அத்தியாயம் – 7
விது அவனை கட்டியணைத்து, “பாய், ஐயம் ஆல்வேஸ் வெயிட்டிங் பார் யூ” என்று நகர மாயா செல்பவளையே வெறித்து அமர்ந்திருந்தாள்.
அவளது இறுகிய முகத்தை கண்டவன், “மோகனா” என்றழைக்க எழுந்து வெளியே செல்ல முற்பட்டாள்.
அவளது எண்ணத்தை உணர்ந்தவனாக அவளது கையை பற்றி தடுக்க முயல, “கையை விடு ராகவ்” என்றவள் பல்லைக் கடிக்க, “முடியாது” என்றவன் பிடியின் அழுத்தம் அதிகமாகியதே தவிர குறையவில்லை.
வலியில் அவளது கண்களில் நீர் தேங்கி விட அவளது கையை விட்டு விட கண்ணீரை துடைத்தவள் வெளியேறி நடக்க ஆரம்பித்தாள். அந்த சூழலை சட்டென்று பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காதல் கொண்ட மனது நிலையில்லாது தவித்தது.
என்ன தான் இந்த நாட்டின் பழக்க வழக்கம் என்றாலும் அதை ஏற்க மறுத்தது அவளது மனது. அவ முத்தம் கொடுத்தா இவன் அமைதியா இருப்பானா? என்று எண்ணமே மனதை வியாபித்திருக்க என்ன செய்கிறோம் என்ற சிந்தனையின்றி நடக்க ஆரம்பித்தாள் வேகமாக.
அவள் அவனுக்காக தான் இவ்வளவு பிடிவாதம் செய்து சரிதாவை எதிர்த்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் ஆனால் இந்த நிகழ்வு முற்றிலுமாக அவளை உடைய செய்திருந்ததது. அவளுடைய வயதிற்கு உரிய பக்குவம் இவ்வாறு சிந்திக்க செய்தது. எதையும் ஆராயாமல்
சிறு குழந்தை போல் கோபம், அதிகமாக நடையின் வேகமும் கூடியது.
ராகவ் அவள் பின்னாலே எழுந்து வர அவன் உடன் படிக்கும் ஷாமிலி இடைமறித்து, “ராகவ், நீ விதுவ என்ன சொன்ன? பாவம் அவ, ரொம்ப அப்செட்டா இருக்கா. ரொம்ப நாள் கழிச்சு வெளிய வந்திருக்கா அது உனக்கு பிடிக்கலையா?” என்று பேச,
“ஷாம்லி மூவ், நான் உன்கிட்ட அப்புறமா பேசுறேன்” என அவளை விலக்க பார்க்க அவள் ராகவ் கையை பிடித்துக் கொண்டாள்.
“ராகவ், இப்பவே நீ வந்து அவளை சமாதானம் செய், அவளோட அம்மாவுக்கு முடியலைன்னு ரொம்ப அழுதிட்டு இருந்தா. நான் தான் சமாதானம் செஞ்சு அழைச்சுட்டு வந்தேன். நீ ஏன் இப்படி பிஹேவ் பண்ற? நான் உன்கிட்ட என்ன சொன்னேன். அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு பிடிக்கலைன்னாலும் நேரடியா சொல்லாம கொஞ்சம் கொஞ்சமா அவாய்ட் பண்ணு, நானும் அவளை மாத்த முயற்சி செய்றேன்னு. உன்னால ஆறுதல் சொல்ல முடியலைன்னாலும் அடுத்தவங்களை நோகடிக்காத” என்று பேச, “ஷாம்லி, ஷட் அப்” என்றான் ஏறிய கோபத்துடன்.
மாயா கூட்டத்தை விலக்கி வெளியேறி விட்டாள். கலக்கத்தோடு அவளையே பார்த்தவன் ஷாம்லி கையை உதற அந்த வேகத்தில் அவள் அப்படியே பின்னால் சென்று விழுந்து விட அந்த இடமே ஒரு நிமிடம் நிசப்தமாகி விட்டது. அவள் லேசாக குடித்தும் இருக்க தன்னை நிலைப்படுத்த முடியவில்லை.
எல்லோரும் அவர்களையே வேடிக்கை பார்த்திட அவர்களின் நண்பர்களும் சூழ்ந்து விட்டனர். ஷாம்லிக்கு கண்கள் கலங்கி விட ராகவ் அவளை தூக்க செல்ல விது வந்து அவளை தூக்கி விட்டாள்.
“ஏன் ராகவ் இப்படி பிஹேவ் பண்ற? உனக்கு என்ன கோபம்னாலும் என்கிட்ட காட்டு அவளை எதுக்கு பிடிச்சு தள்ளி விடுற?” என்று விது கேட்க, “விது, என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாத, பிரச்சனையே உன்னால தான்” என்று பல்லைக் கடித்தவன் அந்த இடத்தை விட்டு விலக எத்தனிக்க இம்முறை விது அவனது கையை பற்றிக் கொண்டாள்.
“நீ பண்ண தப்புக்கு ஷாம்லிக்கிட்ட மன்னிப்பு கேளு” என்றவள் உறுதியாக நிற்க, “விது கையை விடு” என்றான் கட்டுப்படுத்த கோபத்துடன்.
இவர்களது நடவடிக்கையை எல்லோருமே வேடிக்கை பார்க்க ராகவ் அருகில் வந்த அவனது நண்பன், “மச்சான், என்னாச்சு? ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்க,
“நீயே கேளு, உன் ப்ரெண்ட் ஷாம்லிய கீழ தள்ளி அசிங்கப்படுத்திட்டான். மன்னிப்பு கேட்க சொன்னா சார்க்கு ரொம்ப கோபம் வருது” என்று விது அதிருப்தியோடு பேச,
“விது, என்னோட பொறுமைக்கு ஓரளவு தான்” என்ற ராகவ் இழுத்து பிடித்த பொறுமையோடு வெளியேற முயற்சிக்க விதுவோ அவனின் கையை மிக இறுக்கமாக பற்றி இருந்தாள். அவளுக்கு ஷாம்லியை தள்ளி விட்டான் என்ற ஆத்திரமே மித மிஞ்சி இருந்தது.
“ஏய் நீங்க முதல்ல ஓரமா வாங்க” என்று அவனது நண்பர்கள் கூட்டத்தை விலக்கி அழைத்து வர, “ஹேய் அப்புறமா பேசலாம், எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்ற ராகவ் கிளம்ப, “மன்னிப்பு கேட்டுட்டு எங்க வேணாலும் போகச் சொல்லு” என்றாள் இறுகிய குரலில் விது.
பேச்சு நீண்டு கொண்டே செல்ல ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு வேறு வழியின்றி, “சாரி ஷாம்லி” என்ற ராகவ் வெளியேறி விட்டான். ராகவ்விடம் இருக்கும் மிகப் பெரிய கெட்டப் பழக்கம் தன் மீது தவறு இல்லை என்றால் எங்குமே இறங்கி செல்ல மாட்டான் மோகனாவை தவிர.