மௌனம் – 12.1

மௌனம் – 12

“அக்கா, ஒரு பீஸ்தான் என் தட்டுலருக்கு. இன்னொன்னு வைக்கா!” கோபி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை ஜீவாவிடம் நீட்டினான். அவள் கறித் துண்டுகளை தேயெடுத்து அவன் தட்டில் வைத்தாள்‌. ஞாயிற்று கிழமையின் மாலை நேரம் அது. உணவகத்தை மூடும் நேரம் வந்துவிட்டதால் வேலை செய்பவர்கள் அனைவரையும் சாப்பிட வைத்து, மீதமானவற்றை அவர்களையே எடுத்துக் கொள்ள சொல்லிவிட்டாள் இவள்.

கிரிஜா காலையில் மீன் வாங்கி குழம்பு வைத்து, பொரித்தும் விட்டார். இன்னும் இவள் உண்ணவில்லை. கடையை அடைத்துவிட்டு ஆற அமர உண்ண வேண்டுமென அவர்களை அனுப்பிக் கடையைப் பூட்டியவள், வீட்டை நோக்கிச் சென்றாள். அப்போதுதான் சஷ்டியும் வேலுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“ஏன் ரெண்டு பேரும் இவ்ளோ லேட்டா சாப்பிடுறீங்க?” என அவர்களிடம் விசாரித்தபடியே இவளும் உண்ண அமர்ந்தாள்.

“சஷ்டிக்கு ஏதோ புக்கு வாங்கணும்னு மூர் மார்க்கெட் போகணும்னு சொன்னா. அதான் ரெண்டு பேரும் போய்ட்டு வந்தாங்க!” கிரிஜா அவளுக்குப் பதிலளித்தவாறே தட்டில் சூடாக சோறு, மீன் குழம்பு, பொரித்த மீன் எனப் பரிமாறினார். எப்போதும் ஞாயிறு பிரியாணி சாப்பிட்டு சலிக்கும் போது இப்படி ஏதாவது சமைப்பார் கிரிஜா. ஜீவாவிற்கு முதுகு வலித்தது. அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.

சின்னதம்பியை காணோம் என அவள் தேடியவள், “அப்பாவை எங்கம்மா காணோம்? சாப்பிட வரலையா அவரு?” எனத் தாயிடம் கேட்டாள்.

“கழுதைக் கெட்டா குட்டிச் சுவரு. எங்கப் போய்ருப்பாரு அந்தாளுன்னு உனக்குத் தெரியாதா? பசிச்சா அந்தாளு சோறு போட்டு சாப்பிடட்டும். நீ தேடிப் போகாத!” என அவர் கண்டிப்புடன் கூற, இவள் பெருமூச்சுடன் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.

தமக்கை உண்ணக் காத்திருந்த வேலு கிரிஜா கவனிக்காத நேரம் அவளறைக்குள் நுழைந்தான். நேற்றைக்குத் துவைத்த துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள் ஜீவா.

“அக்கா…” என்றவாறே அவளருகே அமர்ந்தான் சின்னவன்.

“காசு குடுக்க மாட்டேன். நேத்துதான் இருநூறு ரூபா வாங்கிட்டுப் போன வேலு!” அவள் கறாரான குரலில் கூறினாள்.

“ப்ம்ச்… போக்கா. நான் ஒன்னும் காசு வாங்க வரலை. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். அதுக்காகத்தான் வந்தேன்!” அவன் சிணுங்கினான்.

“என்ன ஹெல்ப்?” எனக் கேட்டு மடித்த துணியை அலமாரியில் அடுக்கினாள்.

“அது.‌.‌ ஆன்வல் டே செலிபிரேஷனுக்கு பசங்க எல்லாரும் டான்ஸ் ஆடுறாங்க. நானும் அதுல பார்டிசிபேட் பண்ணக் கேட்டேன். அம்மா வேணாம்னு சொல்லிட்டாங்க!” என்றான் முகத்தை தூக்கி வைத்து.

“டான்ஸ் ஆடுறதுக்கெல்லாம் அம்மா வேணாம்னு சொல்ல மாட்டாங்களே. எவ்ளோ பணம் கேட்பாங்க டான்ஸ்க்கு?” அவள் சரியாக தம்பியின் நாடிப் பிடித்துக் கேட்டாள். அவன் ஐந்து விரல்களைக் காண்பித்தான்.

“ஐயாயிரமா? எதுக்கு வேலு அவ்ளோ பணம்? ரொம்ப கொள்ளையடிக்குறானுங்கடா.
ஸ்கூல்ல டான்ஸ் ஆடுறதுக்கு இவ்ளோ பணம் வாங்குறது டூ மச்!” அவள் முடியாது எனப் பார்த்தாள்.

“க்கா… கோர்ட் சூட் வாங்கணும். அதுவே த்ரீ தௌசண்ட் ஆகிடும் கா. அப்புறம் மத்த செலவு எல்லாம் இருக்கே. ப்ளீஸ், ப்ளீஸ்… நீதான் அம்மாகிட்டே பெர்மிஷன் வாங்கித் தரணும்!” என அவன் கெஞ்ச, இவள் முடியாது எனத் தீர்க்கமாக மறுத்தாள்.

“ஜீவா… ஜீவா!” கிரிஜாவின் குரல் இடையில் கேட்க, “இருடா…‌ நான் போய் என்னென்னு கேட்டுட்டு வரேன். நீ என்னை கன்வின்ஸ் பண்ணலாம்னு நினைக்காத. கண்டிப்பா அம்மா இவ்ளோ பணம் தரவே மாட்டாங்க. வேற ஏதாவது பட்ஜெட் ப்ரெண்ட்லியா இருக்க ஈவன்ட்ல சேரு. நான் அம்மாகிட்ட பேசுறேன்…” என அவள் நகர, வேலுவின் முகம் வாடியது.

“என்னம்மா?” எனக் கேட்டவளின் கையில் அவர் ஒரு பையைக் கொடுத்தார்.

“என்னம்மா இது?” யோசனையுடன் கேட்டபடியே அதை ஜீவா பிரிக்க, “நீதான் ஏதோ ஆர்டர் போட்டிருக்க ஜீவா. டெலிவரி பையன் உன் பேரைச் சொல்லித்தான் கொடுத்துட்டுப் போனான்!” என அவர் அகன்றார். இவள் பிரித்துப் பார்க்க உள்ளே குட்டி குட்டி காதணிகள், வளையல், இழுபட்டை, கவ்விகள் இருந்தன. தேவா அமெரிக்காவிலிருந்து அவளுக்காக வாங்கிய பொருட்களை அனுப்பியிருக்கிறான் எனப் புரிந்தது.

அறைக்குள்ளே எடுத்துச் சென்று என்னென்ன இருக்கிறது எனப் பார்த்தாள். எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. இல்ல, இவளுக்கு குறை கண்டு பிடிக்கத் தெரியவில்லை என்பதே உண்மை. அவன் தன்னை நினைவு வைத்து இத்தனை தூரம் செய்ததிலே மனம் இவளுக்கு நிறைந்து போனது.

“அக்கா… என்ன ஆர்டர் போட்ட?” சஷ்டி அவளது அறைக்குள் நுழைந்தாள்‌.

“சும்மா தோடு, க்ளிப்தான் சஷ்டி…” ஜீவா பதிலளித்ததும், சின்னவள் ஆர்வத்தோடு அனைத்தையும் பார்த்தாள்.

“அக்கா, உன் செலக்ஷன் செம்மையா இருக்கு. எனக்கும் சேர்த்து வாங்கியிருக்கலாம்ல?” என அவள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்தாள்‌.

“உனக்கும் சேர்த்துதான் வாங்குனேன் சஷ்டி. எது பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்கோ…” என இவள் சின்ன முறுவலுடன் கூறியதும், அவள் கடகடவென தனக்குப் பிடித்ததைக் கைகளில் அள்ளிக் கொண்டாள்.

“தேங்க்ஸ்கா.‌.. அம்மாகிட்டே கேட்டா தீபாவளிக்கு வாங்கித் தரேன்னு சொல்றாங்க. ஒரே ஸ்டட்டை போட்டுட்டு போனா ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க. இனி வீக்லி ஒன்னு போட்டுட்டுப் போவேன்…” அவள் துள்ளலுடன் கூற, ஜீவா புன்னகைத்தாள்.

“தீபாவளிக்கு நம்ம கடைக்குப் போகலாம் சஷ்டி. உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ. நான் அம்மாகிட்டே சொல்றேன்…” என்றாள் இவள். அவள் சிரிப்புடன் தலையசைத்து அகல, இவள் சின்ன முறுவலுடன் தங்கையைப் பார்த்தாள். வேலு போல சஷ்டி இவளிடம் பெரிதாக எதையும் கேட்டு வர மாட்டாள். இது போல எப்போதாவது கேட்பாள் என்பதால், அவள் கேட்டு மறுக்க முடியாமல் கொடுத்துவிட்டாள் ஜீவா.

மீதமிருந்தவற்றை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு, தேவாவின் எண்ணிற்கு நன்றியென ஒரு செய்தியை தட்டிவிட்டாள். இரண்டு நாட்களாகியும் அவளது செய்தி படிக்கப்படாமலே கிடந்தது. இந்தியா வந்ததும் மீண்டுமொருமுறை இவளிடம் பேசினான். அடுத்த திரைபடத்தின் படபிடிப்பு குஜராத், மும்பையைச் சுற்றி நடத்த திட்டமிட்டிருப்பதாக கூற, இவள் அவனுக்கு வாழ்த்தைப் பகிர்ந்தாள்.

“ரிலாக்ஸாக பண்ணுங்க தேவா சார். ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க. நீங்க எப்பவுமே பெஸ்டாதான் பிரசன்டேஷன் பண்றீங்க. என்ன அது எல்லாரோட ரசனைக்கும் ஒத்து வரலை. மத்தபடி யூ ஆர் வெரி குட் டைரக்டர்!” என அவனை ஊக்கப்படுத்தினாள்.

“தேங்க்ஸ் ஜீவா, நான் ரொம்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன். இந்தப் படம் பெஸ்டா வரும். அ பிக் தேங்க்ஸ் டூ யூ…” என அவன் பேச்சை முடித்துக் கொண்டான். அதற்குப் பின்னே இப்போதுதான் அவனது ஞாபகம் இவளுக்கு வந்தது. படப்பிடிப்பு வேலையில் அவன் இருக்க கூடுமென இவளாக அழைக்கவில்லை.

தேவா குஜராத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டான். மும்பையில் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிதான் படமாக்க வேண்டும். சரியாக அந்நேரத்தில் நாயகிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சேர்ந்து விட, நாயகனை மையப்படுத்திய சண்டை காட்சிகள் சென்னையின் புறநகர் பகுதியில்தான் எடுக்க வேண்டும். எனவே அதை எடுத்து முடிக்கலாம் என வீடு வந்து சேர்ந்திருந்தான்.

சென்னையில் எங்கெங்கே என்னென்ன காட்சிகள் எடுக்க வேண்டும், யார் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என கீதனிடம் ஒருமுறை அறிவுறுத்தி உறுதிப் படுத்திய தேவா நன்கு தூங்கி எழுந்து ரேணுகா கையால் சமைத்த உணவை உண்டு பசியாறினான்.

error: Content is protected !!
Scroll to Top