மௌனம் – 17.1

“ஏன் ஜீவா… இதுக்குப் பேர் பெரிய வெங்காயமா? இல்ல, இன்னும் கொஞ்சம் சின்னதா வாங்கிட்டு வந்திருக்கலாம் நீ” கோமதி அலுக்க, ஜீவா அவரைச் சின்ன முறைப்புடன் பார்த்தாள்.

“க்கா… இந்த வெங்காயமே கிலோ எண்பது ரூபா. பெரிய வெங்காயம் இதைவிட ஜாஸ்திக்கா. விலைவாசி ஏறுது, சாப்பாட்டுக் காசைத்தான் ஏத்தாம வச்சிருக்கோம் நம்ம!” அவள் பெருமூச்சுவிட்டாள்.

வழக்கமாகத் தினமும் மாலை வேளையில் உழவர் சந்தையிலிருந்து காய்கறிகளை வாங்கி வந்து போடுவான் கோபி. சந்தையை அடைக்கும் நேரம் சென்றால்தான் விலையைப் பேசி, விற்காத காய்கள், அன்றைக்கு எது மலிவாகக் கிடைக்கிறது எனப் பார்த்து வாங்க முடியும்.

எல் நினோ தாக்கத்தால் சமீபகாலமாக வெயில் அதிகமாகி, விளைச்சல் குறைந்து, காய்கறி வரத்தும் வற்றிப் போனது. அதனாலேயே விலை ஏற்றம் கண்டு, அன்றாட மக்கள் அல்லாடும் நிலைக்கு வந்திருந்தனர். அதில் சஷ்டிகா உணவகமும் அடங்கும்.

ஜீவாவால் சட்டென உணவுப் பட்டியலில் விலையேற்றம் செய்ய முடியவில்லை. அதனாலேயே மலிவான காய்கறிகளை வைத்து முடிந்தளவு உணவைச் சுவையாகக் கொடுக்க முயல்கிறாள். மெல்லிய பேச்சுச் சத்தத்துடனேயே அவர்கள் மதிய உணவைச் சமைத்து முடித்தனர். எப்போது உணவு தயாராகும் எனக் காத்திருந்த ஆட்கள் உண்ண வர, இவளுக்கு வழக்கம்போல நேரம் ஓடிற்று.

மதியம் மூன்று மணி போல ஜீவா உண்டுவிட்டு அப்படியே மேஜையில் படுத்துவிட, ‘தேவா சார் காலிங்’ என அலைபேசித் திரை மின்னிற்று. இவளுக்கு ஆச்சரியம்தான். அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவாரம் ஓடிப் போயிருந்தது. எப்படியும் தான் அன்றைக்குப் பேசிய பேச்சில் அவன் அடுத்து தன்னிடம் பேசவே மாட்டான் என இவளே முடிவு செய்திருக்க, அவன் என்னவென்றால் சுவரில் அடித்த பந்தாகத் திரும்பி வருகிறானே என எண்ணியபடி அழைப்பை ஏற்றாள்.

“என்ன பண்ற ஜீவா?” தேவாவின் குரலிலிருந்த சோர்வில் துணுக்குற்றாள்.

“என்னாச்சு தேவா சார், வாய்ஸ் டல்லா இருக்கே?” அவள் யோசிக்காமல் கேட்டு விட,

“அங்க இருந்தே என் வாய்ஸ் டல்லா இருக்குன்னு உன்னால் கண்டுபிடிக்க முடியுதா ஜீவா?” அவன் கேலியாகக் கேட்டதும், இவள் சற்று நிதானித்தாள்.

“ம்ப்ச்… இதுக்கெல்லாம் அங்க வந்து உங்களைப் பார்த்து ஆராய்ச்சி பண்ண முடியுமா தேவா சார்? எப்பவும் பேசும்போது ஒருமாதிரி ரஃப் அண்ட் டஃபா பேசுவீங்க, எனர்ஜிடிக்கா இருக்கும். ஆனால், இப்போ வாய்ஸ் உள்ளே போயிருந்துச்சு. அதான் சும்மா கெஸ்ஸிங்ல கேட்டேன்!” அவள் இயல்பாகக் கூற, “அது சரி…” என முணுமுணுத்தான் அவன்.

“ஆமா… நான் அன்னைக்குப் பேசின பேச்சுல என் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டீங்கன்னு நினைச்சேன். ஆனால், கால் பண்ணிட்டீங்க நீங்க?” உதட்டோரம் வழிந்த சிரிப்புடன் கேட்டாள் இவள்.

“நானும் உன் பக்கம் வரக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன்மா. ஆனால், மனசு என் பேச்சைக் கேட்க மாட்டுதே. அது இஷ்டத்துக்குப் பண்ணுது!” தெளிவாக முணுமுணுத்தான்.

“சரி சொல்லுங்க… எதுக்கு கால் பண்ணீங்க?” அவள் விஷயத்திற்கு வர, அவனிடம் பெரும் அமைதி.

ஒருவாரமாக இந்தப் பெண் ஜீவா அவனது நிம்மதியை மொத்தமாக எடுத்துக் கொண்டாள். அவள் பேசியவற்றை அவன் புறந்தள்ள எண்ணினாலும், மூளை ஒவ்வொன்றாக அசை போட்டது. அவள் உரைத்தது போல வெறும் பணம், அந்தஸ்திற்காகத் தன்னுணர்வுகளை அடகு வைப்பதா எனப் பெரும் தயக்கம். இதை முன்னெடுத்துச் செல் என மனம் கூற, மூளை நிதானமாக யோசிக்கச் சொல்லிற்று. இருதலைக்கொல்லி எறும்பாக அல்லாடினான்.

“ஷீ டிஸ்டர்ப்ட் மீ அ லாட்…” சின்ன குரலில் அவன் கூற, இவள் தண்ணீர் போத்தல் கேட்டு வந்தவருக்கு குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அதை எடுத்துக் கொடுத்துவிட்டு, காசை வாங்கிக் கல்லாவில் போட்டவள்,

“பேசாம நான் ஒரு ஐடியா சொல்லவா தேவா சார்?” எனக் கேலியாகக் கேட்டாள்.

“யெஸ்… யெஸ். என் பிராப்ளத்துக்கு ஒரு சொல்யூஷன் வேணும் ஜீவா!” அவனும் ஆர்வமானான்.

“நல்ல குளிர் பிரதேசமா பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டை சூஸ் பண்ணி, ஜெர்கினை வீட்டுல இன்டென்ஷனலா மறந்து வச்சுட்டுப் போய்டுங்க. அங்கப் போய் ஷூட்டிங் டைம்ல கைகால் எல்லாம் விறைச்சு, சரியா சோறு தண்ணியில்லாம வேலையைப் பாருங்க. அப்படியொரு சிட்சுவேஷன்ல காதல் கத்தரிக்காயெல்லாம் இரண்டாம் பட்சமா போய், எப்போடா சொந்த ஊருக்கு வருவோம், பெத்த ஆத்தா கையால சோறு சாப்பிடுவோம்னு மூளை அந்தப் பொண்ணைப் பத்தி யோசிக்கவே யோசிக்காது!” என்றாள் வெகு தீவிரமாக.

தேவா அவள் வேறு ஏதோ சொல்லப் போகிறாள் என எண்ணிக் காத்திருந்தவன், அவளது கேலியில் கடுப்பானான்.

“ப்ம்ச்… என் ஃபீலிங்ஸ் உனக்கு ரொம்ப விளையாட்டா இருக்குல்ல? உனக்கும் இப்படி யாருமேலயாவது காதல் வந்து நீ கஷ்டப்படும்போது உனக்குப் புரியும்!” அவன் சாபம் போலக் கூற, இவள் முறுவலித்தாள்.

“அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல தேவா சார். நம்பிக்கை இல்லாத விஷயத்தை எல்லாம் நான் ஏன் செய்யப் போறேன்?” எனக் கேட்டாள். அவன் எதுவும் பேசவில்லை. அவன் அமைதி இவளைப் பாதித்தது.

“தேவா சார்… நான் ஒன்னு சொல்லவா?” எனக் கேட்டாள். அதற்கும் அவனிடம் பதிலில்லை.

“ஒரு ரெண்டு மாசம் அந்தப் பொண்ணைப் பார்க்காம, பேசாம இருந்து பாருங்க. அவங்களைப் பத்தி நினைக்கிறதைக் குறைச்சிட்டு கெரியர்ல ஃபோகஸ் பண்ணுங்க. அடுத்த மூவிக்கு ஸ்க்ரிப்ட் எழுதுங்க. ஹீரோ, ஹீரோயின் செலக்ட் பண்ணுங்க. மனசை எங்கேயும் அலைபாய விடாதீங்க. ரெண்டு மாசம் கழிச்சும் உங்க ஃபீலிங்க்ஸ் குறையாம அப்படியே இருக்கு, அந்தப் பொண்ணுதான் வேணும், மத்தபடி எதுவுமே முக்கியம் இல்லைன்னு மனசு ஒரு கட்டத்துக்கு மேல முடிவெடுத்துடுச்சுன்னா, அடுத்து யோசிக்கவே யோசிக்காதீங்க. உங்க லவ்வை அந்தப் பொண்ணுக்கிட்டேயே கன்ஃபெஸ் பண்ணிடுங்க. அவங்க ஏத்துக்கிறதும் ஒதுக்குறதும் அடுத்த விஷயம். இப்போ ரொம்ப குழப்பிக்காதீங்க!” சின்ன குரலில் ஆதுரமாகப் பேசினாள்.
தேவாவின் அலைப்புற்றிருந்த மனத்திற்கு அது பெரும் ஆறுதலாகத் தோன்றிற்று.

“தேங்க்ஸ் ஜீவா… தேங்க் யூ சோ மச்!” அவன் மனதாரக் கூற, இவள் புன்னகைத்தாள்.

“எவ்ரிதிங்க் டேக்ஸ் டைம். உங்களுக்கு ஒரு படம் எடுக்கவே ஆறு மாசம் ஆகும் இல்ல சார். அப்போ இது லைஃப் டிசிஷன். எப்படி நாலு நாள்ல உங்களால முடிவெடுக்க முடியும்? கொஞ்ச நாள் போகட்டும். அவசர அவசரமா கல்யாணம் பண்ணி, அதே அவசரத்தோட பிரியிற நிலைமை வந்தா இன்னும் கஷ்டம். இப்போ வெறும் ஃபீலிங்க்ஸ். பட், ஆஃப்டர் மேரேஜ் பிரிஞ்சா அது வெறும் நினைவா இருக்காது. காலம் முழுக்க மனசைப் போட்டு குடைஞ்சுட்டே இருக்கும். நம்மலாம் உயிரும் உணர்வும் இருக்க மனுஷங்க. சட்டுன்னு ஒரு உறவை அத்துவிட்டுட்டு மறக்க ரோபோட் மாதிரி டெலிட் பட்டனைக் கிளிக் பண்ண முடியாதே. அதனால ஆறப் போடுங்க இந்த விஷயத்தை!” அவளது மென்குரல் அவனை ஆற்றுப்படுத்தியது.

என்னவோ நீண்ட காலமாகத் தொடரும் நட்பைப் போல இவளது இருப்பு அவனுக்குத் துணையாகிப் போனது.

“ஐ அக்ரி… நான் டூ மந்த்ஸுக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ஜீவா. ரெண்டு மாசம் கழிச்சு உன்கிட்டேயே திருப்பி வருவேன். அப்போ என் மனசுல உள்ளதை உன்கிட்டே சொல்வேன்!” அவன் வேறொரு அர்த்தத்தில் கூறினான். ஆனால் அது அவளுக்குப் புரியவில்லை.

“கண்டிப்பா தேவா சார்… நீங்க என்னை நல்ல ஃப்ரெண்டா பார்க்குறீங்க. சோ, நானும் அது போல உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணும்னு நினைக்கிறேன். கவலைப்படாம அடுத்த வேலையைப் பாருங்க!” என அவனை அனுப்பி வைத்தாள்.

error: Content is protected !!
Scroll to Top