அன்றைக்கு என்னவோ உணவகத்தில் பெரிதாகக் கூட்டமில்லை. ஜீவா விச்ராந்தியாக அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்தாள். அலைபேசியைத் தண்ணீர் குவளையின் மேல் சாய்த்து நிற்க வைத்து, பாடகர் தேவாவின் காதல் சொட்டும் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சமீபத்தில் அவர் இறந்த செய்தியில் இவளுக்கு நிரம்ப வருத்தம். அவரது இசையும் குரலும் இவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் ஆஹா படத்தில் முதன்முதலில் பார்த்தேன் பாடலை ஹரிஹரன் குரலில், தேவாவின் இசையில் எத்தனையோ முறை கேட்டு லயித்திருக்கிறாள். இப்போது அந்நினைவில் சின்ன முறுவலுடன் அந்தப் பாடலை ஒலிக்க விட்டவள், எழுந்து சென்று கையைக் கழுவிவிட்டு வந்தாள்.
பாடல் கேட்பதற்குப் பதில் டொங் டொங் எனக் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்புகள் தொடர் சங்கிலியாக விழ, ஈரமான கையை உடையில் துடைத்துவிட்டு யாரென எடுத்துப் பார்த்தாள். தேவா சார் என்ற பெயரைப் பார்த்ததும் மெல்ல இவள் முகம் மலர்ந்தது.
“பாடகர் தேவாவை நினைச்சா டைரக்டர் தேவா மெசேஜ் பண்றாருப்பா!” எனச் சின்ன புன்னகையுடன் அவன் அனுப்பிய செய்தியைச் சொடுக்கினாள். ஹோவென வெள்ளைப் பனியைப் போர்த்தியது போல பெரிய நீர்வீழ்ச்சியின் முன்னே நின்று புகைப்படம் அனுப்பியிருந்தான் அவன். அதில் காலை நனைப்பது, அங்கே உண்ணுவது, உடன் யாரோ ஒரு அந்நிய ஆடவன் நிற்பது போன்ற நான்கைந்து புகைப்படங்கள் வந்திருந்தன. ஒவ்வொன்றையும் பொறுமையாகப் பார்த்தாள். அவளுக்கும் இதுபோல எங்காவது தூர தேசங்களுக்கு சென்று வர வேண்டும் என ஆசை நிரம்ப உண்டு. ஆனால் நேரம்தான் வாய்க்கவில்லை. பணம் போதாமையும் மற்றொரு காரணம்.
“ரொம்ப நல்லாயிருக்கு தேவா சார். நீங்க அனுப்புன போட்டோ பார்த்ததும் எனக்கும் எங்கேயாவது போகணும்னு ஆசை வருது. அந்த நீர்வீழ்ச்சி ஏன் என் கண்ணுக்கு இவ்ளோ அழகா தெரியுதுன்னு தெரியலை. நாள் முழுசும் அங்கே உக்கார்ந்து அதைப் பார்த்துட்டே இருக்கலாம் போல!” குரல்வழிச் செய்தியை இவள் தட்டிவிட, சில நொடிகளில், “ஃப்ரியா நீ?” எனக் கேட்டான் அவன். இவள் ஆமாமெனப் பதிலளித்ததும் காணொளி அழைப்பை விடுத்தான்.
ஜீவாவிற்கு அதை ஏற்பதா, வேண்டாமா எனத் தயக்கம் வந்தது. இதற்கு முன்பு அவள் யாரிடமும், முக்கியமாக ஆண்களிடம், இது போல காணொளி அழைப்பில் பேசியது கிடையாது. ஒருமுறை முழுவதும் அழைப்பு சென்று துண்டானதும், “பிக்கப் தி கால் ஜீவா!” என அவன் செய்தி அனுப்பினான். அவள் சமையலறைக்குள் நுழைந்து அழைப்பை ஏற்றாள்.
அருவியிலிருந்து அவன் மேனி முழுவதும் தண்ணீர் தொளித்திருந்தது. தலையில் நீர் சொட்டச் சொட்ட நின்றிருந்தான் தேவா. இவளைப் பார்த்ததும் மெல்லியதாகப் புன்னகைத்து கையசைத்தான். ஜீவா தயக்கத்துடன் அதை ஏற்றாள்.
அவன் தோளில் ஒரு துண்டைப் போட்டிருந்ததால் இவளுக்குச் சங்கடம் ஏதுமில்லை. அப்படியே அலைபேசியைத் திருப்பி அந்த நீர்வீழ்ச்சியை முழுவதுமாகக் காண்பித்தான். ஜீவா ஆசையாகப் பார்த்தாள். அங்கிருந்த மனிதர்கள், இடமென மெல்ல அவன் அலைபேசியை நகர்த்த நகர்த்த, இவளது கருவிழிகளும் அதற்கேற்ப நகர்ந்தன.
“இது என்ன இடம் தேவா சார்? கண்டிப்பா இந்தியா இல்ல? எந்த நாடு?” எனச் சந்தேகம் கேட்டாள் ஜீவா.
“நயாகரா பால்ஸ், நியூயார்க்!” அவன் கூறியதும், “ஓ… ரொம்ப அழகா இருக்குல்ல தேவா சார். நாள் முழுக்க பார்த்துட்டே இருக்கலாம் போல!” என அவள் ரசித்துச் சொன்னாள்.
“ப்ம்ச்… நாள் முழுக்க எல்லாம் இருக்குறது கஷ்டம் ஜீவா. கொஞ்ச நேரம் தண்ணில ஆடலாம், விளையாடலாம். அப்புறம் உனக்கே போரடிச்சிடும்மா!” அவன் சலித்தான். அவளிடம் சின்ன புன்னகை.
“இதுக்கு முன்னாடி அங்கப் போய்ருக்கீங்களா தேவா சார்?” அவள் கேட்டதும், “ஆமா… இது தேர்ட் டைம்…” என்றான் அவன் யோசனையுடன்.
“இதே மாதிரி நிறைய இடத்துக்குப் போய்ருப்பீங்கல்ல?” ஜீவா மாலை நேரத் தேநீரைக் கலக்கியபடியே அவனிடம் பேசினாள்.
“யெஸ்… ஷூட்டிங்னு வந்தாலும் கொஞ்சம் ஊர் சுத்த எனக்குப் பிடிக்கும் ஜீவா. சோ, நல்லா சுத்திப் பார்ப்பேன்!” அவன் பதிலளித்தான்.
“அதான் உங்களுக்கு கொஞ்ச நேரத்துலயே போரடிக்கும் தேவா சார். என்னை மாதிரி எங்கேயும் போக சான்ஸ் கிடைக்காம ஒரே இடத்துல இருக்கவங்க இப்படி சுத்திப் பார்க்கப் போனா வீட்டுக்கே வரத் தோணாது. நான்லாம் நிஜமா நாள் முழுக்க சும்மாவே உக்கார்ந்து நீர்வீழ்ச்சியைப் பார்த்துட்டு இருப்பேன்!” அவள் சின்ன முறுவலுடன் கூறினாள்.
தேவா தலையைத் துவட்டியபடியே, “உனக்கு இவ்ளோ பிடிக்கும்னா நீயும் எங்கேயும் சின்ன ட்ரிப் போகலாம்ல ஜீவா?” என அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
“ஹம்ம்… டைம் கிடைக்காது தேவா சார். நாலு ஐஞ்சு நாளெல்லாம் ஹோட்டலை மூடுறதுக்கு வாய்ப்பே கிடையாது. இதுல எங்கருந்து டூரெல்லாம் நான் நினைச்சுப் பார்க்க. இப்படி வீடியோல பார்த்து ரசிச்சுக்க வேண்டியதுதான்!” அவள் சின்ன குரலில் சலித்தாள்.
“ச்சு… நெக்ஸ்ட் டைம் நான் டூர் ப்ளான் பண்ணும்போது உன்னையும் கூட்டிட்டுப் போறேன். வேலை எப்பவும் இருக்கும் ஜீவா. அதுக்காக என்ஜாய் பண்ணாம இருக்கக் கூடாது!” அவன் கண்டிப்புடன் கூறினான்.
“நீங்க சொன்னதே ரொம்ப சந்தோஷம். பட், நம்ம பட்ஜெட்டுக்கு அமெரிக்கா எல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. எனக்கு இங்க இருக்க குற்றலாம், ஊட்டில இருக்க அருவிக்குப் போனாலே போதும். ப்யூச்சர்ல கண்டிப்பா என் ஹஸ்பண்டோட சேர்ந்து போய்ட்டு வருவேன்!” நாசூக்காக அவன் அழைப்பை மறுத்துத் தன் எல்லையிலேயே நின்று கொண்டாள் இவள்.
“அது சரி… உன் ஹஸ்பண்ட் கூட்டிட்டுப் போகலைன்னா என்ன பண்ணுவ?” அவன் கேட்டதும், இவள் யோசித்தாள்.
“ப்ம்ச்… தெரியலையே தேவா சார். கேட்டுப் பார்ப்பேன். அவரோட சூழ்நிலையும் பார்க்கணும் இல்ல. அவரால முடிஞ்சா கூட்டிட்டுப் போவாரு. இல்லைன்னா வேணாம்னு சொல்லிடுவாரு. இன்னொரு நாள் போகலாம்னு நானும் இவ்வளோ நாள் மனசைத் தேத்துன மாதிரி தேத்திப்பேன், சிம்பிள்!” அவள் இலகுவாகத் தோளைக் குலுக்கினாள்.
“உன் ஹஸ்பண்ட் ரொம்பக் கொடுத்து வச்சவரு ஜீவா. பாரு, சண்டை போடுவேன்னு ஒரு வார்த்தைக்குக் கூட சொல்லலை நீ!” அவன் உதட்டைப் பிதுக்க, இவள் பதிலிறுக்காமல் சிரித்தாள்.
“சரி ஜீவா… நீ வொர்க்கைப் பாரு. எனக்கு செம்ம பசி, நான் போய்ச் சாப்பிட என்ன இருக்குன்னு பார்க்குறேன்…” என அவன் கூற, “அங்க…” என ஆரம்பித்தவள், “நீங்க போய் முதல்ல சாப்பிடுங்க தேவா சார்…” எனக் கேட்க வந்ததை நிறுத்தினாள்.
“என்ன கேட்க வந்த ஜீவா? கேளு…” என்றவன், உடையை உடுத்திவிட்டு தோள் பையை எடுத்து முதுகில் கோர்த்தான்.
“இல்ல… அங்க நம்ம சாப்பாடு எல்லா இடத்துலயும் கிடைக்குமான்னு கேட்க வந்தேன். ஹோட்டல் வச்சு நடத்துறதால என் மைண்ட் அங்கேயே ஸ்டக் ஆகிடுச்சு!” என அவளிடம் சின்னதாக அசட்டுப் புன்னகை. அவன் சிரித்தான்.
“வொய் நாட்… இங்க நிறைய இந்தியன் ரெஸ்டாரண்ட் இருக்கு ஜீவா. எல்லா சாப்பாடுமே கிடைக்கும். பட், நம்ம வீட்டு சாப்பாடு அளவுக்கு டேஸ்ட் கொடுக்காது!” என்றான் அவன்.
“ஓ… ஓகே சார். நீங்க பாருங்க, என்ன கிடைச்சாலும் வயிறு நிறைய சாப்பிட்ருங்க…” அவள் கூற, அவன் சிரிப்புடன் தலையசைத்து அழைப்பைத் துண்டித்தான். கிரிஜா அவளைப் பார்த்தாலும் கேள்வி கேட்கவில்லை. அவள் முத்துக்குமாரோடு பேசுகிறாள் என்றெண்ணி அவர் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
அது இவளுக்குப் பெரும் உறுத்தலாக இருந்தது. பிறிதொரு நாளில் தேவாவை அம்மாவிடம் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவன் இப்போது தன்னை நல்ல தோழியாக அணுகுகிறான். அவளும் அவன் நட்புக் கரத்தை ஏற்றுவிட்டாள். பிறகேன் தாயிடம் இதை மறைக்க வேண்டும்? கண்டிப்பாக அவரிடம் கூறிவிட வேண்டும் என்றெண்ணிக் கொண்டாள்.
நான்கைந்து நாள்கள் கடந்து போயிருந்தன. ஜீவா கூறியபடியே தேவா கால் வலிக்க வலிக்க ஊரைச் சுற்றிப் பார்த்தான். ஜெய்லர் இரண்டு திரைப்படம் அங்கே திரையிடப்பட்டதைக் கேட்டு, பக்கத்து அறையில் புதிதாகக் கிடைத்த தோழியுடன் சென்று படம் பார்த்து வந்தான்.
அங்கே அருகேயுள்ள இடங்களுக்குச் சென்று வந்தான். அவன் முன்பு எடுத்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது, அவன் ஒரு இயக்குநர் என்ற எண்ணமெல்லாம் எங்கோ ஓர் மூலைக்குச் சென்றிருந்தது. மிகவும் புத்துணர்வாக உணர்ந்தான். மனம் நடந்ததை அப்படியே பின்னோக்கித் தள்ளிற்று. ஐந்து நாள்களும் வெகு சுதந்திரமாகச் சுற்றியவன், அன்றிரவு இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்தான்.
அதனாலேயே வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏதாவது வாங்க வேண்டுமென அங்கே ஒரு பிரபலமான பல்பொருள் அங்காடியை இரண்டு முறை சுற்றி வந்து, ஒவ்வொருவராக நினைவுகூர்ந்து அவர்களுக்கு ஏற்றது போலப் பொருட்களை எடுத்தவன், பணம் செலுத்துமிடம் நோக்கி நகர்ந்தான்.
சட்டென ஜீவா நினைவிற்கு வந்தாள். அவள்தானே பயணம் செய் என இவனைத் தூண்டியது. அவளுக்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டுமென விரும்பியவன், சுற்றி முற்றிப் பார்த்துக் குழம்பினான். ஒரு வயது பெண்ணிற்கு என்ன பரிசளிப்பது என அவனிடம் சின்ன திணறல்.
அவளிடமே கேட்கலாம் என நினைத்து அவளுக்கு அழைத்துவிட்டான். ஜீவா கடைசி வாடிக்கையாளர் அகன்றதும் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்துவிட்டு கடையை அடைக்கலாம் என எண்ணும்போது அவளது அலைபேசி ஒலித்தது. இந்த நேரத்தில் தேவா ஏன் அழைக்கிறான் என யோசித்தாலும், நொடியில் அதை ஏற்றுக் காதிற்குக் கொடுத்தாள்.
“என்னாச்சு தேவா சார், இந்த டைம் கூப்பிட்டிருக்கீங்க?” அவள் சின்ன குரலில் பதற்றத்தை மறைத்துக் கேட்டாள்.
“சாரி… சாரி. அங்க நைட்டுல இப்போ. நான் நேரத்தைப் பார்க்கலம்மா!” என்றான் அவன் தன் நெற்றியில் தட்டிக்கொண்டு.
“பரவாயில்லை தேவா சார், எதுக்காக கால் பண்ணிங்க?” எனக் கேட்டுவிட்டு, உணவகத்தின் கதவை இழுத்துப் பூட்டினாள். சின்னதம்பி தள்ளாட்டத்துடன் முன்னே செல்ல, இவள் அவர் பின்னே நடந்தாள்.
“அது… இன்னைக்கு நைட்டு இந்தியா ரிடர்ன் ஆகுற ப்ளான். அதான் வீட்ல இருக்கவங்களுக்கு ஏதாவது வாங்கலாம்னு ஷாப்பிங் வந்தேன். அப்படியே உன் ஞாபகம் வந்துச்சு. சரின்னு என்ன வாங்கலாம்னு பார்த்தா எந்த ஐடியாவும் எனக்கு வர மாட்டுது. உனக்கு என்ன வேணும் ஜீவா?” அவன் கேட்க, தன் அறைக் கதவைச் சாற்றிவிட்டு அப்படியே பொத்தெனத் தரையில் அமர்ந்தவளுக்கு இடுப்பு வலி பின்னியது. அன்றைக்கு அவளுக்கு மாதவிடாய் நாள். அதோடு சற்றும் ஓய்வில்லாமல் ஓடியதில் கால்கள் நிரம்ப வலித்தன.
“ஜீவா… லைன்ல இருக்கீயா?” அவளிடம் பதிலில்லாது போனதில் தேவா அழைக்க, “ஹம்ம்… இருக்கேன் தேவா சார். நீங்க என்னை ஞாபகம் வச்சு ஃபோன் பண்ணதே எனக்கு ஹேப்பிதான். எதுவும் இப்போ எனக்குத் தேவைப்படலை. இன்னொரு டைம் போகும்போது ஏதாவது வேணும்னா கேட்குறேன் சார்!” என அவள் தன்மையாக மறுத்தாள்.
“ப்ம்ச்… தேவையிருக்கப்போ மட்டும்தான் வாங்கணுமா ஜீவா? என்ன வேணும்னு சொல்லும்மா. நான் ஃபில் பே பண்ணப் போகணும்!” அவன் அதட்டினான்.
“தேவா சார், நிஜமா எனக்கு எதுவும் வேணாம். நீங்க போய் ஃபில் போட்டுட்டு பேக் பண்ணுங்க. கரெக்ட் டைமுக்கு ஃப்ளைட்டைப் பிடிக்கணும்ல?” இவள் அக்கறையாகக் கூறினாள்.
“ஆனாலும் ரொம்ப மோசம் ஜீவா நீ. நான் இத்தனை தடவைக் கேட்டும் ஏன் வேணாம்னு சொல்ற? என்ன பிரச்சனை உனக்கு? வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ். நான் உன்னை நல்ல ஃப்ரெண்டா பார்க்குறேன். அதனாலதான் என்ன வேணும்னு கால் பண்ணிக் கேட்குறேன்…” அவன் சலித்தான்.
“நீங்க வாங்கிக் கொடுத்தா அம்மா யாருன்னு கேட்பாங்க. இன்னும் உங்களைப் பார்த்ததை, பேசுனதை நான் சொல்லலை தேவா சார். அதான் வேணாம்னு சொல்றேன்…” அவள் தயங்கினாள்.
“உஃபூ… இவ்ளோதானா? நானே உங்க வீட்டுக்கு வந்து உங்கம்மாகிட்டே பேசி இன்ட்ரோ ஆகுறேன். அவங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கும் இல்ல?” என அவன் கேட்டதும், இவளிடம் ஒரு மெல்லிய திடுக்கிடல்.
“ஐயோ… அதெல்லாம் வேணாம் சார். நீங்க திடுதிப்புன்னு வந்து நின்னா, முன்னாடியே நீங்க வந்ததை ஏன் சொல்லலைன்னு அம்மா கேட்பாங்க. அதை அவங்ககிட்ட மறைச்சது போலாகிடும். நானே உங்களைப் பத்திச் சொல்றேன். அப்புறம் வீட்டுக்கு வாங்க!” அவள் அழுத்தமாக மறுத்துவிட்டாள்.
“ஷ்… சரி விடு ஜீவா. நானே உனக்கு ஏதாவது பார்த்து வாங்குறேன். நீ இப்போ போய்த் தூங்கு!” அவளைத் தன் வழிக்கு வளைக்க முயலாமல் அவன் தன் போல, தோடு, கழுத்தணி இருந்த பகுதிக்குள் நுழைந்து ஒரு சில பொருட்களைக் கூடையிலிட்டான்.
“கொஞ்சமா தோடு, க்ளிப், செயின் எல்லாம் வாங்கிருக்கேன் ஜீவா. என் டேஸ்ட் அவ்ளோ நல்லாருக்காது. இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. குறை சொல்லக் கூடாது!” என அவன் கூற,
“கண்டிப்பா சொல்ல மாட்டேன். நீங்க என்னை ஞாபகம் வச்சு இவ்ளோ தூரம் வேணாம்னு சொல்லியும் வாங்கித் தர்றதே பெருசு தேவா சார். அது எப்படி இருந்தாலும் வாங்கிக்கிறேன், எனக்குப் பிடிக்கும்…” எனச் சிரிப்புடன் அந்த உரையாடலை முடித்தவள், சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.
இடுப்பு வலி மட்டுப்பட்டதும் எழுந்து சென்று குளித்து வந்து படுக்கையில் சுருண்டவள், வயிற்றோடு கையைக் கட்டிக் கொண்டாள். வயிற்று வலி, இடுப்பு வலி என இரு பெரும் காரணிகள் அவளது தூக்கத்தைத் தூர விரட்டியடித்தன. எப்படியோ அதை இழுத்துப் பிடித்து உறங்கிப் போனாள்.
தொடரும்…