ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 17

தன்னை மறந்து வேலையில் மிகவும் மூழ்கிப் போயிருந்ததால் மதிய உணவு இடைவேளை வந்ததைக் கூட அறியாமல் இருந்தாள் மதுபாலா. 

ஆனால் அவளது வழிகாட்டிப் பெண்ணான வினோதினியோ, 

“லன்ச் டைம் வந்திருச்சு மேம். சாப்பிடப் போயிட்டு வாங்க. நானும் சாப்பிட்டுட்டு வர்றேன்”என்று அறிவுறுத்திய பின் தான், தனக்கும் பசி எடுப்பதை உணர்ந்து கொண்டு, 

“ஓகே மேம்”என்றவளோ,

தனது மேசையை ஒழுங்குபடுத்தி விட்டுத் தன்னுடைய கைப்பையில் இருந்து உணவுப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டுச் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று அங்கிருந்த மேசையில் உட்கார்ந்தாள் மதுபாலா. 

“ஹாய் டி”என்று அவளுக்கு எதிரில் அமர்ந்த தோழியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, 

“ஹாய் டி! இன்னைக்கு என்னச் சாப்பாடு?”எனக் கேட்டுக் கொண்டே தனது உணவுப் பாத்திரத்தை திறந்தவளைக் கூரியப் பார்வையால் ஏறிட்டு, 

“நீ ஏன் ஒரு மாதிரி இருக்கிற மது? எம். டி சார் மறுபடியும் உன் மேல் கோபப்பட்டாரா?”என்று அவளிடம் அக்கறையுடன் வினவினாள் பிரேமா. 

“இல்லடி. ஆனால் எனக்கு ஒரு உணர்வுத் தோணுது! அது சரியா, தப்பா? அப்படின்னுத் தெரியலை. அதைப் பத்தி உங்கிட்டே பேசித் தெளிவுபடுத்திக்கலாம்னு தான் உங்கிட்டே பேசுறதுக்காக காத்திருந்தேன்”என அவளுக்குக் குழப்பமான குரலில் பதிலளித்தாள் மதுபாலா. 

“அப்படி என்ன உணர்வு?”என்று தனது புருவத்தை உயர்த்திக் கேட்டிருந்தாள் பிரேமா.

அந்த உரையாடலிற்கு இடையே தங்களது உணவையும் உட்கொள்ள மறக்கவில்லை அவ்விருவரும்.

“இன்னைக்குக் காலையில் நான் வழக்கம் போல் நம்ம எம். டி – க்கு குட் மார்னிங் சொன்னேன். அதுக்கு அவர் அன்னைக்கு மாதிரியே சாதாரணமாக கடந்து போயிடுவார்ன்னு நினைச்சேன்! ஆனால் அவர் இன்னைக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சிக்கிட்டே குட் மார்னிங் சொன்னாரு! அவரோட முகத்தில் தெரிஞ்ச ஏதோ ஒன்னு என்னை ரொம்பவே தொந்தரவு செய்யுது டி! இது என்ன மாதிரியான உணர்வாக இருக்கும்?”எனத் தன்னுடைய தோழியிடம் வெள்ளந்தியாக கேட்டிருந்தாள் மதுபாலா. 

அவள் சொன்னதைக் கேட்டதுமே தனது வாய்க்குள் இருந்த உணவைக் கூட விழுங்காமல் அவளை ஆவென்றுப் பார்த்தாள் பிரேமா. 

அதைக் கண்டு விட்டு,”ஏய்! நீ ஏன் டி இப்படி ஷாக் ஆகிட்டே?”என்று அவளிடம் விசாரிக்க, 

அதில் தனது திகைப்பில் இருந்து மீண்டு கொண்டு,”நீ இப்படி பேசினதே இல்லையே மது! ஆனால் இப்போ என்னடான்னா இந்த மாதிரி எல்லாம் பேசுறியேன்னு எனக்கு ரொம்பவே ஷாக் ஆயிடுச்சு! அதான், நீ சொன்னதுக்கு என்னால் உடனே எதிர்வினை ஆற்ற முடியலை! சரி, நான் உங்கிட்டே ஒன்னுக் கேட்கவா?”என்றதுமே, 

“கேளுடி”என்று அவளுக்கு அனுமதி அளித்து விட்டிருந்தாள் மதுபாலா. 

“உனக்கு இதுவரைக்கும் இந்த மாதிரியான உணர்வு வேற யார் கிட்டேயாவது ஏற்பட்டு இருக்கா?”என அவளிடம் ஆராய்ச்சிப் பார்வையுடன் வினவினாள் பிரேமா. 

அதில் ஒரு சில நிமிடங்கள் யோசித்துப் பார்த்து விட்டு,

“இல்லடி. எனக்கு இதுக்கு முன்னாடி எந்த ஆண் மேலேயும் எனக்கு இப்படியானதொரு உணர்வு ஏற்பட்டதே இல்ல!”என்று அவளுக்கு உறுதி அளித்தாள் மதுபாலா.

“அப்போ உனக்கு நம்ம மேலே வந்திருக்கிறது…”என்றவள் மேலே பேசுவதற்கு முன்பு, 

அவளை இடைமறித்து,”ஏய்! நீ என்னடி சொல்ல வர்ற?”என்று அதிர்ந்து போய்க் கேட்டவளை, 

“ஸ்ஸ்! எதுக்கு இப்போ நீ அதிர்ச்சி ஆகுற? நான் சொல்வதை முதல்ல முழுசாக கேளு எருமை!”என்றுரைத்து அவளை அமைதிப்படுத்தி விட்டு, 

“உனக்கு அவர் மேலே ஏற்பட்டு இருக்கிற இந்த உணர்வால் உனக்குள்ளே அருவருப்பு உருவாகுதா?”என்றவளிடம்,

“அப்படியெல்லாம் எனக்கு எதுவும் உருவாகலைடி”எனப் பதிலளித்தாள் மதுபாலா. 

“அப்போ இது என்ன மாதிரியான உணர்வுன்னு நீயே தனிமையில் இருந்து யோசிச்சுப் பாரு”என்று அவளுக்கு யோசனைக் கூறினாள் பிரேமா.

அதே சமயம் தங்களது உணவையும் உண்டு முடித்து விட்டுத் தத்தமது வேலை இருப்பிடத்திற்குச் சென்று விட்டார்கள் அவ்விருவரும். 

தோழியின் அறிவுரையின் படி அன்றிரவு இதைப் பற்றிய யோசனையை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டுத் தற்போது தனது வேலையில் முனைப்புடன் இறங்கி விட்டிருந்தாள் மதுபாலா.

அதே நேரத்தில்,“மிஸ்டர் புகழ்! நீங்க என்னோட முந்தைய படத்துக்கு வடிவமைச்சுக் கொடுத்த எல்லா உடைகளுமே எனக்கு ரொம்பவே கச்சிதமாகப் பொருந்துச்சு! அதனால் என்னுடைய இந்தப் படத்துக்கும் நீங்க தான் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கனும்னு நான் விருப்பப்பட்றேன்! இதுக்கு நீங்க என்னச் சொல்றீங்க?”என அவனிடம் கேட்டிருந்தான் சினிமாத்துறையில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரபல நடிகனான ரன்வீர். 

அதைக் கேட்டுப் புன்னகையுடன்,”கண்டிப்பாக சார். இதில் நான் என்னோட முழுத் திறமையை வெளிப்படுத்துவேன்! உங்களோட படத்தைப் பத்தின தகவல்கள் கொஞ்சம் சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரியான உடைகளை வடிவமைச்சுக் கொடுக்கிறதுக்கு எனக்கு உதவியாக இருக்கும்!”எனக் கேட்டிருந்தான் புகழேந்தி. 

உடனே தன்னுடைய படத்தைப் பற்றிய விவரங்களை அவனிடம் கூற ஆரம்பித்தான் அந்த நடிகன்.

அதையெல்லாம் கவனமாக கேட்கத் தொடங்கினான் புகழேந்தி.

அப்படியே அன்று மாலை வரை அந்தக் கலந்துரையாடல் நீண்டு கொண்டே போனது. 

ஒரு கட்டத்தில் தாங்கள் இருவரும் தங்களது சம்பாஷணையை முடித்துக் கொண்டு விட்டிருந்தார்கள் இருவரும். 

“சார்! ஈவ்னிங் ஆயிடுச்சு. நான் இப்போ என்னோட ஆஃபீஸூக்குப் போய் என்னோட பணியாளர்கள் கிட்டே இதைப் பத்தி அவங்களுக்கு இன்ஃபார்ம் செஞ்சிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வேலையை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்!”என்று தெரிவித்தான் புகழேந்தி. 

“ஓகே சார். நீங்க கிளம்புங்க. வேலையை ஆரம்பிச்சதும் எங்கிட்ட தகவல் சொல்லிடுங்க. உங்ககிட்ட என்னோட அளவுகள் இருக்குத் தானே?”என்றான் ரன்வீர். 

“ம்ஹ்ம். எங்ககிட்டே இருக்கு சார். ஆனாலும் இப்போ இருக்கிற அளவுகள் எங்களுக்குக் கிடைச்சா தான் உங்களுக்கு ஏத்த மாதிரிச் சரியாகத் தச்சுத் தர முடியும். அதனால் நாளைக்கு எங்க ஆளுங்களை அனுப்பி உங்களோட அளவுகள் எடுத்துக்கிறேன்!”என்றுரைத்து விட்டு அங்கேயிருந்து புறப்பட்டுத் தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்று சேர்ந்தவனோ, 

இன்னும் சில நிமிடங்களில் அலுவலகத்தில் இருக்கும் வடிவமைப்பாளர்கள் மற்றும் தையல் பிரிவில் இருக்கும் அனைவருக்கும் சந்திப்பு இருக்கிறது என்பதை தனது காரியதரிசியின் சொல்லி அவர்களுக்கு அறிவிப்பு விடுக்கச் செய்தான் புகழேந்தி. 

அதை தானும் உடனே செயலாற்றி விட்டு,”எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ணிட்டேன் சார்”என அவனிடம் தெரிவித்தான் வெற்றிச்செல்வன். 

“சரி. நாமளும் அங்கே போவோம்”என்றுரைத்து விடவும், 

தாங்களும் அந்தச் சந்திப்பு நிகழப் போகும் அறைக்குச் சென்றார்கள் அவ்விருவரும். 

அங்கே தங்களுக்கு முன்பாக ஒரு சிலர் வந்திருப்பதை அவதானித்து விட்டதும் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தனர் வெற்றிச்செல்வன் மற்றும் புகழேந்தி. 

அந்தச் சிலரில் மதுபாலாவும், துர்காவும் அடக்கம். 

ஆனால் அவ்விரண்டுத் தோழியரும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து இருந்ததைக் கண்டு விட்டு மெச்சிக் கொண்டான் புகழேந்தி.

ஆனால் இவ்வளவு நேரமாக அவனைக் காணாமல் இருந்த தன் கண்களுக்கு இப்போது காட்சியளித்த அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே தனக்குள் இருந்து எழுந்தப் புத்துணர்வை மதுபாலாவால் உணர முடிந்தது. 

அப்படியென்றால் தனக்கு அவனுடைய இருப்புப் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவளோ, அது கொடுத்த அதிர்வில் சிலையாகிப் போய் விட்டிருந்தாள். 

அப்போது அங்கே வந்த மற்றப் பணியாளர்களின் அரவத்தில் தான் தன்னை மீட்டெடுத்துக் கொண்டுப் புகழேந்தியின் மீதிருந்த தனது விழிகளைத் திருப்பினாள் மதுபாலா. 

அதைச் சம்பந்தப்பட்ட ஆடவனும் கூர்மையாக கவனித்து விட்டிருக்க, 

அவனது கண்களில் ஆச்சரியமும், உடலில் புல்லரிப்பும் ஏற்பட்டிருந்தது எனலாம்! 

அப்போது,”சார்! எல்லாரும் வந்தாச்சு!”என்றத் தன்னுடைய காரியதரிசியின் குரலில் தான் அவற்றிலிருந்து மீண்டான் புகழேந்தி. 

உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து தனக்கு முன்னால் இருந்த ஒலிவாங்கியைத் தனக்கு ஏதுவாகச் சரி செய்து விட்டுப் பேசத் தொடங்கினான். 

“எல்லாருக்கும் வணக்கம்! இது சின்ன மீட்டிங் தான்! அதனால் சீக்கிரமே முடிஞ்சிடும். இப்போ விஷயத்துக்கு வர்றேன்”என்றவனோ, 

“நமக்கு ஏற்கனவே தன்னோட ஒரு படத்துக்கான ஆடை வடிவமைப்புப் பொறுப்பைத் தந்த அதே பிரபலமான ஹீரோ இப்பவும் அவரோட படத்துக்கான ஆடை வடிவமைப்புக்கானப் பொறுப்பை நமக்கே கொடுத்து இருக்கார்! அவர் பேர் என்னன்னு நீங்களே சொல்லுங்கப் பார்ப்போம்!”என்று அந்த அறையிலிருந்த அனைவருக்கும் புதிர் போட்டுப் பதிலைக் கேட்டிருந்தான் புகழேந்தி. 

உடனே அங்கிருந்த அனைவருமே ஒன்று சேர்ந்து,”ரன்வீர் சார்!!!!”என்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். 

அதில் மதுபாலாவின் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. 

ஏனெனில் அவனது சில படங்களை மட்டும் தான் திரையரங்கில் பார்த்திருக்கிறாள். 

அதுவும் அவளது தங்கைச் சுதாவின் அழைப்பை மறுக்க முடியாமல் போயிருக்கிறாள் அவ்வளவே! 

இப்பொழுது என்றால் அந்த உச்ச நடிகனின் படத்திற்கு ஆடை வடிவமைக்கும் ஆட்களில் தானும் ஒருவளாக இருக்கப் போகிறோம் என்பதைக் கேள்விப்பட்டதும் அவளுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது என்று கூறலாம்! 

அதை தனது முகத்தில் பிரதிபலிக்கவும் செய்திருந்தாள் மதுபாலா. 

அவளது அந்த முகப் பாவனைகளையும் கண்டு கொண்டு அவற்றை அப்படியே தனது மனச் சிறைக்குள் சிறை பிடித்துக் கொண்டாலும் கூட, 

அந்தச் சந்திப்பிற்கான முக்கியமான காரணத்தையும் மறக்காமல்,”மிஸ்டர். ரன்வீரோட அந்தப் படத்துக்கு எப்படியான ஆடைகளை வடிவமைச்சுக் கொடுக்கனும்னு நான் இப்போவே உங்ககிட்ட சொல்லப் போறேன்”என்றவனோ, 

அந்த நடிகன் தன்னிடம் கூறிய விவரங்களை அவர்கள் அனைவருக்கும் நன்றாக விளக்கிச் சொல்லி முடித்தான் புகழேந்தி. 

அதைக் கவனமாக கேட்டுக் கொண்டார்கள் அங்கு இருந்த மற்றவர்கள். 

“இப்போ உங்களுக்கு நான் கொடுக்கப் போற வேலை என்னன்னா, நீங்க எல்லாரும் நான் சொன்ன ஐடியாவை வச்சு, உங்களோட கற்பனைகளை உபயோகிச்சு இதுக்கான டிசைன்ஸ்ஸை வரைஞ்சுக் கொடுங்க. நான் அதையெல்லாம் செக் பண்ணிட்டு எது எல்லாம் சிறப்பாக இருக்கோ, அந்த வடிவமைப்புகளை எல்லாம் கண்டிப்பாக உபயோகம் செஞ்சி உடை வடிவமைக்கலாம்! அதே மாதிரி, அதை வடிவமைச்ச எல்லாரோட பேரும், ஃபோட்டோவும் நம்மளோட கம்பெனிச் சம்பந்தப்பட்ட எல்லா வெப்சைட்ஸ், சோஷியல் மீடியா ஆப்ஸ் – ன்னு எல்லாத்துலேயும் புரோமோட் பண்ணுவோம்! அதனால் இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்க! இதைப் பத்தி உங்க யாருக்கு, என்னச் சந்தேகம் வந்தாலும் அதை எங்கிட்ட தாராளமாக வந்து பேசிக் கிளியர் செஞ்சிக்கலாம்! இது அந்த ரன்வீர் சார் நம்மளோட வேலையில் நம்பிக்கை வச்சு நமக்கு இரண்டாவது வாய்ப்புக் கொடுத்து இருக்கிறார்! அதனால் இதை நாம எல்லாரும் சேர்ந்து சிறப்பாகச் செஞ்சி முடிப்போம்ன்னு உறுதி எடுத்துக்கோங்க! நாளையில் இருந்து உங்களோட டிசைன்ஸ்ஸை எங்கிட்ட கொண்டு வந்து தரலாம்! உங்க எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட்! இப்போ நீங்க உங்களோட பிரிவுக்குப் போகலாம்!”என்று அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறி அனுப்பி வைத்தான் புகழேந்தி.

அங்கேயிருந்து தனது அறைக்கு வந்த மதுபாலாவோ மிகவும் பரபரப்பாக உணர்ந்தாள்! 

ஏனென்றால் இது அவளது கம்பெனியில் கொடுத்து இருக்கும் முக்கியமான வேலையாகும்!

ஆகவே இதில் தனது ஒட்டுமொத்த திறமையையும் காண்பிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது அவளுக்குள்.

அதேபோல், புகழேந்தியின் மீது தனக்குள் உருவாகி இருக்கும் அந்தப் பெயர் தெரியாத உணர்வைத் தவிர்க்க வேண்டும் என்றால் தனது கவனம் இதில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் உறுதி பூண்டுக் கொண்டாள் மதுபாலா. 

ஆனால் இந்தப் பொறுப்பினால் தான் இவள் அடிக்கடி புகழேந்தியைச் சந்திக்கும் வாய்ப்பும், அவன் மீதான ஈர்ப்பு இன்னும் கூடப் போவதையும் நிகழப் போகிறது என்பதை அவள் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை எனலாம்!

  • தொடரும்
error: Content is protected !!
Scroll to Top