மௌனம் – 10.2

மகன் முகமே சரியில்லை என்றுணர்ந்த ரேணுகா, “என்ன தேவா… இந்தப் படம் நல்லா போகலைன்னா அடுத்தப் படம் ஓடும்டா.இதைவிட அதை நல்லா பண்ணு. இதுக்கெல்லாம் சோர்ந்து போகாத. வெற்றியையும் தோல்வியையும் ஒரே தராசுல வச்சுப் பழகு. வா… வந்து சாப்பிட்டுப் போய் ரெஸ்ட் எடு!” என அவர் மகனைத் தேற்றி இரவுணவை உண்ண வைத்தார்.

வருண் மாலை நேரக் காட்சி முடிந்து வந்தான். தேவா விரைவில் உறங்கச் சென்றுவிட்டான். அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாமென ரேணுகா சின்னவனிடம் கூற, அவனும் சரியென்றான்.

மறுநாள் காலை தேவா எழும்போதே, “படம் அட்டு ஃப்ளாப்!” என்ற செய்தியில்தான் கண் விழித்தான். வந்தனா அழைத்திருந்தாள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் இவனுடைய நண்பன். அவன் அழைத்திருக்க, யாரிடமும் பேச அவனுக்குத் தோன்றவில்லை. எந்த இடத்தில் தவறினோம் எனத் தெரியாமல், படம் தோல்வியடைந்ததை எண்ணிச் சோர்ந்து போனான்.

“அண்ணா… படம் செம்மையா இருந்துச்சு. ரிவ்யூஸ் எல்லாம் பார்த்து நீ டல்லாகாத. ஒரு படம் ப்ளாப். பட், இதுக்கு முன்னாடி ப்ளாக் பஸ்டர் கொடுத்ததும் அதே நீதான். உன்கிட்டே நிறைய திறமை இருக்கு. அடுத்த படத்துல இன்னும் பெர்பெக்டா பண்ணி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுக்குற. என் ப்ரெண்ட்ஸுக்கு அப்போ நான் ட்ரீட் கொடுப்பேன். சில் ப்ரோ!” என விக்ராந்த் பேச, பிரமிளாவும் இவனை ஆற்றுப்படுத்தப் பேசினாள்.

எல்லோரும் ஆறுதல் சொல்லச் சொல்ல ஒருமாதிரி அவனுக்கே வெட்கமாகப் போய்விட்டது. ஒரு படம் தோல்வியுற்றது என்ன அவ்வளவு பெரிய இழப்பா என அவனுக்கே கடுப்பானது. அடுத்து ஆறுதல் என்ற பெயரில் யாரையும் அவன் அண்டவிடவில்லை. அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்திகள், அழைப்புகள் என எதையுமே அவன் ஏற்கவில்லை. அலைபேசியை இரண்டு நாட்கள் அணைத்துப் போட்டுவிட்டான்.

ஒரு வாரம் மெல்ல ஊர்ந்தது. படம் தோல்வி என எழுதாத குறையாகத் தெரிந்துவிட்டதால் தேவாவும் கொஞ்சம் சோர்ந்து போனான். அதனாலேயே சரியாக எந்த வேலையும் அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. யாரையாவது பார்க்க நேர்ந்தால் ஆறுதல் என்ற பெயரில் கடுப்பேற்றினர்.

அதில் எரிச்சலானவன் நான்கு நாட்கள் விடுப்பெடுத்து வீட்டிலிருக்க, “டேய்… ஏன் இவ்வளோ நாள் வீட்டுலயே இருக்க? ஒரு படம் நல்லா ஓடலைன்னா வீட்டுலயே கிடப்பியா? ஓடிட்டே இருந்தாதான் மனசு சோர்ந்து போகாம வேலையைப் பார்க்கும். போ, போய் அடுத்த வேலையைக் கவனி!” என ரேணுகா மகனைச் சரி செய்கிறேன் என்ற பெயரில் படுத்தி எடுத்தார்.

நடந்ததை கிரகித்து, அடுத்து என்னவென சிந்திக்க அவனுக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. யாருமே அதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என ஆதங்கத்தைக்கூட அவனால் வெளிக்காட்ட முடியவில்லை.

“சரிம்மா…” எனத் தாயிடம் வெறுமனே தலையசைத்து வைத்தான்.

அந்த வார இறுதியில் பிரபல நாயகனின் திரைப்படம் ஒன்று வெளிவந்ததால், இவனைப் பற்றிய பேச்சு மெல்ல அடங்கிற்று. அந்த இயக்குநரை வாயிலிட்டு அவலாக்கும் முயற்சியில் மக்கள் இறங்க, தேவ்பிரசாத் பெயர் மெதுவாக இணையத்தில் மங்கியது. அப்போதுதான் அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்தது.

என்னதான் வெற்றி தோல்வி எதுவென்றாலும் தைரியமாக எதிர்க்கொள்வேன் என தேவா திடமாக காண்பித்தாலும், தான் பெரிதும் எதிர்பார்த்த ஒரு விடயம் திடீரென்று சரிந்து விழுந்ததும், அது இவனுக்குப் பெரிய அடிதான். அதிலிருந்து மீள நேரம் தேவைப்பட்டிருந்தது. முன்பைவிட இப்போது பரவாயில்லை என மனம் சமன்பட்டிருந்தது.

அலைபேசியை எடுத்து புலனத்தில் குவிந்து கிடந்த செய்திகளுக்குப் பதிலளித்தவன், கைகள் ஜீவாவின் பெயரைப் பார்த்ததும் நின்றுவிட்டன. என்னவெனப் பார்த்தான்.

“ஹாய் சார்… டைம் இருந்தா இந்த வாய்ஸ் நோட்டைக் கேளுங்க!” என ஐந்து நிமிடக் குரல்வழிச் செய்தி அனுப்பியிருந்தாள்.

இவன் ஏக சலிப்புடன் அதைப் பார்த்தான். இவளும் ஆறுதல் என்ற பெயரில் எதையாவது உளறி வைத்திருப்பாள் என அதைக் கடந்து செல்ல முயன்றான். ஆனாலும், உள்ளுணர்வு அவளை நீ தவறாகக் கணிக்கிறாய் என உந்த, சில நொடிகள் தீவிர சிந்தனைக்குப் பின்னர் அந்தச் செய்தியைச் சொடுக்கினான்.

“ஹாய் தேவா சார்… சாரி, நீங்க ரொம்ப பிஸியா இருப்பீங்கன்னு தெரிஞ்சும் இவ்ளோ பெரிய வாய்ஸ் நோட் அனுப்புறேன். டைமிருந்தா கேளுங்க. ஒவ்வொரு டைம் உங்கப் படம் பார்த்து முடிச்சதும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்டுவேன். பட், இந்த டைம் உங்களோட நம்பர் என்கிட்ட இருந்துச்சு. சோ, படத்தைப் பத்தி ஷேர் பண்ணலாம்னு மெசேஜ் போட்டேன்.

படம் ரொம்ப நல்லா இருக்கு தேவா சார். நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ, அதை முழுசா உணர்வுபூர்வமா மக்களுக்குக் கடத்திருக்கீங்க. ஸ்க்ரீன்ப்ளே பெர்பெக்ட். படத்தோட ஒன்றிப் போய்ப் பார்த்து முடிச்சப்போ, வாவ்னு சொல்லத் தோணுச்சு. இதுக்கு முன்னாடி நீங்க எடுத்த படமும் சரி, இதுக்குப் பிறகும் சரி. இந்தளவுக்கு வருமான்னு தெரியலை. இது உங்களோட பெஸ்ட் எவரா இருக்கும். வசூல் ரீதியா நான் சொல்லலை. படத்தோட தரத்தை வச்சுச் சொல்றேன் சார்.

ஹீரோயின் அவங்கம்மாவோட பேசும்போது பின்னாடி நீங்க கிரண் பேடியோட ஃபோட்டோவை ப்ளர் பண்ணிக் காட்டிருந்தீங்க. அது நல்லா இருந்துச்சு. அவ வீட்டைவிட்டுப் போகும்போது ஸ்லோ மோஷன்ல பிஜிஎம் அவ்ளோ அழகு. அவ ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்ல மாட்டிக்கிட்டு திரும்ப வரும்போது, சொசைட்டி கிரிட்டிசைஸைத் தாண்டி அவளுக்கான வாழ்க்கை இருக்குன்னு ஹீரோ புரிய வைக்கும்போது, ஐ ஃபெல்ட் வெரி குட்.

தப்பு செய்யாத மனுஷங்க இல்லையே. பொண்ணுன்னா மட்டும் ரொம்ப இளக்காரமா பார்க்குறாங்கன்னு ஒரு இடத்துல நீங்க இன்டைரக்ட்டா ஒரு சின்ன சீன்ல காட்டிட்டு, டக்குன்னு மூவ் பண்ணி நெக்ஸ்ட் போய்ட்டீங்க. பட், நான் அந்தச் சீன்லயே கொஞ்ச நேரம் நின்னு யோசிச்சேன். யூ ஆர் ரைட். இதுவே அந்தப் பையனுக்கு இந்த மாதிரி நடந்தா அதை இந்த சொசைட்டி வேற மாதிரி ட்ரீட் பண்ணிருப்பாங்க.

அப்புறம் க்ளைமாக்ஸ், அந்த மழை, முதல் காதல் தவறுனாலும் இரண்டாவதா ஒரு வாய்ப்பு அவளுக்குக் கொடுத்தது. கடைசியா அவங்க நடந்து போகும்போது பின்னாடி இருந்த போஸ்டர், ஹீரோ எண்ட்ரி அப்போ அந்த ஒயிட் ரோஸ்ல வயலட் கலர் படுறதுன்னு ஒவ்வொரு சீனையும் நான் ரசிச்சேன். உங்களோட அபரிமிதமான உழைப்பு அதுல தெரிஞ்சது.

ஒரு பொண்ணோட உணர்வுகளை இவ்ளோ அழகா ஒரு ஆணா உங்களால எப்படி எக்ஸ்பிரஸ் பண்ண முடிஞ்சதுன்னு ஆச்சரியப்பட்டேன். படத்தைப் பார்த்துட்டு இப்படி டைரக்டர்கிட்டயே ரிவ்யூ சொல்றது கூட நல்லா இருக்குல்ல தேவா சார்?” எனக் கேட்டு சில நொடிகள் இடைவெளிவிட்டாள்.

இதை நான் சொல்லலாமா வேண்டாமான்னுகூடத் தெரியலை. ஏற்கனவே ஆறுதல்னு உங்களைச் சுத்தியிருக்கவங்க லேசா கடுப்படிச்சிருக்கலாம். இல்ல, உண்மையா உங்க மேல அக்கறைல சொல்லிருக்கலாம். எதுவா இருந்தாலும் அந்த நேரத்துல உங்களுக்கு எரிச்சலா இருக்கத்தான் செய்யும். என் பங்குக்கு எரிச்சல் பண்ண வேணாம்னு நினைச்சேன். இருந்தாலும் மனசு சொல்லிடுன்னு போட்டு அனத்துது சார்.

error: Content is protected !!
Scroll to Top