ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 19

“ஹாய் மது! என்னடி முடிவு செஞ்சிருக்கிற?”என்று எடுத்தவுடனேயே கேட்டவளிடம், 

தன்னுடைய தமக்கைப் பதில் சொல்வதற்கு முன்பாகவே,”அக்கா! மொபைல் ஸ்பீக்கரில் தான் இருக்கு!”என்றத் தகவலைப் பிரேமாவிற்குத் தெரிவித்தாள் சுதா. 

“ஓஹ்! அப்படின்னா சரி! உங்க அக்கா இந்நேரம் உங்கிட்டேயும் இன்னைக்கு நடந்த எல்லாத்தையும் சொல்லி இருப்பாளே?”என்றதுமே, 

“ஆமாம்க்கா. சாயந்தரம் வந்ததுமே சொல்லிட்டாங்க”என்றுரைக்க, 

“அப்போ நாமக் கேள்விக் கேட்க அவசியம் இல்லை. அவ தான் நமக்கு இப்போ பதில் சொல்லனும்”என்றிருந்தாள் பிரேமா. 

“என்னடி சொல்லனும்? நானே மனக் குழப்பத்தில் இருக்கேன்! நீங்க தான் எனக்கு இதுக்கு ஒரு வழி சொல்லனும்”எனச் சோகமாக கூறினாள் மதுபாலா. 

“அது தான் நாங்க நேத்தே சொல்லிட்டோமே? அதுக்கப்புறமும் என்ன வழியைச் சொல்லனும்?”

“அதெல்லாம் எனக்கும், அவருக்கும் செட் ஆகாதுன்னு நானும் உங்ககிட்ட சொல்லிட்டேனே? வேற ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க டி!”என்று தன் தோழியிடமும், தங்கையிடமும் புலம்ப, 

அதில் அவர்கள் இருவருக்கும் அவள் மீது கோபம் உண்டானது. 

“நீ என்ன எதுக்குமே ஒத்து வர மாட்டேங்குற? ஒழுங்காக அவரைக் காதலிச்சுக், கல்யாணம் செஞ்சிக்கப் பாரு! இது தான் நாங்க இந்த விஷயத்தில் உனக்குக் காட்ற வழி!”என அவளுக்கு அறிவுறுத்தினாள் பிரேமா. 

“போடி!”என்றுரைத்து விட்டு, 

“சரி. இதை விடுங்க. நாளைக்கு என்ன டிரெஸ் போட்டுப் போகலாம் நானு?”என அவர்கள் இருவரிடமும் ஆலோசனை கேட்டாள் மதுபாலா. 

“ஆஹான்! அப்போ நீ நாளைக்கு ஐடி கார்டு வாங்கிறதுக்காக ஸ்பெஷலாக டிரெஸ் செஞ்சிட்டுப் போகலாம்னு நினைக்கிறியா?”என்று அவளிடம் குறும்புடன் வினவினாள் பிரேமா.

“ஆமாம் டி. இது எனக்குக் கிடைச்ச முதல் வேலை! அப்போ இதில் கிடைக்கிற எல்லாமே எனக்கு ஸ்பெஷலாகத் தானே இருக்கும்? அதனால் தான் நல்ல டிரெஸ் ஆகப் போட்டுட்டுப் போகனும்னு நினைக்கிறேன்”என்றவளிடம், 

“நான் உனக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி துணி எடுத்துக் கொடுத்தேன் தானே க்கா? அதிலிருந்து ஏதாவது போட்டுட்டுப் போ”என்று யோசனையைச் சொன்னாள் சுதா.

“அப்போ சேலைக் கட்டிட்டுப் போகவா?”என்றிருந்தாள் மதுபாலா. 

“சூப்பர்க்கா! அதையே கட்டிட்டுப் போ”என்றவளைத் தொடர்ந்து, 

“நானும் உன்னைச் சேலையில் பார்த்து ரொம்ப நாளாச்சு! அதனால் நேயர் விருப்பமாக நீ சேலையே கட்டிட்டு வா – ன்னு நான் உங்கிட்ட கேட்டுக்கிறேன்”எனத் தோழியிடம் கேட்டுக் கொண்டாள் பிரேமா. 

“அப்போ ஓகே! நான் நாளைக்கு அதையே ஆஃபீஸூக்குப் போட்டுட்டு வர்றேன்”என்றுரைத்து விட்டிருந்தாள் மதுபாலா. 

“சரி டி. நாளைக்கு ஆஃபீஸில் பார்க்கலாம்”என்று கூறி அழைப்பை வைத்து விடவும், 

“நீ எந்தச் சேலையைக் கட்டப் போறன்னு எடுத்துக் கொடு அக்கா. நான் அதை அயர்ன் செஞ்சி வச்சிட்றேன்”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் சுதா. 

“இதோ வர்றேன்டி”என அவளிடம் சொல்லி விட்டு, அடுக்குப் பெட்டியில் இருந்து ஒரு அழகான வேலைப்பாடுகள் கொண்டப் புடவையை வெளியே எடுத்து அதை தங்கையிடம் கொடுத்தாள் மதுபாலா.

உடனே அவளும் அதை இஸ்திரிப் போடத் தொடங்கி விடச் சிறிது நேரத்திலேயே அந்த வேலையும் முடிவடைந்தது. 

அதற்குப் பிறகுத் தாங்களும் உறக்கத்தை மேற்கொண்டனர் அவர்கள் இருவரும். 

அதே நேரத்தில் தனது தமக்கையிடம் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் புகழேந்தி. 

“நாளைக்கு நீங்க ஆஃப்ஸூக்கு வருவீங்க தானே க்கா?”

“ஏன்? நாளைக்கு அங்கே ஏதாவது ஃப்ங்க்ஷனை நடத்தப் போறியா என்ன?”என அவனிடம் விசாரித்தாள் வெண்பா. 

“அப்படி ஃப்ங்க்ஷன் எதுவும் நடந்தால் நான் அதை நடத்துறதுக்கு முன்னாடியே உங்ககிட்ட சொல்லி இருப்பேனேக்கா? ஆனால் இது நீங்க கேட்ட விஷயம் தான். அதனால் தான் நாளைக்கு ஆஃபீஸூக்கு வருவீங்களான்னுக் கேட்கிறேன்”என்றான் புகழேந்தி. 

“அப்படி என்ன தான்டா ஸ்பெஷலாக நடக்கப் போகுது?”என்று சலித்துக் கொள்ளவும், 

“ஹாஹா! நீங்க தான் இந்த விஷயத்துக்கு ரொம்பவே ஆர்வமாக இருந்தீங்க! ஆனால் இப்போ நீங்களே இதை மறந்துட்டீங்களே!”என்றவனோ, 

இதற்கு மேலும் தனது தமக்கையிடம் புதிர் போட்டு விளையாடாமல், 

“நாளைக்குக் காலையில் மதுபாலாவுக்கு ஐடி கார்டுத் தந்து, சேலரியைப் பத்தியும் பேசப் போறேன். அப்போ நீங்க வருவேன்னுச் சொல்லி இருந்தீங்கள்ல? அதான் கேட்டேன்”என்று தெரிவித்தான் புகழேந்தி.

அதைக் கேட்டதுமே அவளுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டு விட்டது. 

“வாவ்! சூப்பர்டா! நீ இதை முன்னாடியே சொல்ல மாட்டியா? இந்தளவுக்கு வினாடி வினா நடத்தனுமா என்ன?”என அவனைப் பொய்யாக கடிந்து கொண்டாள் வெண்பா. 

“சும்மா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆகச் சொல்லலாம்னு நினைச்சேன்! அதனால் தான் உங்களையே கண்டுபிடிக்க வைக்கப் போராடினேன்! ஆனால் உங்களுக்குத் தான் இது ஞாபகத்திலேயே இல்லையே”என அவனுக்குப் பதிலளித்தான் புகழேந்தி. 

“ஹேய்! அதெல்லாம் நான் ஒன்னும் மறக்கலடா!”என்று தனக்குத் தானே கொடி பிடிக்க, 

அதில் புன்னகைத்து விட்டு,”சரிக்கா. நீயும், மாமாவும் நாளைக்கு ஆஃபீஸூக்கு வந்துடுங்க”என்றுரைத்து விடவும், 

“நான் கண்டிப்பாக வந்துடுவேன். ஆனால் உங்க மாமா வர்றது சந்தேகம் தான்டா. அவருக்கு கார்மெண்ட்ஸ் ஷாப்பில் வேலை இருக்கும். அதான்”எனத் தம்பியிடம் தெரிவித்தாள் வெண்பா. 

“ஓஹ் சரிக்கா. அப்போ நீங்க மட்டும் வாங்க”என்று கூறி விட்டான் புகழேந்தி. 

அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் உரையாடலை மேற்கொண்டு விட்டு அந்த அழைப்பைத் துண்டித்து விட்டிருந்தார்கள் அவ்விருவரும். 

மறுநாள் காலையில் குளித்து, தயாராகி விட்டுத் தனது புதுப் புடவையை எடுத்துக் கச்சிதமாக உடுத்திக் கொண்டாள் மதுபாலா. 

அவளது அந்தக் கோலத்தைக் கண்டதுமே பிரம்மித்துப் போய்,“அக்கா! நீ எல்லா டிரெஸ்லேயும் அழகாக இருப்பே! ஆனால் இந்தச் சேலையில் இப்போ இன்னுமே அழகாக இருக்கிற! என் கண்ணே பட்டுடும் போலிருக்கே!”என்று அவளுக்குத் தனது கைகளால் நெட்டி முறித்தாள் அவளது தங்கையான சுதா. 

அதில் வெட்கப் பூக்கள் பூத்தது மூத்தவளின் கன்னங்களில்! 

“நீ வேற ஏன்டி? எனக்கே ரொம்ப நாள் கழிச்சு சேலைக் கட்டி இருக்கிறதில் ஒரு மாதிரிக் கூச்சமாக இருக்கு!”என்று வெட்கத்தில் நெளிந்து போனாள் மதுபாலா. 

“ஆஹான்! இவ்வளவு அழகாக வெட்கப்பட்றியே அக்கா!”என்று அவள் முழுமையாகத் தயாராகும் வரைக்கும் அவளை நன்றாக கிண்டல் செய்து, மனதாரச் சிரிக்க வைத்து, அவளுடன் சேர்ந்து சில சுயமிகளை எடுத்துக் கொண்டுத் தான், தானும் பேருந்தில் ஏறிக் கொண்டாள் சுதா. 

அதேபோல் தன்னுடைய தோழிக்குச் செல்பேசி அழைப்பு விடுத்து,”நீ எங்கே டி இருக்கிற? நான் இங்கே வீட்டுக்குக் கிட்டே வந்து காத்துட்டு இருக்கேன்”என்று அவளுக்கு அறிவிக்கவும், 

“சாரி மது! நான் சாப்பிட லேட் ஆயிடுச்சு. அதான். இதோ இப்போ கிளம்பி வந்துட்றேன். எனக்காக ஒரு கால் மணி நேரம் வெயிட் பண்ணுடி ப்ளீஸ்!”என்று தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டவளைக் கடிந்து கொள்ள முடியாமல், 

“ஓகே டி. ஆனால் சீக்கிரம் வந்துடு. இல்லைன்னா நான் அப்படியே நடந்து போயிடுவேன்!”என்று மிரட்டல் விட்டுத் தான் அழைப்பைத் துண்டித்தாள் மதுபாலா. 

“ஹேய்! கிறுக்கி! அப்படியெல்லாம் எதையும் பண்ணித் தொலைச்சிடாதே! நான் வீட்டிலிருந்து வெளியேறி இப்போ ஸ்கூட்டிக் கிட்டே வந்துட்டேன்! இன்னும் சில நிமிடங்களில் நான் அங்கே இருப்பேன்”எனத் தோழிக்கு வாக்களித்து விட்டு அந்த அழைப்பைத் துண்டித்து விட்டுத் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு அதை உயிர்ப்பித்து அதைக் கிளப்பினாள் பிரேமா. 

சில நிமிடங்களில் மதுபாலாவின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்து விட்டதும், 

“சாரி டி! நான் உன்னை ரொம்ப நேரமாக காக்க வச்சிட்டேனா?”என்று குற்ற உணர்வுடன் வினவவும், 

“இல்ல டி. நீ ஒழுங்காகச் சாப்பிட்டுத் தானே வந்த?”என்று அவளிடம் விசாரித்தாள் மதுபாலா. 

“ஆமாம் டி. நான் நல்லா சாப்பிட்டுத் தான் வந்தேன்! அதை விடு! நீ என்ன இவ்வளவு அழகாக இருக்கே?”என்று கேட்டுக் கொண்டே அவளைத் தன்னுடைய வாகனத்தில் ஏற்றிக் கொண்டாள் பிரேமா. 

அந்தப் பயணத்தின் இடையே,”சுதா என்ன சொன்னாள்?”என்றத் தோழியிடம், 

“அவளுக்கு என்ன? என்னைச் சேலையில் பார்த்ததுமே சந்தோஷம் ஆகி, அதுக்கப்புறம் நிறையக் கேலி செஞ்சி, என் கூடச் சேர்ந்து செல்ஃபி எடுத்துட்டுத் தான் விட்டாள்!”எனப் பதிலளித்தாள் மதுபாலா. 

“அப்போ நாமளும் ஃபோட்டோஸ் எடுத்துக்கனுமே!”என்றாள் ஆவலாக. 

“ம்ஹ்ம். எடுத்துக்கலாமே! நம்ம எம். டி வர்றதுக்கு எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு! அதுக்குள்ளே நம்ம ஆஃபீஸூக்குப் பக்கத்தில் இருக்கிற புல் தரையில் எடுத்துக்கலாமா?”என யோசனையைக் கூறவும், 

“குட் ஐடியா!”என்றவளோ, 

தங்களது அலுவலகத்தை அடைந்ததுமே,”இரு. நான் வண்டியைப் பார்க் செஞ்சிட்டு வந்துட்றேன்”என்று தோழியிடம் தெரிவித்து விட்டுத் தனது இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் அவளிடமே வந்து சேர்ந்தவுடன், 

”நம்ம ரெண்டுப் பேரோட மொபைலிலும் ஃபோட்டோஸ்ஸை எடுப்போம்! எதில் நல்லா வந்திருக்கோ, அந்த ஃபோட்டோஸ்ஸை வச்சிக்குவோமா?”எனக் கேட்டாள் பிரேமா. 

“சரி. சீக்கிரம் எடுத்துட்டு ஆஃபீஸூக்குள்ளே போகலாம். செக்யூரிட்டி வேற நம்மளை ஒரு மாதிரி முறைச்சுப் பார்க்கிறார்!”என்று அவளிடம் அவசரப்படுத்தினாள் மதுபாலா. 

“அவர் முறைச்சுப் பார்க்கலை! உன்னைச் சைட் அடிச்சிட்டு இருக்கார்ன்னு நினைக்கிறேன்”என்றாள் குறும்பாக. 

“வாயிலேயே குத்துவேன்! ஒழுங்காக மொபைலைப் பிடி. ஷேக் ஆகுது பாரு!”என்று அறிவுறுத்தி விட்டு அவளுடன் சேர்ந்து நின்று சுயமிகளை எடுக்கத் தொடங்கி விட்டாள் மதுபாலா. 

அப்பொழுது அங்கே ஒரு விலையுயர்ந்த கார் வந்து நின்றது!

அதைக் கண்டதுமே அது யாருடையது என்று அடையாளம் தெரிந்து விட்டிருந்தது அவ்விருவருக்கும்! 

ஆம்! அந்தக் காரின் சொந்தக்காரன் வேறு யாருமில்லை அவர்களது முதலாளி புகழேந்தி தான்! 

அதேபோல் அதிலிருந்து அவன் ஒரு பக்கக் கதவைத் திறந்து இறங்கினான் என்றால் மறுபக்கக் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் அவனது சகோதரியான வெண்பா. 

அந்த அக்காவும், தம்பியும் தங்களது காரிலிருந்து இறங்கியவுடனேயே அவர்கள் பார்த்த இரண்டு முகங்கள் மதுபாலா மற்றும் பிரேமாவினுடையது தான்!

அதிலும் மதுபாலாவின் அந்தச் சேலை உடுத்திய தோற்றத்தைக் கவனித்து விட்டு, 

“என்ன ஐடி கார்டுக் கொடுக்கிற வேலைன்னுத் தான் சொன்ன! இங்கே வந்து பார்த்தால் பொண்ணுப் பார்க்கிற சடங்குக்கு வந்தால் மாதிரி இருக்கு! இது முன்னாடியே தெரிஞ்சு இருந்தால் நானும் பூ, பழம், தட்டுன்னு எல்லாத்தையும் எடுத்துட்டுத் தயாராகி வந்திருப்பேனே!”என்று தன் இளவலிடம் அலுத்துக் கொண்டாள் வெண்பா. 

அதில் அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்து விட்டுத் தன் கண்களில் அணிந்திருந்த குளிர்க் கண்ணாடியைக் கழற்றி மதுபாலாவின் தோற்றத்தை ஆழ்ந்து பார்த்தான் புகழேந்தி.

  • தொடரும்
error: Content is protected !!
Scroll to Top