மௌனம் – 13.2

“ஏன்கா… அவன் மட்டும் இப்பவே பார்ப்பான். நான் ஏன் லேட்டா போகணும்?” அவள் முகத்தில் கோபம் தெரிந்தது.

“சஷ்டி… அங்க ஃபுல்லா ஜென்ஸ்தான் நிக்கிறாங்க. வேலுன்னா உள்ளே புகுந்து போய்டுவான். நீ போனா யாரும் பேட் டச் பண்ணிடுவாங்க. கூட்டத்துல யாருன்னு கண்டுகூடப் பிடிக்க முடியாது. அதனால நீ போகாத!” ஜீவா கண்டிப்புடன் கூற, “நான் எங்கேயும் போகலை. நாளைக்கும் வர மாட்டேன்…” என அவள் கழுத்திலிருந்த துப்பட்டாவைக் கடுப்போடு தூக்கியெறிந்துவிட்டு அறைக்குச் சென்றாள்.

“சஷ்டி… என்ன பழக்கம் இது? அவ சொல்றதும் சரிதானே. கூட்டத்துல எவனாவது கை வச்சா கூட நமக்குத் தெரியாது. இப்போ அவசியம் நீ அந்த ஷூட்டிங் பார்க்கணுமா என்ன?” கிரிஜா அதட்ட, சின்னவள் பதிலே கூறாமல் படக்கெனக் கதவைச் சாற்றிவிட்டாள். அவளுக்கு ஜீவாவின் மீதுதான் கோபம்.

“பாரேன்… இந்தச் சின்னக் கழுதைக்கு. வயசுக்கு வந்ததுலருந்து கையை நீட்டாம இருக்கவும் திமிரு கூடிப் போச்சு!” அவர் அதட்டலாகக் கூற,

“ம்மா… விடுங்க. சின்ன புள்ளை. ஷூட்டிங் பார்க்க ஆசைப்பட்றா. நாளைக்கு கூட்டம் எப்படியும் குறைஞ்சிடும். நானே கூட்டிட்டுப் போய்க் காட்டுறேன்…” என இவள் தாயைச் சமாதானம் செய்தாள். வேலு அங்கேயே நின்றால் தன்னையும் படப்பிடிப்பு பார்க்க அனுப்ப மாட்டார்கள் என ஓடிப் போய்விட்டான்.

ஓரிரு மணி நேரம் கழித்து வீடு வந்தான். கூட்டத்தில் அவனால் உள்ளே நடக்கும் எதையுமே பார்க்க முடியவில்லை. உள்ளே செல்லலாம் என இவன் முயன்றாலும், முன்னிற்போர் விடவில்லை. வெறுமனே காதில் பேச்சுச் சத்தம் மட்டுமே கேட்டது. கடுப்புடன் வீட்டிற்கு வந்தான்.

“என்னடா… பார்த்துட்டீயா?” ஜீவா கேட்க, அவன் முகத்தைத் திருப்பினான்.

“வேலு…” அவள் அதட்ட,

“போக்கா… நான்தான் சொன்னேன்ல, யாருமே என்னை உள்ளே விடலை. அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன். இன்னைக்கு என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே வாசுவோட போட்டோ எடுத்துட்டு வர்றேன்னு பெருமையா சொன்னேன். நாளைக்கு அவங்க எல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பாங்க. எல்லாம் உன்னாலதான்!” என அவன் முனங்கினான்.

“ஸ்கூலுக்குப் படிக்கப் போகாம பெட் கட்டத்தான் போறீயா நீ?” அவனை அதட்டியவள், “நாளைக்கு நீ ஸ்கூல்விட்டு வந்ததும் நானே கூட்டிட்டுப் போய்ப் ஃபோட்டோ எடுத்து தரேன்!” என்றாள் கண்டிப்புடன்.

“நிஜமாவா? ப்ராமிஸாவாக்கா?” எனச் சத்தியம் செய்யாத குறையாக அவளிடம் உறுதிப்பெற்றவன், மறுநாள் மகிழ்ச்சியோடு பள்ளிக்குக் கிளம்பினான்.

“அக்கா… நான் சீக்கிரம் வந்துடுறேன். நீ கிளம்பி ரெடியா இரு…” எனக் காலையிலிருந்து நான்கைந்து முறை இவளிடம் கூறிவிட்டுத்தான் பள்ளிக்குச் சென்றான். மாலை அவன் வரும்போது ஒரு சிறுவர் பட்டாளத்தையே கையோடு அழைத்து வந்திருந்தான்.

“வேலு… என்னடா இது? ஸ்கூல் புள்ளைங்களை எல்லாம் ஒண்ணா இங்க கூட்டிட்டு வந்திருக்க?” சின்னதம்பி முழு போதையில் வாயிலிலேயே அவனை வழிமறித்தார்.

“ப்பா… முதல்ல வீட்டுக்குள்ளே எழுந்திருச்சு போப்பா நீ. என் ப்ரெண்ட்ஸ் முன்னாடி மானத்தை வாங்காத!” என அவரைக் கடிந்தவன், மற்றவர்களை வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றான். கிரிஜா ஜீவாவிற்கு எண்ணெய் வைத்து தலையைப் பின்னிக் கொண்டிருந்தார். மகன் இத்தனைப் சிறுவர்களோடு வரவும், அவனைக் கேள்வியாகப் பார்த்தார்.

“டேய்… எங்கக்காவோட ப்ரெண்ட்தான் வாசு. எங்க அக்கா அவரோட ஃபோட்டோ எடுத்து தரேன்னு சொல்லிருக்கா!” என அனைவரிடமும் அவன் தற்பெருமையோடு கூற, ஒவ்வொருவராக அவனிடம் தாங்களும் அந்த நாயகனோடு புகைப்படம் எடுக்க வேண்டுமெனக் கேட்டு நின்றனர். வேலுவிற்கு அவர்கள் அனைவரும் வந்து அவனிடம் கெஞ்சிக் கேட்டதும் ஒருமாதிரி உச்சாணிக் கொம்பில் அமர்ந்ததுபோலத் தோன்றிற்று.

“டேய்… இதுக்கெல்லாம் எதுக்குடா ப்ளீஸ் போட்றீங்க? எங்க அக்கா சொன்னா, வாசு எத்தனை பேரோட வேணும்னாலும் போட்டோ எடுப்பாரு. நம்ம எல்லாரும் அவரோட எடுக்கலாம்!” என அவன் அவர்களைக் கையோடு அழைத்து வந்திருந்தான்.

“ம்மா… என் ப்ரெண்ட்ஸ்மா. வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் சும்மாதான்…” எனத் தாயிடம் சமாளித்தவன், ஜீவாவைக் கையோடு அழைத்துச் சென்று விஷயத்தைக் கூற, அவளுக்கு சட்டென கோபம் வந்துவிட்டது.

“என்ன வேலு நீ? உன் இஷ்டத்துக்கு இத்தனைப் பேரைக் கூட்டிட்டு வந்திருக்க? நான் உன் ஒரு ஆளுக்குத்தான்னு கேட்கலாம்னு நினைச்சேன். சான்சே இல்ல, வந்திருக்கவங்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் தர்றேன். சாப்பிட்டு கிளம்பச் சொல்லு” என்றாள் கண்டிப்பான குரலில்.

“அக்கா… ப்ளீஸ்கா. மாட்டேன்னு சொல்லாதக்கா. எல்லார்கிட்டேயும் கெத்தா சொல்லிட்டேன். இப்போ மாட்டேன்னு சொன்னா அசிங்கமாகிடும்கா!” அவன் தமக்கையிடம் கெஞ்சினான்.

“யாரைக் கேட்டு நீ இப்படி அஷ்யூரன்ஸ் கொடுத்த, வேலு? எங்கருந்து உனக்கு இந்தப் பழக்கம் வந்துச்சு? நான் கேட்டு, டைமில்லன்னு அவர் ஃபோட்டோ எடுக்க வரலைன்னா என்ன பண்ணுவ நீ?” அவள் கடுங்குரலில் கேட்க, அவன் தவறு செய்த பாவனையில் முகம் வாடி நின்றான்.

அவனை அப்படிப் பார்க்கப் பொறுக்காதவள், “சரி, நான் ட்ரை பண்ணிப் பார்க்குறேன். பட், அவர் ஓகே சொன்னாதான். இல்லைன்னா நீ உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே பேசி பத்திரமா வீட்டுக்கு அனுப்பிவிடணும். இதுதான் லாஸ்ட் டைம். என்னைக் கேட்காம எதுவும் பண்ணக் கூடாது நீ!” என்றவள், அவரவர் வீட்டில் அனுமதி வாங்கிவிட்டுத்தான் இங்கே வந்தார்களா என உறுதி செய்துகொண்டாள்.

பின்னர், அவர்களுக்கு பழச்சாறும் ரொட்டியும் கொடுத்து அமர வைத்துவிட்டு, உடுத்தியிருந்த நைட்டியை அவிழ்த்து ஒரு நாகரிகமான சுடிதாருக்கு மாறி, முகம் கழுவி வந்தாள். எண்ணெய் வைத்து படிய வாரியத் தலையிலிருந்து முகத்திலும் எண்ணெய் பிசுபிசுப்பு ஒட்டிக்கொண்டிருந்ததுபோல. அழுந்த முகம் துடைத்தவள், தமையனிடம் கண் காண்பித்துவிட்டு உணவகத்தை அடைந்தாள்.

சட்டெனச் சென்று தேவாவிடம் இப்படியெனக் கேட்பதற்கு அவளுக்குத் தயக்கமாக இருந்தது. தன் தங்கை, தம்பி என்றால் அது வேறு. இப்போதோ பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஆர்வத்தோடு இவள் செல்வதைப் பார்த்திருக்க, ஒரு பெருமூச்சுடன் கூட்டத்தை விலக்கி முன்னே நகர்ந்தாள்.

“ஏம்மா… இவ்ளோ நேரம் நிக்கிறோம். எங்களுக்கே ஒண்ணும் தெரியலை. நீ என்னம்மா வந்ததும் உள்ளே போற?” கூட்டத்தில் ஒருவர் சத்தமிட்டார்.

“ஐயா… இது எங்க ஹோட்டல். அதான் போறேன். நான் வேடிக்கைப் பார்க்க வரலை!” எரிச்சலை மறைத்த குரலில் சொல்லிவிட்டு அவள் முன்னே சென்றாள்.

தேவா வலது கையில் ஒரு ஒலிவாங்கியும், இடது கையில் சில காகிதங்களையும் வைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். தடுப்பைத் தாண்டிப் பொதுமக்கள் வர அனுமதிக்கவில்லை எனப் பார்க்கும்போதே தெரிந்தது. அவன் வேலையில் மும்முரமாக இருந்தபடியால் இவளைக் கவனிக்கவில்லை. ஜீவா அவன் பார்ப்பான் எனக் காத்திருக்க, கீதன் இவளைக் கவனித்துவிட்டான். அவள் சைகையில் தேவாவைக் கைக்காண்பித்தாள்.

“சார்… அந்தப் பொண்ணு உங்களுக்குத் தெரிஞ்சவங்க தானே? இந்த ஹோட்டல் பத்தி டீடெயில்ஸ் கூடக் கேட்டீங்களே. அவங்கதானே இதோட ஓனர்!” கீதன் தேவாவிடம் கூற, அவன் திரும்பிப் பார்த்தான். ஜீவா நின்றிருந்தாள். இவனைக் கண்டதும் அவள் சம்பிரதாயமாகப் புன்னகைத்தாள்.

தேவா வரவேற்பாகத் தலையசைத்தவன், “அவங்களை உள்ளே விடுங்க, கீதன்…” என்றான். ஜீவா இவனருகே வந்தாள்.

“பக்கத்துல நடக்குற ஷூட்டிங்கைப் பார்க்க இப்போதான் மேடத்துக்கு டைம் கிடைச்சுதா?” அவன் கேலியாகக் கேட்டவாறே இருக்கையைக் காண்பித்தான்.

“அப்படிலாம் இல்ல தேவா சார். எப்போவாதுதான் இந்த மாதிரி லீவெல்லாம் கிடைக்கும். அதான் நேத்து சாப்பிட்டுட்டு தூங்கி எழுந்தேன்…” முறுவலித்தபடியே நாற்காலியில் அமர்ந்தாள். அவன் பதிலிறுக்காமல் தலையசைக்க, வேறு யாரோ என்னவோ அவனிடம் சொல்லினர்.

“ப்ம்ச்… இதென்ன சீரியல்னு நினைச்சுட்டாங்களா? நான் முன்னாடியே எல்லாம் ரெடியா இருக்கணும்னு வார்ன் பண்ணியும் ஆள் வரலை!” இவன் கடுகடுக்க, அவர் ஏதோ சமாளித்தபடியே அகன்றார். தேவா முகத்தில் தெரிந்த எரிச்சலில் ஜீவாவிற்குத் தான் வந்த விஷயத்தைக் கேட்பதா, வேண்டாமா எனப் பெரும் தயக்கமாகப் போயிற்று.

error: Content is protected !!
Scroll to Top