மௌனம் – 13.1

“இந்த டேபிளை எடுத்துப் பின்னாடி போடுங்க. இவ்வளோ சேர்ஸ் வேணாம். மூனு போதும். நடக்க ஸ்பேஸ் வேணும்!” கீதன், சஷ்டிகா உணவகத்தில் நின்று ஆட்களிடம் வேலை ஏவிக் கொண்டிருந்தான்.

ஜீவா, தங்களது உணவகத்தில் படப்பிடிப்பு எடுப்பதற்குச் சம்மதிக்கவில்லை. கிரிஜாவிடம் கேட்டதற்கு அவருமே வேண்டாமென்றுதான் உரைத்தார். சினிமா, நாயகன், நாயகிகள் என்றதும் வேலுவிற்கு ஆர்வமாகிப் போனது. சஷ்டிகா கூடத் தாயிடம் சம்மதிக்குமாறு கூற, அவர் யோசிப்பதாகக் கூறினார்.

ஆனால், மறுநாளே உணவகத்தின் உரிமையாளர் இவருக்கு அழைத்து, “கிரிஜா நல்லா இருக்கீயாம்மா? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என முகமன் விசாரித்தவர், “நம்ம ஹோட்டல்ல ஷூட்டிங் எடுக்கக் கேட்டாங்க. மூனு நாள்தானேன்னு நானும் சரின்னுட்டேன். உங்களோட வருமானம் பாதிக்குதுன்னு கவலைப்படாதம்மா. அதுக்கு உங்களுக்கு காசு வாங்கிக் கொடுத்துடுறேன். எனக்கும் அவங்க இடத்துக்கு வாடகை தர்றேன்னு சொல்லிட்டாங்க. சோ, நீங்க கொஞ்சம் அவங்க கேட்குற மாதிரி ஒத்துழைப்பு கொடுத்தா போதும்!” என மறுக்க முடியாத குரலில் கூறினார்.

உணவகத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். வருடத்திற்கு ஒருமுறை வந்து இங்கே பார்வையிட்டுச் செல்வார். மற்றபடி, அவர் பெரிதாக எதிலும் தலையிட மாட்டார். ஜீவா மாதாமாதம் சரியாக அவருக்கு உண்டான வாடகைப் பணத்தைக் கொடுத்துவிடுவாள். அதனாலே இத்தனை வருடங்கள் இருவருக்கும் சுமூகமாகச் சென்றது.

பெண்களாக நடத்துவதால் பெரிதாகப் பிரச்சனைகள் எதுவும் வந்ததில்லை. உரிமையாளரும் குணமானவர். இவர்களிடம் எப்போதும் தன்மையாகத்தான் பேசுவார். அப்படியிருக்கையில், அவர் கேட்டு கிரிஜாவால் மறுக்க முடியவில்லை. மறுக்கும் நிலையிலும் இல்லை பெண்மணி. உடைமைப்பட்டவர் தானே முடிவெடுக்க முடியும். அதனாலே கிரிஜா அனைத்திற்கும் சம்மதமெனத் தலையாட்டினார்.

ஜீவாவிற்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது அவளால் சட்டென இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவள்தான் உரிமையாளரிடம் பேசிக்கொள் எனத் தேவாவிடம் கூறினாள். இருந்தும், அவன் கிரிஜாவிடம் ஒரு வார்த்தைக்கூட வந்து இதுபற்றி உரைக்கவில்லையே. உரிமையாளரிடம் அனுமதி கேட்டது நியாயமான விடயம்.

ஆனால், தற்போதைக்கு அங்கே இவர்கள் தானே உணவகம் நடத்துகின்றனர். எங்களிடம் ஒரு வார்த்தைக்கூட அவன் கூறவில்லை என ஒருமாதிரியாகிப் போனது. படப்பிடிப்பு விஷயத்தைப் பற்றி தேவா இவளிடம் கூட அவன் பகிர்ந்திருக்கவில்லை. உரிமையாளர் அழைத்துக் கூறிய பின்புதான் இவர்களுக்கே தெரிய வந்தது. வார்த்தைக்கு வார்த்தை தோழியென அவன் குறிப்பிட்டாலும் அவன் தனக்கு கொடுக்கும் மரியாதையும் முக்கியத்துவமும் அவ்வளவுதானா என மனம் துணுக்குற்றது.

அதனாலே இவளும் மூன்றாம் மனிதர் போல நடந்துகொண்டாள். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குக்கூட ஜீவா சென்று பார்க்கவில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து உணவில்லாமல் மேன்சனில் தங்குபவர்கள் என்ன செய்வார்களோ என்று மனதோரம் அந்தக் கவலை வேறு அரித்தது.

‘சரி… அவர் சொன்ன மாதிரி மூனு நாள்தானே? வேற எங்கேயும் சாப்பிட்டுக்குவாங்க. பட்டினியாவா கிடக்கப் போறாங்க? ரொம்ப யோசிக்காத ஜீவா!’ எனத் தன்னைத் தானே அதட்டி அடக்கினாள்.

பின்னர், நீண்ட நெடிய வருடங்கள் கழித்து அவளுக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதெல்லாம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது எனக் கேலியாக எண்ணியபடியே அன்றைக்கு நன்றாகத் தூங்கி தாமதமாக எழுந்தாள்.

பத்து மணி எனக் கடிகாரம் காண்பித்தும் கூட அவசரமே இல்லாமல் எழுந்து குளித்து, இலகுவான நைட்டி ஒன்றை உடுத்தி வெளியே வந்தாள். வயிறு கபகபவெனக் காந்தியது. கிரிஜாவைக் காணவில்லை. உணவகம் சென்றிருக்கக்கூடுமென இவள் எண்ண, அவர் துவைத்த துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்தார்.

“ஏன்மா, நீங்க படியேறுறீங்க? என்னைக் கூப்பிடக் கூடாதா?” என அவரைக் கடிந்தாள்.

“நீயே என்னைக்கோ ஒரு நாளைக்குத்தான் இப்படி தூங்குற. உன்னை ஏன் எழுப்பணும்னு நானே காயப் போட்டுட்டேன். முதல்ல சாப்பிட்டுட்டு தலையைக் காய வை ஜீவா. ஈரம் சொட்டுது பாரு…” அவர் அதட்ட, இவள் தலையாட்டி வைத்தாள்.

உண்டு முடித்து விச்ராந்தியாக உட்கார்ந்து தலையை உலர்த்தினாள். அடுத்து என்ன செய்வது என எந்த வேலையும் இல்லாமல் இருப்பதுகூட அவளுக்குப் பிடித்திருந்தது. தினமும் இந்த நேரத்திற்கு வியர்க்க விறுவிறுக்கச் சமையலறையில் ஏதாவது சமைத்துக் கொண்டிருப்பாள். ஆனால், இப்போது அப்படியில்லாமல் சும்மா இருப்பது கூடச் சுகமாகத் தோன்றிற்று. படம் எதுவும் பார்க்க அவளுக்குத் தோன்றவில்லை.

நீண்ட வருடங்களாகத் தொடாத கதைப் புத்தகங்கள் சில இருந்தன. ஆனால், அவையெல்லாம் கிரிஜா மூட்டைக்கட்டி பரணியிலேற்றிவிட்டதால், எடுக்கச் சோம்பேறித்தனப்பட்டாள். காய வைத்த முடியைச் சிக்கெடுத்து பின்னியவள், கண்ணுக்கு மையிட்டாள். அலைபேசியை எடுத்து ஏதாவது கேளிக்கைக் காணொளி பார்க்கலாம் என அவள் துழாவ, “வேர் ஆர் யூ ஜீவா?” என தேவாவிடமிருந்து செய்தி வந்து விழுந்தது.

சில நொடிகள் யோசித்துவிட்டு, “வீட்லதான் இருக்கேன் தேவா சார்…” எனப் பதிலனுப்பினாள்.

“அப்புறம் ஏன் நீ இங்க வரலை? உங்க ஹோட்டல்ல தானே ஷூட்டிங் நடக்குது? பார்க்க இன்ட்ரெஸ்ட் இல்லையா?” கேள்விக்குறியுடன் அவன் அனுப்பினான். ஜீவாவும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அந்தப் பகுதியின் மொத்த ஆள்களும் அவளது உணவகத்தின் வாயிலில் நின்று ஆர்வத்துடன் வேடிக்கைப் பார்த்தனர். உள்ளே தேவா அமர்ந்திருப்பது இவளுக்குத் தெரியவில்லை. ஆனால் சத்தம் மட்டும் வெகுவாக கேட்டது.

“எனக்கு ஷூட்டிங் பார்க்கப் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல தேவா சார். வீட்ல வேலை வேற கிடக்கு!” என்ன சொல்வது எனத் தெரியாமல் யோசித்து அனுப்பினாள்.

“ஓகேம்மா… கேரி ஆன்!” அவன் முடித்துக்கொண்டான். இவளுக்கு அங்கே செல்ல வேண்டுமெனத் தோன்றவில்லை. சிறிது நேரம் சும்மாவேனும் அமர்ந்திருந்தவள், பின்னர் அறைக்குள் நுழைந்து அதைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

வேண்டாத பொருட்களை எல்லாம் தனியே பிரித்து, நிலைபேழையில் துணியைச் சரியாக மடித்து வைத்தாள். அப்படியே அன்றைய பொழுது கழிந்துபோனது. மாலை பள்ளி முடிந்து வந்து பையைக் கழட்டிப் போட்ட வேலு, “அக்கா… வா, நம்மளும் போய் ஷூட்டிங் பார்க்கலாம்!” என ஜீவாவை அழைத்தான்.

“வந்ததும் முகம் கை கால் கழுவுனீயா நீ? ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலை. போ… போய் ட்ரெஸை மாத்துடா!” அவள் அதட்டினாள்.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கிறேன்கா. நீ வா, முதல்ல அங்கப் போய் பார்த்துட்டு வரலாம்…” என அவன் ஒற்றைக் காலில் நின்றான்.

“எனக்கு ஷூட்டிங் பார்க்கத் தோணலைடா. நீ வேணா போய் பார்த்துட்டு வா!” அவள் மறுதலித்தாள்.

“ம்ப்ச்… அக்கா, நான் மட்டும் போனா உள்ளே விட மாட்டாங்க. சின்ன பையன்னு தூரமா நிக்க வைப்பாங்க. ரைடக்டர் உன் ப்ரெண்ட் தானே? அப்போ உன்னோட போனா உள்ளே விடுவாங்கக்கா. வாயேன் நீ?” அவன் அடம்பிடிக்க,

“வேலு… அவதான் வரலைன்னு சொல்றால்ல. போறதுன்னா நீ மட்டும் போய் பார்த்துட்டு வா. இல்லைன்னா ஒழுங்கா வீட்ல உக்கார்ந்து ஹோம் வொர்க் பண்ணச் சொல்லிடுவேன்…” என கிரிஜா மகனை அதட்டினார். அவன் முகம் சின்னதானது.

“வேலு… வாடா, நான் வரேன். போய் ஷூட்டிங் பார்த்துட்டு வரலாம்!” பத்தே நிமிடத்தில் உடை மாற்றி, தலையை அவிழ்த்துப் பின்னி, முகம் கழுவி ஏதோ பூசிவிட்டு பளபளவென வந்து நின்றாள் சஷ்டி. தாய் அதட்டியதும் தம்பி முகம் வாடியதில் அவரை முறைத்தாள்.

“வந்ததும் வராததுமா ரெண்டு பேரும் கிளம்புறீங்க. எப்படினாலும் அவங்க எடுத்த படத்தை டீவில போடத்தானே போறாங்க. அப்புறம் என்ன?” என அவர் சடைத்தார்.

“போம்மா… வாசுதான் இந்தப் படத்தோட ஹீரோவாம். அவரை நேர்ல பார்த்து ஒரு போட்டோ எடுத்துட்டு என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே காட்டுவேன் நான்!” சின்னவன் குதூகலித்தான்.

“ஆமா… அவனோட ஃபோட்டோ எடுத்ததும் ஒரு மாசத்துக்கு நம்ம வீட்ல சோத்துக்குப் பஞ்சம் இல்லாம போய்டும். இந்த ஆர்வத்தைப் படிப்புல காட்டேன்டா…” அவர் சலித்தார்.

“ம்மா… நானும் அவனும் போய் வாசுவைப் பார்த்துட்டு வர்றோம்!” சஷ்டி தம்பியின் கையைப் பிடித்தாள்.

“சஷ்டி… நீ இரு. இன்னும் ரெண்டு நாள் ஷூட்டிங் இருக்கே. நான் உன்னைக் கூட்டிட்டுப் போய்க் காட்டுறேன். இப்போ வேலு மட்டும் போகட்டும்!” ஜீவா தங்கையைத் தடுத்தாள்.

error: Content is protected !!
Scroll to Top