“இதோ… உங்க வாய்லருந்தே வந்துடுச்சே, அந்தப் பொண்ணுக்கு நான் அதிகம்னு. அந்த எண்ணம்தான் உங்க ஆழ்மனம் வரை இருக்கு. இதே எண்ணத்தோட நீங்க அவங்களை கல்யாணம் பண்ணா ரெண்டு பேரோட வாழ்க்கையும் சரியில்லாம போய்டும். முதல்ல குணத்தைப் பார்த்தேன், நிறத்தைப் பார்த்தேன்னுதான் காதல் ஆரம்பிக்கும் தேவா சார்.”
“ஆனால் கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள்ல வாழ்க்கை சலிச்சுப் போகும்போது, இவளுக்கு நான் ரொம்ப அதிகம். பத்தாவது கூட படிக்காத, நல்ல பேக்ரவுண்ட், அழகுன்னு எதுவுமே இல்லாத அவ எனக்குத் தகுதியான்னு உங்க அடிமனசுல இருக்கிற எண்ணம் வெளிய வந்து, பேச்சுலயும் செயல்லயும் காட்டுனீங்கன்னா பாவம் அந்தப் பொண்ணுக்கு ரொம்ப கஷ்டமா போய்டும் தேவா சார்.”
“உங்க அன்பை மட்டுமே நம்பி வரப் போற பொண்ணு. வேண்டாமே… உங்க ரெண்டு பேருக்குமே நல்லது நான் சொல்றது. அந்தப் பொண்ணு அவங்களுக்கு ஏத்த லைஃப் பாட்னரோட நிம்மதியா வாழட்டும். நீங்க உங்க ஸ்டாண்டர்டுக்குப் பாருங்க!” அவள் கூற, அவன் அவளைச் சில நொடிகள் உறுத்துப் பார்த்தான்.
“அந்தப் பொண்ணு ரொம்ப நல்லவ. ஷீ இஸ் அ வெரி குட் சோல்…” மனத்தை மறைக்காமல் அவள் மீதான தன் எண்ணத்தை உரைத்தான்.
அவன் கூற்றில் மெலிதாக நகைத்தவள், “இங்க யாருமே நல்லவங்க, கெட்டவங்க கிடையாது தேவா சார். உங்களோட பார்வை அவங்ககிட்டே அப்படி இருக்கலாம். இல்ல, நீங்க அவங்களை மீட் பண்ண சிட்சுவேஷன் அவங்களை நல்லவங்களா காட்டிருக்கலாம். மத்தபடி நம்ம எல்லாருமே ஒரு வகையில செல்ஃபிஷ்தான்!” என்றாள்.
பேசியபடியே ஜீவா ஒரு வாய் தயிர் சாதத்தை எடுத்து வாயில் வைத்தாள். சாதத்தோடு மாதுளை பழம், இன்ன பிற ஏதேதோ கலந்திருந்தார்கள், சுவையாக இருந்தது. வெறும் தயிர் சாதத்தைக் கூட இத்தனை சுவையாக செய்ய முடியும் என அவள் இன்றைக்குத்தான் ருசி பார்த்திருக்கிறாள்.
“அப்போ இது ஒன்லி அட்ராக்சன். லவ் இல்லைன்னு சொல்ல வர்ற?”
“லவ்வே இல்ல தேவா சார்!” என்றவள், அவன் முறைப்பில், “ரைட்டு, விடுங்க. ஒரு டைரக்டர்கிட்டே இப்படி சொல்லக் கூடாதுதான்!” எனச் சிரித்தாள். தேவா சிரிக்கும் முகம், உதடு, வரிசையாகத் தெரிந்த பல் வரிசை என மெதுவாக அலைந்தான். என்ன இருக்கிறது இந்தப் பெண்ணிடம் என மனம் இவளிடம் தேங்கி நிற்கிறது. பால் வண்ண மேனியில்லை, மாசு மருவற்ற முகம் இல்லை. கண்ணைக் கவரும் ஈர்க்கும் வகையில் அவள் தோற்றம் கிடையாது.
ஆனாலும் அவள் உதடுகளில் சிநேகமான புன்னகை, நிதானமான பார்வை. எதையும் பிரித்து ஆராய்ந்து இரண்டு பக்கமும் யோசிக்கும் பகுத்தறிவு, சட்டென கோபம் கொள்ளாத விவேகம், யாரையும் காயப்படுத்தாத நாகரிகமான பேச்சு, எங்கேயும் தன் எல்லையைத் தாண்டத குணம் என அவன் மனம் இத்தனை நாட்கள் அவனறியாமல் கூர்ந்தாராந்ததை முன்னெடுத்துப் போட, மனம் திணறியது. இத்தனை தூரமா இந்தப் பெண்ணை நான் கவனித்திருக்கிறேன். இல்லவே இல்லை, அவள் பேசும்போது செவியை மட்டும்தானே ஈந்தேன். இதெல்லாம் எப்போது நான் ஆராய்ந்தேன் என தடுமாறினான்.
“நான் என்ன செய்யணும்னு சொல்ற?” முடிவு உன்னுடையது என்பதுபோல அவளைப் பார்த்தபடியே உண்டான் தேவா.
“ஒரு ஃப்ரெண்டா உங்களை என்கரேஜ் பண்ணுவேன் தேவா சார். பட், அஸ் அ கேர்ளா, வேணாம்னு சொல்லிடுவேன். கொஞ்ச நாள் போனா அந்தப் பொண்ணு உங்களுக்கு பாஸிங் க்ளவுட் போல தோணும். நீங்க உங்க எக்ஸ்பெக்டேஷனை சாட்டிஸ்ஃபை பண்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. நாளைப் பின்ன சண்டை வந்தா கூட, அவங்களை டீக்ரேட் பண்ணத் தோணாது. அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி லைஃப் பார்ட்னர்தான் சூட் ஆகும்!”
“அப்போ அந்தப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணா டீக்ரேட் பண்ணுவேன்னு நீ சொல்ற மாதிரி இருக்கு ஜீவா!” அவன் சின்ன குரலில் கடுப்பை மறைத்துக் கேட்டான். வந்ததிலிருந்து அவன் என்னவோ அவளது பின்புலத்தை தாழ்வாக எண்ணுவது போல பேசியது அவனுக்கு எரிச்சலானது.
“நான் அப்படி சொல்லலை தேவா சார். அதுக்கெல்லாம் ஏன் இடம் கொடுக்கணும்? நீங்க முதல்ல நல்லா யோசிங்க. உங்களுக்கு எது சரி, எது சரி வராதுன்னு என்னைவிட உங்களுக்குத்தான் நல்லா தெரியும். நான் ஜஸ்ட் தேர்ட் பெர்சன். தூரத்துலருந்து பார்த்து அட்வைஸ் பண்றது எனக்கு ஈஸி. பட், உங்களுக்குத்தான் அதோட கனம் தெரியும். யார்கிட்டே அட்வைஸ் கேட்டாலும் ஃபைனல் டிசிஷன் உங்களோடதாவே இருக்கட்டும்!” என அவள் முடிக்க,
“ஓகே, ஃபைன்…” எனத் தலையசைத்துக் கேட்டுக் கொண்டான் தேவா. பின்னர் பேச்சு வார்த்தையில்லாமல் சில பல நொடிகளுக்கு உணவு பற்களில் அரைபடும் சத்தம் மட்டுமே கேட்டது.
உண்டு முடித்ததும் ஜீவா பேருந்தில் செல்வதாகக் கூற, “நான்தானே உன்னைக் கூட்டிட்டு வந்தேன். சோ, பத்திரமா வீட்ல விட்றதும் என் பொறுப்பு!” என அவள் மறுப்பைப் புறந்தள்ளி, அவளது வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான். ஜீவா மெல்லப் பார்வையைச் சாலையில் அலையவிட்டாள்.
“சோ, என்னை நீ நல்லாஆஆ புரிஞ்சு வச்சிருக்க ஜீவா. ஹம்ம்… அப்போ ஈகோயிஸ்டா நான்? இத்தனை நாள் எனக்கே இது தெரியாம போச்சும்மா!” திடீரென அமைதியைக் கலைத்தது தேவாவின் கேலிக் குரல். அவனுக்கு கோபம், ஆதங்கம். அதெப்படி இவள் என்னை ஈகோயிஸ்ட் என்ற வார்த்தைக்குள் அடக்கலாம் என மனம் முறுக்கிக் கொண்டது.
“சாரி தேவா சார், அந்த வார்த்தையை நான் யூஸ் பண்ணிருக்கக் கூடாது. பேசும்போது ஏதோ டக்குன்னு சொல்லிட்டேன். அப்புறம் யோசிச்சேன். அது தப்புன்னு தோணுச்சு. இனிமே கொஞ்சம் கவனமா பேசுறேன். சாரி ஃபார் தட்!” சின்னக் குரலில் கூறினாள் ஜீவா. அவளுக்கும் அந்த வார்த்தையை உபயோகித்தது தவறெனப் புரிந்தே இருந்தது.
ஜீவா உதட்டை அழுந்தப் பூட்டிக்கொண்டு சாலையில் கவனமாக இருந்தான். ஆனாலும், அவன் முகத்தில் கடுப்பு தெரிந்தது.
“நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதீங்க தேவா சார். ஒரு பழமொழி இருக்கே, இனம் இனத்தோட சேரும். அதே போல பணம் பணத்தோடதான் சேரும். அதுதானே காலங்காலமா நடக்குது. உங்களோட தகுதிக்கு நீங்க எதிர்பார்க்குறதுல என்ன தப்பிருக்கு?”
“ஸ்டில் நீங்க சினிமா வாய்ப்பு தேடிட்டு இருக்க அதே தேவாவா இருந்தா, அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு எந்தத் தயக்கமும் உங்ககிட்டே இருந்திருக்காது. இன்ஃபேக்ட், நான் மீடியேட்டரா வர வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.”
“செகண்ட் தாட் எதுவும் இல்லாம நீங்களே போய் அவங்ககிட்டே ப்ரபோஸ் பண்ணிருப்பீங்க. ஏன்னா, உங்ககிட்டே அப்போ இப்போ இருக்கிற பணம், புகழ், அந்தஸ்துனு எதுவுமே இருந்திருக்காது. நீங்க ஒரு மிடில் க்ளாஸ் சராசரி ஆணா இருந்திருப்பீங்க…”
“ஆனால், இப்போ உங்ககிட்டே எல்லாமே இருக்கு. சொடக்கு போடுற நேரத்துல நினைச்சது கைமேல வர்ற அளவுக்கு பணம் இருக்கு. கொஞ்ச நேரம் முன்னாடிகூட ரெண்டு பேர் சாப்பிட்டதுக்கு ஒரு செகண்ட் கூட யோசிக்காம ரெண்டாயிரம் பில்லை அசால்ட்டா பே பண்ணிருக்கீங்க.”
“அப்படியிருக்கும்போது, எதுவும் இல்லாத பொண்ணை எப்படி எனக்குப் பிடிக்கலாம்னு உங்க மனசு கேக்குது. நீங்க ஈகோயிஸ்ட் இல்ல தேவா சார். ரொம்பப் பிராக்டிகலான ஆளு. உங்க லைஃப் யாரோட வாழ்ந்தா கரெக்டா இருக்கும்னு மனசு சொல்றதைக் கேட்டு, எமோஷனலா முடிவெடுக்காம, மூளை சொல்றதைக் கேட்டு சரியான முடிவெடுக்குறீங்க.”
“இதுல தப்பேதும் இருக்கதா எனக்குத் தெரியலை. ஆமா… இவ்ளோ சொன்னீங்களே, அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லலை பாருங்க. அன்னைக்கு நான் சமைக்கிறதுல ரொம்ப பிஸி. சோ, யார் வந்தா, போனான்னு எனக்கு சரியா தெரியலை…”
இத்தனை தூரம் ஒரு யுவதி தேவாவைப் பாதித்திருக்கிறாள் என்றால், அவள் யாராக இருக்குமென இவளால் அனுமானிக்க முடியவில்லை.
அவள் பேசிய அனைத்தையும் மௌனமாக அசைபோட்ட தேவா, “ஹம்ம்… உனக்குத் தெரியாது ஜீவா…” என்றான் இயல்பைத் தொலைத்த குரலில்.
“ஓ… உங்க சொந்தமா அவங்க?” அவன் புறம் மெல்ல இவள் உடல் அனிச்சையாகத் திரும்பியது.
“சொந்தம்தான்… ஆனால் சொந்தமில்லாத பொருள் மாதிரிதான் அவ எனக்கு!” தேவா பூடகமாகப் பேசினான்.
“ரைட்டு… புரியாத மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்க. விடுங்க!” எனக் கேலியாகச் சொன்னவள், சில நொடிகள் யோசித்து, வேண்டும் வேண்டாமெனப் போராடினாள். பின்னர், மனத்தின் நமச்சலைத் தாங்க முடியவில்லை.
“நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லலாமா தேவா சார்?” எனக் கேட்டே விட்டாள். தேவா பதிலளிக்காமல், பார்வையாலேயே அவளைப் பேச உந்தினான்.
“காதல்ல நம்பிக்கை இருக்கு. அன்பு, பாசம்னு அன்னைக்குப் பினாத்துனீங்களே. நான் கூட எனக்கு அதுல பெருசா ஹோப் இல்லைன்னு சொன்னேனே. ஏன்னு தெரியுமா? இதோ… உங்களை மாதிரி யோசிக்கிறவங்களை வச்சுத்தான் தேவா சார்…”
“உங்களுக்கு காதல் வந்தாகூட தகுதியான பொண்ணு மேல வரணும்னு உங்க மனசு நினைக்குது பாருங்களே. என்ன விசித்திரம்? அப்புறம் அதை எப்படி காதல்னு சொல்றீங்க நீங்க? உங்க ஒப்பீனியன்படி லவ் அன்-எக்ஸ்பெக்டடா வர்றது. ரீசன் இல்லாம ஆப்போசிட் ஜென்டர் மேல அட்ராக்ஷன் வரணும்.”
“ஆனாலும், தன்னோட தகுதிக்கு ஏத்தப் பொண்ணு மேலதான் அது வரணுமா தேவா சார்? இப்படித்தான் லவ்ன்ற வார்த்தைக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுத்து நம்மளை நாமளே ஏமாத்திட்டு இருக்கோம். இட்ஸ் நாட் லவ், இட்ஸ் மேட்ச் பிக்ஸிங் தானே?”
கோபம் கொள்ளாமல் நிதானமாகத் தன் கருத்தை முன்வைத்தாள் ஜீவா. தேவா அவளைத் திரும்பிப் பார்த்தான்.
‘இன்னும் இவ என்னென்னலாம் பேசுவாள்?’ அவன் பார்வை கேட்டது. ஆனாலும், ஜீவாவிற்குப் பேச நாக்கு துறுதுறுத்தது.
“இதுவே உங்க எக்ஸ்பெக்டேஷனை ஃபில் பண்ற மாதிரி பொண்ணு மேல பீலிங்க்ஸ் வந்தா, உடனே ப்ரபோஸ் பண்ணி, மேரேஜ் ப்ரொசீட் பண்ணி, காவியக் காதலா மாத்திருப்பீங்க. இப்போ அதுல எசகுபிசகாகிப் போய் வெறும் அட்ராக்ஷன்ல வந்து நிக்கிதுல்ல சார்?” கேலியா, கோபமா எனப் பிரித்தறிய முடியாத குரல் அது. தேவாவிற்குச் சட்டெனக் கோபம் வந்துவிட்டது.
‘இவன் என்னமோ பல பெண்களைக் காதலித்து ஏமாற்றிவிட்டான் என்பது போலல்லவா அவள் வகுப்பெடுக்கிறாள். இதெல்லாம் பெரும் அநியாயம். அவனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்றுரைத்தது பெரும் குற்றமா என்ன?’
“ரொம்ப பேசுற ஜீவா நீ…” என்றுவிட்டான் முகத்தில் அடித்தாற்போல.
தேவா படக்கென இப்படிக் கூறவும், ஜீவா முகம் மாற உதட்டைக் கடித்து மௌனமானாள். மனம் மெல்ல அவளிடம் கேள்வியெழுப்பிற்று. ஏன் இவ்வளவு பேசுகிறோம் இன்றைக்கு?
‘ஏன் தனக்கு இந்த விஷயத்தில் இத்தனைக் கோபம்? ஆம், கோபம்தான். பெரிதாகக் காதல், பாசம், நேசம் எனப் பேசிவிட்டு, அவனுக்கு பூத்திருக்கும் உணர்வை வெறும் தோற்றம், படிப்பு, அந்தஸ்து என்ற கூறுகளை வைத்து பின்னே தள்ளுகிறான். இவனுக்குகெல்லாம் இந்தக் காதல் தேவையா? இவன் எடுக்கும் திரைப்படத்தில் மட்டும் காதல் பல வர்ணங்களைப் பூசி கொண்டிருக்கிறது. ஆனால் நிஜத்தில் அரிதாரத்தை கலைத்துப் போட்டு விட்டதோ என்னவோ? இவன் பணக்கார, படித்தப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து, அடுத்த சந்ததிகளை உருவாக்கும் வேலையைப் பார்க்கட்டும். என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும். ஆனால், அதற்குக் காதலென்று பேர் வைத்தால் மட்டும் இவளுக்கு நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும்!’ மனம் சரமாரியாக அவனை வறுத்தெடுத்தது.
‘அவனளவில் அவன் சரியாகத்தான் இருக்கிறான். அவன் எதிர்பார்ப்பைத் தவறெனச் சுட்டிக் காட்டுவது உன் வேலையா? அவன் என்ன குழந்தையா? உன் கருத்து நீ சொன்னதும் ஏற்றுக்கொள்ள? முப்பது வயது வாலிபன். தவறு எது, சரி எதுவெனப் புரிந்துகொள்ள முடிந்த பக்குவப்பட்ட பகுத்தறிவுள்ள மனிதன். இதற்கு மேலும் இதைப் பற்றிப் பேசாத!’
மனத்தை அதட்டி அடக்கிற்று மூளை. எப்போதும் எல்லா இடத்திலும் மூளை சரியாக இருக்கிறது. என்ன, இந்த மனம்தான் சொல் பேச்சைக் கேட்காமல் இப்படி எங்காவது அவளை மாட்டிவிட்டு விழிக்க வைத்து தொலைக்கிறது!
“சாரி தேவா சார்… இன்னைக்கு என்னமோ ரொம்ப பேசிட்டேன்…” சின்னக் குரலில் கையைப் பிசைந்தாள் ஜீவா.
“கேளு… நல்லா சாரி கேளு. ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு என்னை மொத்தமா ரோஸ்ட் பண்ணிட்ட நீ. நான் கூட என்னைப் பற்றி இவ்ளோ திங்க் பண்ணிருக்க மாட்டேன்?” தேவா முணுமுணுத்தான்.
“ப்ம்ச்… இட்ஸ் ஆல் மை ஒப்பீனியன் ஒன்லி தேவா சார். இதுவே வேற ஒரு ஃப்ரெண்ட்கிட்டே இதை நீங்க கேட்டா, அவங்க வேற மாதிரி அப்ரோச் பண்ணுவாங்க. மனுஷனுக்கு மனுஷன் குணம், கொள்கை, பார்வை, ஒரு விஷயத்தை அணுகுற முறைன்னு எல்லாமே மாறும். அதனால மத்தவங்க ஒப்பீனியனை விட்டுத் தள்ளுங்க. உங்க மனசு… ம்ஹூம்… மூளை சொல்றதைக் கேளுங்க இந்த விஷயத்துல!”
பெருமூச்சுடன், அன்றைக்குப் பேசியது போதுமென அவள் நாக்கு உதடுக்குள் ஒளிந்து ஓய்வு கேட்டது.
“ஐ வில் திங்க் அபவுட் இட் ட்வைஸ், ஜீவா. குழம்பிப் போயிருந்தேன். நீ இன்னும் கொஞ்சமா உன் பங்குக்கு என்னை என்னவோ கொடுமைக்காரன் மாதிரி போர்ட்ரெய்ட் பண்ணிட்ட. ஜஸ்ட் பிஃபோர் அன் ஹவர் முன்னாடி வரைக்கும் நான் ஒரு நல்ல ஹியூமன் பீயிங்க்னு நினைச்சேன். ஆனால் பாரேன், பத்தே நிமிஷத்துல நானே என்னைத் தப்பான மனுஷனாடா நீன்னு கேள்வி கேட்க வச்சுட்ட போ!” பாராட்டா, வஞ்சப் புகழ்ச்சியா எனப் பிரித்தறிய முடியாத குரலில் கூறினான்.
ஜீவா வாயைத் திறக்கவில்லை. அவள் பேசியது தவறில்லை. அது அவளுடைய கருத்து மட்டுமே. தேவாவும் அதற்கு மேலும் பேச்சை வளர்க்காமல் அவளை இறக்கிவிட்டுவிட்டு, வீட்டை நோக்கி ஆரோகணித்தான்.
தொடரும்…
கதை நல்லா போகுதா மக்களே? உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா? போரிங்கா இருக்கா? சொல்லிட்டுப் போங்க