“சிவாய பரமேஸ்வராய, சசிசேஷராய நம ஓம், பவாய, குண சம்பவாய, சிவ சாந்தாய நம ஓம்!” சின்ன குரலில் முணுமுணுத்தவாறே ஜீவா சிவபெருமானைச் சுற்றி முடித்து, அவருக்குச் சூட்டிய மலரில் சிதறிக் கிடந்த ஒன்றை எடுத்து தன் தலையில் சொருகிக் கொண்டாள். அன்று சனிப் பிரதோஷம் என்பதால் கோவிலுக்கு வந்திருந்தாள்.
“இன்னைக்கு நீ ஹோட்டலுக்கு வந்து வேலை செய்ய வேணாம் ஜீவா. வீட்லயே ரெஸ்ட் எடு” கிரிஜா காலையில் அவள் கன்னத்தைத் தடவி, தலையில் கை வைத்து, பிறந்த நாள் வாழ்த்துக்களோடு விடுமுறையை அளித்துவிட்டார்.
ஆம், அன்றைக்கு ஜீவகாருண்யாவின் இருபத்தெட்டாம் பிறந்தநாள். எப்படியும் அடுத்த வருடம் அவள் வேறொரு வீட்டுக்கு மருமகளாகிவிடுவாள் என கிரிஜாவிற்கு சந்தோஷம் ஒருபுறமும், அவளைப் பிரியப் போகிறோம் என்ற வருத்தம் மறுபுறமும் இருந்தது. பெறவில்லை என்றாலும் கூட அவள் அவருக்கு மற்ற இருவரைக் காட்டிலும் உசத்திதான். இப்போது அவர்கள் வாழும் வாழ்க்கை அவள் கொடுத்தது. அவள் முன்னெடுத்து செய்யாமல் விட்டிருந்தால் கடனோடு கஷ்டப்பட்டிருப்போம் என அவள் மீது நன்றியும் பாசமும் அவருக்கு அதிகம். சின்னதம்பி மகள் முகத்தையே பார்த்திருக்க, அவளால் அவரை ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினாள்.
“என் ராஜாத்தி… உன் மனசு போல சந்தோஷமா இருக்கணும் நீ. உங்கம்மா போனப்புறம் உன்னைப் பார்த்துத்தான் நான் மனசைத் தேத்திக்கிறேன்…” என அவர் பழங்கதையைக் கிளற முயல, இவள் அதட்டி அவரை அடக்கிவிட்டாள்.
சின்னவர்களும் அவளுக்கு வாழ்த்தினர். எப்போது விடுமுறை கிடைக்கும் என ஜீவாவின் உடல் காத்திருக்கும். ஆனால் இன்றைக்கு என்னவோ அவளுக்கு வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. வேண்டாமென கிரிஜா கூறியும் காலை, மதியம் உணவகத்தில்தான் இருந்தாள்.
மாலை குளித்துவிட்டு கோவிலுக்கு அவள் கிளம்ப, தேவா அழைத்துவிட்டான். அவன் அன்றைக்குத்தான் வெளிநாட்டிலிருந்து வந்தேன் என்பதைப் பகிர்ந்தவன், வரும் ஞாயிறு சந்திக்கலாம் என அவளை அழைத்தான். இவள் எத்தனை முயன்றும் அவன் கேட்டானில்லை. அவளையும் உடன் அழைத்துக்கொண்டு சென்று அந்தப் பெண்ணைச் சந்திப்பேன் என உறுதியாக இருந்தான். இவள்தான் இறங்கிப் போக வேண்டியதாகப் போயிற்று.
“சரி… சண்டே மீட் பண்ணலாம் தேவா சார். இன்னைக்கு பிரதோஷம். நான் கோவிலுக்கு கிளம்புறேன்…” என அவள் கூற,
“இந்த டைம் ஹோட்டல்லதானே இருப்ப நீ. என்ன திடீர்னு கோவிலுக்கு?” அவன் சந்தேகத்துடன் கேட்டான்.
“அதான் சொன்னேனே. பிரதோஷம், எப்போவாது தோணும்போது கோவிலுக்குப் போவேன். இன்னைக்கும் அதே மாதிரி கிளம்புறேன்…” அவனிடம் எதற்குத் தன் பிறந்த நாளைப் பற்றிக் கூற வேண்டுமென எண்ணித் தவிர்த்தாள்.
“அப்போ இன்னைக்கு நீ ஃப்ரியா? இப்பவே மீட் பண்ணுவோம்!” அவன் கொஞ்சம் உற்சாகத்துடன் கூறினான். அவளுக்கு அந்தக் குரலில் மனம் துணுக்குற்றது.
“ஏன் தேவா சார்… நான் ஃப்ரியா இருந்தா உங்களுக்கு என்ன இவ்ளோ சந்தோஷம்? முதல்ல அந்தப் பொண்ணுகிட்டே மீட் பண்றதைப் பத்தி பேசிட்டீங்களா?” கொஞ்சம் கறாரான குரலில் கேட்டாள். அவர்கள் இருவருமான தனிப்பட்ட நேரத்தில் தான் எதற்கு அங்கே என இவளுக்குப் போகச் சற்றும் விருப்பமே இல்லை. அவன் கட்டாயத்தின் பேரில்தான் அரைகுறை மனதோடு சம்மதித்தாள்.
“ப்ம்ச்… ஜீவா, நான் கூப்பிட்டா அவ வருவா. நீதான் ரொம்ப பிஸி. உன்னைத்தான்மா பிடிக்க முடியாது. இப்போ கால் பண்ணா கூட ஷீ வில் கம். சோ, நான் உன்னை வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். கோவில் லொக்கேஷனை எனக்கு ஷேர் பண்ணிடு!” அவன் கூற, ஜீவா யோசித்தாள். எதற்குத் தள்ளிப் போட வேண்டும்? பேசாமல் இன்றைக்கே கூட அவனைச் சந்தித்து விடலாம். ஞாயிறு மீண்டும் தேவாவைச் சந்திக்க வேண்டுமெனக் கேட்டு கிரிஜாவின் முன் நிற்க அவளுக்குச் சங்கடமாக இருந்தது.
“ஓகே தேவா சார்… சரியா ஐஞ்சு மணிக்கு பூஜை ஆரம்பிச்சு ஆறு மணிக்கு முடிஞ்சிடும். நீங்க வந்து என்னைப் பிக்கப் பண்ணிக்கோங்க…” என அவனிடம் பேச்சை முடித்துக் கொண்டவள், கோவிலுக்குக் கிளம்பி வந்தாள். பதினொரு முறை பால், தயிர், தேன், இளநீர் என சிவ பெருமானுக்கு அபிஷேகம் நீண்டது. பின்னர் சாமி அலங்காரம் முடிந்து இவள் சிவனைத் தரிசித்து, பொங்கலை வாங்க வரிசையில் நிற்க, தேவா அழைத்துவிட்டான்.
“உள்ளே வர்றீங்களா தேவா சார்?” அவன் வரமாட்டான் எனத் தெரிந்தும் சம்பிரதாயத்திற்காகக் கேட்டாள் ஜீவா.
“இல்ல ஜீவா… எனக்கு சாமி கும்பிடுறதெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல. எல்லாம் முடிஞ்சுதா? நீ வர டைமாகுமா? அப்படின்னா சொல்லு, நான் காரை பார்க் பண்ண இடம் தேடணும். இன்னும் டூ மினிட்ஸ் மேல என்னால இங்க இருக்க முடியாது!” அது சின்ன தெரு என்பதால் அவனுடைய மகிழுந்தே மொத்தப் பகுதியையும் அடைத்திருந்தது.
“ஒரே நிமிஷம்… நீங்க காரைத் திருப்புங்க. நான் வந்து ஏறிக்கிறேன்…” என்றவள், முதல் ஆளாகப் பொங்கலை வாங்கினாள். சூடு தாங்க முடியாமல் முந்தானையை எடுத்துக் கையில் வைத்தபடியே அதன் மேலே தொன்னையை வைத்தவள், வெளியே வந்ததும் கண்களைச் சுழலவிடாமல் நேராகத் தெரிந்த மகிழுந்து அருகே செல்ல, தேவா எட்டி மறுபக்கக் கதவைத் திறந்துவிட்டான். அன்றைக்கு அவன் பார்த்ததைவிட இன்று இரண்டு மடங்கு அதிபக்தியோடு காணப்பட்டாள் ஜீவா. அதைக் கேட்கவும் செய்தான். அதோடு மட்டுமல்லாமல் அவள் உடுத்தியிருந்த சேலையில் இவன் முகம் மாறப் பார்த்தது.
“கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகமோ ஜீவா? கோவிலுக்குப் போனா சேரி, பூ, நெத்தி நிறைய விபூதி, குங்குமம்னு ஒரே பக்திமயமா இருக்கீயேம்மா!” கேலியாகக் கேட்டான். அவள் பதில் சொல்லாமல் வெறுமனே முறுவலித்தாள்.
“உங்களுக்கு நம்பிக்கை இல்லதானே?” சரியாக அவள் கேட்கவும், அவன் தோளைக் குலுக்கினான்.
“எனக்கு சாமி, பூதம், பேய், லக்குன்னு எதுலயுமே நம்பிக்கை கிடையாது ஜீவா. நம்ம உழைச்சா நல்லாருக்கலாம். மத்தபடி உருகி உருகி வேண்டலாம் வரவே வராது எப்பவும்!” அவன் இயல்பாகக் கூற, ஜீவா தலையசைத்தாள். பொங்கல் சூடு குறைந்திருந்தது.
“பொங்கல் சாப்பிடுறீங்களா தேவா சார்? வீட்டுக்குப் போற ஞாபகத்துல வாங்கிட்டேன். வேலுக்கு பொங்கல்னா ரொம்ப பிடிக்கும்!” தயங்கியபடியே அவனிடம் நீட்டினாள்.
“சாரி… எனக்கு சர்க்கரைப் பொங்கல் பிடிக்காதும்மா. நீயே சாப்பிடு!” அவன் நாகரிகமாக மறுத்ததும், இவள் எதுவும் சொல்லாமல் உண்டு முடித்தாள். அவன் திசு காகிதத்தை எடுத்து நீட்டினான்.
“தேவா சார், டிஷ்யூ பேப்பர்ல தொடச்சா கை பிசுபிசுன்னு இருக்கிற ஃபீல் வரும். தண்ணி ஏதும் வச்சிருக்கீங்களா?” எனக் கேட்டு தண்ணீர் போத்தலை வாங்கினாள். அவன் ஓரமாக மகிழுந்தை நிறுத்தினான். கையைக் கழுவியதும், தேவா திசு காகிதத்தை நீட்டும் முன்னே இவள் சேலையில் கையைத் துடைத்துவிட, அவன் கரம் அந்தரத்தில் நின்றது.
அதைப் பார்த்து சங்கடத்துடன் சிரித்தவள், “சாரி தேவா சார்… எனக்கு டிஷ்யூ யூஸ் பண்ணிப் பழக்கம் இல்ல. ஒவ்வொரு டைம் வேலை பார்க்கும்போதும் கையைக் கழுவிட்டு டிஷ்யூ பேப்பரைத் தேடிட்டு இருக்க முடியுமா? அப்படியே கையை ட்ரெஸ்ல தொடச்சுக்குவேன். பழகிப் போச்சு!” என்றாள் சின்ன குரலில்.
“நானும் உன்னை மாதிரித்தான் இருந்தேன் ஜீவா. இப்போ இருக்க லைஃப் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி மாற வேண்டிய சிட்சுவேஷன். சோ!” அவன் இலகுவாகக் கூற, அவளும் முறுவலித்தாள்.
“ஆமா… இந்த சாரி உனக்கு ஃபேவரைட்டோ? அடிக்கடி கட்டுற?” தார் சாலையிலிருந்த பார்வையைக் கவனமாக விலக்காமல் கேட்டான். ஜீவா தன்னை ஒருமுறை குனிந்து பார்த்தாள்.
“இல்லயே… போன வருஷம் ஒரு டைம் கட்டுனேன். தென் இப்போ, அவ்ளோதான் தேவா சார்!” யோசனையுடன் பதிலளித்தாள்.
“இல்ல… இதைத்தானே ஃபோட்டோல கட்டியிருந்த?” அவன் இழுக்க, இவள் எந்தப் புகைப்படம் என மூளையைத் துழாவியெடுத்தாள்.
“ஓ… நிச்சயதார்த்தம் அப்போ சொல்றீங்களா? ஆமா… அதை நானே மறந்துட்டேன். ஃபோட்டோல பார்த்ததை நீங்க ஞாபகம் வச்சிருக்கீங்க?” எனச் சற்றே ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“இல்ல… சட்டுன்னு பார்த்ததும் ஃபோட்டோ ஞாபகம் வந்துச்சு!” என்றவன், “ஆமா… நான் உன்னை எங்க கூட்டிட்டு போறேன்னு கேட்கவே இல்ல நீ?” எனப் பேச்சை மாற்றினான். அவள் அந்தப் புடவையை உடுத்தியதைக் கண்டதும் சட்டென எரிச்சல் மூண்டது. அதைக் காண்பிக்காமல் பேசினான்.