பின்னர் தன்னைச் சுதாரித்தவள்,
“தேவா சார்… முதல்ல எழுங்க நீங்க. எதுனாலும் பேசிக்கலாம்!” என்றாள்.
“ம்ஹூம்… நீ யெஸ் சொன்னாதான் நான் எழுந்திரிப்பேன்…” அவன் அடம்பிடித்துக் கூற, அவளின் பார்வை கண்டனமாக மாறியது.
“யாரோ ஒரு பொண்ணைக் கூட கம்பல் பண்ணக் கூடாதுன்னு சொல்ற ஆளு நான். அப்படியிருக்கப்போ என்கிட்டே நீங்க இப்படி நடந்துக்குறீங்க. எழுந்து நில்லுங்க!” நிதானத்துடன் அழுத்தமாக அவள் கூற, அவன் கால்கள் தானாகவே எழுந்து நிற்க, உதட்டுக்குள் ஏதோ முணுமுணுத்தான்.
“சரி, இப்போ சொல்லு… நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்றேன். உன்னோட டிசிஷன் என்னென்னு தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருக்குல்ல?” அவன் கேட்க, அவனைச் சில நொடிகள் அமைதியாகப் பார்த்து, முடியாது என நிதானமாகத் தலையசைத்தாள் ஜீவா. அவன் பார்வையில் ஆற்றாமை கூடிற்று.
“ஏன்… என்னைப் பிடிக்கலையா உனக்கு?” அவன் படக்கெனக் கேட்டான்.
“பிடிக்குது, பிடிக்கலைன்றது ரெண்டாம்பட்சம் தேவா சார். நான் ஆல்ரெடி எங்கேஜ்மெண்டான பொண்ணு. இன்னும் ரெண்டு மாசத்துல எனக்குக் கல்யாணம். என்கிட்டே நீங்க இப்படி பேசுறது ரொம்ப தப்பு. உங்களுக்கு அது புரியலையா?” கண்டிப்புடன் கேட்டாள்.
“ப்ம்ச்… அது உங்கம்மா பார்த்துப் பேசி முடிச்சது, ஜீவா. உனக்குப் பிடிச்சு போய் கல்யாணம் பண்ணப் போறீயா நீ? பெரிய எங்கேஜ்மெண்ட்!” அவன் சலித்தான்.
“எனக்கும் முத்துக்குமாரைப் பிடிச்சிருக்கு. அவரைப் பிடிக்காம எப்படி நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருப்பேன்? ஐ லைக் ஹிம். ஹி இஸ் அ ஜென்யூன் பெர்சன்.
அவரோட ஒரு வருஷமா பேசி, அவரைப் புரிஞ்சுக்க முயற்சி செய்றேன்…” அவள் பதிலில் தேவாவிற்குக் கடுப்பானது.
“ஏது… சாப்டீங்களா, தூங்குனீங்களா? வேலை முடிஞ்சுதான்னு கேட்குறதுதான் புரிஞ்சுக்க ட்ரை பண்றதா? ரொம்ப சில்லியா இருக்கும் நீங்க பேசுறது!” அவன் கேலியாகக் கூற, சட்டென ஜீவாவின் முகம் மாறிற்று.
“தேவா சார்… என்னோட பெர்சனல் விஷயத்தைப் பத்தி இப்படி இன்டீசன்டா நீங்க பேசுறது சரியா?” என அழுத்தமாகக் கேட்டாள்.
அவன் பெருமூச்சுடன் தலையைக் கோதியவன், “சாரி, நான் ஏதோ யோசிக்காம பேசிட்டேன்…” என்றான் சின்ன குரலில். ஜீவா அவன் பேச்சைக் கண்டு கொள்ளாமல் நேரத்தைப் பார்த்தாள்.
“நம்ம கிளம்பலாம் தேவா சார். செவன் தேர்டிக்குள்ளே வீட்டுக்கு வரேன்னு அம்மாகிட்டே சொல்லிருக்கேன்…” எதுவுமே நடவாதது போல அவள் பேச, தேவா நகராமல் நின்றான்.
“ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க இங்கேயே இருங்க. உங்களுக்குத் தோன்றப்போ வீட்டுக்குப் போங்க. நான் பஸ்ல போய்க்கிறேன்…” அவள் நிதானமாகக் கூறி நடக்க, தேவா கடுப்பை மறைத்தவாறு வாகனத்தை எடுக்கச் சென்றான்.
இருவரும் எதுவும் பேசவில்லை. வரும்போது வளவளத்த உதடுகளை இப்போது இறுக்கிப் பூட்டியிருந்தாள் ஜீவா. இன்னுமே தேவா கொடுத்த அதிர்விலிருந்து அவள் மனம் மீளவில்லை. அவன் ஏதோ ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறான் என முட்டாள்தனமாக இருந்துவிட்டோம் என அவளுக்கே அவள் மீது கோபம். அப்படியென்ன அவன் பேச்சைத் தன்னால் ஊகிக்க முடியவில்லை?
இப்போது மனம் மெல்ல அவன் உதாரணங்களை, உவமைகளை எடுத்து தன்னோடு பொருத்திப் பார்க்க, அத்தனையிலும் அவள்தான் நிறைந்திருந்தாள். ஆனால் அவளால் அதைக் கண்டறிய முடியாமல் போயிற்று. அவள் அவனைப் பார்க்க முயலாமல் ஜன்னலில் பார்வையைப் பதித்திருக்க, தேவாவிற்குக் கடுப்பானது.
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீ மூஞ்சியை அந்தப் பக்கம் திருப்பியிருக்க, ஜீவா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு ஜென்யூனா சொன்னேன். மத்தபடி தப்பா நடந்த மாதிரி எனக்குத் தெரியலை!” அவன் உரத்துக் கூற, ஜீவா பெருமூச்சுடன் அவன் புறம் திரும்பினாள்.
“கோபம் எல்லாம் இல்ல சார். நீங்க இவ்ளோ தூரம் என்னைப் பத்தியே என்கிட்டே பேசியும் கண்டுபிடிக்க முடியாத முட்டாளா இருந்துருக்கேன்னு ஆதங்கம்!” அவள் சன்ன குரலில் கூறினாள்.
“ஏன்… கண்டுபிடிச்சிருந்தா என்ன பண்ணிருப்ப?” அவன் கேலியாகக் கேட்டான்.
“ஆங்… முன்னாடியே இதெல்லாம் ஒத்து வராது, தேவா சார். உளறாம போய் வேலை வெட்டியைப் பாருங்க. வீட்ல உங்களுக்கு நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு எப்பவோ இந்த விஷயத்தை இழுத்து மூடிருப்பேன்!” அவள் அழுத்தமாகக் கூறினாள்.
“ஏன்… ஏன் செட்டாகாது? நான் எந்த வகையில குறைஞ்சு போயிட்டேன், ஜீவா? உன்னை நல்லா வச்சுப் பார்க்குற அளவுக்கு சம்பாரிக்கிறேன். என்னை நம்பி ஒரு பொண்ணு வர்ற அளவுக்கு என் நிலையை உயர்த்திருக்கேன்!” அவன் ரோஷத்துடன் கூறினான்.
“ப்ம்ச்… நான் உங்களைக் குறையா சொல்லலை, தேவா சார். நீங்க முன்னாடி சொன்ன மாதிரி உங்க பக்கத்துல வரக் கூட என்னால முடியாது. ஏன்னா உங்க உயரம் அப்படி. அதுக்காக என்னை நானே டீகிரேட் பண்ணிக்க மாட்டேன். எங்க அளவுல நாங்க நல்லா இருக்கோம், சந்தோஷமா வாழுறோம். ஆனால் உங்க வாழ்க்கை முறை வேற. உங்களோட உலகம் வேற, தேவா சார். அதுல எல்லாம் என்னால பொருந்திப் போக முடியாது. மோர் ஓவர், நான் உங்களை அப்படியெல்லாம் பார்த்தது இல்ல. யூ ஆர் வெரி குட் ஃப்ரெண்ட் ஆஃப் மைன்!” அவள் பொறுமையாக விளக்கினாள்.
அவளைத் திரும்பி உறுத்துப் பார்த்தவன், “நிஜமா உனக்கு என் மேல எந்த எண்ணமும் இல்லையா, ஜீவா?” எனக் கேட்டான்.
அவனைப் புரியாமல் பார்த்தவள், “ஏன் இல்ல… நீங்க ரொம்ப நல்ல மனுஷன். நல்ல ஃப்ரெண்ட். நீங்க நல்லா இருக்கணும்னு நினைச்சிருக்கேன். அதுக்கும் மேல எதுவுமே இல்ல, தேவா சார். நீங்க ரொம்ப குழப்பிக்காதீங்க. முன்னாடியே இதான் விஷயம்னு என்கிட்டே நீங்க டைரக்டா சொல்லிருக்கலாம். ரெண்டு பேருக்கும் சங்கடம் இல்லாம இந்த விஷயத்தை அப்பவே பேசி முடிச்சிருக்கலாம்!” அவள் முயன்று சிரித்தாள். ஆனாலும் அவள் என்னவோ மறைக்கிறாள் என அவனது உள்மனம் உணர்த்திற்று.
தேவா எதுவும் பேசாமல் சில நொடிகள் யோசித்தவன், “முன்னாடி நான் நினைச்சிருக்கேன். நான் இந்த பீல்ட்ல ஷைன் ஆன பின்னாடி நிறைய ப்ரபோசல், மறைமுகமா, மூஞ்சிக்கு நேரான்னு ஆர்வமா பேசுனவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்போலாம் எனக்குள்ள இருக்க ஈகோ சாட்டிஸ்ஃபைடா இருந்துச்சு. எனக்கிட்டே எல்லாமே இருக்கு. நான் போய் அப்ரோச் பண்ணா யாருமே வேண்டாம்னு சொல்ல மாட்டாங்கன்னு கான்ஃபிடன்டா நினைச்சிருக்கேன். பட்… நீ… நீ என் கான்பிடென்டே உன் கால்ல போட்டு மிதிச்சுட்ட தெரியுமா? உன் ஸ்டேட்டஸ், பணம், புகழ் எதுமே ஒன்னுமில்லன்ற மாதிரி தோண வச்சுட்ட!” கேலியாகக் கூறினான் தேவா. ஆனாலும் அவன் குரலில் ஒரு ஆதங்கம், வருத்தம்.
தான் பணம், பேர், புகழ் என உச்சத்தில் இருக்கும்போது தன்னை யார் நிராகரிக்கப் போகிறார்கள் என்ற தன் முனைப்பைச் சற்று முன்னே அசட்டையாகத் தட்டிவிட்டிருந்தாள் ஜீவா. அவன் பேச்சில் அவனை சின்ன முறுவலுடன் ஆதுரமாகப் பார்த்தாள் ஜீவா.
என்னவோ அவன் பேச்சில் அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது. பணம், புகழ், பேர் என இது மட்டுமே போதுமா வாழ்க்கையை வாழ. எத்தனை நடைமுறை சிக்கல்கள், இரு குடும்பத்தின் விருப்பு வெறுப்பு என எத்தனையோ அடங்கியிருக்கிறது. அப்படியிருக்கையில் இவன் பேசுவதின் அபத்தம் அவளுக்குப் புரிந்திருந்தது.
“சே… சே. ஏன் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க, தேவா சார். இப்பவும் நீங்க சொல்ற மாதிரி யார்கிட்டே நீங்க போய் ப்ரபோஸ் பண்ணாலும் வேணாம்னு சொல்ல மாட்டாங்கன்றது நிஜம்தான். என்ன, நீங்க தப்பான ஆளுகிட்டே வந்து அப்ரோச் பண்ணிட்டீங்க. அவ்ளோதான். மத்தபடி யூ ஆர் வொர்த் ஃபார் வாட் யூ திங்க்!” அவள் அவனைச் சமாதானம் செய்யுமாறு பேசினாள்.
“அப்போ இதான் ஃபைனல் டிசிஷனா, ஜீவா? ரீ-கன்சிடர் எல்லாம் கிடையாதா?” என்ன முயன்றும் அவன் குரலில் ஆற்றாமை வெளிப்பட்டுவிட, ஜீவா அவனைச் சங்கடத்துடன் பார்த்தாள்.
“தேவா சார், ப்ளீஸ். உங்க ஸ்டேட்டஸுக்கு நீங்க என்கிட்டே இப்படி பேசலாமா? ஆயிரம் பொண்ணுங்க உங்களுக்காக க்யூல நிப்பாங்க. நீங்க அதுல உங்க மனசுக்குப் பிடிச்ச பொண்ணை செலக்ட் பண்ணிக் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழுங்க. நான் ஜஸ்ட் பாசிங் க்ளவுட்!” அவனைத் தேற்ற முயன்றது அவள் குரல்.
“அதுல ஆயிரமாவது ஆளா கூட நீ நிக்க மாட்டேன்னு சூசகமா சொல்லிட்ட. ரைட்டு!” அவன் முணுமுணுத்தான். ஆனாலும் அவன் அவளை விட்டுவிடும் எண்ணத்தோடு இல்லை.
ஜீவா அந்தப் பேச்சைத் தவிர்க்க எண்ணி, பின்னிருக்கையிலிருந்த பூங்கொத்தை எட்டி எடுத்தாள்.
“எனக்காகத்தான் வாங்குறீங்கன்னு சொல்லிருந்தா அப்பவே ஆயிரம் ரூபாயை மிச்சம் பண்ண சொல்லிருப்பேன், தேவா சார். எப்படித்தான் அசால்டா பொக்கேக்கு காசு கொடுத்தீங்களோ? எனக்கெல்லாம் ஐம்பது ரூபாய்க்கு பூ வாங்கி வைக்க மனசில்லாம பொறந்த நாளுக்குன்னு சொல்லி சாமிகிட்டே கீழே விழுந்த பூவை வச்சிட்டு வந்திருக்கேன் பாருங்க!” பேச்சு மும்முரத்தில் அவள் பிறந்தநாள் என்று உளறிவிட, தேவா படக்கென அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“இன்னைக்கு உனக்கு பெர்த் டேவா? சொல்லவே இல்ல நீ? வெளிய டின்னர் சாப்பிட்டிருக்கலாம் நம்ம!” அவன் அவளை முறைத்தபடியே கூறினான்.
‘சே, எத்தனை அழகான வாய்ப்பு. அவள் மட்டும் சரியென்றிருந்தால் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாற்றியிருப்பான்.’
“நானென்ன சின்ன புள்ளையா பிறந்த நாளுன்னு ஊரே சொல்லிட்டு திரிய? எனக்கே வயசு ஏறுதுன்னு கவலை. இந்த வருஷமே கல்யாணம் பண்ண வேண்டியது சார். அவருக்கு கண்ட்ராக்ட் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டதால லேட். இல்லைன்னா நீங்க என்னைப் பார்க்க வரும்போது மிஸஸா பார்த்திருப்பீங்க. கொஞ்சம் மிஸ்ஸாகிடுச்சு!” அவள் கேலியாக உரைத்தாள்.
தேவாவின் முகம் உர்ரென மாறிற்று.
“ஆனால் என் வாழ்க்கைல மறக்கவே முடியாத பெர்த் டே இதுவாத்தான் இருக்கும், தேவா சார். நான் ஒன்னு சொல்லவா உங்ககிட்டே? எனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ப்ரபோஸ் பண்ணது நீங்கதான். அதும் ஆர்க்கிட் ஃப்ளவர் பொக்கே. ப்யூச்சர்ல எப்போவாது ஞாபகம் வரும்போது நினைச்சு சிரிச்சுப்பேன், தேவா சார்!” என முறுவலுடன் கூறியவள்,
“எப்படியும் இந்த பொக்கேவைத் தூக்கிப் போடப் போறீங்க. சோ, நானே எடுத்துக்கிறேன் பெர்த் டே கிஃப்டா…” என அதைப் பத்திரப்படுத்தியவள், ஒரு பூவை உருவித் தலையில் சொருகிக் கொண்டாள்.
தேவா அதற்குமேல் எதுவும் பேசாமல் அவள் வீடிருக்கும் பகுதிக்குள் நுழைய, ஜீவா இரண்டு தெரு முன்பே இறங்கிக் கொண்டாள்.
“கோவிலுக்குப் போய்ட்டு வரேன்னுதான் அம்மாகிட்டே பெர்மிஷன் வாங்குனேன். உங்களோட போய் இறங்குனா நல்லா இருக்காது…” என்று அவள் நகர, “ஜீவா… ஒன் மினிட்!” என்றான் அவன். அவள் என்னவெனப் பார்த்தாள்.
“இந்த சாரி நல்லாருக்கு. ஆனால் இன்னைக்கு நீ இந்த சாரி கட்டுனதுல எனக்கு செம்மையா இர்ரிடேட் ஆகிடுச்சு!” என்றவனை அவள் மென்மையாக முறைத்தாள். அவன் சொல்லாமல் விட்ட மிகுதியை அவளே புரிந்துகொண்டாள்.
“நான் இப்போ இருக்க பொஷிசன் அவ்ளோ ஈஸியா கிடைச்சது இல்ல, ஜீவா. எத்தனை ரிஜெக்ஷன், அவமானம், அசிங்கம்னு எல்லாத்தையும் தாண்டித்தான் இப்போ டைரக்டரா இருக்கேன். என் மூஞ்சிக்கு நேரா நீயெல்லாம் டைரக்ஷனுக்கு லாயிக்கில்லன்னு திட்டு கூட வாங்கியிருக்கேன். ஆனாலும் முயற்சியைக் கைவிடாம முன்னேறி வந்துருக்கேன். உன் விஷயத்துல அதேதான். ஐ வில் ட்ரை. அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்!” என்றவனை நமுட்டுச் சிரிப்போடு பார்த்தவள்,
“ஆல் தி பெஸ்ட், தேவா சார். இன்னும் ரெண்டு மாசதுக்குத்தான் நீங்க இப்படிலாம் உளற முடியும். அதுக்குப் பின்னாடி இன்னொருத்தர் பொண்டாட்டி நான். சோ, வேலை பொழப்பைப் பாருங்க!” என்றவள் அவனை வம்பிழுக்க எண்ணி மேலும் பேசும் முன்னே,
“ஐ லவ் யூ, ஜீவா…” அவன் படக்கெனக் கூறியதும், அவள் முகம் திகைத்து மாறியது. கண்டனமாகப் பார்த்தாள். அவனிடம் இப்போது கேலி சிரிப்பு.
‘வெறுப்பேத்துறாளாம். என்னையா?’ மனம் சிலிர்த்தது.
“ஹேப்பி பெர்த் டே. நெக்ஸ்ட் இயர் இந்த தேவாவோட பொண்டாட்டியா செலிபிரேட் பண்ணுவ. யூ டோன்ட் ஹேவ் சாய்ஸ். யூ டிசர்வ் மீ!” என அவன் அகல, இவள் அவன் செல்லும் பாதையை முறைத்துப் பார்த்தாள்.
‘திமிரைப் பாரேன் இந்த மனுஷனுக்கு. யூ டிசர்வ் மீயாம்!’ அவள் கடுப்புடன் அந்த வார்த்தையை உச்சரித்துப் பார்த்தாள்.
இந்த வாழ்க்கை ஏன் இத்தனை விசித்திரமாக இருக்கிறது? தான் வேண்டுமென எண்ணியபோது எட்டாக்கனியாக இருந்தது. இப்போது அவள் வேண்டாமென விலகி நிற்க, கைமேல் வந்து விழ முனைகிறது எனக் கேலியாக எண்ணியபடியே வீட்டை நோக்கி நடந்தாள்.
தொடரும்…
தலைக்கு தில்லப் பார்த்தீங்களா?