“வேலு… ஓடாத. என்னோட வந்து உக்காரு!” ஜீவா அதட்டலிட, அவன் கோவிலுக்கு வெளியே சூடாகக் கொடுத்த புளியோதரையை வாங்கி வந்து தமக்கையின் அருகிலமர்ந்து உண்ணத் தொடங்கினான். தாம்பரத்திலிருந்த சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் அன்றைக்கு பெரிதாகக் கூட்டமில்லை.
இவள்தான் ஒரு ஆர்வத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து, தாயின் பழைய வாயில் புடவை ஒன்றை உடுத்திக்கொண்டு தம்பியையும் உடனழைத்துக் கோவிலுக்கு வந்திருந்தாள். பூஜை ஆரம்பிக்க இன்னும் சற்று நேரமாகும் என ஐயர் அவளை அமரப் பணித்தார். அவர்கள் இருவரும் கோவிலினுள்ளே இருந்த படிகளில் அமர்ந்திருந்தனர்.
ஐயர் விளக்குமாறை எடுத்து மரத்திலிருந்து உதிர்ந்த சருகுகளைக் கூட்டித் தள்ள, “வேலு… என்கிட்டே சொல்லாம எங்கேயும் போகக் கூடாது. இங்க உட்கார்ந்திருக்கப் போரடிச்சதுன்னா வீட்டுக்குக் கிளம்பு…” என அறிவுறுத்தியவள், எழுந்து சென்று ஐயரிடம் விளக்குமாறை வாங்கித் தானே கோவிலைச் சுத்தம் செய்தாள்.
ஏனோ தானோவென்று மடிப்பெடுத்து குத்தியிருந்த புடவை தோளில் லேசாகச் சரிய, அதை இடுப்பில் இழுத்துச் சொருகிவிட்டு, அந்தப் பகுதி முழுவதையும் சுத்தம் செய்து தண்ணீர் தெளித்துக் கோலமிட்டாள்.
“தேங்க்ஸ்மா… டெய்லி வேலைக்கு வர்ற அம்மாவுக்கு முடியலை. அதான் அவங்க வரலை!” என ஐயர் நன்றியுரைக்க, இவள் தலையசைத்து ஏற்றுக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத் தொடங்க, பூஜைக்குத் தயார் செய்தார் அவர்.
வேலுவிற்குக் கொஞ்ச நேரத்திற்கு மேலே ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. இவளது தொடையைச் சுரண்டியவன், “க்கா… நான் கிரவுண்டுக்குப் போறேன்…” என்றான் சின்ன குரலில். அபிஷேகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஜீவா அவனை மறுப்பாகப் பார்த்தாள்.
“நீ இன்னும் சாப்பிடலை வேலு, வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு அப்புறம் விளையாடப் போ. அம்மா திட்டுவாங்க!” அவள் கண்டிக்க, அவன் விளையாடும் ஆர்வத்தில் பசிக்கவில்லை என்றான்.
ஜீவா கிரிஜாவிற்கு அழைத்து அவன் கையில் அலைபேசியைக் கொடுக்க, “வேலு… முதல்ல வீட்டுக்கு வா நீ. வந்து ரெண்டு தோசையைச் சாப்பிட்டு அப்புறம் எங்க வேணா விளையாடப் போ. சாப்பிடாம எங்கேயும் அனுப்ப மாட்டேன் நான்!” என அவர் அழுத்தம் திருத்தமாகக் கூற, அவன் தமக்கையை முறைத்துப் பார்த்தான்.
“முறைக்காதடா… சாப்பிடுறதுக்கு உன்னைக் கெஞ்ச வேண்டியதா இருக்கு. போ… ஓடு வீட்டுக்கு!” என அவனை அனுப்பியவள், மீண்டும் கடவுளிடம் பார்வையைப் பதித்தாள். சந்தனம் முடிந்து திருநீறு அபிஷேகம் முருகருக்கு நடந்துகொண்டிருந்தது. பார்வையை எங்கேயும் நகர்த்தாமல் அமைதியான முறுவலுடன் அவரைப் பார்த்தாள்.
அலைபேசி இரண்டு முறை அதிர்ந்து அடங்கியது. தேவா அழைத்திருந்தான். குறுஞ்செய்தி வேறு ஏதோ அனுப்பியிருந்தான். என்னவென எடுத்துப் பார்த்தாள்.
“வேர் ஆர் யூ ஜீவா? ஐ நீட் யுவர் ஹெல்ப்!”
இரண்டு வரிகளை வாசித்தவள், “கோவில்ல இருக்கேன் தேவா சார். என்ன ஹெல்ப்? நான் வர்றதுக்கு அரைமணி நேரமாகுமே” எனப் பதிலனுப்பினாள்.
“ஓகே… கம் அஸ் சூன் அஸ் பாசிபிள்!” என்றதோடு அவன் முடித்துக்கொண்டான்.
இவள் அரைமணி நேரம் காத்திருந்தாள். பூஜை முடிந்து தீபாராதனை காண்பித்ததும் மீண்டும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை வாங்கி உண்டாள்.
“பூ வச்சுக்கோம்மா…” ஐயர் இவளைத் தேடி வந்து மல்லிகைச் சரத்தைக் கொடுத்துவிட்டுச் செல்ல, புன்னகையுடன் அதைத் தலையில் சூடிக்கொண்டாள். முகத்தில் அமைதியும் நிம்மதியும் இருந்தது.
வனஜாவின் புடவை அவளைப் பாந்தமாகத் தழுவியிருக்க, கண்களில் மெலிதாக மை தீட்டியிருந்தாள். தலைக்குக் குளித்து அப்படியே சின்ன இழுபட்டையில் கூந்தலை அடக்கி விரித்துவிட்டிருந்தாள். வரும்போதே கண்ணாடியில் ஒருமுறை தன்னைத் தானே பார்த்துத் திருப்தி கொண்டாள்.
தேவா அழைத்தது நினைவு வர, பத்து நிமிடத்தில் நடந்து உணவகத்தை அடைந்தாள். இன்றைக்குக் கொஞ்சம் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இவள் உள்ளே செல்ல, அந்தப் படத்தின் நாயகியும் நாயகனும் ஏதோ காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி. நாயகி இந்தக் காட்சியில் முதலில் இடம்பெறவில்லை. ஆனால், அவள் இருந்தால் நன்றாக இருக்குமே என நேற்றுதான் தேவா நாயகிக்கு அழைத்துக் கேட்க, அவளும் உடல்நிலை தேறியிருந்ததால் வந்துவிட்டாள்.
பட்டு ரோஜா நிறத்தைத் தத்தெடுத்தது போல அவள் உச்சி முதல் பாதம் வரை வெண்மை நிறம்தான். மாசு மருவற்ற முகம், பளபள கன்னங்கள் என ஜீவா அந்த நாயகியை ரசித்துப் பார்த்தாள். ஒல்லியான உடல்வாகு, தேவையான இடத்தில் சதைப்பிடிப்பு, அரைகுறையான தமிழும் இந்தியும் என ஒரு நாயகிக்கே உண்டான பாங்குடன் இருந்வளை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இன்றைக்கு ஏன் இவ்வளவு கூட்டம் என்ற ஜீவாவின் கேள்விக்கு விடை கிடைத்தது.
“கட்… பெர்பெக்ட் ஷாட், ஷெர்லின்!” தேவா கூற, அந்த நாயகி சிரித்துவிட்டுச் சென்று இருக்கையில் அமர்ந்ததும், அவளருகே இருவர் வந்து நின்றனர். ஒருவர் கையில் சின்னதாக மின்விசிறி வைத்திருக்க, மற்றொருவர் அவள் முகப்பூச்சை சரிசெய்து கண்ணாடி காண்பித்தார். மற்றொரு பெண்மணி அவளுக்குப் பழச்சாறு கொடுக்க, ‘வாழ்றாங்கப்பா…’ என இவள் மனதிற்குள் முணுமுணுத்தாள்.
தேவா இருக்கையில் அமர்ந்து சற்று முன்பு எடுத்த காட்சியைப் புகைப்படக் கருவியில் ஒருமுறை ஓட்டிப் பார்க்க, “தேவா சார், என்ன ஹெல்ப் வேணும் உங்களுக்கு?” என்ற குரலில் நிமிர்ந்தான். ஜீவா சின்ன புன்னகையுடன் நின்றிருந்தாள். இவன் ஒருநொடி அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். புடவை, பூ, சாந்தமான முகம் என அவன் கண்களுக்கு அவள் அழகியாகத் தெரிந்தாள். இவன் கண்களில் மிக மெல்லியதாக ரசனை அடர்ந்தது.
“நைஸ் சேரி… உனக்கும் நல்லாருக்கு ஜீவா!” அவன் பாராட்ட, இவளிடம் சின்ன முறுவல்.
“தேங்க் யூ தேவா சார், என் அம்மாவோட புடவை. அவங்க ஞாபகமா வச்சிருந்தேன். இன்னைக்கு எடுத்துக் கட்டுனேன்!” என்றாள் சின்ன குரலில்.
“ஓ… ஓகே, ஓகே. ரொம்ப அழகா இருக்கு!” என்றவன், அவள் நெற்றியிலிருந்த குங்குமம், விபூதி, சந்தனத்தைப் பார்த்து அவள் கோவிலுக்குச் சென்று வந்திருக்கிறாள் என்றுணர்ந்தான். ஜீவாவின் முகம் மெல்ல மலர்ந்தது.
“என்ன ஹெல்ப் வேணும் சார்?” மீண்டும் அவள் கேட்க, “ஹெல்ப் எல்லாம் இல்ல ஜீவா, சும்மாதான். ஒரு டென் மினிட்ஸ் இங்க உக்கார்றீயா? வேற எதுவும் வேலை இருக்கா?” எனக் கேட்டான் அவன்.
“இல்ல… வேலை எதுவும் இல்ல சார்!” என்றவாறே அவள் அமர்ந்தாள்.
பத்து நிமிடத்தில் கீதன் ஒரு பெரிய அணிச்சலோடு வந்தான். அதன் நடுவில் ‘ஹேப்பி பெர்த் டே தேவ்பிரசாத்’ எனப் போட்டு, முப்பது என இலக்கத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்தார்கள்.
படக்கென அவனைத் திரும்பிப் பார்த்து சங்கடத்துடன் நாக்கைக் கடித்து நெற்றியைச் சுருக்கியவள், “சாரி தேவா சார். காலைலயே சோஷியல் மீடியால உங்களுக்குப் பெர்த் டேன்னு ஷேர் பண்ணிருந்தாங்க. நிறைய பேர் விஷ் பண்ணாங்க. நானும் வாழ்த்துச் சொல்லலாம்னு நினைச்சு மறந்துட்டேன்!” என்றவள்,
“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், தேவ்பிரசாத் சார். இன்னும் இன்னும் வாழ்க்கைல உயர்ந்து, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கையை என்ஜாய் பண்ண என்னோட வாழ்த்துகள்!” என்றாள் கையை நீட்டி.
ஒற்றை விரலால் அவளது கையை இருபுறமும் திருப்பியவன், “என்ன வெறுங்கையில விஷ் பண்ற ஜீவா, கிஃப்ட் எதுவும் இல்லயா?” எனக் கேலியாகக் கேட்டபடியே கையைக் குலுக்கினான்.
“அதான் மூணு நாள் ஹோட்டலை ஆக்கிரமிச்சுட்டீங்களே. அதுவே பெரிய கிஃப்ட் போங்க!” அவளும் அவனைப் போல விளையாட்டாகக் கூறினாள்.