தேன் 7.2

கண்ணீரை துடைத்துக் கொண்டே  நடந்தவள் வெகுதூரம் வந்த பின்பே தனது செய்கை மூளையில் உரைத்தது. அவசரமாக வந்த வழியை திரும்பி பார்க்க தலை சுற்றாதது மட்டும் தான் குறை.  பல தெருக்கள் எல்லாமே ஒன்று போலவே தோன்றியது. எங்கிருந்து வந்தோம் என்று புரிபடாத நிலை. மனம் முழுவதும் பயம் கவ்விக் கொள்ள தன்னை தானே நொந்து கொண்டாள். யாரிடம் சென்று கேட்பது எவ்வாறு வினவுவது என்று நினைத்தவளுக்கு அப்பொழுது தான் அலைபேசியை கூட எடுத்து வராதது நினைவு வந்தது.

அவள் அறையிலே மறந்து வைத்து விட, “சரி விடு, அத்தை மட்டும் தான கூப்பிடுவாங்க, என் போன்ல இருந்து பேசிக்கலாம்”  என்ற ராகவ் கூறி விட்டான்.

அந்த கேளிக்கை விடுதி தெருவின் கடைசியில் இருந்தது மட்டுமே அவள் நினைவில் இருந்தது. காரில் வரும் பொழுது ராகவ்வுடன் பேசிக் கொண்டே வந்ததால் வழியெல்லாம் அவள் மூளையில் பதிந்திடவில்லை.

ஏதோ கடலுக்குள் அடியில் மூழ்கிக் கொண்டிருப்பது போல் அவளது மனம் தத்தளித்தது.  வேகமாக  மீண்டும்   திரும்பி நடந்தவள் அவனை விட்டு வெகுதூரம் சென்றிருந்தாள்.

வெளியே வந்த ராகவ்  அந்த தெரு முனை வரை கண்களால்  அலசியவன்,  “ஐயோ! இவ எங்க போனா?” என்று  ஏறக்குறைய ஓடினான். தெருவில் சில கடைகளில் விசாரித்து   அந்த  ஏரியா  முழுவதும் சுற்றியும் அவளை காணவில்லை.

அவனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை அலைபேசி இருந்தாலாவது தொடர்பு கொள்ள முடியும் ஆனால் இப்பொழுது என்ன செய்வது என்று குழம்பி தவித்தவன் விடாமல் தேடினான்.

  அவள் ஒரு புறம் கண்ணீரோடு சுற்ற அவனோ கலக்கத்தோடு  தேடுதல் வேட்டையில் இருந்தான். அவர்கள் வந்ததே மாலை நேரம் இப்பொழுது இருட்டியும் இருந்தது.

‘மோகனா எங்க இருக்க? ஏன்டி என்னை இப்படி படுத்துற’ என்று மனதினுள் அவளை திட்டிக் கொண்டே, “சீக்கிரம் என்கிட்ட வந்திடு” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தவன் கால்களோ இலக்கின்றி பயணித்து. என்ன என்று அவன் கிரகிக்கும் முன்பே சில  நிமிடங்களில் இதெல்லாம் நடந்தேறி விட்டது.

வெகுநேரம் சுற்றியவன் ஒரு கட்டத்தில்  ஓய்ந்து விட  மனதோ  நிலையில்லாமல் அலை பாய்ந்தது.

அவளுக்கும் என்ன செய்வது என்றே புரியாதா நிலை. யாரிடமும் கேட்கவும் அச்சமாக இருந்தது.  கல்லூரியின் பெயர் கூட சரியாக தெரியாத நிலை.  கையில் பணமும் இல்லை.  நன்றாக இருட்ட ஆரம்பிக்க அவளது மனதை பயம் சூழந்து கொள்ள,  “ராகவ்” என்றழைத்து மறுகிக் கொண்டே நடந்தாள். எங்குமே நிற்கவில்லை.

அவனும் பலமுறை அந்த இடத்தை வலம் வந்தும் அவள் கிடைக்கவில்லை. அடுத்த என்ன செய்வது என்று கூட மூளை சிந்திக்க மறுத்தது.   ஒரு வேளை ஹாஸ்ட்டல் சென்றிருப்பாளோ என்றெண்ணியவன்  அவளது அலைபேசிக்கு முயற்சிக்க    அழைப்பு முழுவதுமாக சென்று துண்டாகியது. அவனது உயிர் அவனிடமில்லை. தலையை கோதியவன்    அதிகாலை வரை அந்த இடத்தையே வலம் வந்திருந்தான். சுற்றிய இடத்தையே மீண்டும் சுற்றினான். ஒரு வேளை பப்பில் இருப்பாளோ என்று அதற்குள்ளும் மூன்று நான்கு முறை வலம் வந்து விட்டான்.

என்றுமே கலங்காத அவனது கண்களும் கலங்கி இருந்தது.  வீட்டில் இதை கூறவும் விருப்பமில்லை. தெரிந்தால் அவ்வளவு தான் சரிதா ஊரையே  கூட்டி விடுவார். அதுவும்  அருகில் இருந்தால் கூட உடனே வந்து விட முடியும். பல மைல் தூரத்திற்கு அப்பால் இருப்பவர்களின் நிம்மதியை குலைக்க மனது வரவில்லை. எப்படியாவது அவளை கண்டு விடும் முயற்சியில் அவளவன்.

ஓடி ஓடி ஓய்ந்து கலைத்து மீண்டும் ஓடினான். வாழ்வே அன்றொரு நாளில் வெறுத்தது போன்றதொரு உணர்வு.  ஆனால்  அவளை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தவன்  விடுதிக்கு கிளம்பி விட்டான்.   நேரம் காலம் பார்க்காது அங்கிருப்பவர்களை எழுப்பி அவளது அறையை அடைய   மூடிய கதவே அவனை வரவேற்றது.

நொந்து கொண்டவன் கீழிறங்கி வாசலில் போடப்பட்டிருந்த  நாற்காலியில் அமர்ந்து விட்டான்.  தண்ணீர் தாகமெடுக்க தொண்டையெல்லாம் வறண்டு விட்டது. கண்ணெல்லாம் சிவந்திருக்க அவன் அமர்ந்திருக்கும் நிலையே பரிதாபமாக இருந்தது. அவன் வேண்டாத தெய்வமில்லை.   தெய்வபக்தி இல்லையென்றாலும் அவரிடமும் கூட மன்றாடியது அபலை மனது. மோகனா என்ற பெயரை தவிர அவனது உதடுகள் வேறெதுவுமே உச்சரிக்கவில்லை. அவனை மட்டும் நம்பி மட்டுமே அவளை அனுப்பி இருந்தனர். அந்த நினைவே அவனை துடிக்க செய்ய, எங்கிருக்கிறாளோ என்ற எண்ணம் அவனை சில்லு சில்லாக சிதைய செய்திருந்தது சில மணி நேரங்களில்.

அழுது கொண்டே சுற்றியவளை அங்கிருந்த காவலர்கள் பார்த்து விட அழைத்து விசாரித்தனர்.  கல்லூரியின்  பெயரை மட்டும் கூறினாள் அதை தவிர வேறதுவும் தெரியவில்லை. அவளுக்கு தண்ணீர் கொடுத்து   கல்லூரியின் புகைப்படத்தை அவளிடம்  காட்டி   உறுதி செய்தவர்கள் அவர்களின் மகிழுந்திலே அழைத்து வந்தனர். கல்லூரிக்கு  பின்புறம் சற்று தள்ளி தான் விடுதி இருந்தது. 

அதன் வாயிலே இறக்கி விட அவர்களுக்கு நன்றி கூறியவள்  உள்ளே நுழைந்தாள்.  ராகவ் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

தூரத்தில் இருந்தே கண்டு கொண்டவள் அருகில் செல்ல   யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்தவன் எதிரில் அவனது மோகினி. அவளும் அழுது தவித்து சிவந்து முகத்துடன் கலைந்த கேசத்துடன் தான் நின்றிருந்தாள்.  ஆனால் அவனை கண்ட நொடி அவளது கண்களோ புன்னகைத்தது தாயை கண்ட சேயை போல். அப்படியொரு ஆசுவாசும் இருவரிடமுமே.

அவனது நிலையோ அவளுக்கு மேல் இருந்தது. அவளை இவ்வாறு தவிக்க விட்டோமே என்ற குற்றவுணர்வு அவனை வதைத்திருக்க முழுவதுமாக  உடைந்த நிலையில் தான்  இருந்தான்.

அவனை இது போல் என்றுமே கண்டதில்லை. கண்களில் எப்பொழுதுமே இருக்கும் திமிர் இருந்த இடம் தெரியாமல் போயிருக்க அப்படியொரு கலக்கம் உயிரை வெறுத்த நிலை. சோர்வுடன் நின்றிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top