“ஜீவா…” அவன் இவளை அழைத்து, “எனக்கு செம்மையா தலை வலிக்குது. ஒரு டீ கிடைக்குமா?” எனக் கேட்டதும், அவள் நொடியில் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தாள்.
“நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன், தேவா சார். வெயிட் பண்ணுங்க!” என்றவள், ஒருமுறை பார்வையாலேயே அங்கே எத்தனை ஊழியர்கள் அவனோடு இருக்கிறார்கள் என எண்ணியபடியே பதினைந்து நிமிடங்களில் சூடான தேநீரை எடுத்து வந்தாள். தேவாவிடம் ஒன்றைக் கொடுத்தவள், மற்றவர்களுக்கும் கொடுத்தாள். ஐம்பது வயதிலிருக்கும் ஒருவர் தேநீர் வேண்டாமென மறுத்துவிட்டார்.
“ஐயா… ஏன் டீ வேணாம்னு சொல்றீங்க?” அவரிடம் ஜீவா கேட்க,
“டீ காபி குடிச்சு சுகர் முன்னூறு ஏறிப் போச்சும்மா. ஒரு தடவை மயங்கி விழுந்துட்டேன். என் சம்சாரம் பயந்து அழுதுட்டா. அதான்மா நான் டீ, காபி வெளிய குடிக்கிறதில்லை. வீட்லனா என் பொண்டாட்டி சர்க்கரை இல்லாமல் தருவா!” என அவர் பதிலளித்தார். அவரைச் சின்ன சிரிப்புடன் பார்த்தாள் ஜீவா.
“சரிதான்… நானும் உங்களுக்கு சர்க்கரை போடாம காபி ஒன்னு எடுத்துட்டு வரேன். குடிச்சிட்டு வேலையைப் பாருங்க!” என்றாள்.
“இல்லம்மா… எனக்காகத் தனியா எதுவும் செய்ய வேணாம்மா…” என அவர் மறுக்க, இவள் சென்று இனிப்பில்லாத பானம் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் மனதார நன்றியுடன் வாங்கிக்கொண்டார். தேவாவிற்கு அவள் என்ன பேசினாள், கொண்டு வந்தாள் எனக் கேட்கவில்லை. ஆனால் பார்வையை மட்டும் அவளிடம் வைத்திருந்தான்.
தன்னருகே அவள் வந்ததும், “தேங்க்ஸ் ஃபார் தி டீ, ஜீவா…” என அவளுக்கு நன்றியுரைத்தான் தேவா. அவள் சின்ன தலையசைப்பில் அதை ஏற்றாள்.
“அப்புறம் நான் எனக்கு மட்டும்தானே டீ கேட்டேன். மொத்த செட்டுக்கும் இலவச இணைப்பா டீ வந்துடுச்சே!” கேலியாக அவன் கேட்க, இவள் முறுவலித்தாள்.
“சொன்னா கோச்சுக்காதீங்க தேவா சார். நீங்களாது உட்கார்ந்து அத்தனைப் பேரையும் அதட்டி வேலை வாங்குறீங்க. ஆனால் அவங்க அப்படியில்லைல. எனக்குத் தெரிஞ்சு வந்ததுலருந்து உட்காரக்கூட செஞ்சிருக்க மாட்டாங்க. அப்படியிருக்கப்போ உங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு அவங்களுக்கு கொடுக்காம இருக்க முடியுமா? நாள் முழுக்க நின்னுட்டே வேலை பார்க்குறவங்களுக்குத்தான் அந்தக் கஷ்டம் புரியும் தேவா சார். கால், குறுக்கு எல்லாம் வலி பெண்டெடுத்துடும்!” ஜீவா கூற, அவளை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவன் பதிலுரைக்கவில்லை. அவள் அணிந்திருந்த உடை, மெல்லிய சங்கிலி, கண்ணைக் கவராத தோடு, எண்ணெய் வைத்துப் படிய வாரிய தலை என அவன் பார்வை மெல்ல அவளை அளவிட்டது.
“சாரி ஜீவா…” அவன் மன்னிப்பைக் கேட்க, இவள் புரியாமல் பார்த்தாள்.
“வொர்க்னு வந்துட்டா எனக்கு பெர்பெக்ஷன் ரொம்ப முக்கியம். நீ தர மாட்டேன்னு சொல்லியும் ஓனர்கிட்டே பேசி பெர்மிஷன் வாங்கிட்டேன். இங்க எடுத்ததால சீன் நான் நினைச்ச மாதிரி வந்திருக்கு. உன்கிட்டே சொல்லலை!” அவன் அவள் முகம் பார்த்தான்.
“இதுல என்கிட்ட சாரி சொல்ல என்ன இருக்கு தேவா சார். நான்தான் உங்களை ஓனர்கிட்டே கேட்க சொன்னேன். நாங்களே இங்க வாடகைக்குத்தானே இருக்கோம். சோ, நீங்க அவர்கிட்டே பேசுனதுதான் சரி. எங்களுக்கு இன்பார்ம் பண்ணணும்னு அவசியம் இல்ல. சாரியெல்லாம் எதுக்கு? உங்க வொர்க் நல்லா நடந்தா அதுவே சந்தோஷம்!” ஜீவா அவனிடமிருந்து மனதளவில் நான்கடி தள்ளி நின்றுவிட்டாள். என்ன இருந்தாலும் அவனும் தாங்களும் வேறு என மனத்தில் ஆழப் பதிந்து போனது. அதற்காக அவள் கவலையெல்லாம் கொள்ளவில்லை. அவன் பணம், புகழ் எல்லாம் அவன் வரையில். அவளைப் பொறுத்தவரை தான் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்கிறாள். கடனில்லாத வாழ்வு, திடீரென வேலையை விட்டு முதலாளி நிறுத்திவிட்டால் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம் என்ற பயமில்லாமல் உறங்கி எழுகிறாள். அதுவே அவளுக்கு திருப்தியாக இருந்தது.
“ஏன் இப்படி பேசுற, வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ். ஒவ்வொரு டைமும் உனக்கு நான் அதை ஞாபகப்படுத்தணுமா?” என்னமோ அவள் பேச்சு இவனுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. மெல்லிய அதட்டல் குரலில் அவளிடம் கூறவும், அவள் சிரித்தாள்.
“நான் எப்பவும் போலத்தான் பேசுறேன் தேவா சார். எனக்கு ஒரு சின்ன ஹெல்ப். உங்களால முடிஞ்சா செஞ்சு கொடுக்க முடியுமா? முடியலைன்னா பிரச்சனை இல்ல. அதைக் கேட்கத்தான் வந்தேன்!” எனத் தயங்கினாள்.
“வொய் நாட், என்ன வேணும் ஜீவா?” அவன் ஆர்வமாகக் கேட்க, அவள் தன் தம்பியின் செய்கையைச் சின்ன குரலில் கூறி முடித்தாள்.
“இன்னும் ஹாஃப் அன் அவர்ல ஷூட்டிங் முடிஞ்சிடும் ஜீவா. நீ பசங்களை கூட்டிட்டு வா, போட்டோ எடுக்கட்டும்!” அவன் இலகுவாகக் கூற, இவள் நன்றியுடன் அவனைப் பார்த்தாள்.
“ஷ்யூரா தேவா சார்? வாசு சாரைக் கேட்காம நீங்களே சொல்லிட்டீங்க. அவர் ஒத்துப்பாரா?” அந்தப் படத்தின் நாயகனை ஒருமுறை திரும்பிப் பார்த்தபடியே கேட்டாள் ஜீவா.
“ஹீ இஸ் மை ஃப்ரெண்ட். சின்ன பசங்க ஆசைப்படுறாங்க. அதெல்லாம் ஓகே சொல்லுவார். டோன்ட் ஓவர் திங்க். ஷூட்டிங் முடிஞ்சதும் நீ அவங்களை கூட்டிட்டு வா!” என முடித்தவன், எழுந்து சென்று மற்ற வேலைகளைப் பார்த்தான். ஜீவா என்ன நடக்கிறது என வேடிக்கைப் பார்த்தாள்.
ஒரே ஒரு சண்டைக் காட்சியை மூன்று முறை எடுத்தார்கள். இவளுக்குச் சலிப்பாக இருந்தது. ரத்தம் போல ஏதோ திரவம், அட்டைக் கத்தி, பீங்கானைப் போல், ஆனால் மெல்லிய ஏதோ ஒரு பொருளால் உருவாக்கி வைத்திருந்த மேஜையை உடைத்தார்கள். பார்ப்பதற்கு அசல் கண்ணாடி போலவே இருந்தது அது.
திரும்பத் திரும்ப ஒரே காட்சியையே அவர்கள் எடுக்க, தேவா ஏதோ அதட்டி அவர்களுக்கு அறிவுறுத்திவிட்டு மீண்டும் வந்தமர்ந்தான். அந்தக் காட்சியை எடுத்து முடித்ததும் ஜீவா சென்று வேலுவையும் அவன் நண்பர்களையும் அழைத்து வந்தாள். அவர்கள் வாசுவைச் சுற்றி நின்று தங்களை அறிமுகம் செய்து, தங்களது ஆதர்ஷ நாயகனைப் பார்த்துவிட்ட குஷியில் குதித்தனர். ஜீவா வர மாட்டேன் என்ற சஷ்டியையும் வம்படியாக அழைத்து வந்தாள்.
“இது என் தங்கச்சி…” எனச் சின்னவளை அவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள். அவன் தலையசைத்தான். சஷ்டி வாசுவை ஆர்வமாகப் பார்த்தாள்.
“போ… எல்லாரோட நின்னு போட்டோ எடுத்துக்கோ சஷ்டி…” என அவளையும் அவர்களோடு அனுப்பினாள்.
தேவா இவளைப் பார்த்தவன், “நீ போய் ஃபோட்டோ எடுக்கலையா ஜீவா?” எனக் கேட்டான்.
“இல்ல சார், எனக்கு அதுல எல்லாம் இஷ்டம் இல்ல. அந்தப் போட்டோ வச்சு நான் என்ன பண்ணப் போறேன்? பைசாவுக்குப் பிரயோஜனம் இல்ல. நான் ஷூட்டிங் பார்க்கவே வரலாமா? இல்ல சாப்பிட்டு தூங்கலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். என் தம்பிதான் வர வச்சுட்டான்!” அவள் இந்த சினிமாவும் அதன் ஆடம்பரமும் என்னை அதிசயிக்கவில்லை என்பது போல பதிலளிக்க,
“ஏன் ஜீவா… அவர் எவ்ளோ பெரிய ஆக்டர். அவரோட ஃபோட்டோ எடுக்க எத்தனையோ பேர் வெயிட் பண்றாங்கம்மா. ஆனால் நீ ரொம்ப பிகு பண்ற…” அவன் சலித்தான். ஜீவா சிரித்தாள்.
“நானும் அவங்களை மாதிரி ஸ்கூல் படிக்குற வயசுல இருந்தா இப்படித்தான் ரியாக்ட் பண்ணிருப்பேன். ஆனால் இப்போ எனக்கு ஃபோட்டோ எடுக்கத் தோணலை சார். மத்தபடி பிகுவெல்லாம் பண்ணலை நான். அவர் பெரிய ஆக்டர்; எவ்ளோ பெரிய உயரத்துல இருக்காரு. ஆனாலும் பசங்களோட ரொம்ப கேசுவலா பேசுறாரு. நல்ல மனுஷன்!” இவள் அந்த நாயகன் சிறுவர்களிடம் ஏதோ விளையாட்டாகப் பேசி சிரித்ததைச் சின்ன புன்னகையுடன் ரசித்துப் பார்த்தாள். தேவாவிற்குச் சட்டென பொறாமையுணர்வு தலைதூக்கிற்று.
தொண்டையைச் செருமியவன், “அப்போ நான் எப்படி ஜீவா? நல்ல பையன் தானே. நானும் பெரிய டைரக்டர் தானே?” என வலியச் சென்று கேட்டான். அவள் புருவத்தைச் சுருக்கி, சின்ன புன்னகையுடன் அவனை ஏறிட்டாள்.
“உங்களுக்கு என்ன தேவா சார்? நல்ல மனுஷன், எவ்வளோ பெரிய பொஷிசனுக்குப் போனாலும் என்னை ஞாபகம் வச்சு எந்த அலட்டலும் இல்லாம எங்க ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கீங்க. நீங்களாம் ரொம்ப பெரிய மனசுக்காரர்!” அவள் முறுவலுடன் இழுத்துச் சொல்ல, இவன் முறைத்து வைத்தான். வாசு தேவாவைப் பார்த்ததும், ஜீவாவிற்குப் புரிந்துவிட்டது. அவர்கள் அருகே சென்று, சிறியவர்களை அகன்றுவிட அவள் கூறினாள். அவர்கள் செல்லும்வரை அவள் நிற்க, சஷ்டி வந்து தமக்கையின் கையைச் சுரண்டினாள். அவள் முகம் பளிச்சென்றிருந்தது.
“அக்கா… தேங்க்ஸ். அப்புறம் தேவா சார் கூட ஒரு ஃபோட்டோ வேணும் எனக்கு!” என்றாள் அவனைக் கை காண்பித்து. அவன் இவர்கள் அருகே நடந்து வந்தான்.
“அவரோட உனக்கெதுக்கு சஷ்டி போட்டோ எடுக்கணும்!” அவள் புரியாது சின்னவளைப் பார்த்தாள்.
“அக்கா… அவர் எங்க கேங்கோட க்ரஷ் லிஸ்ட்ல இருக்காருக்கா. அவர் ஏ.கே. மூவில கேமியோ ரோல் பண்ணாருல்ல. அப்போருந்து ரொம்ப பிடிக்கும் அவரை எனக்கு. ஒரே ஒரு ஃபோட்டோ நீயே எடேன்!” சின்னவள் கேட்க, தேவா இவர்கள் உரையாடலைக் கேட்டபடியே உதட்டை மடித்து சிரிப்பை விழுங்கினான். ஜீவா அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கேட்பதற்கு அவசியமே இல்லாதது போல அவன் தலையசைக்க, அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்தாள்.
“வீட்டுக்கு வந்துட்டுப் போங்க தேவா சார். அம்மாகிட்ட உங்களை இன்வைட் பண்ண சொல்றேன்…” என சஷ்டி ஓட, ஜீவா கண்களில் கனிவுடன் அவளைப் பார்த்தாள்.
“அப்புறம் ஜீவா… நம்ம ஒரு செல்ஃபி எடுக்கலாம் வா!” அவன் அழைக்க, அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
“வேணாம் தேவா சார்!” சங்கடமாகப் பார்த்தாள். கிரிஜாவிற்குத் தெரிந்தால் ஏதாவது நினைத்துவிடக் கூடுமென மறுத்தாள். ஆனால் அவளுக்கும் தேவாவுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்னவோ உண்மை. அவன் பெரிய இயக்குநர் என்பதைத் தாண்டி அவள் மனதிற்குப் பிடித்தவன் என்ற வகையில் அவனோடு ஒரு சுயமி எடுக்க ஆவலிருந்தது.
“ஏன் வேணாம், நானும் ஒரு செலிபிரிட்டிதான்மா!” அவன் அழுத்தி அழைத்தான்.
“அது… என் ஃபோன் கைல இல்ல தேவா சார். இன்னொரு நாள் எடுப்போம்!” அவள் மீண்டுமொருமுறை மறுத்துப் பார்த்தாள்.
தேவா தன் அலைபேசியை எடுத்துவிட்டு அவளைப் பார்க்க, சின்ன பெருமூச்சுடன் அவனருகே சென்று நின்றாள். வலக்கையில் அலைபேசியை உயர்த்தி இருவரையும் திரைக்குள் கொண்டு வந்தவன், “இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில கூட இவ்ளோ கேப் இருக்காதும்மா…” என்றான் கேலியாக. ஜீவா சங்கடத்துடன் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த இடத்தை மெல்ல நிரப்ப, தேவா ஒரு சுயமியை எடுத்தவன், அவள் தோளில் கைபோட்டு மற்றொரு படமும் எடுத்தான். அதை எதிர்பாராது அதிர்ந்தாலும் ஜீவா நாசூக்காக விலகி நின்றாள்.
“ஓகே ஜீவா… வில் மீட் யூ டுமாரோ…” என அவன் கையசைத்து அகல, இவள் அவன் செல்லும்வரைப் பார்த்துவிட்டே வீட்டை நோக்கிச் சென்றாள்.
தொடரும்…