மௌனம் – 15.2

அதை எப்படித் தாயிடம் விளக்குவான்? காதல், பிரியம் என எத்தனையோ பேர் இருந்தும் ஒன்றுகூட இவன் வாயிலிருந்து உதிரவில்லை. அப்படி ஏதாவது சொல்லச் சென்று விக்ராந்த் கேலி செய்வானோ என முதன்முதலாக அவன் மனம் ஆணாக ஓர் அவஸ்தையை உணர்ந்தது. எப்போதும் நிமிர்ந்து நின்று அனைவரையும் அதட்டி உருட்டும் தேவா இன்று மொழியில்லாமல் விழித்தான். காதல் அத்தனை பேரையும் பேசா மடந்தையாக்கிவிடுவது விந்தைதான்.

“எனக்குத் தெரியலைம்மா. நீங்களே பாருங்க. ஆனால், எனக்குப் பொண்ணைப் பிடிக்கணும்!” மனத்தின் தடுமாற்றத்தை வெளியே காண்பிக்காதபடி லாவகமாகப் பேசினான்.

“அதான்டா… எப்படிப்பட்ட பொண்ணு உனக்குப் பிடிக்கும்?” அவர் அழுத்திக் கேட்க,

“ம்மா… எனக்கெல்லாம் பொண்ணுனாலே பிடிக்கும்!” விக்ராந்த் இடை புகுந்தான்.

“டாக்டர், இன்ஜினியர் பொண்ணெல்லாம் வேணாம்மா. வேற பொண்ணைப் பாருங்க!” அவரிடமிருந்து தப்பித்துச் செல்ல எண்ணி தேவா இரண்டு எட்டுகள் வைக்க, ரேணுகா மகனின் கையைப் பிடித்தார்.

“கேசரியை ஒரு வாய் கூட சாப்பிடாம போறடா!” என அவர் கேட்டதும், “கேசரி சாப்பிடுங்க, தேவா சார்!” என்ற ஜீவாவின் குரல் காதோரம் ஒலித்து அவன் மென்னரம்புகளை அதிரச் செய்தன. தன்னையே அவன் நொந்துகொண்டு, ஒரு வாய் மட்டும் கேசரியை உண்டான். ஜீவா செய்த கேசரியிலும் அவனுக்குப் பிடித்தது போல சர்க்கரை குறைவாகவும், முந்திரிப் பருப்பு அதிகமாகவும் இருந்தது.

“போதும்மா… ஸ்வீட் நிறைய சாப்பிட முடியலை. மார்னிங் பேசலாம். எனக்கு டையர்டா இருக்கு…” என விரைந்து அகன்றான்.

“ம்மா… டாக்டர், இன்ஜினியர் யாரும் வேணாம்னா என்ன அர்த்தம்? அவனுக்கு பிஸ்னஸ் விமன்தான் வேணுமாம்!” விக்ராந்த் கூறியதும், ரேணுகா யோசித்தார்.

“இல்ல விக்கி, தேவா வேலை விஷயத்தை எதுவும் போட்டுக் குழப்பிக்கிறான் போல. அவன் சிந்தனை இங்க இல்ல!” என்றார் அவர்.

“ஹக்கும்… டாக்டர், இன்ஜினியர் வேணாம்னு ஆக்டரைக் கூட்டிட்டு வந்து நிக்கப் போறான் பாரு. நீ அவனை ஒன்னும் தெரியாத ஆளுன்னு நினைச்சுட்டு கிட!” இவன் சடைத்தான். ரேணுகா அவன் பேச்சை அசட்டை செய்து கடந்தார்.

தேவா அறைக்குச் சென்றதும் பற்பசையை எடுத்து பல் துலக்கியில் வைத்தபடியே குளியலறைக்குள் நுழைந்தான். அவனின் வலக்கரம் உயர்ந்து பல் துலக்கத் தொடங்க, கண்ணாடியில் முகம் பார்த்தான்.

ஏன் இந்தப் பெண் இத்தனை முறை தன் நினைவிற்கு வருகிறாள் என மனம் குழம்பிற்று. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அவளோடு பேசி, பழகியதால் அவள் நினைவு வருகிறது எனத் தலையை உலுக்கிக் கொண்டான். இனிமேல் அவளைப் பற்றிப் பெரிதாகச் சிந்திக்கக் கூடாது என எண்ணி அந்த விஷயத்தைத் தூக்கித் தூரப் போட்டான்.

மறுநாள் ஜீவா அவன் நினைவில் மெல்லப் பின்னகர்ந்திருக்க, படப்பிடிப்பு வேலையில் மூழ்கினான். வெளி மாநிலங்களுக்குச் சென்று இரண்டு வாரங்கள் கழித்து வீடு திரும்பினான். துபாயில் நடந்த இசை வெளியீட்டு விழாவிற்குச் சென்று வந்தான்.

அவனோடு முதன்முதலில் திரைப்படத்தில் அறிமுகமான நாயகனுக்குத் திருமணம் என ஜப்பான் சென்று வந்தான். அடுத்தடுத்து வேலை, படப்பிடிப்பு, திரைக்குப் பின்னிருந்த வேலை என அவன் மனம் ஜீவாவைப் பின்னே தள்ள முயன்றது. அவ்வப்போது தற்காலிகமாக மறந்தாலும் கூட, ஏதோ ஒருவகையில் அவள் அவனைத் தொந்தரவு செய்தாள்.

இத்தனைக்கும் அவன் அவளிடம் பேசி முழுதாக இரண்டு மாதங்கள் ஓடியிருந்தன. இடையில் ஒரு சம்பிரதாயப் பேச்சு, அழைப்பு என எதுவுமே கிடையாது. இவன் தங்கள் இருவருக்குமிடையேயான உரையாடலை எடுத்துக்கூடப் பார்த்தான். மொத்தமே நான்கு முறைக்கு மேலே அவளிடம் பேசவில்லை.

இவனாகத்தான் ஒவ்வொரு முறையும் அவளுக்குச் செய்தி அனுப்பியிருக்கிறான். காணொளி அழைப்புக்கூட விடுத்திருக்கிறான். அவள் அவனிடம் பேச எவ்வித சிரத்தையும் முன்னெடுக்கவில்லை. இவன் நீட்டிய நட்புக் கரத்தை ஏற்றுக்கொண்ட பாவம் அவளிடம்.

மற்றபடி இவனை நெருங்கவோ, பழகவோ ஜீவா முனையவில்லை என மனம் தாமதமாக உணர்ந்தது. அவளாக இவனை அணுகியது இவன் சோர்ந்து ஓய்ந்தமர்ந்த காலம் மட்டுமே. அப்போதும் அவள் எல்லையிலேயே நின்றுகொண்டாள். தன்னை மீறி அதிகமாக இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டால் கூட மீண்டும் நத்தை போலச் சுருண்டுகொண்டாள். உணவிட்டதை உதவி என்ற வார்த்தையில் முடித்துவிட்டாள். அவளுக்குத் தன் மீது எவ்வித அபிப்பிராயமும் இல்லாதபோது தனக்கு மட்டும் ஏன் இந்தக் குறுகுறுப்பு, உறுத்தல் எல்லாம்? இதைக் காதல் என்றெல்லாம் அவன் வகைப்படுத்தவே விரும்பவில்லை. வெறும் ஈர்ப்பு, தோற்ற மயக்கம், எளிதில் கடந்து விடலாம்.

ஜீவாவிற்கும் தனக்கும் எந்த வகையிலும் ஒத்துப்போகாது. அவன் எதிர்பார்ப்புகள் அனைத்திலும் விலகி நிற்கிறாள் இந்தப் பெண் ஜீவா. அழகு என்பதைத் தாண்டி, அவனுக்கு மனைவியாக வரும் பெண் நன்கு படித்திருக்க வேண்டும் என விரும்பினான்.

நான்கு பேரிடம் அவளை அறிமுகம் செய்து வைக்கும்போது எவ்விதத்திலும் அவள் தாழ்வாக எண்ணக் கூடாது. அது ஒரு காரணம் என்றாலும் கூட, தன்னுடைய இன்றைய உயரத்திற்கு ஏற்ற படித்த, நாகரிகமான கொஞ்சம் அவர்கள் வசதியை ஒத்தப் பெண்தான் சரியாக இருக்கும்.

சில நாட்கள் பழகிய பழக்கத்தில் தன் மனத்தை ஏதோவொரு வகையில் ஜீவா ஈர்த்துவிட்டாள். இதற்குக் காதலென்று கூறுவது அபத்தம் என்றெண்ணியபடியே அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் பால்கனியில் நின்றிருந்தான் தேவா. உள்ளே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனத் திரைத்துறையினர் மது, மாது கொடுத்த போதையில் கிறங்கிக் கிடக்க, இவனால் அவர்களோடு ஒன்றவே முடியவில்லை. மனத்தில் சின்னதாக சலிப்பு தோன்றிற்று.

சம்பிரதாயத்திற்காகக் கொஞ்சமாகக் குடிக்கலாம் என மதுபானத்தை தேவா தொடும்போது, “என் அப்பா ரொம்ப குடிப்பாருல்ல தேவா சார். எனக்கு வரப் போற ஹஸ்பண்ட் கண்டிப்பா குடிக்கக் கூடாது. அம்மாகிட்டே கூட நான் அதான் ஃபர்ஸ்ட் சொன்னேன்!” என்ற ஜீவாவின் மென்குரலில் அவன் விரல்களில் மெல்லிய நடுக்கம் பரவிற்று. ஏன் அவள் கூறியதற்காகத் தான் மதுவை நாடக் கூடாது என முயன்று, அதை வாயில் சரித்தாலும் மொத்தமும் கீழே சிந்திவிட்டது. அதைக் கழுவிவிட்டு, காய வைக்கிறேன் என்று பால்கனிக்கு வந்துவிட்டான்.

சென்னை அந்த இரவு நேரத்தில் அழகாக ஜொலித்துக் கொண்டிருக்க, இவன் வெறுமனே பார்வையைச் சாலையில் அலையவிட்டான். நினைக்க வேண்டாமென முடிவெடுத்த பின்னர்தான் ஜீவா அவனின் நினைவுகளில் அதிகம் நிறைந்தாள். அவனை அதீதமாகப் பாதித்தாள்.

சாப்பிட உட்கார்ந்தால், “உங்களுக்காக ஸ்பெஷலா எதுவும் செய்யலை சார். மீல்ஸ்தான் இருக்கு. பரவாயில்லையா?” அவளது தயங்கிய குரல் செவியை அடைந்தது. யாரேனும் குரல்வழிச் செய்தி அனுப்பினால் சட்டென அவள் குரல், முகம் என நினைவிற்கு வந்தது.

கேசரியில் சர்க்கரை அளவு எவ்வளவு போட வேண்டும் என ரேணுகா கேட்கும்போது, தனக்கு இனிப்பு குறைவாகத்தான் பிடிக்கும் என அவளுக்கு எப்படி முன்பே தெரிந்தது என ஒரு பக்கம் மூளை ஆராய்ச்சி செய்தது. ஏதேச்சையாக நடந்ததாகத்தான் இருக்க கூடும். எனக்காக மெனக்கெட்டு செய்யும் அளவிற்கு அவளுக்கும் தனக்கும் என்ன இருக்கிறது? என அவனே கேட்டுக்கொண்டான்.

“அண்ணா…” முதுகில் மோதிய குரலில் சட்டென தேவா திரும்பிப் பார்க்க, அவனிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய வாலிபன் நின்றிருந்தான்.

“அண்ணா… இது என் ஃப்ரெண்ட் ஜீவிதா…” என அவன் தன்னருகே நின்றிருந்த பெண்ணை இவனிடம் அறிமுகம் செய்தவன், “ஜீவா… என்ன பேசணுமோ அண்ணாகிட்டே பேசு…” என்றான். ஜீவா என்ற பெயரில் இவனிடம் சின்ன தடுமாற்றம்.

“ஹாய் தேவா சார்… நான் ஜீவா… ஜீவிதா. எனக்கு உங்க மூவீஸ் ரொம்ப பிடிக்கும்!” அந்தப் பெண் இவனைப் பார்த்த உற்சாகத்தில் கடகடவென அருவி போலப் பேச, தேவா சின்னதாய்ச் சிரித்து அவள் பேச்சிற்கு ஈடு கொடுக்க முயன்றான். எத்தனையோ பேர் அவனைப் பார்த்துப் பேச வேண்டுமெனக் காத்துக் கிடக்கின்றனர். ஒருமுறை அவனோடு சுயமி எடுப்பதற்காக இரண்டு நாட்கள் பின்னே சுற்றியவர்களும் உண்டு. இதோ, இந்தப் பெண் போல அவனைச் சிலாகித்து, உயர்த்திப் பேசி, பாராட்டி எனத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

ஆனால், ஜீவாவிடம் அவன் இதுபோல எந்த ஆர்ப்பாட்டத்தையும் கண்டதில்லை. நீண்ட வருடங்கள் கழித்துப் பார்த்ததும் சின்னதாக அவளிடம் ஒரு திடுக்கிடல். அது மட்டும்தான், வேறொன்றும் இல்லை. பின்னர் வெகு இயல்பாக அவனை எதிர்கொண்டாள், பேசினாள், நட்பு பாராட்டினாள்.

அவனிடம் எதுவும் இல்லாதபோதும் கூட அவள் இப்படித்தான் நடந்துகொண்டாள். அவன் இன்றைக்குப் பெரிய இயக்குநர் என்றபோதும் அவளது குணம் மாறவில்லை. அவனை அவனாகத்தான் அவள் மதித்தாள். பணத்திற்கு மதிப்புக் கொடுத்து பொய்யாகப் பாசாங்கு செய்யாமல் அவளாக அவனிடம் நடந்துகொண்டாள். ஒருவேளை அதுதான் அவளை ஈர்த்துத் தொலைத்தது போல என எண்ணிப் பெருமூச்சுவிட்டான்.

“சார், ஒரே ஒரு செல்ஃபி!” என ஜீவிதா இவனருகே எந்தத் தயக்கமும் அற்று நெருங்கி நிற்க, ஜீவாவுட் தான் எடுத்த சுயமி அவனுக்கு நினைவிற்கு வந்தது.

“இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில கூட இவ்ளோ கேப் இருக்காதும்மா!” என அவன் கேலி செய்ததுகூட வார்த்தை மாறாமல் சிந்தையில் எட்டிப் பார்த்தது. அந்தப் பெண் அகன்றதும் தன் கால்சராயில் புதைந்து கிடந்த அலைபேசியை உயிர்ப்பித்து அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான் தேவா. அமைதியான புன்னகையுடன் அவனருகே நின்றிருந்தாள் ஜீவா.
சில நொடிகள் அவளையே உற்றுப் பார்த்தான். பின்னர், அவளது இலக்கத்தில் ஏதோ ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாகக் காண்பிக்க, இவன் அதைச் சொடுக்கினான்.

“செலிபிரேஷன் ஸ்டார்ட்ஸ். மை ஸ்கூல் ஆன்வல் டே!” என வேலு அவன் படிக்கும் பள்ளியின் புகைப்படத்தையும் அலங்காரத்தையும் எடுத்து ஸ்டேட்டஸில் வைத்திருந்தான். இவன் அசுவாரஸ்யமாக அதைத் தள்ள, அடுத்ததாக ஜீவாவின் புகைப்படத்தையும் வைத்திருந்தான்.

“மை அக்காஸ்!” எனச் சின்ன இதயம் போட்டிருந்தான். ஜீவா அவனை மென்மையாக முறைத்திருந்தாள். அவளின் பக்கவாட்டுத் தோற்றம் மட்டும்தான் தெரிந்தது. முட்டிப் போட்டுக் குனிந்தமர்ந்து, சஷ்டியின் சேலையின் மடிப்பை அவள் சரிசெய்யும் மும்முரத்தில் இருந்தபோதுதான் வேலு அவளைப் புகைப்படம் எடுத்திருந்தான். அதற்குத்தான் அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். சில நொடிகள் கைகள் அந்தப் படத்தை அழுத்திப் பிடிக்க, தேவா அவள் தோற்றத்தை ஆராய்ந்தான்.

கைத்தறியில் செய்த சுரிதார் ஒன்று அணிந்திருந்தாள். நீண்ட பின்னல் முதுகில் சுருண்டு கிடந்தது. துப்பட்டா கழுத்தை இறுக்கிப் பிடிக்க, கண்ணை உறுத்தாத தோடு, மெல்லிய சங்கிலி என அவளிடம் எதுவுமே யாரையும் ஈர்க்க வேண்டும் என்ற மெனக்கெடல் இல்லை. இவன் அவள் முகத்தில் இருந்த நிதானத்தைச் சில நொடிகள் உணர்ந்தான். பின்னர் அந்தப் படத்தைப் பின்னே தள்ளி, அலைபேசியை அணைத்து கால்சராயில் வைத்துவிட்டு நட்சத்திர விடுதிக்குள் நுழைந்திருந்தான். அவனிடமே அவன் தப்பிக்கும் முயற்சியில் மனம் மிக மிக மோசமாக பின்னே தள்ளியிருந்தது.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top