“ஜீவா, இவ்ளோ கம்மியா பருப்பு ஊற வச்சிருக்க? சாம்பார் ரொம்ப தண்ணியா வருமே. அப்புறம் சாப்பிட்றவங்க அதைக் குறையா சொல்லுவாங்க!” கோமதி, ஜீவா ஊற வைத்த பருப்பைக் கழுவி அடுப்பிலிருந்த சட்டியில் இட்டவாறே அவளிடமே குறையாகக் கூறினார்.
“அக்கா… மழை இல்லாம விலைவாசி எல்லாம் ஏறிப் போச்சு. சாப்பாடோட விலையை ஏத்தாம அதே காசுக்கு கொடுத்தாதான் கஸ்டமர்ஸ் வருவாங்க. சாம்பார் தண்ணியா இருந்தா கடலை மாவைக் கொஞ்சம் கரைச்சு ஊத்திவிடுங்கக்கா…” என அவள் காய்ச்சிய பாலை ஆற வைத்து தயிருக்கு தயார் செய்தாள்.
“அது சரித்தான்மா. விலைவாசி ஏறுது. சம்பளம் ஏற மாட்டுதே!” இவளை ஓரக்கண்ணால் பார்த்து அவர் கூற, ஜீவா பெருமூச்சுவிட்டாள்.
“வருஷா வருஷம் சம்பளம் கூட்டிக் கொடுத்துட்டுத்தான் இருக்கோம்கா. மத்த ஹோட்டலை ஒப்பிடும்போது நான் உங்களுக்கு எல்லாம் நல்லாத்தானே செய்றேன். இந்த வருஷம் ஐநூறு ரூபா எக்ஸ்ட்ரா போட்றேன். நீங்க வேலையைப் பாருங்க!” எனச் சின்ன குரலில் கூறியவளின் கைகள் தன்போல வேலையைப் பார்த்தன.
“அக்கா… சஷ்டிக்கு தயிர் வேணுமாம். குழம்பு பிடிக்கலைன்னு சொல்லிட்டா!” வேலு வந்து நின்றான்.
சின்னவர்கள் இருவருக்கும் அரைப் பரிட்சை முடிந்து விடுமுறை விட்டிருந்தனர். சஷ்டி எங்கும் செல்லாது வீட்டிலேயே பொழுதைக் கழிக்க, வேலு மட்டைப்பந்து மைதானமே கதியெனக் கிடந்தான். வெயில் வாட்டி வதைக்கிறதென்று மாலை செல்லலாம் என வீடு வந்தான்.
“வெயில்ல விளையாடி உன் தம்பி ரொம்ப கருத்துப் போயிட்டான் பாரு ஜீவா!” கோமதி கூற, ஜீவாவும் அவனைக் கவனித்தபடியே தயிரை ஒரு சின்னக் கிண்ணத்தில் கொடுத்தாள்.
“அதெல்லாம் ரெண்டு தடவை மூஞ்சிக்கு சோப் போட்டு குளிச்சா வெள்ளையாகிடுவேன் ஆன்ட்டி…” என அவன் சிட்டாகப் பறந்துவிட்டான்.
கிரிஜாவிற்கு லேசாகக் காய்ச்சல் என அவர் ஓய்வெடுக்க, ஜீவா இவர்களைப் பார்த்துக் கொண்டே கல்லாவில் அமர்ந்தாள். அவளது அலைபேசி இரண்டு முறை அடித்து ஓய, முத்துக்குமார் எனப் பெயர் திரையில் மின்னியது. துபாயில் வேலை செய்வது போல ஒரு படத்தை வைத்திருந்தான் அவன்.
இவள் அழைப்பை ஏற்று இரண்டொரு வார்த்தைகள் பேசினாள். அவன் எப்படியிருக்கிறான் என விசாரித்தாள். அவனும் இவளது நலத்தை நாடிவிட்டு வேலையைப் பற்றிக் கேட்டான். பின்னர் சில பல நிமிடங்கள் பேசிவிட்டு அவன் அழைப்பைத் துண்டிக்க, இவள் வேலையைப் பார்த்தாள்.
எப்போதும் போல ஜீவாவிற்கு உணவகம், வீடு, வேலை என அதைச் சுற்றியே நாட்கள் நகர்ந்தன. கடைசியாக அவள் தேவாவைப் பார்த்துச் சில வாரங்களே கடந்து போயிருந்தன. சுப்பையா அதோ இதோவென ஒரு மாதத்தைக் கடத்திய பின்னரே பத்தாயிரத்தைக் கொடுத்தார்.
இவளுக்கே கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனது. கிரிஜாவிடம் சில பல முறை திட்டுகளையும் பெற்றுக் கொண்டாள். அவரது கணிப்பு சரி; தானும் மனிதர்களின் குணத்தை, நிறத்தைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என எண்ணினாள்.
தேவா கடைசியாக எடுத்த படத்தின் பிந்தைய தயாரிப்பு பணிகள் முடிந்து நாளை திரைக்கு வர இருக்கிறது. படக்குழுவோடு மக்களும் படத்தைப் பார்க்க வெகு ஆர்வமாக இருந்தனர். அவன் அடுத்தடுத்த படத்தை வெற்றிகரமாக இயக்கி மெல்ல உயர்ந்து வருவதால், நாளுக்கு நாள் அவன் மீதான எதிர்பார்ப்பு மக்களுக்குக் கூடிற்று. அவனுமே அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனச் சிரத்தையுடன் யோசித்து ஒவ்வொன்றையும் செய்தான்.
இந்தப் படத்தை அவன் முழுத் திருப்தியோடு எடுத்து முடித்திருக்க, எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு லாபம் வரும் என எண்ணினான். இருந்தும் ஒவ்வொரு படத்தின் திரையிடலின்போதும் முதல் படத்திற்கு உண்டான பதற்றம் அவனிடம் கொஞ்சமாகத் தென்பட்டது.
“அண்ணா… ஃபர்ஸ்ட் மூவிக்கு நெவர்ஸான மாதிரியே இருக்காத நீ. கண்டிப்பா இந்த மூவி நல்லாருக்கும். நாளைக்கு ஈவ்னிங் ஷோவுக்கு என் ஃப்ரெண்ட்ஸோட போக ப்ளான் பண்ணிருக்கேன். பார்த்துட்டு ரிவ்யூல ஆஹா ஓஹோன்னு சொல்ல சொல்றேன்!” விக்ராந்த் இவனைக் கேலி செய்ய, தேவா அவனை முறைத்தான்.
“அதெல்லாம் என் புள்ளை படம் நல்லாத்தான் எடுத்திருப்பான். எல்லாருக்கும் பிடிக்கும்டா. நீ ஒன்னும் அவனுக்குப் பொய்யான விமர்சனம் பண்ணத் தேவையில்லை!” ரேணுகா சின்னவனின் தோள் தட்டினார். அவன் மேலும் ஏதோ கேலி செய்ய, பெரியவர் அவன் முதுகிலேயே இரண்டு தட்டுத் தட்டினார். அவன் போலியாக அலறினான்.
பிரமிளா தேவாவிற்கு அழைத்துப் பேசினாள். நாளை அவள் கணவன், மாமனாரோடு திரையரங்குக்குச் செல்வதாகக் கூற, இவன் முகத்தில் முறுவல் பிறந்தது. அவன் இயக்கிய முதல் படத்தின் போதும் இவர்கள் இப்படித்தான் நடந்தார்கள் என எண்ணிச் சிரித்தபடியே அவளிடம் பேசி முடித்தான்.
அனிச்சையாக ஜீவா நினைவிற்கு வந்தாள். திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க நேரமில்லை என அவள் கூறிய வார்த்தைகள் நினைவு வர, உபரியாக அவள் தன்னை ஓட்டுநர் போல நடத்திய விதமும் கண்முன்னே வந்து போனது.
என்னவோ, அவளுக்கு தான் அதிகம் இடம் கொடுத்துவிட்டதாக இவன் மனம் யோசித்தது. தேவா எப்போதும் அனைவரையும் தள்ளி நிறுத்திப் பழக்கப்பட்டவன். எல்லோரிடமும் சகஜமாகப் பேசினாலும், பரஸ்பர மரியாதையை எதிர்பார்ப்பான். அவன் வேலையில் எப்போதும் கறார் என்பதால் மற்ற ஊழியர்கள்கூட இவனிடம் நெருங்கிப் பழக மாட்டார்கள். ஆனால், ஜீவா விஷயத்தில் இவனாக இறங்கிச் சென்று அவளிடம் பேசினான்.
அவள் செய்த உதவிக்கு நன்றியோடு உரிய பணத்தையும் கொடுத்தாயிற்று. அவள் தன்னிடம் காண்பித்தது ஒரே ஊர்க்காரன் எனும் கரிசனம்தான் எனத் தெளிவாகப் புரிந்தது. ஜீவா அவளுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறாள். அப்படி இருக்கும்போது அவளுக்கும் தனக்கும் என்ன இருக்கிறது?
எதற்காக அவளிடம் பேச்சு வைத்துக்கொள்ள வேண்டும்? பின்னர், அவள் ஏதாவது பேசினால் இவனுக்குக் கோபம் வந்து தொலைத்தது. அவளைப் பற்றித் தெரிந்துகொண்டு புத்தகமா எழுதப் போகிறோம் எனக் கேலியாக எண்ணியபடியே அவளை ஒதுக்கிவிட்டான்.
இவனாகச் சென்று பேசியதால்தான் அவளுக்குத் தன் மீதான பிம்பம் சரிந்தது போல. இல்லையென்றால், மற்றவர்கள் போல் அவளும் தன்னை மதித்து, மரியாதையாக நடத்தியிருக்கக்கூடும். இனிமேல் யாரிடமும் அவனாக வலியச் சென்று பேசக் கூடாது என உறுதியெடுத்தான் தேவா. தேவையிருப்பவர்கள் தன்னைத் தேடி வரட்டும் என எண்ணிக்கொண்டான். ஜீவாவையும் அந்த வரிசையில் அவன் மனம் தன் போல இணைத்தது.
மறுநாள் எழுந்து குளித்து, உள்ளத்தின் பரபரப்பை அடக்கிவிட்டு நேரே அவனது அலுவலகம் சென்றுவிட்டான் தேவா. மற்ற உதவியாளர்கள் இவனைக் கண்டதும், “ஆல் தி பெஸ்ட் சார்!” என வாழ்த்த, சின்னத் தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டான்.
முதல் காட்சி முடிந்ததும் தொலைக்காட்சியில் படத்திற்கான பின்னூட்டங்கள் வரத் தொடங்கின. முகநூல், புலனம் என மெல்ல அவரவர் கருத்தை முன்வைக்க, அவன் எதிர்பார்த்தபடி நேர்மறையான விமர்சனங்கள் வரவில்லை.
“படம் ரொம்ப மொக்கை… ஓல்ட் கான்செப்ட்.”
“ஒரு டைம் பார்க்கலாம். பட், தேவ்பிரசாத் சார்கிட்டே இதை நாங்க எக்ஸ்பெக்ட் பண்ணலை. ரொம்ப எக்ஸைட்டடா வந்தோம்!”
“ஒரு டைம் பார்க்கலாம். அவ்ளோதான்!”
“யப்பா… தூங்கிட்டேன் நான் பாதியிலேயே!”
ஒவ்வொரு கருத்தாகப் பார்த்தவனுக்குள் அதிருப்தி பரவியது. தயாரிப்பாளர் மாலையில் அழைத்து, “என்ன சார்… உங்களை நம்பிக் கேட்ட பட்ஜெட்டைவிட அதிகமா இன்வெஸ்ட் பண்ணேன். ஆனால், பணம் திருப்பி வராது போல. கான்செப்ட் நல்லா இல்லைன்னு ஹீரோ அப்பவே சொன்னாரு. நான்தான் கேட்கலை!” தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டார்.
இவன் அவரிடம் என்ன சொல்லிச் சமாளித்து வைத்தான் என அவனுக்கே தெரியவில்லை. அன்றைக்கு யாரையும் பார்க்க விருப்பமில்லை எனக் கூறி வீட்டிற்குக் கிளம்பிச் சென்றுவிட்டான்.