
அன்று மாலையில் தன்னுடைய சம்பளப் பணம் பற்றிய விவரம் இருந்த கவரைப் பிரித்து அதை நன்றாக வாசிக்கத் தொடங்கி விட்டாள் மதுபாலா.
அதிலிருந்த அனைத்து தகவல்களும் மிகவும் சரியாகவும், அது தனக்கு விளங்கும் வகையிலும் இருந்ததை அதை வாசித்து முடிக்கும் தருவாயில் புரிந்து கொண்டவளோ,
தனக்குப் போதிய அளவிலான சம்பளப் பணத்தின் மதிப்பைப் போட்டிருப்பதைக் கண்டதுமே அவளுக்குள் ஒரு நிம்மதிப் பரவியது என்று கூறலாம்!
ஏனெனில், அவள் எதிர்பார்த்தப் பணத்தை விடவும் அதிகமாகவே அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததைக் கண்டவுடன் நெகிழ்ந்து போய் விட்டிருந்தாள் மதுபாலா.
அதே நேரத்தில் அவளுக்குள் ஒரு ஐயமும் எழுந்தது.
அதைக் கேட்டு ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காக வேண்டி,
“மேம்! நான் வெற்றி சாரைப் பார்க்கனும்”என்று வினோதினியிடம் தெரிவித்தாள் மதுபாலா.
அவள் காலையிலேயே அடையாள அட்டை மற்றும் சம்பள விவரத்தை உள்ளடக்கிய கவரைப் பெற்றுக் கொண்டதை தன்னிடம் பகிர்ந்து கொண்டு இருந்ததை நினைவுக் கூர்ந்து விட்டு,
“சரி மேம். நீங்கப் போயிட்டு வாங்க”என்றுரைத்து அவளை அனுப்பி வைத்தாள் வினோதினி.
உடனே வெற்றிச்செல்வனிடம் போய்,”சார்! நான் என்னோட சம்பள விவரத்தைப் பத்தி உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கனும்”என்றாள் தயக்கமாக.
அதில் அவனும்,”எஸ் மேம்! தாராளமாக கேளுங்க”என்று கூறிப் புன்னகைத்தான்.
“இந்தச் சம்பளம் நான் எதிர்பார்த்ததை விடவே அதிகமாகத் தான் இருக்கு. இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை! ஆனால் எனக்கு இங்கேயே பயிற்சித் தர்றேன்னுச் சொல்லி இருந்தீங்க. அப்படின்னா அதுக்கு ஃபீஸ் ஆக இதிலிருந்து ஒரு பங்குப் பணம் போகுமா?”என தட்டுத் தடுமாறி ஒரு வழியாக விஷயத்தைக் கேட்டு விட்டவளைக் குறுநகையுடன் ஏறிட்டுப் பார்த்து,
“இங்கே பாருங்க மேம்! நான் இப்போ சொல்வதை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க! இங்கே நீங்க எடுக்கப் போறப் பயிற்சி உங்களுக்கு நாங்க ஃப்ரீயாக கொடுக்கிறது தான். அதுக்கும், உங்களோட சம்பளத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது! அதனால் நீங்க அடுத்த மாசத்துல இருந்து இந்தச் சம்பளத்தை முழுசாக வாங்கிக்கலாம்!”என்ற அவனுடைய வார்த்தைகள் மதுபாலாவின் வயிற்றில் பாலை வார்த்தது எனலாம்!
அவளது மகிழ்ச்சி அவளின் முகத்தில் வெளிப்பட்டதை நோக்கி விட்டு,
“இன்னும் உங்களுக்கு வேறென்னச் சந்தேகம் இருந்தாலும் எங்கிட்டே கேட்கலாம் மேம்”என்றான் வெற்றிச்செல்வன்.
“இது மட்டும் தான் டவுட் ஆக இருந்துச்சு. இப்போ இதுவும் கிளியர் ஆயிடுச்சு. தாங்க்யூ சோ மச் சார்”என்று அவனுக்கு நன்றித் தெரிவித்தாள் மதுபாலா.
அதைக் கேட்டதும்,”இந்தத் தாங்க்ஸ்ஸை நம்ம முதலாளிக்கிட்டே சொல்லுங்க மேடம்!”என்று அவளிடம் கிண்டலாக மொழியவும்,
அதில் தானும் புன்னகையை உதிர்த்து,”சொல்லிட்டா போச்சு சார்!”என்று சொல்லிச் சிரித்தவளின் பின்னாலிருந்து,
“என்னச் சொல்லப் போறீங்க? யார் கிட்டே சொல்லப் போறீங்க மிஸ். மதுபாலா?”என்றக் குரல் சன்னமாக ஒலித்தது.
அதைக் கேட்டு சில கணங்களுக்கு மூச்சு விடவும் மறந்து போனவளோ, ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, அவன் வந்ததை தன்னிடம் சைகையாக கூடச் சொல்லாமல் விட்ட வெற்றிச்செல்வனைத் தனது கண்களை உருட்டி முறைத்து விட்டுப் பின்னால் திரும்பி அங்கே நின்றிருந்த தனது முதலாளியைக் கண்டு எச்சிலைக் கூட்டி விழுங்கி,
“அது ஒன்னும் இல்லை சார். சம்பள விவரம் சரியாக இருக்குன்றதை தான் உங்ககிட்ட வந்து சொல்லிட்டா போச்சுன்னு இவர் கிட்டே சொன்னேன். வேற ஒன்னுமில்லை சார்”என்றவளின் உதடுகள் தந்தி அடித்ததைக் கவனித்து,
அதில் தனது பார்வையை ரசனையாகப் படிய விட்டு,
“அப்போ வந்து சொல்லுங்க”என்று அவளுக்கு அறிவுறுத்தினான் புகழேந்தி.
அதைக் கேட்டு விட்டு,”சார்…!”என்றவளிடம்,
“நீங்க தான் சொல்லிட்டா போச்சுன்னுச் சொன்னீங்களே? அதை வந்து சொல்லிட்டுப் போங்கன்னு உங்ககிட்ட கேட்டுக்கிறேன்”என்றவனை ஆயாசமாக நோக்கி,
“ஓகே சார்”என்றுரைத்து விட்டிருந்தாள் மதுபாலா.
அப்போது,”அப்போ நான் போய் என்னோட வேலையைப் பார்க்கிறேன்”என்று அங்கிருந்து நைசாக நழுவிக் கொண்டான் வெற்றிச்செல்வன்.
அதற்கடுத்த நிமிடத்திலேயே தனது முதலாளியின் அறையில் அவனுக்கு எதிர் புறமாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவளைத் தனது கன்னத்தில் குழி விழும் அளவிற்குப் புன்னகையுடன் பார்த்து,
“என்னாச்சு மேம்! நீங்க எங்கிட்டே பேச ரொம்பவே தயங்குற மாதிரி இருக்கு!”எனத் தன்னுடைய விழிகள் இடுங்க அவளிடம் கேட்டிருந்தான் புகழேந்தி.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சார். நீங்கத் திடீர்னுப் பின்னாடி நின்னுப் பேசவும் எனக்குத் திக்குன்னு ஆயிடுச்சு! அதனால் தான் இப்படி இருக்கேன்! மத்தபடி எனக்கு உங்ககிட்ட பேச எந்தத் தயக்கமும் கிடையாது!”என்று அவனுக்கு விளக்கம் அளித்தாள் மதுபாலா.
“ஓஹ்! அப்போ சரி”என்றவனோ,
தன்னுடைய மேசையில் இருந்தக் கண்ணாடித் தம்ளரை எடுத்து அவளிடம் நீட்டி,
“நீங்க முதல்ல இதைக் குடிங்க. அதுக்கப்புறம் பேசலாம்”என அவளிடம் கனிவாக கூறினான் புகழேந்தி.
உடனே அதை வாங்கிப் பருகித் தன்னுடைய தொண்டையை நனைத்து விட்டு,
“சார்! என் மேல் எந்த நம்பிக்கையில் நீங்க இப்படியானதொரு தொகையை எனக்குச் சம்பளமாக கொடுக்க முடிவு பண்ணீங்க?”என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் வினவினாள் மதுபாலா.
அதில் தனது புருவம் சுருங்க,”ஏன் உங்க மேலே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நீங்க இந்தச் சம்பளத்துக்குத் தகுதியானவங்க இல்லைன்னு நீங்களே உங்களைக் குறைச்சு மதிப்பிட்டுக்குறீங்களே! அது ஏன்?”என்றான் ஏமாற்றம் நிறைந்த குரலில்.
“அப்படியில்லை சார். நான் இன்னும் பயிற்சியும் எடுத்துக்கலை! இதுக்கானத் தகுதிப் படிப்பைப் படிக்கவும் இல்லை! அப்படி இருக்கும் போது இந்தச் சம்பளம் எனக்கு அதிகமாகப் படுது! அதான்”என்று அவனுக்கு எடுத்துரைக்க,
“ம்ஹ்ம். நீங்க சொல்வது எனக்குப் புரியுது மிஸ். மதுபாலா. இது உங்களோட டெமோவை வச்சு நாங்க கால்குலேட் செஞ்சிக் கொடுத்து இருக்கிறச் சம்பளப் பணம்! அப்படி உங்களுக்கு இது அதிகம்ன்னுப் பட்டால் கம்மிப் பண்ணிடலாம்! அதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை”எனத் தீவிரமான முகப் பாவனையுடன் அவளிடம் சொன்னான் புகழேந்தி.
அவன் கூறியது என்னவோ அவளை வம்பிழுக்கத் தான்!
ஆனால் அதைக் கேட்டவளின் முகமோ அனிச்சம் மலராகச் சுருங்கிக், கூம்பிப் போயிற்று!
அவளால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை!
அதனாலேயே,”சார்! நான் இனிமேல் என்னை எப்பவும் குறைச்சு மதிப்பிட மாட்டேன். இதிலிருந்து பணத்தைக் கம்மிப் பண்ணிடாதீங்க! ப்ளீஸ்!”என்று அவனிடம் தன் இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொண்டாள் மதுபாலா.
அதில் பதறிப் போய்,”ஹேய்! நான் சீரியஸாகப் பேசலைங்க! நீங்க ஏன் இப்படியெல்லாம் செஞ்சி என்னைச் சங்கடப்படுத்துறீங்க? முதல்ல உங்க முகத்தைத் துடைங்க!”என்று அவளுக்கு அறிவுறுத்தினான் புகழேந்தி.
அதைச் செயல்படுத்தி விட்டு அவனைப் பாவமாகப் பார்த்தவளின் விழிகளில் தொலையத் துவங்கிய தனது மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
“நான் உங்க மனசைக் கஷ்டப்படுத்துற மாதிரி ஏதாவது பேசி இருந்தால் அதுக்கு உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்”என்றவனிடம்,
“பரவாயில்லை சார். நான் போய் என்னோட வேலையைப் பார்க்கலாமா?”எனக் கேட்டவளை,
“ம்ஹ்ம். சரி”என்று கூறி அவளை அனுப்பி வைத்து விட்டுத், தான் அவளிடம் நடந்து கொண்ட விதத்தை எண்ணிப் பார்த்து நொந்து போனான் புகழேந்தி.
அவளும், தானும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவளிடம் இப்படி உரிமையாகப் பேசி இருந்தான்!
ஆனாலும் தங்களுக்குக் கூடிய விரைவில் திருமணம் ஆகப் போவது இன்னும் அவளுக்கு அறிவிக்கப்படவும் இல்லை!
அதற்கு முதலில் அவளது சம்மதத்தை அறிந்து கொள்ளவில்லை!
அப்படி இருக்கும் போது அவளைச் சீண்டிப் பார்த்தது மிகவும் தவறான செயல் என்பதைப் புரிந்து கொண்டு அதனால் ஏற்பட்டக் குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டு மீண்டும் தன்னுடைய கூட்டுக்குள் அடங்கிக் கொண்டான் புகழேந்தி.
இதே வேளையில் சற்று முன்னர் நடந்ததை தனது வழிகாட்டிப் பெண்ணிடம் மேலோட்டமாகத் தெரிவித்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் மதுபாலா.
அந்த அலுவலகத்தில் தனது வேலை நேரம் முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தனது தோழியின் வாகனத்தில் பயணித்து தனது வீட்டை அடைந்து,
“இந்தா!”எனத் தன்னுடைய அடையாள அட்டை மற்றும் சய்பள விவரத் தாளைத் தங்கையிடம் சேர்ப்பித்து விட்டு உடை மாற்றச் சென்று விடவும்,
தன் தமக்கைத் தன்னிடம் ஒப்படைத்தவற்றைப் பார்வையிடத் தொடங்கினாள் சுதா.
அதை முழுமையாக வாசித்து முடித்தவளைச் சந்தோஷம் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டது எனலாம்!
அப்போது தன்னைத் தேடி வந்தச் சகோதரியிடம்,”இது உன்னோட வேலைக்கு முதலிலேயே கொடுத்து இருக்கிற வெகுமதி அக்கா! அதனால் இந்தச் சம்பளத்துக்கு மரியாதைச் செய்ற மாதிரி நீ வேலைப் பார்க்கனும்க்கா! அது தான் நான் உனக்குக் கொடுக்கிற அட்வைஸ்!”என அவளுக்கு அறிவுரை வழங்கினாள் சுதா.
“ஆமாம் டி. நீ சொல்வதை தான் நானும் யோசிச்சு வச்சிருக்கேன்! இதுக்கப்புறம் நாம எதை நினைச்சும் பயப்படத் தேவையில்லை! காசு இருந்தால் அதன் மூலமாக கிடைக்கிற தைரியமே தனி தான்!”என்று அவளிடம் தன்னுடைய மனதில் இருந்ததைப் பகிர்ந்து கொண்டாள் மதுபாலா.
ஆனால் இன்னும் சில நாட்களில் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் ஒரு மிகப் பெரிய மாற்றம் நிகழக் காத்திருப்பதை அறியாமல் தங்களது மகிழ்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் அந்தச் சகோதரிகள் இருவரும்.
இரவு நேரத்தில் தங்களது அறையில்,”ஏங்க! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும்!”எனத் தன் கணவனிடம் உரைத்தாள் வெண்பா.
உடனே,”ஹாங்! சொல்லும்மா! இன்னைக்கு உங்க ஆஃபீஸூக்கு வேறப் போயிட்டு வந்திருக்கிற! அங்கே கண்டிப்பாக ஏதாவது சுவாரசியமாக நடந்து இருக்கும்! அதை எங்கிட்டே ஷேர் பண்ணு. நான் அதைக் கேட்கத் தயாராக இருக்கேன்”என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டான் மித்ரன்.
“நான் அந்தப் பொண்ணு மதுபாலாவை நம்மப் புகழுக்குக் கல்யாணம் செஞ்சி வைக்க முடிவு பண்ணி அதைப் பத்தி அவன் கிட்டே தெளிவாகப் பேசிட்டும் வந்துட்டேன்”என்றத் தன்னுடைய மனைவியை வியப்புடன் நோக்கி,
“என்னச் சொல்றம்மா? நீ உண்மையாகவே அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா என்ன? அதுக்கு அந்தப் பொண்ணுச் சம்மதம் சொல்லிடுச்சா?”என்க,
“அட ஆமாங்க! இருங்க! நான் உங்களுக்கு முதலில் இருந்து எல்லாத்தையும் விளக்கமாகச் சொல்றேன். அப்போ தான் உங்களுக்குப் புரியும்!”என்றவள் கூறப் போவதைக் கேட்கத் தயாரானான் அவளது கணவன் மித்ரன்.
- தொடரும்