“சார்… தேவா சார்!” தன் தோளைத் தொட்டு உலுக்கிய கரத்தில் தேவாவிற்குச் சுற்றம் உறைத்தது.
கீதனை அவன் பார்க்க, “சார், டைம் டென் ஓ க்ளாக் ஆச்சு. ஸ்டுடியோ க்ளோஸ் பண்ற டைம். கிளம்பலையா நீங்க?” என்றான். அவனுக்கும் வீட்டிற்குச் செல்ல வேண்டுமே. வேலை என்று வந்துவிட்டால் தேவாவிற்கு நேரம் காலம் இராது. ஆனால் மற்றவர்களுக்கு அப்படியல்லவே.
“ஆ… ஓகே கீதன். நாளைக்குப் பார்க்கலாம். நீங்களும் கிளம்புங்க!” எனக் கணினியை அணைத்துவிட்டு எழுந்து அறையைத் தாண்டி அந்த வராந்தாவில் நடந்தான். இரவின் நிசப்தம் மட்டும்தான் அவன் செவியை வருடியது. மற்றபடி சுற்றி ஆள்கள் நடமாட்டமே இல்லை.
அவன் நடந்து வருவது வரிவடிவமாகத் தெரிய, அதைப் பார்த்துக் கொண்டே படிகளில் இறங்கி வெளியேறியவன், மகிழுந்தை இயக்கினான். எவ்வளவு நேரம் கணினித் திரையை வெறித்தே தன்னிலை இழந்து உட்கார்ந்திருந்தோம் என அவனுக்கே தெரியாது. காலை பத்து மணியிலிருந்து அலைபேசியைத்தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்று முறை அவன் தொடர்ந்து அழைத்ததற்கு ஜீவாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. மதியம் ஓய்வெடுக்கும் நேரத்தில் அழைப்பாள் என இவன் எதிர்பார்த்திருக்க, அவள் அதை உடைத்துப் போட்டிருந்தாள். அதில் நிரம்ப கோபம்தான் அவனுக்கு.
நானாக வழியச் சென்று இவளிடம் பேசுவதால் இப்படி நடந்து கொள்கிறாளா என்ற கடுப்பும், கண்ணை மறைத்த சினமும் அவன் வேலையைச் செய்ய விடாமல் தடுத்தன. அதனாலேயே சிலை போல அமர்ந்திருந்தான். முடிக்க வேண்டிய வேலைகள் அடுத்தடுத்து வரிசைக்கட்டி நின்றும் அவன் எதையும் முன்னெடுக்காமல் மூளைக்கும் மனத்திற்கும் இடையே அல்லாடினான்.
இரவு நேரத்தில் குறைந்திருந்த போக்குவரத்தில் அவன் தன்னைக் கலக்க, மகிழுந்தின் முன்பலகையில் வைத்திருந்த அவனின் அலைபேசி, செய்தி வந்ததாக அதிர்ந்து அடங்கிற்று. எடுத்துப் பார்த்தான், ஜீவாதான் போனால் போகிறதென்று ஏதோ குரல்வழிச் செய்தி அனுப்பியிருக்கிறாள் என எடுத்த இடத்திலேயே கடுப்புடன் அலைபேசியை வைத்துவிட்டு, சாலையில் கவனம் வைத்தான்.
சில நிமிடங்களில் மனத்தின் உந்துதலைத் தாங்க முடியாமல் என்னவென அதை ஒலிக்கவிட்டான்.
“தேவா சார், தூங்கிட்டீங்களா?” சின்ன குரலில் கேட்டிருந்தாள் ஜீவா. அப்போதுதான் உணவகத்தை அடைத்துவிட்டு வந்திருந்தாள். குளிக்கத் தோன்றாமல் உடையை மாற்றிப் படுத்தாள் ஜீவா.
அவன் செய்தியைப் பார்த்துவிட்டான் என்றுணர்ந்ததும், “சாரி தேவா சார், நிஜமா சாரி. நீங்க காலைல மூனு டைம் கால் பண்ணியிருக்கீங்க. நான் பார்த்தாலும் அப்போ அட்டென்ட் பண்ணிப் பேச முடியலை. மதியம் பேசலாம்னு நினைச்சேன். ஆனால் நைட்டுக்கு வச்சிருந்த தோசை மாவுல பல்லி விழுந்து போச்சு. சோ, அதுக்குப் பதிலா புதுசா மாவாட்ட வேண்டியதா போச்சு. நிஜமா இன்னைக்கு ரொம்ப வேலை. என்னால நகரவே முடியலை. இல்லைன்னா ஒரு ஃபைவ் மினிட்ஸ் ஒதுக்கி உங்ககிட்டே பேசிருக்க மாட்டேனா?” தயக்கம் தாங்கி வந்தது மீண்டும் ஒரு செய்தி.
அவளுக்கே தன் மீது சின்ன குற்றவுணர்வுதான். உண்மையில் அவன் நடந்த எதையும் மறக்காமல் மீண்டும் தங்களைத் தேடி வந்து பேசி நட்பை புதுப்பித்துக் கொண்டதே பெரிய விஷயம். இவளாகச் சென்று அணுகாமல் அவனே ஒவ்வொரு முறையும் தேடி வந்து பேசுகிறான், நலம் நாடுகிறான். அவனது உயரத்திற்கு தன்னிடம் இப்படி பேச வேண்டுமென்று அவனுக்கு என்னக் காட்டாயம். ஆனாலும் அவன் தன்னை நினைவு வைத்து அவ்வப்போது அழைக்க, தன்னுடைய வேலை கராணமாக அவனிடம் பேச முடியவில்லையே என்ற எண்ணம் அவளை உறுத்திற்று.
என்னவோ, ஜீவாவின் குரலிலிருந்த சோர்வில் இவனால் கோபம்கொள்ள முடியவில்லை. எங்கோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல ஜீவாவின் குரல் உள்ளே சென்றிருந்தது. அவளுக்குப் பதிலளிக்காதவன் அலைபேசியையே சில நொடிகள் பார்த்திருந்தான். பின்னர் யோசிக்காமல் அவளுக்கு அழைத்துவிட, ஜீவா அழைப்பைத் துண்டித்தாள்.
“ரொம்ப டைமாகிடுச்சு தேவா சார். இந்த டைம் பேசுனா நல்லா இருக்காது. கண்டிப்பா நாளைக்கு காலைல பத்து மணிக்கு மேல நானே உங்களுக்கு கால் பண்றேன்!” என்ற அவளின் குரல்வழிச் செய்தியில் எரிச்சலுடன் அலைபேசியை முன்பலகையில் எறிந்தான். அதே கடுப்புடன் வீட்டிற்குச் சென்றவன், ‘நானாக இனிமேல் அவளைத் தேடிச் சென்று அவளிடம் பேச மாட்டேன்’ என்ற சபதத்தோடு உறங்கிப் போனான். மறுநாள் காலை சரியாகப் பத்து மணிக்கு அவன் ஒலிப்பதிவகத்தில் வேலையாக இருக்கும்போது ஜீவா அழைத்துவிட்டாள்.
“ஹலோ தேவா சார்…” அவள் பேச,
“ஹம்ம்… மேடத்துக்கிட்டே பேச அப்பாயிண்ட்மெண்ட் எதுவும் வாங்கணுமா?” கோபத்தை மறைக்காமல் அவன் கேட்டே விட்டான். இரண்டு நிமிடம் என்னிடம் பேசுமளவிற்கு கூட நான் முக்கியமற்றுப் போய்விட்டேனா என அவன் மனம் குமைந்தது.
“சாரி தேவா சார்… நிஜமா உங்களோட அப்பாயின்மெண்ட் கிடைக்காம எத்தனையோ பேர் வெயிட் பண்றாங்க. அப்படி இருக்கப்போ, நீங்க கால் பண்ணி நான் அட்டென்ட் பண்ணலைன்னு உங்களுக்கு கோபம் இருக்கிறது நியாயம்தான். ஆனால் என் வேலை அப்படி. விடிஞ்சும் விடியாமலும் ஹோட்டல்லயே முழிச்சு, நைட்டு அரைத் தூக்கத்துல அடைச்சிட்டுப் போய் படுக்குறேன். இதுல உங்ககிட்டே பேச எனக்கு டைமே கிடைக்க மாட்டுது. நான் வேணும்னு உங்க ஃபோனை அட்டென்ட் பண்ணாம இல்ல!” அவள் தன்னிலை விளக்கம் கொடுத்ததில் தேவா சற்றே கோபத்தைவிட்டு இறங்கி வந்தான்.
“சரி விடு ஜீவா, எனக்குப் புரியுதும்மா!” அவன் ஆதரவாகப் பேசவும், அவளிடம் சின்ன நிம்மதி.
“சொல்லுங்க தேவா சார், எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சுல்ல நம்ம பேசி. அப்பப்போ நினைச்சுப்பேன் உங்களை. டீவில பார்க்கும்போது ஞாபகம் வருவீங்களா, எந்த நாட்டுல இருக்காரோ? ஷூட்டிங் ஸ்பாட்டுல யாரை அதட்டி உருட்டிட்டு இருக்காரோன்னு தோணும்!” அவள் இயல்பாகக் கூற,
“அப்போ டீவில பார்த்த மட்டும்தான் உன் ஞாபகத்துக்கு வருவேனா ஜீவா?” மனம் முந்திக் கொள்ள, தன் தலையைக் கோதியபடியே அவளது பதிலுக்கு எதிர்பார்ப்புடன் செவியை ஈந்தான் தேவா.
“ஹம்ம்… டீவில பார்க்கலைனாலும் நினைப்பேன். ஆனால் ரொம்ப இல்ல தேவா சார். கொஞ்சமா ஞாபகம் வருவீங்க!” அவள் அரிதாரம் இல்லாமல் உண்மையை உரைத்ததில் இவன் மனம் சுணங்கிற்று.
“எதுக்காகக் கால் பண்ணீங்க தேவா சார்? எதுவும் விஷயமா?” அவள் கேட்டதும் தேவா நிதானித்தான்.
சில நொடி தயக்கத்தை உதறியவன், “நான்… எனக்கு உன்கிட்டே கொஞ்சம் பேசணும் ஜீவா…” என்றான் மென்குரலில்.
“ஹம்ம்… பேசலாமே. இன்னும் அரைமணி நேரத்துக்கு நான் ஃப்ரீதான். எதைப் பத்தி தேவா சார்? மறுபடியும் ஷூட்டிங் எதுவும் எடுக்கப் போறீங்களா ஹோட்டல்ல?” அவள் யோசனையுடன் கேட்டாள்.
“இது வொர்க் ரிலேட்டடா இல்லம்மா. பெர்சனலா பேசணும். ஃபோன்ல இல்ல, நேர்லதான் பேச முடியும்!” அவன் கூற,
“அப்போ நாளைக்கு மதியம் ஹோட்டலுக்கு வாங்க தேவா சார். இங்கேயே லஞ்ச் முடிச்சிட்டு பேசிட்டு போவீங்க!” யோசிக்காமல் அவனை அழைத்தாள் ஜீவா.
“ப்ச்… ஜீவா, ஹோட்டல்ல எல்லாம் வேணாம். நம்ம வேற எங்கேயாவது மீட் பண்ணலாம்!” அவன் மறுக்க, அவளிடம் சில நொடிகள் அமைதி.
“ஜீவா…” அவளிருப்பை உறுதி செய்ய அழைத்தான் தேவா.
“ஹான்… தேவா சார். ஞாயித்துக்கிழமை வர்றதுக்கு இன்னும் எத்தனை நாள்னு கணக்குப் பார்க்குறேன் தேவா சார். இன்னைக்கு செவ்வாய்க்கிழமை, அப்போ புதன், வியாழன், வெள்ளி, சனின்னு நாலு நாள் நீங்க வெயிட் பண்ணணும் தேவா சார். அதுக்கு இடையில என்னால வரவே முடியாது!” எனக் குழந்தை போல நாட்களை எண்ணியவள்,
“பொல்லாத ஹோட்டல் வச்சு நடத்துறா இவ. எதுக்கெடுத்தாலும் பிஸியா இருக்கேன்னு சொல்றான்னு மனசுக்குள்ளே என்னைத் திட்டுறீங்க தானே நீங்க?” எனக் கேலியாகக் கேட்கவும் செய்தாள்.
“சே… சே. அதெல்லாம் இல்லம்மா. நாளைக்கு மீட் பண்ணலாம்னு நான் நினைச்சேன். பட், உன்னோட சிட்சுவேஷனும் எனக்குப் புரியுது!” அவன் அவள் கேலியைப் புறந்தள்ளி, தன்னுடைய விஷயத்தில் குறியாக இருந்தான்.
“ஏன் தேவா சார்… அப்படியென்ன நேர்ல பேசப் போறீங்க? நேர்ல சொல்றதை ஃபோன்லயே சொல்லிடலாமே? ரொம்ப முக்கியமான விஷயமா?” அவள் என்னவென்று புரியாமல் கேட்டாள்.
“ஹம்ம்… முக்கியம்தான் ஜீவா. இதை என்னால வேற யார்கிட்டேயும் ஷேர் பண்ண முடியாதும்மா. ஒரு ப்ரெண்டா உன்கிட்டே சொல்லலாம்னு தோணுச்சு!” அவன் தனக்குள்ளே போட்டு உழல்வதைவிட அவளிடமே தீர்வைக் கேட்க எண்ணினான்.
“என்ன தேவா சார்… எந்தப் பொண்ணுகிட்டே மாட்டுனீங்க? உங்க வாய்ஸே சொல்லுதே. சம்திங் பிஷின்னு…” ஜீவா கேலியாகக் கேட்க, சட்டென அவனிடம் ஒரு அதிர்வு. என் குரலை வைத்தே இந்தப் பெண் என்னை அவதானிக்கிறாளா என்ன என மனம் கேள்வியெழுப்பிற்று.