ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 23

உடனே தனது கணவனிடம் அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவிக்கத் தொடங்கி விட்டாள் வெண்பா.

அதையெல்லாம் கேட்கக், கேட்க அவனது விழிகள் ஆச்சரியத்தில் பெரியதாக விரிந்து கொண்டே போனது எனலாம்! 

ஆனாலும் தன்னுடைய வாயைத் திறந்து எதுவும் பேசாமல் தன் மனைவிச் சொல்வதைப் பொறுமையாகவும், நிதானமாகவும் கேட்டான் மித்ரன். 

சிறிது நேரத்திலேயே விஷயத்தை முழுமையாக விவரித்து முடித்து விட்டு, 

“நீங்க இப்போ சொல்லுங்க. நான் பண்ணியது சரியா? தப்பா?”எனக் கணவனிடம் வினவினாள் வெண்பா. 

அதற்கு,”நீ செஞ்சது தப்பே இல்லைம்மா! ஆனால் இந்த விஷயத்தில் நீ ரொம்ப வேகமாகப் போறியோன்னுத் தோணுது! அதை நினைசசா தான் எனக்குப் பயமாக இருக்கு”என்று அவளிடம் கவலையுடன் கூறினான் மித்ரன். 

அதைக் கேட்டதுமே,”நீங்க ஏன் இப்படி சொல்றீங்க? உங்களுக்கே தெரியாதா? இதுவே லேட்ன்னு? அப்பறமும் எதுக்கு இப்படி சொல்றதுக்கான அவசியம் என்ன வந்துச்சு?”என்றாள் சோகமாக. 

“ப்ச்! வெண்பா ம்மா! நீ செஞ்ச விஷயம் கரெக்ட் தான். ஆனால் நீ உன்னோட தம்பியைப் பத்தி மட்டும் யோசிச்சு, இதையெல்லாம் செய்ற! அந்தப் பொண்ணு மதுபாலாவைப் பத்தி யோசிச்சுப் பார்க்க மறந்துட்ட! நீ திடுதிப்புன்னுப் போய் அந்தப் பொண்ணுக்கிட்டே இந்தக் கல்யாணத்தைப் பத்திப் பேசினால் அவ எப்படி இதுக்கு எதிர்வினை ஆற்றுவாள்ன்னுக் கொஞ்சமாவது அந்தப் பொண்ணோட பக்கம் இருந்து நினைச்சுப் பாரு!”என்று மனைவிக்குப் புத்திமதியைக் கூறவும், 

அதில் அவனைத் தீவிரமாகப் பார்த்து,”அந்தப் பொண்ணோட பக்கத்தையும் நினைச்சுப் பார்த்ததுக்கு அப்பறமாகத் தான் நான் இந்தக் கல்யாணத்தைச் சீக்கிரமாகவே நடத்த நினைக்கிறேன்ங்க”என்றவளை யோசனையாக நோக்கினான் மித்ரன். 

உடனே, தானே மேலும் தொடர்ந்து,”ஆமாங்க. நான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவளோட வீட்டுச் சூழ்நிலையைப் பத்தியும், அவ அண்ணனைப் பத்தியும் சொன்னேன்ல?”என்க, 

“ம்ஹ்ம்”என்றவனிடம், 

“அந்த மதுபாலாவும், அவ தங்கச்சியும் இப்பவும் சுயமரியாதையோட, தன்னம்பிக்கையோடவும் இருக்காங்க தான். நான் இல்லைன்னுச் சொல்லலை. ஆனால் அவங்க ரெண்டு பேரும் யாரோட துணையும் இல்லாமல் இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் அவங்க வாழ்க்கையை வாழனும்? ஒருவேளை மதுவுக்கு இந்த வேலைக் கிடைச்சது தெரிஞ்சா அவளோட அண்ணனும், அண்ணியும் இவங்களை மறுபடியும் பார்க்க வந்து ஒட்டிக்க நினைப்பாங்கன்னுத் தோணுதுங்க! அவங்களால் இந்தப் பொண்ணுங்க ரெண்டுப் பேருக்கும் எந்த வித தொல்லையும் வந்து விடக் கூடாதுன்ற அக்கறையில் தான் நான் இந்தக் கல்யாணத்தை உடனே நடத்த முயற்சிக்கிறேன்”என்று விளக்கிக் கூறி விட்டிருந்தாள் வெண்பா. 

அதில் இருந்த நியாயமும், அவளுக்கு மதுபாலாவின் மீதிருந்த அக்கறையும் அவனுக்குப் புரியத் தான் செய்தது.

ஆனாலும் அந்தப் பெண்ணின் வாழ்வைப் பற்றிய முடிவுகளை எடுக்க அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்றக் கேள்வித் தான் மித்ரனைச் சிந்திக்க வைத்திருந்தது. 

அதை அப்படியே தன்னுடைய மனைவியிடம் பகிர்ந்து விட்டிருக்க,

“இதைப் பத்தி நான் யோசிக்கவே இல்லைங்க. இப்போ என்னப் பண்றது? இந்தக் கல்யாணத்தை எப்படி சுமூகமாக நடத்தி முடிக்கிறது?”என்று கவலை தோய்ந்த குரலில் வினவினாள் வெண்பா. 

“நாம ஒன்னுப் பண்ணலாம். நாளைக்குக் காலையில் இல்லைன்னா சாயந்தரமாக அப்பா, அம்மா கிட்டே இதைப் பத்திக் கலந்து பேசி அவங்க கிட்ட இதை எப்படி முன்னெடுக்கிறதுன்னுக் கேட்போம். சரியா?”என்றான் மித்ரன். 

அதைக் கேட்டதும் தனது கண்கள் பளிச்சிட,”சரிங்க. இது நல்லா ஐடியா!”என்றுரைக்க, 

“ஓகே. இப்போ தூங்கலாம்”என்று கூறி விட, 

அதற்கடுத்தச் சில நிமிடங்களில் அவ்விருவரும் ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொண்டு விட்டிருந்தனர். 

அதற்கடுத்த நாள், தாங்கள் பேசிக் கொண்டதைப் போலவே, இந்த விஷயத்தை தங்கள் வீட்டுப் பெரியவர்களின் காதுகளுக்கு எடுத்துச் சென்றனர் மித்ரனும், வெண்பாவும். 

அதைக் கேட்டு விட்டு,”ஓஹோ! அந்த மதுபாலா உன் தம்பியோட ஆஃபீஸில் சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது! அதுக்குள்ளே நீ அவளை உன் தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்குப் போயிட்டியா?”எனத் தன் மருமகளிடம் கேட்டார் ஜோதி. 

அதில் அவரைத் தர்மச் சங்கடத்துடன் ஏறிட்டுப் பார்த்து,”இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே உங்க கிட்டேயும், மாமா கிட்டேயும் செல்லாததுக்கு என்னை மன்னிச்சிருங்க”என்று தன் மாமியார், மாமனாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள, 

அதற்கு,”அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. நீ தானே உன் தம்பிக்கு எல்லாத்தையும் எடுத்துச் செய்யனும்? இதை அவனுக்குச் செய்றதுக்கு உன்னைத் தவிர்த்து வேற யாருக்கு உரிமை இருக்குச் சொல்லு? அதே மாதிரி நீ இவ்வளவு சீக்கிரமாக அந்தப் பொண்ணைப் புகழுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க முடிவெடுத்து இருக்க அப்படின்னா நீ கண்டிப்பாக அந்தப் பொண்ணைப் பத்தி மேலோட்டமாகப் பார்த்து முடிவு எடுத்து இருக்க மாட்டன்னு எங்களுக்கு நல்லாவே புரியுது! அதனால் உனக்கு அந்தப் பொண்ணு மேலே முழு நம்பிக்கை இருந்தால் அதில் எங்களுக்கும் எந்த வித மறுப்பும், மாற்றுக் கருத்தும் கிடையாது! நீ உங்க கிட்டே சாரி கேட்க அவசியம் இல்லைம்மா”என அவளிடம் கனிவாக மொழிந்திருந்தார் கபிலன். 

அதில் தான், அவளது முகத்தில் தெளிவு பிறந்தது என்று கூறலாம்!

உடனே,”நன்றி மாமா, அத்தை!”என்று அவர்கள் இருவரிடமும் நன்றியைத் தெரிவித்தாள் வெண்பா. 

“சரி. இந்தக் கல்யாணத்தை எப்படி நடத்தி முடிக்கலாம்ன்னு இப்போ கலந்து பேசலாமா?”என்றிருந்தான் மித்ரன். 

“பேசலாமே!”என்றுரைத்து, 

தனது மருமகளைப் பார்த்து,“நீ நாளைக்குப் புகழோட ஆஃப்ஸூக்குப் போய் எல்லார் கிட்டேயும் பேச்சுக் கொடுக்கிற மாதிரி மதுபாலா கிட்டேயும் பேச்சுக் கொடு. நீ இப்போ சொன்னதை வச்சுப் பார்த்தால் அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் செய்துக்க விருப்பமும், எண்ணமும் இல்லைன்னுத் தான் உறுதியாகத் தோணுது! அதனால் அவ எப்படியும் கல்யாணப் பத்தின பேச்சில் ஆர்வம் இல்லாமல் தான் இருப்பாள்! அதனால் நீ எடுத்தவுடனேயே அதைப் பத்தி அவகிட்டே பேச்செடுக்காமல் வேறப் பொதுவான விஷயங்களை பத்தி உரையாடிட்டு அதுக்கு அப்பறமாக உன் தம்பிப் புகழுக்குப் பொண்ணுத் தேட்றதைப் பத்தி இயல்பாகச் சொல்றா மாதிரி ஆரம்பி! அப்போதிருந்து அந்தப் பொண்ணோட முகத்தை நல்லா கவனிச்சுப் பாரு! புகழைப் பத்திப் பேசும் போது அவ முகத்தில் என்ன உணர்வு வருது? அவனுக்குக் கல்யாணத்துக்குப் பொண்ணுப் பார்க்கப் போவதாகச் சொல்லும் போது அவளுக்குச் சந்தோஷமாக இருக்கா? இல்லைன்னா, அவ சோகமாக ஆகுறாளான்னுப் பார்த்துட்டு அதுக்கப்புறம் அவகிட்டே உன் தம்பியைக் கட்டிக்க அவளுக்கு விருப்பமான்னுக் கேட்டுப் பாரு!”என்று அவளுக்கு யோசனையைச் சொன்னார் ஜோதி. 

ஆனாலும் மதுபாலாவிடம் விஷயத்தை நேரடியாகப் பேசாமல் இப்படி சுற்றி வளைத்துப் பேசி, அவளிடம் விருப்பத்தைக் கேட்பது என்பது அத்துணை உவப்பானதாய் இல்லை வெண்பாவிற்கு. 

ஆனால் அவர் சொன்னதில் பாதியைச் செய்து பார்க்க முடிவெடுத்து விட்டு, 

“ஓகே அத்தை! நீங்கச் சொல்ற மாதிரியே நாளைக்குப் போய் மது கிட்டே பேசிப் பார்க்கிறேன்”என்றுரைத்து விட்டாள். 

“அப்போ சரி. நாளைக்குப் போய்ப் பேசிட்டு நல்ல செய்தியோட வீட்டுக்கு வா ம்மா”என்று அவளிடம் கூறிப் புன்னகைத்தார் கபிலன். 

ஆனால்,”அவங்க கிட்டே ஒரு குருட்டு நம்பிக்கையில் சரின்னுச் சொல்லிட்டேன்ங்க. ஆனால் இதை எந்தளவுக்கு என்னால் பக்குவமாக நடத்தி முடிக்க முடியும்ன்னு எனக்குத் தெரியலைங்க”என்று தன்னுடைய தவிப்பைக் கணவனிடம் பகிர்ந்து கொண்டாள் வெண்பா. 

“ஏன்ம்மா அப்படி நினைக்கிற?”என்று அவளிடம் அக்கறையாக விசாரித்தான் மித்ரன். 

“நான் அந்தப் பொண்ணைப் பத்தி அவ கிட்டேயே நேரடியாக கேட்டுத் தெரிஞ்சிக்காமல் அவளோட ஃப்ரண்ட் கிட்டே கேட்டதே எனக்கு ரொம்பக் குற்ற உணர்ச்சியாக இருக்கு! இப்போ இதையும் அவகிட்டே சுத்தி வளைச்சுப் பேசி, அவளோட விருப்பத்தை தெரிஞ்சிக்கிறதுன்னா அவ்வளவாக நியாயமாகப் படலைங்க! அதான்”என்று கவலையுடன் பதிலளிக்கவும், 

“அப்போ உன் மனசுக்கு என்னத் தோணுதோ அதையே பண்ணும்மா. எங்ககிட்ட கேட்டால் நாங்க ஆள், ஆளுக்கு ஒரு ஐடியாவைச் சொல்லுவோம்! ஆனால் இதில் நீ முடிவு எடுத்தால் தான் சரியாக இருக்கும்! அதனால் நீயே இதைப் பத்தி யோசிச்சு அந்தப் பொண்ணுக் கிட்டே பேசிடு!”என மனைவிக்கு அறிவுரை வழங்க, 

அதைக் கேட்டவளுக்கும் அது தான் சரி என்று  மனதிற்குப்பட்டது! 

அதனாலேயே,”ஓகேங்க. நான் இனிமேலாவது அந்தப் பொண்ணுக்கிட்டே எல்லாத்தையும் வெளிப்படையாகப் பேசிட்றேன்! அப்போ தான் யாருக்கும், எந்த மனக் கஷ்டமும் வராது!”எனத் தனது தெளிவான முடிவைக் கணவனிடம் உரைத்து விட்டிருந்தாள் வெண்பா. 

இதே சமயத்தில் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்ட தோழியைச் சைடு மிர்ரரின் வழியாக குற்ற உணர்வுடன் பார்த்தாள் பிரேமா.

ஏனெனில் தங்கள் முதலாளியின் தமக்கையின் வேண்டுகோளுக்கு இணங்கித் தன்னுடைய தோழியின் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவளைப் பற்றிய அனைத்தையும் சொல்லி விட்டாலும் கூட அது தனது தோழிக்குத் தெரியாது அல்லவா?

அப்படியென்றால் அதுவும் ஒரு வகையில், தான் மதுபாலாவிற்குச் செய்திருக்கும் துரோகம் தானே? என்ற மனப் புழுக்கத்தில் ஆட்பட்டுப் போனாள் பிரேமா. 

அதன் விளைவாகத் தோழியின் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசத் தைரியம் இன்றிக் கூனிக் குறுகிப் போனதால், 

அவள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துக் கொண்டே வண்டியை ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்தினாள். 

ஆனால் அவளது மாற்றத்தை அறியாமல் தனக்கு அலுவலகத்தில் கிடைத்தவற்றைப் பற்றியே அவளிடம் பெருமிதமாகப் பேசிக் கொண்டு இருந்தாள் மதுபாலா. 

“நீ அதையெல்லாம் வாங்கினதால் இப்போ சந்தோஷமாக இருக்கத் தானே டி?”எனக் கேட்டிருந்தாள் பிரேமா. 

அதில்,”ஆமாம் டி. நான் ரொம்பவே சந்தோஷமாக இருக்கேன்! நீ ஏன் திடீர்னு இப்படி கேட்கிற?”என்றவுடன், 

“இல்ல டி. சும்மா கேட்கனும்னுத் தோணுச்சு. அதான்”என்றவளோ, 

தனது இரு சக்கர வாகனத்தை அலுவலகத்தின் வாயிலில் நிறுத்தி விட்டு,

“நீ இறங்கி உள்ளே போ. நான் ஸ்கூட்டியைப் பார்க் பண்ணிட்டு வர்றேன்”என்றவளிடம், 

“பரவாயில்லை டி. நீ வண்டியை நிறுத்திட்டு வா. நான் அது வரைக்கும் இங்கேயே காத்திருக்கேன்”என்றத் தோழியைப் பெருமூச்சுடன் நோக்கி விட்டுத் தன் இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு, 

“வா போகலாம்”என்று மதுபாலாவுடன் சேர்ந்து அலுவலகத்திற்குள் நுழைந்தாள் பிரேமா. 

அந்த நேரம் பார்த்து அவர்களுடன் தானும் இணைந்து கொண்டு,”ஹாய்! குட் மார்னிங்!”என அவ்விருவருக்கும் காலை வணக்கத்தை தெரிவித்தான் வெற்றிச்செல்வன். 

  • தொடரும்
error: Content is protected !!
Scroll to Top