல்லிடுங்க. அவங்க உங்களை ரிஜெக்ட் பண்ண வாய்ப்பு கம்மி!” என அவனிடம் சிரிப்போடு கையை நீட்டினாள் ஜீவா. தேவா அவளை முறைத்தான்.
“ஜீவா… நான் ரிகர்சல் பார்க்கலை. ஐ யம் சீரியஸ்லி லவ்விங் யூ. ஐ லவ் திஸ் ஜீவகாருண்யா. நான் இவ்ளோ நாள் சொல்லிட்டு இருந்தது உன்னைப் பத்திதான். யெஸ், நீ என்னோட எந்த எதிர்பார்ப்புலயும் பொருந்தி வரலை. ஆனாலும் உன்னை என்னால விட முடியும்னு தோணலை. என்னை ரொம்ப ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுற நீ. எனக்கு வேலைல கவனம் சிதறுது. எதையும் யோசிக்க முடியலை. சோ, இது அட்ராக்சன்னு சொல்லி என்னை நானே ஏமாத்திக்க விரும்பலை. இட்ஸ் ப்யூர்லி லவ். ஐ’யம் இன் லவ் வித் யூ ஜீவகாருண்யா!” அவன் படபடவெனப் பொரிய, ஜீவாவின் முகத்திலிருந்து சிரிப்பு மெல்லத் தேய்ந்தது. அப்போதும் கூட அவன் தன்னிடம் விளையாடுகிறான் என்பதாகத்தான் அவள் எண்ணினாள்.
“தேவா சார்… என்ன விளையாட்டு இது, எழுந்திரிங்க முதல்ல!” அவள் அதட்ட, அவன் முடியாது எனத் தலையசைத்தான்.
“நான் விளையாடலை. இந்த விஷயத்துல யாரும் பொய் சொல்வாங்களா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நான் உன்னைக் காதலிக்கிறேன். உன் பாஷையில சொன்னா உனக்கொரு எமோஷனல் சப்போர்ட்டரா இருக்க ஆசைப்படுறேன் நான்!” அவன் அழுத்தம் திருத்தமாக உரைக்க, ஜீவா அவன் கொடுத்த அதிர்விலும் திகைப்பிலும் என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியாமல் சில நொடிகள் திகைத்து நின்றுவிட்டாள்.