மௌனம் – 16.2

“அது… அது எனக்கொரு பொண்ணைப் பிடிச்சிருக்கு ஜீவா…” மறைக்காமல் ஒப்புக்கொண்டான் தேவா.

“யாரு சார் அந்தப் பொண்ணு? கோ ஆக்டரா? இல்ல மாடலா? அசிஸ்டன்ட் டைரக்டர்?” அவள் ஆர்வத்துடன் அடுக்க, தேவாவிடம் பெருமூச்சு எழுந்தடங்கிற்று.

‘அவர்களா இருந்தால் நான் ஏன் உன்னிடம் வரப் போகிறேன்?’ மனம் அனத்தியது.

“அதெல்லாம் இல்ல ஜீவா. இந்தப் பொண்ணு நம்ம ஊருக்காரப் பொண்ணு!” அவன் மெல்லிய குரலில் கூறினான்.

“பார்றா… உங்களுக்குத்தான் ஊர்க்காரப் பொண்ணே வேணாம்னு சொன்னீங்க? அப்புறம் எப்படி போய் மாட்டுனீங்க? ரீசன்டா நம்மூர்ப் பக்கம் போனீங்களா என்ன?” அவள் குரலில் சின்னதா ஆர்வம் தொற்றியது. பெரும்பாலும் ஊரில் இருப்பவர்களை அவளுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

“ஊர் சைட் போய் ரொம்ப நாளாச்சு ஜீவா. இப்போ அங்கப் பெருசா போறதில்ல. இந்தப் பொண்ணு அன்னைக்கு கல்யாண மண்டபத்துக்கு நீ வந்தல்ல, அப்போதான் பார்த்தேன்!” பொய்யுரைத்து மழுப்பினான். உண்மையை சொல்வதி சங்கடம், குழப்பம், தயக்கம்.

“ரைட்டு… அப்புறம் எப்படி உங்க படத்துல வர்ற மாதிரி கண்டதும் காதலா? பொண்ணு ஏஞ்சல் மாதிரி பாவாடை தாவணி போட்டுட்டு வந்தாங்களா? உங்களுக்கு பட்டாம்பூச்சி பறந்துச்சா? பேக் கிரவுண்ட் சாங் எல்லாம் கேட்டுச்சா தேவா சார்?” அவள் சிரிப்புடன் கேட்க, அவனுக்குக் கடுப்பானது.

“ஜீவா, நான் சீரியஸா பேசுறேன். நீ கிண்டல் பண்ற. சண்டே மீட் பண்ண வர்றீயா இல்லையா?” அவன் சின்ன கோபத்துடன் கேட்டான்.

“நான் கிண்டல் பண்ணலை சார். ஜஸ்ட் தெரிஞ்சுக்கக் கேட்டேன். பரவாயில்லை விடுங்க, எல்லாத்தையும் நேர்லயே சொல்லுங்க. ஞாயித்துக்கிழமை சாயந்தரம் எங்கேயாவது மீட் பண்ணலாம். நீங்க ரொம்ப போட்டுக் குழப்பிக்காதீங்க தேவா சார். பேசும்போதே கன்ப்யூஸ்டா இருக்கீங்கன்னு தெரியுது!” அவள் ஆதுரமாகப் பேசினாள். அந்தக் குரல் உண்மையில் அவனை மெதுவாக வருடியது.

“முதல்ல நம்ம நேர்ல மீட் பண்ணலாம் ஜீவா. என்னோட பிரச்சனைக்கு உன்கிட்டேதான் சொல்யூஷன் இருக்கு!” என்றான் அவன்.

“நீங்க இவ்ளோ தூரம் என்னை மதிச்சுக் கூப்பிடுறீங்க தேவா சார். கண்டிப்பா நேர்ல எல்லாத்தையும் சொல்லுங்க, நம்ம பார்த்துக்கலாம்…” என அவள் பேச்சை முடித்தாள்.

ஜீவா அவனைச் சந்திக்கப் போகிறேன் என்று மறைக்காமல் கிரிஜாவிடம் கூறியே அனுமதி பெற்றாள். முதலில் அவருக்குத்தான் தயக்கம்.

“ம்மா… அவர் என்னை ஒரு நல்ல ஃப்ரெண்டா பார்க்குறார்ம்மா. அவரே நிறைய டைம் சொல்லிருக்காரு. ஒரு டைம் போய் அவரைப் பார்த்துட்டு வரேன்மா!” எனத் தாயிடம் அனுமதி பெற்றுவிட்டாள்.

தேவாதான் எப்போது ஞாயிறு வரும் என அப்போதே காத்திருக்கத் தொடங்கினான். அவனால் இந்தக் குழப்பத்தோடு சுற்றவே முடியவில்லை. வேலையில் நிறைய கவனம் சிதறியது. உரியவளிடமே அதற்குண்டான விடையைக் கேட்டுத் தெளிய வேண்டுமென அவளை நேரில் சந்திக்க முடிவு செய்தான்.

எங்கே செல்வது என யோசித்து, ஒரு ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் உணவுண்ண முன்பதிவு செய்தவன், சரியாக ஞாயிறு மாலை அவளைப் பேருந்து நிறுத்தத்தில் ஏற்றிக்கொண்டு அங்கே சென்றான்.

ஜீவா அந்த உணவகத்தை பார்வையாலேயே அலசிக்கொண்டு அவன் பின்னே தயங்கி நடந்தாள். அவன் இப்படியொரு ஐந்து நட்சத்திர உணவகத்திற்கு அழைத்து வருவான் எனத் தெரிந்திருந்தால் முதலிலேயே செல்லும் இடத்தை மாற்றியிருப்பாள்.

தயக்கத்தோடு இருக்கையைத் தள்ளி அமர்ந்தவளின் பார்வை மெல்ல அந்த உணவகத்தை அளவிட்டது. வரவேற்பில் நின்று கொண்டிருக்கும் பெண் அத்தனை நேர்த்தியாக உடை உடுத்தி, உதட்டுச் சாயம் பூசி, கொண்டையிட்டு, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாள். மற்ற அனைத்து ஊழியர்களும் ஒரே மாதிரியான உடை, உடல் மொழி என ஒரு ரிதத்தோடு வேலை செய்தனர். தங்களது உணவகத்தைப் போல இங்கே கசகசவென எந்தச் சத்தமும் இல்லை. ஒரு மாதிரி ஆழ்ந்த அமைதியுடன் பணக்காரத் தன்மையும் காற்றில் கூட கலந்திருந்தது போல அவளுக்கொரு பிரமை தோன்றிற்று.

“சாம்பார் எடுத்துட்டு வாங்க… காய்கறி கூட்டு வேணும்!” என்று உரத்துக் குரல் ஒலிக்க இங்கே பஞ்சம் போலிருந்தது. உணவை உண்பவர்கள் கூட நிதானமாக, நேர்த்தியாக, நவநாகரிகமாக முள்ளுக் கரண்டியில் எடுத்து சாப்பிட்டனர். குளிரூட்டப்பட்ட அறை, மெல்லிய இசை என அவள் யோசனை தங்களது உணவகத்திற்குச் சென்று வந்தது. சின்னதாகச் சிரித்துக் கொண்டாள். அவர்களதும் உணவகம்தான், இதுவும் கூட. ஆனால் எத்தனை பெரிய வேறுபாடுகள். என்ன அங்கே ஏழை பசியாறுகிறார்கள். இங்கே பணக்காரர்கள் ருசிக்கிறார்கள், அதுதான் பெரும் வேறுபாடு.

“ஜீவா… என்ன சாப்பிடுற? மெனு கார்ட்!” அவன் நீட்டிய அட்டையை வாங்கிப் பார்த்தாள் அவள். அதில் வெறும் தண்ணீர் போத்தல் நூற்று இருபது ரூபாய் எனப் போட்டிருந்ததும் அவளுக்கு திடுக்கிட்டது. எதிரிலிருப்பவனைச் சங்கடத்துடன் பார்த்தாள்.

“என்னாச்சு… உனக்கு எதுவும் பிடிக்கலையா?” அவன் யோசனையுடன் கேட்டான்.

அவள் மறுப்பாகத் தலையசைத்து, “எனக்கு ஒரு தயிர் சாதம் மட்டும் போதும்!” என்றாள் இயல்பான குரலில்.

“ஏன் தயிர் சாதம்? வேற ஏதாவது நான்வெஜ் ஆர்டர் பண்ண வேண்டியது தானே ஜீவா? நீ வெஜிடேரியன் இல்ல தானே?” அவன் சந்தேகத்துடன் கேட்டான்.

“நான்வெஜ் சாப்பிடுவேன் தேவா சார். பட், இன்னைக்கு வேணாம். என்னவோ எனக்கு சாப்பிடத் தோணலை!” அவள் நாகரிகமாக மறுக்க, தேவா அவளை வற்புறுத்தவில்லை. தனக்கான உணவைச் சொல்லிவிட்டு அவள் முகம் பார்த்தான். அதில் ஜீவா நேராக நிமிர்ந்தமர்ந்தாள்.

“சொல்லுங்க தேவா சார், என்ன பிரச்சனை? என்கிட்டே சொல்யூஷன் இருக்குன்னு சொன்னீங்க? அவ்ளோ பெரிய ஆளா நான்னு நினைச்சு சிரிச்சுகிட்டேன்!” அவள் சின்ன முறுவலுடன் கேட்டாள். தேவா சில நொடிகள் தயங்கினான்.

“தேவா சார்… பேசத்தானே கூப்பிட்டீங்க. இல்ல, சாப்பிட்டு கிளம்பப் போறோமா?” அவள் கேலியாகக் கேட்டாள்.

“ஜீவா… அது… எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு. ஐ மீன், லிட்ரலி ஐ’யம் பாலிங் ஃபார் ஹெர். பட், அவ என்னோட எந்த எக்ஸ்பெக்டேஷனுக்கும் ஒத்து வர மாட்டா!” அவள் கேலியில் ரோஷம் வரப் பெற்று சின்னக் குரலில் சங்கடத்தை உதறிக் கூறினான் தேவா.

“ஹம்ம்… நீங்க அன்னைக்கு சொன்னீங்களே. படிச்ச, சிட்டி பொண்ணா, உங்களோட கரண்ட் ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி வேணும்னு. அதைத்தான் சொல்றீங்களா?” எனச் சந்தேகத்துடன் கேட்டாள் ஜீவா.

தலையசைத்தவன், “அபார்ட் ஃப்ரம் மணி, எனக்கு வர்ற லைஃப் பார்ட்னர் நல்லா படிச்சிருக்கணும். நல்ல வேலை அண்ட் குட் லுக்கிங்கா இருக்கணும். ஆனால் அந்தப் பொண்ணு படிக்கலை, டென்த் பாஸ் ஒன்லி. அவ அழகா, அழகில்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்தப் பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றா ஜீவா. என்னால வேலைல கான்சென்ட்ரேட் பண்ணவே முடியலை. கடுப்பா இருக்கு. எல்லாரையும் திட்டுறேன், எறிஞ்சு விழுறேன். ஒரு மாதிரி லைஃப் ட்ரையான ஃபீல். இதுக்கு லவ்னு நான் பேர் வைக்கணுமா, இல்ல ஈர்ப்புன்னு கடந்துடணுமான்னு தெரியலை.லாஸ்ட் டூ மந்த்ஸ் ரொம்ப சஃபராகிட்டேன் நான்” புலம்பலுடன் அவள் முகம் பார்த்தான் தேவா.

ஜீவாவிடம் மெல்லிய சிரிப்பு.
“இதை நீங்க ரொம்ப தப்பான ஆள்கிட்டே கேட்குறீங்க தேவா சார். எனக்கு லவ்ல பெருசா நம்பிக்கை இல்ல, அதுக்காக உங்க ஃபீலிங்க்ஸைத் தப்பு சொல்ல மாட்டேன். இட்ஸ் ஹூமன் நேச்சர். ஏதோ வகையில அந்தப் பொண்ணு உங்களை அட்ராக்ட் பண்ணிருக்கலாம். என்ன, உங்களோட ஆழ்மனசால அதை ஏத்துக்க முடியலை!”

“புரியலை ஜீவா!”

“உங்களோட மனசுல இப்போ நீங்க எப்படி என்ன நிலைமைல இருக்கீங்கன்னு ஆழமா பதிஞ்சு போச்சு. அதை வச்சே உங்களுக்கு வரப் போற லைஃப் பாட்னருக்கான
எக்ஸ்பெக்டேஷனை உருவாக்கிட்டீங்க. திடீர்னு உங்களோட உயரத்துக்கும் தகுதிக்கும் கொஞ்சம்கூட செட்டாகாத பொண்ணு மேல எப்படி எனக்கு ஃபீலிங்க்ஸ் வரலாம்னு உங்க ஈகோ கேள்வி கேட்குது. உங்களுக்குன்னு நீங்க போட்டு வச்ச கோட்டைத் தாண்டி வர முடியாம தவிக்குறீங்க,
ரைட்டா?” ஜீவா சரியாகக் கேட்க, அவன் தயக்கத்துடன் அவள் முகம் பார்த்தான்.

அவள் கூறுவது அத்தனையும் உண்மையே. அவன் மெல்லத் தலையசைத்தான். அவனே ஏற்றுக்கொள்ள தயங்கிய விஷயம். அவள் வாயால் கேட்கும்போது ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

“என்னைப் பொறுத்தவரை இது காதல் எல்லாம் இல்ல தேவா சார். இது ஈர்ப்பா கூட இருக்கலாம். கொஞ்ச நாள் அந்தப் பொண்ணைப் பார்க்காம, பேசாம இருங்க. அவ உங்க ஞாபகத்துலருந்து ரொம்ப தூரம் போய்டுவாங்க. இது உங்களுக்கு மட்டுமில்ல, அந்தப் பொண்ணுக்கும் ரொம்ப நல்லது!” என்றாள் முறுவலுடன்.

“ப்ச்… அப்போ அவ என்னை மேரேஜ் பண்ணா நல்லாருக்க மாட்டான்னு சொல்ல வர்றீயா நீ? அதென்ன அவளுக்கு நல்லது? இன்ஃபேக்ட் அவளுக்கு நான் ரொம்ப பெஸ்டான ஆப்ஷன், யூ நோ!” ஜீவாவின் பேச்சில் அவனுக்குக் கோபம் வந்தது. நான் அவளைவிட எல்லா வகையிலும் சிறந்தவன் என்ற எண்ணம் தன்முனைப்பை தூண்டிவிட்டது. ஜீவாவின் உதடுகளில் இளம் புன்னகை உதிர்ந்தது.

error: Content is protected !!
Scroll to Top