ஜீவா உரைத்தது போல தேவா அடுத்த படத்திற்கான கதைக் கரு, வசனம், படப்பிடிப்பு இடம் என ஒவ்வொன்றையும் தயார் செய்தான். அந்தப் படத்திற்கான நாயகனிடம் ஒருவருடம் முன்பே கதையைச் சொல்லி, அவனை நடிக்கச் சம்மதிக்க வைத்துவிட்டான். அந்த நாயகன் அப்போதைக்கு நான்கைந்து படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டியிருந்ததால், நாள்கள் தள்ளிக் கொண்டே போனது. அதைத்தான் இப்போது முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கிறான்.
இதற்கு முன் அவன் இயக்கிய படம் ஓரளவிற்கு வசூல் ரீதியாக நல்ல வெற்றிதான். இருந்தும் அதைவிட இதைச் சிறப்பாக எடுக்க வேண்டுமென மெனக்கெட்டான். இடையிடையே ஜீவா நினைவிற்கு வந்தாள்தான். ஆனால், அவளது வார்த்தையை ஏற்றுக்கொண்டு அதையே பின்பற்ற முயன்றான்.
அவள் மீது தனக்கிருக்கும் உணர்வு வெறும் ஈர்ப்பு மட்டும்தான் என்றால் கண்டிப்பாக அது இந்த இரண்டு மாதத்தில் நீர்த்துப் போய்விடும். அப்படி இல்லாத பட்சத்தில் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு அவளிடம் சென்று நிற்க வேண்டியதுதான் என எண்ணிப் பெருமூச்சுவிட்டான்.
ஜீவா இரண்டு முறை செய்தி அனுப்பி, அவன் எப்படி இருக்கிறான், தற்போதைய மனநிலை எப்படி, வேலை நன்றாகச் செல்கிறதா எனப் பொதுவாகக் கேட்டாள். அவன் பதிலளித்தான். ஆனால், அவளைப் பற்றியேதும் கேட்கவில்லை. மெல்ல நாள்கள் நகரத் தொடங்கின.
ஜீவாவிற்கு வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான வேலைகள், வீடு, ஞாயிறு மாலை விடுமுறை எனச் சென்றது. அவர்களது உணவகத்தின் ஒரு பக்கச் சுவர் மட்டும் லேசாக விரிசல் விட்டிருந்தது, இப்போது அது நன்கு பெரிதானது.
வாடிக்கையாளர் ஒருவர் உணவுண்ணும்போது, “ஏம்மா… இப்படி சுவர் இப்பவோ பிறகோன்னு இருக்கே. இப்படியிருந்தா எப்படிம்மா நாங்க நிம்மதியா சாப்பிட முடியும்? அதைச் சரி பண்ணுங்கம்மா முதல்ல!” எனச் சத்தமாகக் கேட்டுவிட, மற்றவர்களும் அந்தச் சுவரைக் கூர்ந்து பார்த்தனர்.
அவள் சரி செய்வதாகக் கூறி அவரைச் சமாதானம் செய்தவள், உரிமையாளருக்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்தாள்.
“சரிம்மா ஜீவா… நான் ஆளுங்களை வந்து என்னென்னு பார்க்கச் சொல்றேன்…” என அவர் கூறி ஒரு மாதத்தைக் கடத்திய பின்னரே, அன்றைக்கு ஆளை அனுப்பினார்.
ஜீவா மதிய உணவோடு அன்றைக்கு விடுமுறை எடுத்து அந்தப் பூச்சு வேலையை முடிக்க வேண்டுமென எண்ணி, வேலையாட்களுக்கு சரிசெய்ய வசதி செய்து கொடுத்துவிட்டு வந்தாள். பாபுதான் அருகே இருந்து பார்த்துக் கொள்கிறான்.
இவள் ஓய்வெடுக்கலாம் என எண்ண, வேலு எங்காவது வெளியே செல்லலாம் என அடம்பிடித்தான். எப்போதாவது தான் நேரம் கிடைக்கும் என்பதால், அவளும் தாயிடம் அனுமதி பெற்றுத் தம்பி, தங்கையோடு அருகேயுள்ள பல்பொருள் அங்காடிக்குச் செல்லலாம் எனத் திட்டமிட்டுக் குளித்துக் கிளம்பினாள்.
மென்பட்டு வகை சுரிதார் ஒன்றைத் தேர்வு செய்து உடுத்தியவள், அதற்குத் தோதான காதணியைத் தேடியெடுத்து மாட்டினாள். அவளும் வேலுவும் கிளம்பிய பின்னரும் கூட சஷ்டிகா தயாராகினாள்.
“சஷ்டி… சீக்கிரம். டென் மினிட்ஸ்ல கிளம்புற. போய்ட்டு நேரத்தோட வீட்டுக்கு வரணும்!” என அவளிடம் அதட்டியவள், மின்னூக்கியுடன் இணைந்திருந்த அலைபேசியை எடுத்துப் பார்க்க, தேவாவிடமிருந்து நான்கைந்து தவறிய அழைப்புகள். எதற்கு இத்தனை முறை அழைத்திருக்கிறான் எனப் பதறி, அவனுக்கு அழைத்தாள்.
“ப்ம்ச்… ஒரு ஃபோன் எடுக்க உனக்கு இவ்ளோ நேரமா ஜீவா? ஸ்டேட்டஸ் போட மட்டும் டைம் இருக்குது!” அவன் எரிச்சலை அடக்கிய குரலில் கேட்டான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“ஃபோன் எப்படியோ சைலன்ட்ல போயிருந்திருக்கு. அதான் எடுக்கலை தேவா சார்…” என்றவள், “என்ன ஸ்டேட்டஸ்? எனக்குப் புரியலையே?” என்றாள் யோசனையுடன்.
“ச்சு… அதான் நீயும் உன் ஃபியான்ஸியும் ஜோடியா நிக்குறீங்களே!” என்றவனுக்குப் ‘ஃபியான்ஸி’ என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே கசப்பை விழுங்கிய உணர்வில் தொண்டை கசந்து வழிந்தது.
மெக்சிகோ நகரத்தில் படப்பிடிப்பில் இருந்தவன், ஓய்வு நேரத்தில் அலைபேசியில் உலாவும்போது, இவளது புலனத்தில் ‘முத்துக்குமார் வெட்ஸ் ஜீவகாருண்யா’ எனப் போட்டு, இதயம் ஒன்றையும் சேர்த்து வேலு புலனத்தின் ஸ்டேட்டஸில் வைத்துவிட, தேவாவிற்குச் சட்டெனக் கைகள் வியர்த்துப் போயின.
அந்தப் படத்தை உற்றுப் பார்த்தான். முத்துக்குமாரும் ஜீவகாருண்யாவும் தம்பதி சமேதராக நின்றிருந்தனர். அவர்களை அப்படிப் பார்க்கும்போதே இவனுக்குக் கடுப்பாக வந்தது. முத்துக்குமார் வேலை ஒப்பந்தம் முடிந்ததும் இந்தியா வந்துவிடுவான். பிறகு திருமணம்தான் என ஜீவா கூறியது அபஸ்வரமாக நினைவுக்கு வந்ததில் திடுக்கிட்டுப் போனான்.
ஈர்ப்பா? காதலா? என அவன் பொறுமையாக இங்கே ஆராயும் முன்னே, அவள் திருமணத்தை முடித்துக்கொண்டு வந்து நின்றுவிடுவாள் போலவே என மனம் பதறிப் போனது. இதற்கு முன்பும் இந்தப் புகைப் படத்தைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால், அப்போதெல்லாம் தோன்றாத உணர்வு இப்போது அவனை அலைகழித்துப் பார்த்தது.
அங்கே என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ளாமல் தலையே வெடித்துவிடும் என்பதைப் போல எண்ணியவன், அவளுக்கு அழைக்க, ஜீவா குளித்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தொடர்ந்து அழைத்துப் பார்த்துக் கடுப்பாகிப் போனான். அதனால்தான் இந்த எரிச்சலும் கோபமும்.
“ச்சு… நான் அதெல்லாம் வைக்க மாட்டேன் தேவா சார். எனக்கு சோஷியல் மீடியாவுல சொந்த வாழ்க்கையைச் சுயதம்பட்டம் அடிக்கிறது சுத்தமா பிடிக்காது. இது வேலு பார்த்த வேலை. அவன்தான் என் ஃபோனை எடுத்து யூஸ் பண்ணுவான்!” என அவள் சலிக்கவும், இவனது கோபம் மெல்லத் தணிந்தது.
“ஓ… சரி. சரி, என்ன திடீர்னு அந்தப் போட்டோவை வச்சிருக்கான் உன் தம்பி?” இவன் சந்தேகத்துடன் கேட்டான்.
“எங்களுக்கு நிச்சயம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னையோட. அதை ஞாபகம் வச்சு அவன் ஸ்டேட்டஸ் போட்டிருக்கான்!” ஜீவா கூற,
“ஹம்ம்… அப்புறம் அவர் எப்போ வருவாரு? எனி ப்ளான்?” தெரிந்து கொள்ள வேண்டிக் கேட்டான்.
“ஆமா தேவா சார், அடுத்த மாசத்தோட அவர் வேலை அக்ரிமெண்ட் முடியுது. சோ, ஜனவரி, பிப்ரவரில கல்யாணம் வைக்கலாம்னு அம்மா சொன்னாங்க. பத்திரிகை கூட எப்படி அடிக்கிறதுன்னு இப்பவே அம்மா என்கிட்டே கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்களே பார்த்துக்கோங்கம்மான்னு அவங்க விருப்பத்துக்கு விட்டுட்டேன்…” என்றவள்,
“என் மேரேஜுக்கு உங்களை இன்வைட் பண்ணுவேன். நீங்க, தம்பி, அம்மா எல்லாரும் கண்டிப்பா வரணும்!” என அவள் கூறியதில், பிடரியைக் கோதியவன், “ஹம்ம்…” என்றான் ஒரே வார்த்தையாக.
‘இவள் அவனைத் திருமணம் செய்து கொள்வதைப் பார்க்க அவன் முன்னே சென்று நிற்க வேண்டுமாம். எத்தனை வேடிக்கையாக இருக்கிறது?’ அவன் உள்ளமே கேலியாகச் சிரித்தது.
“என்ன ஹம்ம் சொல்றீங்க? பெருசா ஃப்ரெண்ட், அது இதுன்னு சொன்னதெல்லாம் கதைதானா அப்போ? நான் கூட சீப் கெஸ்ட்னு உங்க பேரைப் பத்திரிகையில் பெரிய எழுத்துல போடலாம்னு நினைச்சேன். அப்போ வேணாமா தேவா சார்?” அவனை வம்பிழுக்க எண்ணிக் கேட்டாள் ஜீவா.
“பத்திரிகைல பேர்தானே? கண்டிப்பாகப் போட்றலாம் ஜீவா. என் பேர் இல்லாம எப்படி பத்திரிகை அடிப்பீங்க?” அவன் ஏதோ ஒரு முடிவெடுத்தவனாகப் பேச, அவள் புன்னகைத்தாள்.
“நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் தேவா சார். உங்க சிட்சுவேஷன் அப்போ எப்படி இருக்குன்னு பார்த்துட்டு, நீங்க வர்றதா இல்லையான்னு முடிவு பண்ணிக்கலாம். இப்போ கூட நீங்க இந்தியாவுல இல்ல. அந்த டைம்லயும் வொர்க் இருந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க. முடிஞ்சா வாங்க, இல்லைன்னா ஆப்ஃடர் மேரேஜ் ஒருநாள் நம்ம மீட் பண்ணலாம்” அவள் இயல்பாகக் கூறினாள்.
“அதை அப்போ பார்த்துக்கலாம் ஜீவா. எனக்கு இன்னும் டென் டேய்ஸ் இங்கதான் ஷூட்டிங். அது முடிஞ்சு சென்னை வந்ததும் உன்னைக் கண்டிப்பா மீட் பண்ணணும்!” என்றான்.
“ஐயோ… மறுபடியும் ஒரு மீட்டிங்கா? வேணாம் தேவா சார். நான் பேசியே உங்களை ஓட வச்சிடுவேன். எதுனாலும் போன்லயே சொல்லுங்க, கேட்டுக்குறேன்…” ஜீவா சிரிப்பும் கேலியுமாக உரைத்தாள்.
“ஜீவா… ஐ’ம் கோயிங் டு ப்ரபோஸ் ஹெர். ஐ நீட் ஹெர் ஃபார் மை என்டையர் லைஃப்!” அவன் சின்ன குரலில் முணுமுணுக்க, இவள் முகத்தில் முறுவல் படர்ந்தது.
“எந்த போதி மரத்துல போய் உக்கார்ந்தீங்க ஐயா? ஞானம் வந்துடுச்சு போல?” சிரிப்பு மாறாத குரலில் கேட்டாள். அவன் பதில் உரைக்கவில்லை.
“ரைட்டு… முடிவு பண்ணியாச்சு சரி. ஆனால், இப்பவும் அந்தப் பொண்ணு படிக்கலைதானே தேவா சார்?”
“ச்ச… நான் படிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ண நினைச்சதே என் ப்யூச்சர் வொஃய்ப் வேலைக்குப் போய் இன்டிபெண்டன்டா இருக்கணும்னுதான். பட், அவ இப்பவே ஒரு பிஸ்னஸ் விமன்தான். சின்ன வயசுலயே ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணி அதை சக்ஸஸ்ஃபுல்லா ரன் பண்றா. அவதான் குடும்பத்தைப் பார்த்துக்கிறா. அதுவும் இல்லாம படிச்சவங்களைவிட அவகிட்டே பொறுமையும் நிதானமும், பகுத்தறிவுவும் நிறைய இருக்கு. ஒரு விஷயத்தைப் பல கோணங்கள்ல யோசிப்பா. நிறைய புக்ஸ் படிப்பா. நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருப்பா. ஷீ இஸ் மச் பெட்டர் தென் ஆல்…” அவன் விளக்க,
“ஓஹோ… அப்போ அவகிட்டே உங்களவுக்கு பணம் இல்லையே? ஃபேமிலி பேக்கிரவுண்ட் கூட நல்லா இல்லைன்னு நீங்க சொன்னதா ஞாபகம்?” ஜீவா இழுத்தாள்.
“என்னைக் கல்யாணம் பண்ணப் போறது அவதான். அவளோட குடும்பம் இல்லையே. நான் சம்பாதிக்கிற பணமெல்லாம் என் பொண்டாட்டிக்குத்தான். அவ பிஸ்னஸை இன்னும் பெருசாக்கி பிராஞ்சஸ் வச்சுக் கொடுப்பேன். என்னைவிட ஷீ இஸ் வெரி டேலண்டட்!” அவன் முணுமுணுத்தான்.
“பார்றா… உண்மையா காதலிச்சா குறையெல்லாம் நிறையாகிடும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனாலும் நேர்ல பார்க்கும்போது செம்ம க்ரிஞ்சா இருக்கு தேவா சார். எனக்கு உங்க கருத்துல உடன்பாடில்லை. எனிவே, கங்கிராட்ஸ்! அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி, புள்ளைக் குட்டின்னு சந்தோஷமா வாழுங்க!” அவள் கூற, அவன் முகம் மலர்ந்தது.
“அதுக்கு முதல்ல அந்தப் பொண்ணு என்னை அக்செப்ட் பண்ணணும் ஜீவா!” என்றான் அவன்.
“தேவா சார்… உங்களுக்கு இப்போ எவ்ளோ டிமாண்ட் தெரியுமா? எவ்ளோ அழகான பொண்ணுங்க எல்லாம் உங்களோட ஒரு ஹாய்க்காக வெயிட் பண்றாங்க. அப்படி இருக்கும்போது எப்படி ஒரு பொண்ணு உங்களை வேண்டாம்னு சொல்லுவாங்க? அபார்ட் ஃப்ரம் திஸ் ஃபேமஸ் சைட், நீங்க ரொம்ப பொறுப்பான ஆளு. உங்களைப் பத்தி இதுவரைக்கும் ஒரு தப்பான நியூஸ் வந்தது இல்ல. வெரி குட் பாய் நீங்க. கான்ஃபிடன்டா போய் லவ்வை சொல்லுங்க. நல்லதே நடக்கும்!” அவள் ஆருடம் சொன்னாள்.
“நீயும் என் கூட வரணும் ஜீவா. நீயிருந்தா எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கும். சோ, யூ மஸ்ட் கம் வித் மீ…” என்றான் அவளை வற்புறுத்தி.
“சான்ஸே இல்ல தேவா சார். உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் கரடியா வர விரும்பலை. நீங்களே தனியா போங்க. கண்டிப்பா நான் வர மாட்டேன்…” ஜீவா மறுத்தாள்.
“நீ வரணும் ஜீவா. அதெப்படி வர மாட்டேன்னு சொல்லுவ? ஒரு ஃப்ரெண்டோட லவ்வுக்கு ஹெல்ப் பண்றது உன்னோட கடமை. நான் வந்ததும் டேட், டைம் கன்ஃபார்ம் பண்ணிச் சொல்றேன். நீ வர்ற!” அவன் கட்டளையாகச் சொன்னான்.
“ச்சு… தேவா சார், இதெல்லாம் அநியாயம். நான் வந்து என்ன பண்ணப் போறேன்? நீங்க என்னைக் கூப்பிடுறதை விட்டுட்டு, அந்தப் பொண்ணை எப்படி இம்ப்ரெஸ் பண்றதுன்னு யோசிங்க. பட், ஒன்திங், ப்ரபோஸ் பண்ணும்போது சர்ப்ரைஸ் அது இதுன்னு சொல்லிப் பெரிய ஹோட்டல், சுத்தி நிறைய பேர்னு அந்தப் பொண்ணைச் சங்கடப்பட வச்சுடாதீங்க…”
“உங்களுக்கு எப்படி காதலிக்க உரிமை இருக்கோ, அதே மாதிரி அவங்களுக்கும் யெஸ், நோ சொல்ல ரைட்ஸ் இருக்கு. காதல் ரெண்டு பேரோட மனசு சம்பந்தப்பட்டது. முதல்ல உங்களுக்குள்ள தனியா பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டு உலகத்துக்குச் சொல்லலாம். ஸ்ட்ரெய்ட்டா ஆளுங்களைக் கூட்டி வச்சு யெஸ் சொல்லணும்ன்ற கட்டாயத்தை ஏற்படுத்தாதீங்க. அதுக்குப் பதிலா அந்தப் பொண்ணை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும், அவங்க மேல உங்களுக்கு என்ன உணர்வுன்னு சொல்லிப் புரிய வைங்க. அதுதான் எல்லா கேர்ள்ஸுக்கும் பிடிக்கும்!” என்றாள் சின்ன குரலில். அவள் பதிலில் தேவாவின் முகத்தில் சிறு முறுவல் படர்ந்தது.
“கரெக்ட்… நீ சொல்றதும் சரிதான். பட், நீ ஒருத்தி வந்தா அது தப்பில்ல ஜீவா. நீயும் வா” அவன் பிடியிலேயே நின்றான் தேவா.
“ஷப்பா… ராமா. விடிய விடியக் கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்ற கதையா இருக்கு நீங்க பேசுறது. உங்ககிட்டே பேசி ஜெயிக்க முடியாது. நான் ஃபோனை கட் பண்றேன். ஊருக்கு வந்ததும் என் பின்னாடி சுத்தாம ஒழுங்கா அந்தப் பொண்ணுகிட்டே போய் உங்க காதலைச் சொல்லுங்க. கேர்ள்ஸ் இந்த விஷயத்துல ரொம்ப க்ளவர். எப்படியும் உங்களுக்கு அவங்க மேல இருக்க ஃபீலிங்ஸ் புரிஞ்சிருக்கும்தான். என்ன, நீங்களா சொல்லணும்னுதான் வெயிட் பண்றாங்களா இருக்கும்!” அவளே ஊகத்துடன் கூறினாள்.
“சே… என் ஆளு இந்த விஷயத்துல ரொம்ப மக்கு ஜீவா. கோவில்ல சாமியாரா போக வேண்டியவளை லவ் பண்ணிட்டேன் நான்!” அவன் சலித்தான்.
“ஆஹா… உங்கப்பாடு கஷ்டம்தான். பட், பெண் சாமிங்க எல்லாரும் தனியாவா இருக்காங்க? அவங்க கூடக் கல்யாணம் பண்ணி ஹஸ்பண்டோட தானே இருக்காங்க. அதனாலே நீங்க அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம உங்க விருப்பத்தைச் சொல்லுங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்!” ஜீவா கூற, சஷ்டி தமக்கையை முறைத்தபடியே வந்து நின்றாள்.
“டூ மினிட்ஸ் டி…” என அவளிடம் கண்ணைச் சுருக்கியவள், “தேவா சார்… நான் தம்பி, தங்கச்சியோட வெளியே போறேன். நீங்க வாங்க இங்க, அப்புறம் பேசிக்கலாம்!” என அவனது அழைப்பைத் துண்டித்தவள், சின்னவர்களோடு கிளம்பினாள்.
தொடரும்…