ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 18

அன்றைய சந்திப்பில் தங்களது முதலாளி சொன்ன விஷயத்தைப் பற்றித் தனது வழிகாட்டிப் பெண்ணான வினோதினியிடம் கலந்துரையாடி விட்டு அலுவலக நேரம் முடிந்ததும் தனது தோழியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தாள் மதுபாலா. 

தன் தோழியின் முகத்தில் படிந்திருந்த யோசனை ரேகைகளைச் சைடு மிரரில் கவனித்து விட்டு, 

“என்னடி நீ எதைப் பத்தியோ ரொம்ப ஆழமாக யோசிச்சிட்டு இருக்கிறப் போலவே! என்ன விஷயம்?”என்று அவளிடம் அக்கறையுடன் வினவினாள் பிரேமா. 

உடனே,”உங்கிட்டேயும், சுதாகிட்டேயும் பேசினேனே? அதைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன் டி”எனப் பதிலளித்தாள் மதுபாலா. 

அதில்,”அப்படியா? இன்னைக்கு என்ன நடந்துச்சு? நான் உன்னை மீட்டிங் ஹாலில் கவனிச்சுட்டுத் தான் இருந்தேன். நீ அப்பவும் ஏதோ யோசனையில் தான் இருந்த! நார் உன்னைக் கையசைச்சுக் கூப்பிட்டேன். ஆனால் நீ என்னைக் கண்டுக்கவே இல்லை! அப்போவே நீ ஏதோ டிஸ்டர்ப் ஆக இருக்கன்னுத் தோணுச்சு. அது இதைப் பத்தி தானா?”என்றவளிடம், 

“ஆமாம் டி. எனக்கு அந்த மீட்டிங்கில் நம்ம எம். டி சாரைப் பார்த்ததுமே ஒரு மாதிரியான உணர்வு தோணுச்சு! அதுவும் இல்லாமல் அவர் அந்த ரன்வீர் சாரைப் பார்க்கப் போய் இருக்காருன்னுச் சொல்லவும் அவரை என் மனசும், கண்ணும் தேட ஆரம்பிச்சுருச்சு! அதுக்கப்புறம் நம்ம எல்லாரையும் மீட்டிங்கிற்கு வரச் சொல்லி இருந்தாருன்னுத் தெரிஞ்சதும் தான் அவரை இப்போதாவது பார்க்கப் போறோமேன்னு எனக்குள்ளே ஒரு நிம்மதி உண்டாச்சு! அதுவும் அவரைப் பார்க்கும் போது எனக்குப் புத்துணர்வு ஏற்படுது! இதெல்லாம் எதனால் நடக்குதுடி?”எனப் பாவமாக கேட்கவும்,

“இதெல்லாம் உனக்கு அவர் மேலே காதல் வந்துடுச்சு அப்படின்றதுக்கான அறிகுறிகள் தான் மது”என்று அவளுக்கு எடுத்துரைத்தாள் பிரேமா. 

அதைக் கேட்டதுமே திகைத்துப் போய் விட்டிருந்தாள் மதுபாலா. 

“என்னடி இப்படியெல்லாம் பேசுற? நான் போய் அவரை எப்படி லவ்…”என்றவளுக்கு மேலே பேச முடியாமல் தடுமாறியது!

ஆனால் அவள் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு,”நான் போய் அவரை அப்படின்னு நீ என்னச் சொல்ல வந்த – ன்னு எனக்குப் புரிஞ்சிருச்சுடி! ஏன் உனக்குக் காதல் வராது, இல்லைன்னா வரக் கூடாதுன்னு ஏதுவாக சபதம் போட்டு வச்சிருக்கியா?”என்று அவளிடம் கேட்டுக் கொண்டே வண்டியை லாவகமாக இயக்கினாள் பிரேமா. 

அதற்கு,”ஹேய்! நான் இப்போ இருக்கிற சூழ்நிலையில் இந்தக் காதல் எல்லாம் எப்படி பண்ணுவேன்?”என்றிருந்தாள் கசந்த குரலில். 

“ஏன் உனக்கு என்னச் சூழ்நிலை அப்படி மோசமாக இருக்கு?”எனக் கேட்டவளிடம், 

“ஏன் அதைப் பத்தி உனக்குத் தெரியாதா?”என்றாள் சோகமாக. 

“எனக்குத் தெரியாது. நீயே கொஞ்சம் அதைப் பத்தி விவரமாகச் சொல்லு”என்று கறாராக வினவினாள் பிரேமா. 

“ப்ச்! அது தான் டி. நானும், சுதாவும் இன்னும் எங்க வீட்டோட பொருளாதார நிலையை மேம்படுத்தலை! அவளைப் படிக்க வச்சு, அதுக்கு ஏத்த வேலைக்குச் சேர வச்சு, அதுக்கப்புறம் அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செஞ்சி வச்சதுக்கு அப்பறமாகத் தான் என்னோட கடமை முடியும்! அப்படி இருக்கும் போது இதுக்கு எல்லாம் இடையில் இந்த மாதிரிக் காதல், கத்திரிக்காய்ன்னு மனசை அலைபாய விட முடியுமா சொல்லு?”என்றவளைத் தன்னுடைய தலையைத் திருப்பிச் சில கணங்கள் முறைத்துப் பார்த்து விட்டு மீண்டும் முன்பக்கம் திருப்பிக் கொண்ட தோழியோ,”நான் உங்கிட்ட இதைப் பத்தி நைட்டு ஃபோனில் பேசுறேன். வேற ஏதாவது முக்கியமானது நடந்துச்சா?”என விசாரிக்க, 

“ஆமாம் டி. இதைச் சொல்ல மறந்துட்டேன் பாரு!”என்றவளோ, 

தனக்கு மறுதினம் அடையாள அட்டை வழங்கப் போவதைப் பற்றியும், சம்பள விவரத்தைப் பற்றியும் அவளிடம் உற்சாகத்துடன் தெரிவித்தாள் மதுபாலா. 

“நீ இதை தான் எங்கிட்ட முதல்ல சொல்லி இருக்கனும்டி! இனிமேல் நீயும் இந்த ஆஃபீஸில் ஒரு வேலையாளாக எங்களோட ஐக்கியம் ஆகிட்ட! எனக்கு இதைக் கேட்கும் போது ரொம்பப் பெருமையாக இருக்கு! நான் உனக்கு நம்ம ஆஃபீஸைப் பத்திச் சொல்ல மட்டும் தான் செஞ்சேன். ஆனால் அதுக்கப்புறம் உனக்குக் கிடைச்சது எல்லாமே உன்னோட உழைப்பால் கிடைச்சது தான்! இதை முதல்லக் கொண்டாடு. மத்ததைப் பத்தி நாம சாவகாசமாக மூனுப் பேரும் ஃபோன் காலில் பேசிக்கலாம். உனக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துகள்டி மது!”என்று தோழிக்குத் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாள் பிரேமா. 

அதில் தானும் அவளைப் புன்னகையுடன் நோக்கி,”ரொம்பத் தாங்க்ஸ்டி!”என்றுரைத்த நேரத்திலேயே, 

அவளது இல்லமும் வந்து விடவே, அதைக் கவனித்து விட்டு, உடனே வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு,”இப்போ வீட்டுக்குப் போ. நைட்டுப் பேசுவோம்”என அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட்டுத் தானும் வண்டியைக் கிளப்பி அங்கேயிருந்து கிளம்பிச் சென்று விட்டிருந்தாள் பிரேமா. 

உடனே தானும் தனது இல்லத்தின் கதவைத் தட்டி விட்டுக் காத்திருந்தாள் மதுபாலா. 

அடுத்த சில நிமிடங்களில் கதவுத் திறக்கப்பட்டு அங்கே காட்சியளித்து, 

“ஹாய் அக்கா!”என அவளை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள் சுதா. 

அதை அவதானித்து விட்டுத் தானும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, 

“ஹாய் டி!”என்றவளோ, 

தனது கைப்பையைக் கழற்றி அங்கே கூடத்தில் இருந்த ஆணியில் தொங்க விட்டு, விட்டு, 

“நான் போய் டிரெஸ்ஸை மாத்திட்டு வந்து உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திச் சொல்றேன்”என்றுரைத்து அறைக்குள் புகுந்து கொண்டாள் மதுபாலா. 

அவள் போனதும் எப்பொழுதும் போல் தங்களுக்கானத் தேநீரைத் தயாரிக்கும் வேலையில் இறங்கி விட்டாள் சுதா. 

சில மணித்துளிகளுக்குப் பின்னர் கூடத்தில் அமர்ந்து தத்தமது தேநீரைப் பருகலானார்கள் அந்த அக்காவும், தங்கையும். 

அப்போது,”ஏதோ முக்கியமான விஷயம் சொல்றேன்னுச் சொன்னியே க்கா? என்னது? ஒருவேளை உங்க எம் டி – கிட்டே இன்னைக்கும் ஏதாவது வாயை விட்டுப் பல்பு வாங்கிட்டியா என்ன?”எனக் கிண்டலாக வினவினாள் சுதா. 

அதில் அவளை முறைத்து விட்டு,”அடியேய்! அப்படியெல்லாம் இல்லை!”என்று அவளை அமைதிப்படுத்தி விட்டுத் தன் தோழியிடம் சற்று முன்னர் கூறியச் சந்தோஷச் செய்தியைத் தங்கையிடமும் பகிர்ந்து கொண்டு விட்டிருந்தாள் மதுபாலா. 

அதைக் கேட்ட மாத்திரத்தில்,“வாவ்! சூப்பர் க்கா! கங்கிராட்ஸ்!”என அவளது கைகளைப் பிடித்துக் குலுக்கி விடுவித்தாள் சுதா. 

“தாங்க்ஸ்டி!”என்று அவளிடம் நன்றிக் கூறி விட்டு, 

“இன்னைக்கு இன்னொரு சம்பவமும் நடந்துச்சு!”என்றவளிடம், 

“என்னது க்கா?”என்று ஆவலுடன் கேட்டாள் சுதா. 

உடனே அன்றைய தினம் அலுவலகத்தில் இருந்த நேரம் முழுவதும் தன்னுடைய முதலாளியைப் பார்த்துக் கொண்டே இருந்ததையும், அவனது சிறு பிரிவைக் கூடத் தாங்க முடியாமல், தான் தவித்துப் போனதையும், அதற்குப் பிறகான அவனது வருகையில் தனது அனைத்து பதட்டமும், படபடப்பும் காணாமல் போனதைப் பற்றியும் அவளிடம் தெளிவாக விளக்கிக் கூறி முடித்து விட்டு, 

“இப்போ சொல்லு! உனக்கு இதில் என்னக் கருத்து இருக்கு? எதுவாக இருந்தாலும் எங்கிட்ட மறைக்காமல் சொல்லு டி!”எனத் தங்கையைக் கலக்கத்துடன் பார்த்துக் கேட்டிருந்தாள் மதுபாலா. 

அதற்கு,”எனக்கு இதைக் கேட்கும் ரொம்பவே சந்தோஷமாகத் தான் இருக்கு அக்கா! ஏன்னா, நம்மளோட அண்ணன் கல்யாணம் செஞ்சிட்டுப் போனதுக்கு அப்பறமாக நீ உனக்கு – ன்னு ஒரு வாழ்க்கையை யோசிக்காமலேயே இருந்துட்ட! ஆனால் இதுக்கப்புறமும் நீ இப்படி இருக்கிறது சரியில்லை! அதுவும் எனக்காகத் தான் நீ காதல், கல்யாணத்தை எல்லாம் தொல்லையா நினைக்கிறேன்னா நான் உன்னை விட்டு எங்கேயாவது கண் காணாமல் போயிடுவேன் பார்த்துக்கோ!”என்று கூறி அவளைப் பயமுறுத்தினாள் சுதா. 

அதில் தங்கையைத் தன்னருகில் இழுத்து வைத்துக் கொண்டு அவளது தலையில் நன்றாக கொட்டினாள் மூத்தவள். 

அவளது அந்தச் செய்கையால் தனக்கு வலி எடுத்தாலும் கூடத் தனது தலையைத் தேய்த்து விட்டுக் கொண்டே, 

“நீ என்னை எவ்வளவு அடிச்சாலும் இந்த விஷயத்தில் நான் பிடிவாதம் பிடிக்கத் தான் செய்வேன்க்கா! அப்பறம் உன் இஷ்டம்!”என்று ஒரே போடாகப் போட்டு விடவும், 

“இங்கே பாரு டி! நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் சாத்தியம் கிடையாது! அவர் எங்கேயோ இருக்கிறார்! நான் எங்கேயோ இருக்கேன்! எங்க ரெண்டு பேருக்கும் எப்படி பொருந்தும் சொல்லு?”என்று அவளிடம் வருத்தத்துடன் வினவினாள் மதுபாலா. 

“சரி. அவர் எங்கே இருக்கார்? நீ எங்கே இருக்கே? அதை மட்டும் எனக்குச் சொல்லுக்கா”என்றாள் சுதா. 

“அவர் படிச்சவர், அதுவும் இல்லாமல் பணக்காரர் டி! நாம அப்படியா? நாம மிடில் கிளாஸ் ஃபேமிலி! இதையெல்லாம் நீயும், பிரேமாவும் புரிஞ்சிக்காமல் எங்களுக்கு இடையே காதல் உருவாகிடுச்சு, கல்யாணம் பண்ணிக்கங்கன்னு அட்வைஸ் செய்றீங்களே! உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?”என்று தன்னிடம் சலித்துக் கொண்டவளை முறைப்புடன் நோக்கி, 

“ஏன் ஒரு பணக்காரர் இன்னொரு பணக்காரவங்களைத் தான் கல்யாணம் செய்துக்கனுமா? அவரும் அடித்தட்டில் இருந்து தானே வந்து இருப்பார்? எனக்கு என்னமோ நீயும், பிரேமா அக்காவும் உங்களோட முதலாளியைப் பத்திச் சொன்ன வரைக்கும் அவர் அப்படியெல்லாம் ஸ்டேட்டஸ் பார்த்துக் கல்யாணம் செய்துக்கிறவரா தோனலை! நீ சீக்கிரமே அவர் மேலே உருவான காதலை அவர் கிட்டே வெளிப்படுத்துறது நல்லது!”என அவளுக்கு அறிவுரை வழங்கினாள் தங்கை. 

அதில் அவளை அதிர்வுடன் ஏறிட்டு,”நீ விட்டால் இன்னும் ஓவராகப் பேசுவ! இதெல்லாம் சரிப்பட்டு வராது! இந்தப் பேச்சை இத்தோட விட்ருவோம்!”என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து விட்டாள் மதுபாலா. 

ஆனால் தங்களது இரவு உணவை முடித்து விட்ட நேரத்தில் சரியாகத் அவளது செல்பேசிக்கு அழைப்பு விடுத்திருந்தாள் பிரேமா.

அதைக் கண்டதும்,”இந்தா இன்னொருத்தி எனக்கு அட்வைஸ் சொல்லக் கால் செஞ்சிருக்காள் பாரு!”எனத் தோழியைப் பற்றித் தங்கையிடம் குறைபட்டுக் கொள்ள, 

“ஓஹோ! அப்போ நீங்கச் சாயந்தரம் ஆஃபீஸில் இருந்து வரும் போதே அவங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?”எனக் கேட்டிருந்தாள் சுதா. 

“ஆமாம். அவ கிட்டே அப்போவே இதைப் பத்திச் சொல்லிட்டேன்! அவ நைட்டுப் பேசுவோம்ன்னுச் சொன்னாள். கால் பண்ண மறந்துடுவாள்ன்னு நினைச்சேன். ஆனால் நல்லா ஞாபகம் வச்சுக் கால் செஞ்சி இருக்கிறாள்!”என்றவளிடம், 

“அப்படின்னா சரி. நான் கால் அட்டெண்ட் ஸ்பீக்கரில் போட்றேன்”எனத் தமக்கையிடம் தெரிவித்து விட்டுச் செல்பேசியை ஸ்பீக்கரில் போட்டு விட்டிருந்தாள் இளையவள். 

  • தொடரும்

error: Content is protected !!
Scroll to Top