மௌனம் – 12.2

ஒரு மாதம் குஜராத்தில் சப்பாத்தி, பருப்பு என சாப்பிட்டு சலித்துப் போனது. என்னவோ எங்கு சென்று சாப்பிட்டாலும் அவனுக்கு சென்னை உணவின் ருசி கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவர்களுக்கான உணவு ஐந்து நட்சத்திர விடுதியிலிருந்து தான் வரவழைப்பார்கள். அப்படியிருந்தும் இவனுக்கு அந்த உணவைத் தொடர்ந்து சாப்பிட முடியாமல் சலிப்பு ஏற்பட்டது.

“ப்ரோ‌… ஒன் மந்த் தானே வீட்ல இல்ல நீ. காணாததைக் கண்டது மாதிரி சாப்பிட்டுட்டு இருக்க? வாட் இஸ் திஸ்?” விக்ராந்த் இவனைக் கவனித்துக் கேட்க, தேவா அவனை முறைத்தான்.

“அடி வாங்கப் போற விக்கி நீ. அவன் சாப்பிட்றப்போ எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிருக்கேன். அவனே மாசத்துல பாதி நாள் வீட்ல இருக்க மாட்டான். இதுல நைட்டு லேட்டா வர்றான்னு என் கவலை எனக்கு…” என அவர் அதட்ட, சின்னவன் அதை தோள் குலுக்கலில் புறந்தள்ளினான்.

“ம்மா… முன்னாடி குடல் வாங்கி பருப்பு போட்டு கூட்டு வைப்பீங்க இல்ல. அது ஏன் இப்போ செய்றது இல்ல?” என சாப்பிட்டு முடித்ததும் தேவா கேட்டான்.‌ தேவாவின் தந்தைக்கு கடலைப்பருப்பு குடல் கூட்டு என்றால் இஷ்டம் என ரேணுகா அடிக்கடி செய்வார். கணவர் இறந்த பின்பு என்னவோ அந்த உணவின்‌ மீது இவருக்கு விருப்பம் இல்லாமல் போயிற்று.

அதை மகனிடம் சொன்னால் அவன் வருந்தக் கூடுமென எண்ணியவர், “குடலை வாங்கி கழுவி முடிக்கிறதுக்குள்ளே குறுக்கு ஒடிஞ்சிடும் தேவா. அதான் பெருசா நான் வாங்குறது இல்ல. நீ ஃபோன்ல கறி வாங்குற இடத்துல கழுவி கொடுப்பாங்களான்னு கேளு. அப்படியிருந்தா நாளைக்கு வாங்கி அம்மா வச்சுத் தர்றேன்…” என்றார் அவர். இவன் தலையசைத்து அகன்றான்.

அப்போதுதான் உறங்கி எழுந்ததால் மீண்டும் உறக்கம் வருமென தோன்றவில்லை. வயிறு நிறைய உண்டதால் அது செரிக்கட்டும் என மெதுவாக நடந்தான். வெயில் கொஞ்சம் குறைந்து குளுகுளுவென்றிருந்தது. அப்படியே தவறிய அழைப்புகள், படிக்கப்படாத குறுஞ்செய்திகளைப் பார்த்து பதலளித்தான். ஜீவாவிற்கும் யூ ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம் என அவள் நன்றியுரைத்தற்கு அனுப்பினான். அவன் வாங்கிக் கொடுத்த அனைத்துமே அழகாக இருக்கிறது என அவள் குரல் வழியாக செய்தி அனுப்பியிருந்தாள். இவனிடம் சின்ன புன்னகை மலர்ந்தது.

இப்போதெல்லாம் ஜீவா அவனின் நட்பு பட்டியலில் வெகு இயல்பாக பொருந்தி போனாள். தேவாவிற்கு ஒரு நல்ல தோழியென்ற உணர்வு அவளிடம் தோன்றிற்று. எந்தவொரு விஷயத்தை நிதானமாக கையாளும் அவளது அணுகுமுறை இவனுக்குப் பிடித்தது. அவளது அலட்டலில்லாத குணம், குடும்பத்தின் மீதான அன்பு என அவன் நினைத்திராத கோணத்தில் ஜீவா அவனை ஆச்சர்யப்படுத்தினாள். அவன் பார்த்த ஜீவா முதிர்ச்சியில்லாத சிறு பெண். ஆனால் இப்போது அவள் முற்றிலும் மாறியிருந்தாள். பத்து நிமிடத்திலே அவள் ஏதோ செய்தி அனுப்பினாள்.

“சென்னை வந்துட்டீங்களா தேவா சார்? அங்க ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சுதா? நீங்க ஓகே தானே?” கடைசி வார்த்தையைத் தயங்கிக் கேட்டாள். பெரும்பாலும் அவனிடம் பேசுபவர்கள் செய்திதான் அனுப்புவார்கள். ஜீவா மட்டும் அதில் விதிவிலக்கு. எப்போதும் குரல் வழி செய்திதான் அவளது அடையாளம். யோசிக்காமல் அமைந்துவிட்டான் இவன்.

“சொல்லுங்க தேவா சார்? ஷூட்டிங் எப்படி போச்சு?” ஜீவா கேட்க,

“யெஸ்‌.. நல்லா போச்சு ஜீவா. ஆமா, பின்னாடி என்ன பஸ் ஹார்ன் சவுண்ட் கேட்குது. எப்பவும் இந்த டைம் ஹோட்டல்ல தானே இருப்ப?” என அவன் யோசனையுடன் கேட்டான்.

“இல்ல… அது… நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்ல. அவரோ அம்மா, என்னோட வருங்கால மாமியாருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல தேவா சார். அவங்க தனியாதான் இருக்காங்க. அவரால சட்டுன்னு அங்கருந்து வர முடியாது. அதான் என்னைப் போய் பார்க்க சொன்னாரு. நான் அத்தையை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய்ட்டு வீட்டுல விட்டுட்டு வர்றேன்…” என அவள் விளக்கினாள்.

“ஓகே… ஓகே. ஆன்ட்டி இப்போ எப்படி இருக்காங்க?” அவரைப் பற்றிக் கேட்டான்.

“அவங்களுக்கு எதுவும் இல்ல தேவா சார். ஜஸ்ட் கேஸ் ட்ரபுள்தான். அவங்க புள்ளை பக்கத்துல இல்லன்றது பெரிய குறையா தெரியுது. அதான் புலம்பித் தள்ளிட்டாங்க. அவங்களை சமாதானம் செஞ்சு சாப்பிட வச்சுட்டு வர டைமாகிடுச்சு. பாவம், அம்மா இன்னைக்கு ஒரு ஆளா எப்படி‌ ஹோட்டலை பார்ப்பாங்களோ?” எனக் கவலையாகக் கேட்டாள்.

“நீ கல்யாணம் பண்ணிப் போயிட்டா ஹோட்டலை யார் பார்த்துப்பா ஜீவா. அவங்கதானே பார்க்கணும். இது ஜஸ்ட் அவங்களுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸா இருக்கட்டும்?” அவன் கூற,

“அது சரிதான் சார். ஆனால், அம்மாவுக்கு இந்த ஜீபே பத்தி தெரியாது. இப்போலாம் காசை அனுப்பாமலே அனுப்பிட்டேன்னு பொய் சொல்றாங்க. அதுவும் இல்லாம அம்மாவுக்கு கணக்கு வழக்கெல்லாம் சரியா பார்க்க தெரியாது. நானோ, சஷ்டியோதான் பார்ப்போம். அதான் அவங்க சமாளிக்க முடியாதுன்னு சொன்னேன்!”

“சரிதான். அதான் உங்கம்மாவுக்குத் தெரியாம கணக்கு வழக்குல ஏதோ தகிடுதத்தம் பண்ணி எனக்கு ஹெல்ப் பண்ணியா?” அவன் சிரிப்புடன் கேட்க, இவளுக்கும் முறுவல் பிறந்தது.

“ஹம்ம்… ஆமா தேவா சார். உங்க ஒரு ஆளுக்குத்தானே. சோ, பெருசா இடிக்காது. சமாளிச்சுட்டேன்…” ஜீவா சிரிப்பு மாறாது கூறினாள்.

“ஜீவா… நான் கேட்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு. இப்போ எடுக்குற மூவில ஹோட்டல் சீன் ஒன்னு வருது. சின்ன சண்டை சீன் எடுக்கணும். உங்க ஹோட்டல் பக்காவா மேட்ச் ஆகும்னு தோணுது எனக்கு. நீ என்ன சொல்ற?” அவன் கேட்க, இவள் யோசித்தாள்.

“தெரியலை தேவா சார். இதுக்கு முன்னாடி யாரும் ஹோட்டல்ல ஷூட்டிங் எடுத்தது இல்லைல. எனக்கு அது பத்தி எந்த ஐடியாவும் இல்ல. அதுவும் இல்லாம நாள் கணக்குல நீங்க ஷூட்டிங் எடுத்தா எங்களோட வருமானம் பாதிக்குமே?” என அவள் தயங்கினாள்.

“ஜீவா… உங்க ஹோட்டலோட ஒன் டே சேல்ஸை விட அதிகமாவே நாங்க கொடுத்துடுவோம். பணத்தைப் பத்தி யோசிக்காத‌. உனக்கு சம்மதமா?” தேவா கூறியதும்,

“பணம் ரெண்டாம்பட்சம் தான் தேவா சார்? ஹோட்டல்ல டெய்லி ரெகுலரா சாப்பிடறவங்க எங்க போவாங்க. அதுவும் இல்லாம நிறைய பேர் ம்ந்தலி அமௌண்ட் பே பண்ணி சாப்பிடுறாங்க. அவங்களுக்கு நாங்க சரியா சாப்பாடு கொடுக்கணும். அதெல்லாம் இடிக்குமே?” இவளுக்கு இது ஒத்து வருமென தோன்றவில்லை.

“மேக்சிமம் மூனு நாள்தான்மா. மூனு நாள் அவங்க வெளிய சாப்பிட்டுக்க மாட்டாங்களா என்ன?” இவன் சலிப்புடன் கேட்டான். எத்தனையோ உணவகம் இருக்க, இவளுக்கு இந்தப் பணம் பயன்படுமென எண்ணித்தான் இவளது உணவகத்தை தேர்ந்தெடுத்தான்.

“தேவா… நீங்களே இப்படி பேசலாமா? எங்க ஹோட்டல்ல எல்லாரையும் விட குறைஞ்ச காசுக்குத்தான் சாப்பாடு கொடுக்குறோம்‌. ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறவங்க, மேன்சன்ல வேலை பார்க்குறவங்கன்னு சமைக்க முடியாம, பெரிய ஹோட்டலுக்கு போக வசதியில்லாதவங்கதான் வந்து சாப்பிடுவாங்க. டெய்லி சாப்பாடு கொடுத்துட்டு திடீர்னு ரெண்டு, மூனு நாள் வொர்க்கிங் டேய்ஸ்ல தொடர்ந்து லீவு விட்டுட்டா அவங்களாம் எங்கப் போய் சாப்பிடுவாங்க. அவங்களை கஷ்டப்படுத்துற மாதிரி ஆகாதா?” அவள் சட்டென உயர்ந்துவிட்ட குரலுடன் அவனிடம் முறையிட்டாள்.

“எனக்கு உன் ஹோட்டலே வேணாம்மா. நீயாச்சு உன் கஸ்டமராச்சு. நான் வேற நல்ல ஹோட்டலா பார்த்துக்கிறேன். பெரிய அன்னைத் தெரசா மாதிரித்தான்!” என அவன் சலிப்பும் கேலியுமாக கூறினான்.

“நான் ஒன்னும் அன்னைத் தெரசா இல்லதான் தேவா சார். அட்லீஸ்ட் நம்பி வர்றவங்களுக்கு சாப்பாடு கரெக்ட் டைமுக்கு கொடுக்குறோம்ற திருப்தியோடதான் இந்த வேலையைப் பார்க்குறேன். நீங்க வாய்ப்புத் தேடி அலைஞ்ச காலத்துல இப்படி நான் நாலஞ்சு நாள் ஹோட்டலை க்ளோஸ் பண்ணா என்ன பண்ணிருயிருந்திருப்பீங்க்னனு யோசிச்சுப் பாருங்க!” அவள் கோபம்கொள்ளக் கூடாது எனப் பொறுமையாக அவனிடம் விளக்க முயன்றாள்.

“லீவ் இட் ஜீவா. நீ இருந்தாலும் இவ்வளோ நல்லவளா இருக்க வேணாம்மா!” அவன் கூற,

“நான் நல்லவ எல்லாம் இல்ல தேவா சார். இன்ஃபேக்ட் யாருமே இந்த உலகத்துல ப்யூர் நல்லவங்க கிடையாது. எனக்கு என் கஸ்டமர்ஸ் முக்கியம். அவங்க மூலம் வர்ற வருமானம்தான் எங்களுக்கு ஆதாரம். அதே மாதிரி அவர்களுக்கு நேரா நேரத்துக்கு குறைஞ்ச விலைல சாப்பாடு கிடைக்கும். ரெண்டு பேருக்கும் பெனிபிட். தட்ஸ் இட்!” ஜீவா இலகுவாக கூறினாள்.

தேவா தலையைக் கோதியவன், “சரி… சரிம்மா. நான் எதுவும் சொல்லலை. நீ பத்திரமா வீட்டுக்குப் போ…” அவன் பேச்சை முடிக்கப் பார்த்தான்.

“சாரி தேவா சார்‌. நீங்க அப்படி பேசவும் ஒரு வேகத்துல நான் பதில் சொல்லிட்டேன். எங்க ஹோட்டல் ஷூட்டிங் எடுக்குற அளவுக்கு எல்லாம் இருக்காது. பத்து பதினஞ்சு பேர் திமுதிமுன்னு வந்தா இடத்தை அடைச்சிடும். அதனாலயும்தான் நான் ஓகே சொல்லலை. நீங்க வேற ஏதாவது பெஸ்டா ஹோட்டல் கிடைக்குதான் தேடுங்க!” ஜீவா சின்ன குரலில் உரைத்தாள்‌.

“நோ இஷ்ஷூஸ் ஜீவா. நான் பார்த்துக்கிறேன் அதை…” என்றதோடு அவன் அழைப்பை துண்டித்தான். ஐந்து நிமிடத்திலேயே முத்துக்குமார் அழைத்துவிட்டான். பத்து நிமிடங்கள் அவனிடம் பொறுமையாகப் பேசி, அவன் தாய் நன்றாக இருக்கிறார் என நம்ப வைத்தாள். அவன் மனதார நன்றியுரைத்தான். இவர் வீட்டிற்குச் சென்றதும் கிரிஜாவும் தன் வருங்கால சம்மந்தியைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார். நடந்ததை அப்படியே தாயிடம் ஒப்பித்த ஜீவா, உணவகத்தில் இரவு சமைக்கச் சென்றுவிட்டாள்‌.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top