மௌனம் – 15.1

“தேவா, உனக்குப் பிடிக்கும்னுதான் இனிப்பு கம்மியா போட்டு கேசரி செஞ்சேன். நீ அதைத் தொடக் கூட மாட்டுற?” ரேணுகா கிண்ணத்தில் சீண்டப்படாமல் இருந்த கேசரியைப் பார்த்துக் குறைபட்டார். மகனின் பிறந்த நாள் என்று அதிகாலையிலே எழுந்து வகை வகையாக சமைத்து அவனை சாப்பிட வைத்தே அனுப்பினார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வருமாறு அவர் அழைக்க, அவன் நேரமின்மை காரணமாக மறுத்துவிட்டான். இரவுணவும் மெனக்கெட்டு அவனுக்குப் பிடித்ததாக பிரியத்தோடு சமைத்தார் பெரியவர். மகன் வயிராற உண்பதை பார்த்தே அவருக்கு மனம் நிறைந்து போனது.

“ம்மா… ஈவ்னிங்தான் ஜீவா வீட்ல கேசரி சாப்பிட்டேன். அதனால திகட்டுதும்மா. அதான் கொஞ்சமா வைக்கச் சொன்னேன்…” அவரிடம் விளக்கம் கொடுத்தபடியே கோழிக்கறியை எடுத்துக் கடித்தான் தேவா. விக்ராந்த் தாயிடம் கண்ணைக் காண்பிக்க, அவர் அவனிடம் சைகையால் ஏதோ சொல்ல என தேவா அவர்களைக் கண்டும் காணாமலும் உண்டான். எப்படியும் அவர்களே ஆரம்பிக்கப்படும் என அவன் உணவை ரசித்துச் சாப்பிட்டான்.

சில நொடிகள் கழிய, அவனருகே நாற்காலியை இழுத்துப் போட்டு இயல்பாக அமர்ந்த ரேணுகா, “ஏன்யா தேவா… உனக்கும் முப்பது வயசாச்சுல்ல. காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கோ. உன்னை மட்டுமே நான் பார்க்க முடியுமா? உனக்கடுத்து ஒருத்தன் ரெடியா இருக்கான். அவன் எப்போ எந்தப் புள்ளையை இழுத்துட்டு வருவானோன்னு பயத்துலயே சுத்த வேண்டியதா இருக்கு!” என அவர் ஆரம்பித்ததும், விக்ராந்த் தாயை முறைத்தான்.

“ம்மா… இப்போ என்னைப் பத்தி பேசுறது முக்கியமா? ஹம்ம்… உன் பெரிய மகன் வாழ்க்கைல சீக்கிரம் விளக்கேத்தி வை. என் லைஃப் அதுவா ஜெகஜோதியா இருக்கும். ஆல்ரெடி லேம்ப் வெயிட்டிங்!” என்றான் அவன் சின்ன குரலில். கடைசி வார்த்தை ரேணுவிற்குப் புரியவில்லை. தேவா அப்போதும் அமைதியாகச் சாப்பிட்டான்.

“தேவா… உன்கிட்டே தானேடா பேசுறேன். இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? இந்த மத்த சினிமாக்காரங்க மாதிரி நாப்பது, நாப்பதஞ்சுலதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கீயா? அப்படியிருந்தா சொல்லிடு. உன் தம்பிக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சு என் கடமையை முடிச்சி விடுறேன். இந்தக் காலத்து புள்ளைங்க ரொம்ப மோசம்…” பெரியவர் நொடித்தார்.
தேவா பொறுமையாக உண்டு முடித்துக் கையைக் கழுவியவன், தாயின் முந்தானையை எடுத்து துடைத்தான்.

“பொண்ணு யாரு? என்ன பண்றாங்க?” அவன் சரியாக நாடிப் பிடித்துக் கேட்டதும், பெரியவர் முகம் மலர்ந்தது.

“டேய் விக்கி… ஃபோனை எடுத்துட்டு வந்து அந்தப் புள்ளைங்களைக் காட்டு. உங்கண்ணன் பார்த்துட்டு ஒரு பொண்ணை செலக்ட் பண்ணட்டும்!” என அவர் பரபரக்க, தேவா தம்பியை லேசாக முறைத்தான்.

“ஹக்கும்… ம்க்கும். ப்ரோ லீவ் நாள்ல ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு சின்னப் பொது சேவை. அம்மா தரகர்னு ஆரம்பிச்சாங்க, அதான் மேட்ரிமோனில ஒரு ப்ரொஃபைல் கிரியேட் பண்ணேன் மார்னிங். இப்போ வரை எத்தனை ரெக்வஸ்ட் தெரியுமா? ரொம்ப டிமாண்டான ஆளுப்பா நீ. நம்மளையெல்லாம் ஒருத்தியும் திரும்பிப் பார்க்க மாட்றாளுக!” எனப் பொறாமைக் குரலில் அவன் முணுமுணுக்க, தேவாவின் முறைப்பு கூடிற்று. ரேணுகா இதைக் கண்டுகொள்ளாமல் அலைபேசித் தொடுதிரையை மேலும் கீழும் நகர்த்தினார்.

“தேவா, இந்தப் பொண்ணைப் பாருடா. அவங்கப்பா துபாய்ல பிஸ்னஸ் பண்றாராம். பொண்ணு பார்க்க நல்லா அழகா இருக்கா. நீ கேட்ட மாதிரி சென்னைதான்!” என அவர் கூற, தேவா அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான்.

அடுத்தடுத்து நான்கைந்து பெண்களைப் பற்றி அவர் விவரித்துக் கூற, இவனுக்கு யாரைப் பார்த்தும் மனதளவில்/ஒரு இணக்கமோ பிரியமோ தோன்றவில்லை. அதிலிருந்த யாருமே இவனை ஈர்க்கவில்லை. அதற்காக அவர்கள் எல்லாம் அழகாக இல்லை என்று பொருள் கிடையாது.

ரேணுகா தேர்ந்தெடுத்த அத்தனை பேரும் பெரிய இடத்துப் பெண்கள். அவர்கள் உடை, வீடு, மகிழுந்து எனப் பார்க்கும்போதே செல்வச் செழிப்பு கண்ணைப் பறித்தது. அதைவிட அதிகமாக, கன்னியர்கள் கண்ணை நிறைத்தனர். ஆனாலும், அவனுக்கு அவர்களைப் பார்த்ததும் எந்த எண்ணமும் தோன்றவில்லை. அழகாக இருந்தார்கள், ரசிக்கலாம். ஆனால் வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையில் யாரையும் அடக்க முடியாது மனம் திணறியது. ஏதோ ஒரு வெறுமை, உறுத்தல் உள்ளத்தைக் குடைந்தது. அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்தான் அத்தனை பேரும் இருந்தனர்.

ஆனால், ஏன் தனக்கு அந்தப் பெண்களைப் பார்த்தால் ஈர்ப்பு வரவில்லை என யோசிக்கும் அளவிற்கு மனம் செல்லும் முன்னே, “தேவா, டேய்… இந்தப் பொண்ணைத்தான்டா முதல்ல காட்டணும்னு நினைச்சேன். பொண்ணு விழுப்புரமாம். அம்மா, அப்பா டாக்டர்ஸ். ஆனால், இந்தப் பொண்ணு உன் தம்பி மாதிரி கம்ப்யூட்டர்ல வேலை பார்க்குறாளாம். இப்போ இருக்க பிள்ளைக மாதிரி சுடிதார், பேண்ட் சட்டைன்னு போடாம, சேலை கட்டி பூ வச்சு கண்ணே நிறைஞ்சு போச்சு!” என அவர் சிலாகித்துப் பேசி ஒரு யுவதியைக் காண்பித்தார்.

“அப்படியே கைல ஒரு பூஜைக் கூடையைக் கொடுத்து கோவிலுக்கு வேணா கூல் ஊத்த அனுப்பி வையேன், மம்மி. க்ரிஞ்ச் மாதிரி பேசாதம்மா. சுடிதார் போட்டா ஃபேமிலி கேர்ள் இல்லையா? ட்ரெஸ் நம்ம கம்பர்ட்டுக்குப் போடுறது. அது நம்ம கேரக்டரை டிசைட் பண்ணாது!” விக்ராந்த் தாயைக் கேலி செய்தான்.

“வாயை மூடுடா நீ. வெளிய போகும்போது என்ன ட்ரெஸ் வேணா போடலாம். ஆனால், பொண்ணு பார்க்கும்போது சேலை கட்டுனாதான் அது அழகு. காலங்காலமா அப்படித்தான் நடந்திட்டிருக்கு எல்லாம்!” அவர் சின்னவனை அதட்டினார்.

தேவா தாய் வற்புறுத்தவும், விருப்பமில்லாமல் ஏனோ தானோவென்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். அந்தப் பெண் கண்ணுக்கு நிறைவாகத் தெரிந்தாள். கண்களில் ஒரு நேர்மை, உதடுகளில் சின்னச் சிரிப்பு எனப் பார்ப்போரை வசீகரிக்கும் முகம். எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி அழகாக இருந்தாள்.

இவன் சில நொடிகள் அவளை உற்றுப் பார்க்க, “என்ன ஹெல்ப் வேணும், தேவா சார்? அவசரமா வரச் சொன்னீங்க?” எனக் கேட்டபடியே ஜீவா அவனைப் பார்த்து முறுவலித்த முகம் நெஞ்சில் வந்து மோதியது. அவன் திடுக்கிட்டுக் கண்ணைச் சிமிட்டி அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். வேறொரு பெண்தான். ஆனால், ஜீவாவை அந்த இடத்தில் அவன் மனம் அவனது அனுமதியின்றிப் பொருத்திப் பார்த்தது.

“நைஸ் சேரி!” அவன் பாராட்டியதும், அவள் விரல்கள் மெல்ல முந்தியை இறுக்கிப் பிடிக்க, கண், உதடு, முகம் மலரப் புன்னகைத்த முகம் அவன் கண்முன்னே மீண்டும் மீண்டும் வந்து போனதில் உள்ளே ஓர் அதிர்வு. அவனையும் அறியாமல் அவள் அவனுள்ளே மெல்ல இறங்கியிருக்கிறாள்.

“ம்மா… அண்ணன் வச்ச கண்ணு வாங்காம பார்க்குறதுலயே தெரியலை, இந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு. சரி, கொடு. அண்ணி நேம் என்னென்னுப் பார்ப்போம்!” விக்ராந்த் தாயின் கையிலிருந்த அலைபேசியை ஆர்வத்துடன் வாங்கினான்.

“உத்ரா… ஹம்ம்… தேவ்பிரசாத், உத்ரா, பேர் பொருத்தம் கூட நல்லாருக்கேம்மா… சட்டு புட்டுன்னு பேசி முடிச்சு அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தைப் பண்ணிடும்மா!” எனச் சின்னவன் கூற, ரேணுகாவின் முகமும் மலர்ந்துதான் இருந்தது. அவர்கள் குரலில் பிடரியைக் கோதியபடியே தன்னைச் சமன் செய்த தேவா, தாயைப் பார்த்தான்.

“என்ன தேவா… பிடிச்சிருக்கா? நேர்ல போய்ப் பார்க்கலாமா?” எனக் கேட்டார் அவர். இவன் வேண்டாமெனத் தலையசைத்தான்.

“இல்லம்மா… வேற பொண்ணுப் பாருங்க!” என்றான் சின்ன குரலில்.

“ண்ணா… இந்தப் பொண்ணுக்கு என்ன குறைச்சல்?” என அவனிடம் காய்ந்த விக்ராந்த், “ம்மா… பேசாம இந்தப் பொண்ணை எனக்குப் பேசி முடி. நான் ஜம்முன்னு கல்யாணம் பண்ணி உனக்குப் பேரப் புள்ளைகளை வரிசையா பெத்துக் கொடுக்குறேன்…” என்றான்.

“என்ன வாய்டா உனக்கு? கொஞ்சம் அமைதியா இரேன். இதென்ன வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற கதையா? அவனோட காலம் முழுக்க ஒரு பொண்ணு வாழப் போறா. அப்போ அவனுக்குப் பிடிச்ச மாதிரி இருக்க வேணாமாடா? நாலு ஃபோட்டோ காட்டுனதும் உடனே பிடிச்சிடணுமா?” அவர் குரலை உயர்த்திவிட, சின்னவன் பம்மினான்.

“சேரி… சேரிம்மா. விடேன்!” அவன் சமாளிப்பாக சிரித்தான்.

“ஏய்யா தேவா… இந்தப் பொண்ணு பிடிக்கலைன்னா விடு. உனக்கு எப்படி பொண்ணு வேணும்னு ஏதாவது எதிர்பார்ப்பிருந்தா சொல்லு!” எனக் கேட்டவரிடம் அவன் என்ன உரைப்பான்?

அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது பரிச்சயமில்லாத ஆளிடம் பேசுவது போலொரு உணர்வு தோன்றக் கூடாது. ஒரு பெண்ணை அணுகும்போது அவளிடம் தனக்கு இணக்கமும் உரிமை உணர்வும், பிரியமும் அனிச்சையாக ஏற்பட வேண்டும் என மனம் விரும்பிற்று.

error: Content is protected !!
Scroll to Top