ஒரு இண்டர்வியூல இந்தப் படத்தை நீங்க ரொம்ப சாட்டிஸ்ஃபாக்ஷனோட எடுத்ததா சொல்லிருந்தீங்க. அப்பவே உங்களோட எதிர்பார்ப்பு புரிஞ்சுது எனக்கு. சோ, படம் நீங்க எக்ஸ்பெக்ட் பண்ண அளவுக்குப் போகலைன்ற வருத்தம் உங்களுக்கு வர்றது இயல்புதான் சார். அதுக்காகச் சோர்ந்து போய்டாதீங்க. இன்னைக்கும் உங்களோட படைப்பை ஏதோ ஒரு மூளையில கொண்டாடுற மக்கள் இருக்கத்தான் செய்றாங்க. உங்களோட ஃபர்ஸ்ட் மூவியை இப்போ டீவில போட்டா கூட முத தடவையா பார்க்குற மாதிரி நானும் என் தம்பியும் உக்கார்ந்து பார்ப்போம். அந்தளவுக்கு எங்களுக்குப் பிடிச்ச படம் அது.
நீங்க ஒரு கிரியேட்டர். ஒவ்வொரு படம் பண்ணும்போதும் உங்களோட பெஸ்டைக் கொடுக்குறீங்க, பொது வெளியில கருத்துக் கேட்க வைக்குறீங்க. அதுக்குப் பாசிட்டிவ், நெகட்டிவ் ரிவ்யூ வர்றது இயல்பு. உங்களால நெகட்டிவை ஏத்துக்க முடிஞ்சா, ‘யெஸ், என் சைட்ல தப்பிருக்கு. அதை நான் சரி பண்ணிக்கிறேன்’னு சொல்லலாம்.
இல்ல, ஏத்துக்க முடியாதுன்னா, ‘நான் என்னோட முழுத் திருப்தியோட எடுத்த படம். எல்லாருக்கும் ஒரே ரசனை இருக்கணும்னு அவசியம் இல்ல. இந்தப் படத்துக்குப் பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்தவங்க என் ரசனைக்கானவங்க. அவங்களுக்குப் பிடிச்சதுல எனக்குச் சந்தோஷம்’னு தைரியமா சொல்லுங்க சார். ரெண்டுமே உங்களோட விருப்பம்தான்.
எல்லாப் படத்தையும் எல்லா டைரக்டரும் பெர்பெக்டா எடுக்க முடியாதே. நிறை குறை இருக்கத்தான் செய்யும். நம்ம எல்லாரும் மனுஷங்க. ரோபோட் இல்லையே. சோ, எங்கயாவது தப்பு பண்ணிட்டோம்னு தோணுச்சுன்னா, அதை இனிமே நடக்காம பார்த்துக்கோங்க.
முக்கியமான விஷயம், உங்களை பூஸ்ட் பண்றேன்ற பேர்ல அடுத்த படத்துல இதைவிட பெஸ்டா பண்ணு, ப்ளாக் பஸ்டர், பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுன்னு யாரும் சொன்னாங்கன்னா காதுலயே வாங்காதீங்க. ஒரு படம் நீங்க எதிர்பார்த்த அளவுக்குப் போகலைன்னா அடுத்த படத்தை அவசர அவசரமா எடுக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல.
யாருக்கும் உங்களை நீங்க ப்ரூஃப் பண்ண தேவையில்லை தேவா சார். அப்படி நினைச்சு நீங்களே உங்களை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க. இப்போ உங்களுக்குத் தேவை ரெஸ்ட். ஏதாவது வெகேஷன் ப்ளான் பண்ணுங்க. இதுக்கு முன்னாடி ஷூட்டிங் போய்ட்டு, நல்ல ப்ளேஸ், பட், சுத்திப் பார்க்கத்தான் டைமில்லன்னு தோணுயிருக்க இடத்துக்குப் போய் ஒரு ஒன் வீக் சுத்திட்டு வாங்க.
புது இடம், தெரியாத நாலு பேர்கிட்டே பழகுங்க. அவங்களுக்கு உங்களோட வெற்றி தோல்வியெல்லாம் தெரியாது. உங்களை ஜட்ஜ் பண்ண மாட்டாங்க.
ஸட்ரேஞ்சர் கம் ப்ரெண்ட்ஸா இருங்க.
கால் வலிக்க வலிக்க அந்த ஊரைச் சுத்திப் பாருங்க, ஷாப்பிங், டிஃப்ரெண்டான ஃபுட்டுன்னு ட்ரை பண்ணுங்க. உங்க மனசு ரிலாக்ஸாகும்.
நடந்ததுல இருந்து வெளிய வந்ததுக்குப் பிறகு பொறுமையா அடுத்து என்னன்னு யோசிக்கலாம். நாளைக்கே உலகம் அழிஞ்சுடாது சார். சோ, ப்ரூஃப் மைசெல்ஃப்னு ஸ்ட்ரெஸாகாம, அக்செப்ட் எவ்ரிதிங்க்னு யோசிச்சா, எல்லாமே ஈஸியா இருக்கும். செல்ஃப் அனலைஸ் பண்ண டைமும் கிடைக்கும்.
இந்த வாரம் உங்களுக்கு நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்த மக்கள்தான் அடுத்த வாரம் அவங்களோட ஃபேவரைட் ஆக்டர் படம் வந்தா, மொக்கையா இருந்தா கூட ஆஹா, ஓஹோன்னு புகழுவாங்க. ஒப்பீனியன் டிஃபர்ஸ். சோ, அப்ரோச் எவ்ரிதிங்கையும் இன் அ பாசிட்டிவ் வே.
இதெல்லாம் என்னளவுல தோணுன விஷயம். என்னோட கருத்து உங்களைக் கூல் பண்றதுக்குப் பதிலா எரிச்சல்படுத்துனா ரொம்ப சாரி. அப்படியில்லாம ஓகேன்னு தோணுச்சுன்னா, சோலோ ட்ரிப் ப்ளான் பண்ணி என்ஜாய் பண்ணுங்க…” என அவள் பேசி முடித்திருந்தாள்.
அவள் பேசும்போது பின்னே அரவை இயந்திரத்தின் சத்தம் கேட்டது. நான்கு நாட்களுக்கு முன்னரே அனுப்பியிருந்தாள் ஜீவா. தேவா தலையைக் கோதியபடி மூச்சை இழுத்துவிட்டவன், வீட்டு வேலையாளிடம் தேநீர் எடுத்து வரப் பணித்தான்.
“தேவா… கீழே வந்து டீயைக் குடி. ரூம்லயே அடைஞ்சு கிடக்காத!” என ரேணு அதட்ட, “ம்மா… ஒரு வொர்க் இருக்கு. டீயைக் கொடுத்துவிடுங்க!” என்றவன், பால்கனியில் வந்து நின்றான். பார்வை மெல்லக் கீழிறங்கிய சூரியனில் நிலைத்தது. வானம் வெளுத்துப் போயிருந்தது.
“தம்பி, டீ…” என வேலையாள் கொடுத்த தேநீரை வாங்கி உதட்டில் வைத்தவன், மீண்டும் ஜீவாவின் செய்தியைச் சொடுக்கினான்.
அவள் படத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ஒவ்வொரு இடத்திலும் இவன் ஏதோவொரு வகையில் மெனக்கெட்டிருந்தான். அவன் சொல்ல வந்த செய்தி சரியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செய்தான். எல்லோரும் அதைக் கவனிக்க வாய்ப்பில்லை என இவனுக்கே தெரியும்.
ஆனால், ஜீவா இத்தனை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறாளே என்ற ஆச்சரியமும், ஒரு இயக்குநராக அவள் பாராட்டியதில் மனமும் நிறைந்து குளிர்ந்து போனது.
வெகுநிதானமாகத் தேநீரோடு அவள் வார்த்தைகளும் மெல்ல அவனுள் இறங்கின. அவள் கூறிய பின்புதான் அவனுள்ளம் அந்தக் கேள்வியைக் கேட்டது.
யாருக்காக அவன் தன்னை நிரூபிக்க வேண்டும்? எதற்காக அடுத்த படப்பிடிப்பை எங்கே, எப்போது எனத் தீவிரமாக யோசித்து இப்போதே மன அழுத்தத்தை ஏற்றிக்கொள்ள வேண்டும்?
ஆறுதல் என அவனிடம் பேசிய அனைவருமே, “அடுத்த மூவில பெஸ்டா கொடு. உன்னை ப்ரூஃப் பண்ணு!” என அவனை இன்னுமே அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். அவன் மீதான எதிர்பார்ப்பை உயர்த்திக் காண்பித்தனர். அதுவே அவனை ஒழுங்காகச் சிந்திக்க விடவில்லை. இப்போது ஜீவாவின் வார்த்தைகள் மெல்ல அவனை ஆற்றுப்படுத்தின. நிதானமாக யோசிக்க முடிந்தது.
கண்டிப்பாக அடுத்த திரைப்படம் எடுக்கும் முன்பு சின்ன இடைவெளி வேண்டும். அவனை அவனாக ஏற்றுக்கொள்ள, சுய- அலசல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இனிமேல் எந்நிலையிலும் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டும் என எண்ணி எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செய்யக் கூடாது என ஓர் அறுதியொன்றை எடுத்தான். மனம் இறகைப் போல லேசானது அவனுக்கு.
உதட்டில் மெல்லிய முறுவல் ஒன்றமர, ஜீவாவிற்குப் பதில் அனுப்ப எண்ணி ஏதோ தட்டச்சு செய்தவன், பின்னர் அதை அழித்துவிட்டு அவளுக்கு அழைப்பை விடுத்தான். முதல்முறை அவள் ஏற்கவில்லை. இரண்டாம் முறை உடனே எடுத்துவிட்டாள்.
“ஹலோ தேவா சார்!” நான்கு நாட்களாக வேண்டாம் என எண்ணி அவன் நினைவை ஒத்துக்கித் தள்ளிய போதும், அவன் என்ன செய்கிறானோ என இவளுக்கு சதா கவலையாகப் போயிற்று. இப்போது அவனே அழைத்ததும் மனம் நிம்மதியடைந்தது.
“ஹம்ம்…” அவனது பதில் அவ்வளவுதான். அதில் அவன் என்ன யோசிக்கிறான் எனத் தெரியாமல் ஜீவா தயங்கினாள்.
“நீங்க ஓகேவா?” அவள் தயங்கிக் கேட்டாள்.
“மச் பெட்டர் ஜீவா. தேங்க்ஸ் ஃபார் யுவர் வாய்ஸ் நோட்!” அவன் சின்ன குரலில் பதிலளித்தான்.
அவனுக்காக அவள் யோசித்திருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. சில நாட்கள் முன்னர் அவளை அண்டவே விடக் கூடாது என்றெல்லாம் எண்ணி அவளைக் கீழாக நினைத்த தன்னையே நினைத்து அவனுக்கே வெட்கமானது. தலையைக் கோதினான்.
“நல்லது தேவா சார். நீங்க ஓகேன்னா எனக்கும் சந்தோஷம்தான். எதையும் நினைக்காதீங்க. எல்லாமே கடந்து போய்டும். இன்னைக்குப் பெருசா நினைச்சு ஃபீல் பண்ணதையெல்லாம் யோசிச்சு ஒருநாள் சிரிப்போம். அது மாதிரித்தான் இதுவும் தேவா சார்!” கடகடவெனப் பேசியவள், அவன் ஏதும் நினைத்துக் கொள்வானோ என எண்ணிப் பேச்சைக் குறைத்தாள்.
“கரெக்ட்தான் ஜீவா. அதை விடு, நீ என்ன பண்ற?” வேறு பேச்சிற்கு அவன் தாவினான்.
“நானா… இது ப்ரேக் டைம் சார். ஜஸ்ட் டீ அண்ட் பிஸ்கட்டோட உக்காந்து இருக்கோம். பத்து நிமிஷத்துல நைட்டு டிஃபனுக்கு ரெடி பண்ணணும்!” என்றாள் அவள்.
“ஓகே… ஓகே. ஆமா, இந்த மூவியை தியேட்டர் போய்ப் பார்த்தியா நீ?” அவன் யோசனையுடன் கேட்க,
“ப்ம்ச்… தியேட்டர் போகவெல்லாம் டைமில்லன்னு நான் உங்ககிட்ட சொன்னேனே!” அவள் சலிப்புடன் கூற, இவன் புலன்கள் கூர்மை பெற்றன.
“சரி, அப்போ எப்படி இந்தப் படத்தைப் பார்த்த நீ? இன்னும் ஓடிடி ரிலீஸ் ஆகலையே?” அவன் சந்தேகத்துடன் கேட்டதும், படக்கென ஜீவா தன் நெற்றியிலேயே அறைந்தாள்.
“தியேட்டர் பிரிண்ட்… ரைட்?” அவன் கேலியாகக் கேட்டான். ஜீவாவிடம் அசட்டுப் புன்னகை.
“ஆமா தேவா சார்… அது… அவங்க வெப்சைட்ல ஃப்ரீயா தர்றாங்க. நாங்க டவுன்லோட் பண்றோம். எங்க மேல தப்பில்ல. வெப்சைட் வச்சு ரன் பண்றவங்களைத்தான் நீங்க கேட்கணும்!” அவள் சமாளிக்கப் பார்த்தாள்.
“அது சரி… இந்த ஒரு டைம் ஓகே. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா பார்க்கக் கூடாது ஜீவா!” அவன் விளையாட்டாகக் கண்டித்தான்.
“அதை அப்போ பார்த்துப்போம் தேவா சார்!” அவள் அசட்டைக் குரலில் கூற, தேவா இங்கிருந்தே அவளை முறைத்தான்.
கிரிஜா மகளை இரண்டு முறை பார்த்துவிட்டார். நீண்ட நேரம் பேசினால், யாரிடம் பேசுகிறாள் என்ற கேள்வி வரும் என்பதால், “ஓகே தேவா சார், உங்களுக்கு வேலை இருந்தா பாருங்க. இங்க அம்மா கூப்பிட்றாங்க. எனக்கு வேலை வந்துடுச்சு!” என அழைப்பைத் துண்டித்தவள், அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள்.
தேவா அலைபேசியைச் சில நொடிகள் பார்த்தான். பின்னர், பாரிஸ் நகரைச் சுற்றிப் பார்க்கலாமா என யோசித்தவன், அமெரிக்கா செல்லத் திட்டமொன்றைத் தீட்டிவிட்டு அன்றைக்கு நிம்மதியாக உறங்கியெழுந்தான்.
தொடரும்…