காதல் 20.1

குருவும் தன்னை தான் பார்க்கிறான் என்று உணர்ந்தவள் சட்டென்று முக பாவனையை மாற்றி மீண்டும் குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.

உள்ளுக்குள் சிறிதான பதட்டம். இது போல எல்லாம் யாருடைய நெருக்கங்களையும் நேரில் கண்டதில்லை.

தாய் தந்தையரிடம்அந்நியோன்யம்நிறையே இருந்தாலும் அதில் அதீத நேசத்தை மட்டுமே இவள் கண்டிருக்கிறாள்‌.

அவர்களுமே அப்படித்தான் பிள்ளைகளின் முன் எவ்வாறு நடக்க வேண்டும் நன்றாக தெரிந்து வைத்திருந்தவர்கள்.

செழியனும் சுசியும் கூட மகிழ் மற்றும் அகிலனை கருத்தில் கொண்டு தான் வீட்டில் நடப்பர்.

இப்போது இத்தனை இறுக்கமாக கட்டி கொண்டு குருவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவளை கண்டு அதிர்ச்சியும் மனதினோரம் சிறிதான வலியும் பரவியது.

குளியலறை சுவற்றில் சாய்ந்து நின்றவள் தன்னை நிலைப்படுத்தி கொள்ள முயற்சித்தாள்.

இங்கு மகிழ் சடுதியில் குளியலறைக்குள் நுழைந்துவிட்டதை கண்ட குரு ஹனியை தன்னிடமிருந்து பிரித்தவன்,

“ப்ச் ஹனி என்ன இது பிகேவியர். ரூம்ல யார் இருக்காங்கன்னு பாக்க மாட்டியா…?” என்று கடின குரலில் வினவ,

சட்டென்று சுற்றும் முற்றும் கண்டவள்,

“அவன் தூங்கிட்டு தான இருக்கான்” என்றிட்டவள்,

“நான் உங்களை பாக்குறதுக்காக போர்டின் ஹவர்ஸ் ட்ராவல் பண்ணிட்டு வந்திருக்கேன். நீங்க என்னடான்னா வந்ததுமே திட்றிங்க” என்று முகம் வாட,

மகிழ் பார்த்துவிட்டதை கூற விரும்பாதவன்,

“மகிழினி வாஷ் ரூம்ல இருக்கா அவ வந்துட்டா என்ன பண்றதுன்னு தான் சொன்னேன்” என்று விளக்கம் அளித்தவன்,

“நீ எப்போ இந்தியா வந்த…? இட் வாஸ் ரியல்லி அ சர்ப்ரைஸ்” என்றிட,

அதில் ஹனியின் முகம் விகசிக்க,

“யெஸ்டர்டெ தான் வந்தேன். என்னவோ உன்னை பாக்கணும் போல இருந்தது அதான் கிளம்பி வந்துட்டேன்” என்று அழகாய் புன்னகைத்தவள்,

“மிஸ் யூ குரு” என்று அவனது கையே பிடிக்க,

“மீ டூ மிஸ் யூ லாட்” என்றவனது பார்வை குளியலறை கதவில் படிந்து மீண்டது.

மனதிற்குள் குளியலறைக்குள் சென்றவள் ஏன் இன்னும் வரவில்லை என்று தான் எண்ணம் ஓடியது.

“ஆப்ரேஷனுக்கு எல்லாம் ரெடி தான…?” என்று ஹனி வினவ,

“ஹ்ம்ம் ஓகே தான். நாளைக்கு மார்னிங் சர்ஜரி” என்று பதிலளித்தபடி நீள்விருக்கையில் அமர ஹனி அவனை நெருங்கி அமர்ந்தாள்.

மகிழ் வெளியே செல்லலாமா? வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்திவிட்டு எவ்வளவு நேரம் இங்கேயே நிற்பது என்று வெளியே வர முடிவு செய்தாள்.

இன்னொரு மனம் நீ சென்றால் அவர்களுக்கு தொந்தரவாக இருப்பாய் என்று மொழிய,

வேறு வழியில்லை சென்று தான் ஆக வேண்டும் என்று ஆழ்ந்த மூச்சை வெளியேற்றிவிட்டு கதவை திறந்து கொண்டு வந்தாள்.

மகிழை கண்டதும் ஹனி, “ஹாய் மகிழ் எப்படி இருக்கிங்க?” என்று ஆர்வமாக வினவ,

“ஹ்ம்ம் நல்லா இருக்கேன்” என்று தானும் சிறிதாக புன்னகைத்தாள்.

“நீங்க எதுக்கும் கவலை படாதிங்க. குரு இருக்கார்ல அவர் எல்லாத்தையும் பாத்துப்பார். கவினுக்கு நல்லபடியா சர்ஜரி நடக்கும்” என்று ஆறுதல் கூற,

மகிழ் ஒரு முறை குருவை பார்த்துவிட்டு ஹனியிடம் தலையசைத்தாள்.

அவள் இன்னும் குளியலறை வாசலிலே நிற்பதை கண்ட குரு,

“இங்க வந்து உட்காரு” என்று மொழிய,

ஹனியும், “ஆமா ஏன் நிக்கிறிங்க. வாங்க இங்க வந்து உட்காருங்க” என்று இருக்கையை காண்பித்தாள்.

“நான் கவின் பக்கத்துல உட்கார்ந்துக்கிறேன்” என்று மெத்தையில் கவினருகே அமர்ந்தாள்.

கதவு தட்டும் ஓசை கேட்க,

குரு, “நான் தான் காஃபி ஆர்டர் பண்ணியிருந்தேன்” என்று எழ முயற்சிக்க,

“நான் போய் வாங்கிட்டு வர்றேன் சார்…” என்று மகிழ் எழுந்திருந்தாள்.

ஊழியர் காஃபி கோப்பைகளை கொண்டு வந்து தர நன்றி கூறி பெற்று கொண்டவள் எடுத்து வந்து குருவிற்கு ஒன்றை கொடுத்துவிட்டு மற்றொன்றை ஹனியிடம் நீட்ட,

“உங்களுக்கு வேண்டாமா? நீங்க எடுத்துக்கோங்க” என்று மறுக்க,

“இல்லை எனக்கு வேண்டாம். நீங்களே எடுத்துக்கோங்க” என்று அவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.

இங்கு ஹனியோ கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு காதலனை கண்டதில் சிறகில்லாது பறந்து கொண்டிருத்தாள்.

முகத்தில் அத்தனை அழகான புன்னகை. அலைபேசியில் பார்ப்பதை விட நேரில் இன்னும் இன்னும் அழகாய் தேவதை போல இருந்தாள்.

வாய் ஓயாது நிறைய பேசினாள்.‌ மகிழுக்கு தான் அமைதியான சுபாவம் கொண்ட குரு சாரிற்கு இப்படி ஓயாது பேசும் காதலியா? என்று ஆச்சரியமாக இருந்தது.

குருவும் ஹனியிடம் ஆர்வமாக பேச துவங்க மகிழுக்கு தான் அங்கே இடைஞ்சலாக இருக்கிறோமோ என்று தோன்ற துவங்கியது.

எழுந்து வெளியே சென்றுவிடலாம் என்று பார்த்தால் அது நன்றாக இருக்காது. அதுவுமின்றிகவினை விட்டு செல்லவும் முடியாது என்ன செய்யலாம் என்று சிந்திக்க,

“ம்மா…” என்று மெல்லிய முணங்கலுடன் கண்விழித்து பார்த்தான் கவின்.

அதில் உள்ளே ஆசுவாசம் பிறக்க,

“கவின்குட்டிஎழுந்தாச்சா…?” என்று மெல்லிய குரலில் வினவி அவனை மடியில் தூக்கி வைக்க,

“ஹ்ம்ம் எழுந்தாச்சு” என்று பதிலளித்தான்.

இவர்களது உரையாடலில் இருவரும் திரும்ப ஹனி,

“ஹே கவின் பேபி எழுந்துட்டிங்களா…? வர்றிங்களா என்கிட்ட…?” என்று சிரிப்புடன் அழைக்க,

புதியவளை கண்டு சிறிதான வெட்கப்பட்ட அந்த இளைய வாண்டு,

“ம்ஹூம்…” என்று தலையசைத்துவிட்டு தாயின் தோளில் முகம் புதைத்தான்.

மகிழ், “கவின் செல்லம் ஆன்ட்டி கூப்பிட்றாங்க பாரு. போ அவங்ககிட்ட” என்று கவினிடம் கூற,

“ஆன்ட்டியா…?” என்று அதிர்ந்து வினவினாள் ஹனிகா.

“அப்புறம் எப்படி கூப்பிட சொல்ல…?” என்று மகிழ் புரியாது வினா தொடுக்க,

“எப்படி கூப்பிட சொல்ல.‌ எப்படி பார்த்தாலும் ஏஜ் டிஃபரன்ஸ் இருக்கு. ஸோ வேற‌ ஆப்ஷன் இல்லை.‌ கூப்பிடட்டும்” என்றுவிட்டாள்.

மகிழ் கூறியும் கவின் திரும்பி பார்க்கவில்லை.

மகிழ், “கவின் இங்க பாரு அம்மாவ பாரு” என்று அழைத்தும் அவன் பதிலளிக்காததால் ஹனி,

“கவின் ஆன்ட்டிக்கிட்ட வந்தா நான் உனக்கு பெரிய சாக்லேட் தர்றேன்” என்று ஒரு பெரிய வெளிநாட்டு இனிப்பை எடுத்து காண்பித்தாள்.

இது கவினிடம் வேலை செய்ய திரும்பி அந்த இனிப்பை ஆர்வமாக பார்த்தான்.

“வேணுமா உனக்கு?” என்று ஹனி வினவ,

“ஹ்ம்ம்…” என்று அவனது தலை மேலும் கீழும் அசைந்தது.

“அப்போ என்கிட்ட வா…” என்று இருகைகளையும் விரித்தாள்.

கவின், “ம்ஹூம்” என்றுவிட்டு மீண்டும் திரும்பி கொள்ள,

“அவன் புதுசா யாராவது வந்தா உடனே அட்டாச் ஆக மாட்டான்” என்று சங்கடமாய் புன்னகைக்க,

“இட்ஸ் ஓகே” என்றவள்,

“கவின் இந்தா வாங்கிக்கோ” என்று இனிப்பை நீட்டினாள்.

error: Content is protected !!
Scroll to Top