“ம்மா…” என்று ஆனந்தத்துடன் கையை நீட்டிய கவின் ட்ரிப்ஸ் வலித்ததில்,
“ஷ்…” என்று வலியில் உதடு பிதுக்கினான்.
“அச்சச்சோ கவின் குட்டி பாத்து…” என்று அருகில் வந்து கையை கீழே வைத்தவளுக்கு தன்னையும் மீறி விழிகள் கலங்கியது.
“ம்மா வலிக்கிது…” என்று மீண்டும் கவின் கையை காண்பிக்க கரை கடக்க இருந்த கண்ணீரை முயன்று உள்ளிழுத்து,
“ச்சு ஒன்னுமில்லைடா கண்ணா. சீக்கிரம் சரி ஆகிடும்…” என்று சமாதானம் கூறிய போது கதவு திறக்கும் ஓசை கேட்க திரும்பினாள்.
குரு தான் உள்ளே நுழைந்தான். கவின் குருவை கண்டதும்,
“அப்பா…” என்று மகிழ்ச்சியில் விழி விரித்தான்.
இந்த கள்ளமில்லா அன்பை பெற தான் சென்ன செய்தோம் என்று அந்த கணம் அவனுக்கு தோன்றியது.
கவின் மறந்து மீண்டும் கையை தூக்க முயற்சிக்க,
“கையை தூக்க கூடாதுடா பட்டு” என்று மகிழ் கூற,
“ப்பா இது வலிக்கிது…” என்று கண்கள் கலங்கி உதடு பிதுக்கி கூறியவனை கண்டு குருவிற்குள் ஒன்று உருகியது.
“என்ன செல்லத்துக்கு வலிக்கிதா…?” என்று கேட்டபடி மெத்தையில் அமர்ந்து மடியில் கவினை தூக்கி வைத்தவன்,
“நர்ஸ் வந்ததும் இதை கழட்ட சொல்றேன். அப்புறம் வலிக்காது” இந்த மொழிந்தான்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன்,
“நர்ஸ் எப்போ வருவாங்க?” என்றிட,
“இதோ டென் மினிட்ஸ்ல வந்திடுவாங்கடா பட்டு” என்று பதில் அளித்தான்
“ஹான்…” என்ற கவின்,
“அப்புறம் பா. ஸ்கூல்ல கீழே விழுந்துட்டேன். இங்கயும் வலிக்கிது” என்று அடிப்பட்ட இடத்தை காண்பிக்க,
“அங்கேயும் வலிக்கிதா…? டாக்டர் வந்ததும் வலிக்காம இருக்க எதாவது பண்ண சொல்லுவோம்” என்று சமாதானம் கூறினான்.
அதன் பிறகு விடயம் அறிந்த கோதையும் பிறை சூடனும் மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.
அவர்களை கண்டதும் மீண்டும் மகிக்கு அழுகை கோதை தான் தாயாக இருந்து மகிக்கு ஆறுதல் கூறினார். அம்முவும் எழிலுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டாள்.
குரு மருத்துவரிடம் பேசி கவினுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளையும் அறிவுரைகளையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டான்.
குரு சிகிக்சைக்கு ஆயத்தம் மற்றும் பணம் எல்லாவற்றையும் அன்றே தயார் செய்திருந்தான். ஆனால் இதயம் மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கியமான ஒன்று இதயம் தானம் தானே. அதை எல்லாம் பணத்தை வைத்து வாங்கிவிட இயலாதே…
அதற்கு தான் நாட்கள் சென்றது. முன்பே அமைதியாக இருந்த மகிழ் இப்போது மிகவும் அமைதியாகி போனாள்.
அகிலனும் மறுநாளே வந்துவிட்டான். தம்பியை கண்டு தான் கலங்கினாலும் தமக்கையாக அவனுக்கு ஆறுதல் கூறி யாவையும் குரு பார்த்து கொள்வதாக மொழிந்து அனுப்பி வைத்தாள்.
இருந்தும் அகிலன் வாரத்தில் இரண்டு நாட்கள் வந்துவிட்டு சென்றான்.
நாட்கள் சென்றது வாரங்கள் கடந்தது. உறுப்பு தானம் செய்பவர் தான் கிடைக்கவில்லை. காலம் செல்லச் செல்ல மகிழினியின் பயம் அதிகமானது அது அவளது முகத்திலும் செய்கையிலுமே தெரிந்தது.
அறையை விட்டு கூட வெளியே வராது எந்நேரமும் கவினுடனே இருந்தாள். அவனையும் பெரிதாக விளையாட அனுமதிக்கவில்லை. தொலைக்காட்சியில் எதாவது பொம்மை படம் பார்க்க வைத்தாள்.
இருபத்தி நான்கு மணி நேரமும் கவினுடன் தான். இரவு கவின் லேசாக அசைந்தாலும் இவள் பட்டென்று எழுந்து கொள்வாள். நன்றாக உறங்குகிறான் என்று தெரிந்த பிறகு தான் மீண்டும் படுப்பாள்.
நாளாக நாளாக அவளது நடிவடிக்கை வீட்டில் உள்ளவர்களுக்கே சிறிது அச்சத்தை விளைவித்தது.
சரியாக ஒரு மாதம் கடநத பிறகு உடலுறுப்பு தானம் மூலம் கவினுக்கு இதயம் கிடைத்தது. அதுவும் பல கட்ட பரிசோதனைக்கு பின்னர் தான் அவன் உடலில் பொறுத்த முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.
பிறகு முரளியின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட மும்பைக்கு தான் இருவரும் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
சில மணி நேர பயணங்களில் இருவரும் மும்பை விமான நிலையத்தை அடைந்திருக்க பரிசோதனை முடிந்து வெளியே வந்தனர்.
அங்கு இவர்களுக்காகவே காத்திருந்த வாகன ஓட்டி அவர்களை ஏற்றி கொண்டார்.
முரளி தான் தனக்கு இன்று முக்கியமான அறுவை சிகிச்சை இருப்பதால் தன்னால் வர இயலாது என்று வருந்தி கூறி தன்னுடைய ஓட்டுநரை அனுப்பி இருந்தான்.
முரளி தன்னுடைய வீட்டில் தங்குமாறு கேட்டு கொள்ள குரு மறுத்துவிட்டு ஒரு பெரிய தங்கும் விடுதியில் அறையை பதிவு செய்திருந்தான்.
ஓட்டுநர் அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் முன் வாகனத்தை நிறுத்த மூவரும் உள்ளே சென்றனர்.
குரு பதிவு செய்திருந்த அறை ஆறாவது தளத்தில் இருந்ததால் மின்தூக்க்கியில் அறையை அடைந்னர்.
கவின் உறங்கி கொண்டிருந்ததால் குருவின் தோளில் தான் இருந்தான். உள்ளே சென்றதும் கவினை அலுங்காது மெத்தை மேல் படுக்க வைத்தவன் தனக்கு மாற்றுடையை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
மகிழ் வழக்கம் போல கவினருகே அமர்ந்து கொண்டாள்.
குரு பயண களைப்பு தீர குளித்து வெளியே வர மகிழ் அமர்ந்த வாக்கிலே லேசாக கண்ணயர்ந்திருந்தாள்.
அவளது ஓய்ந்த தோற்றத்தை கண்டு குருவிற்கே பாவமாக இருந்தது.
கடந்த ஒரு மாத காலமாக இவளது மனப்போராட்டங்களை கண்டு கொண்டு தானே இருக்கிறான்.
உடல் உறுப்பு தானத்திற்காக தானே வேலையெல்லாம் விட்டுட்டு ஒரு மாதம் அலைந்தோமே… உடமைப்பட்ட இவளுக்கு எவ்வளவு துன்பமாக இருந்திருக்கும்.
கவினுடைய பெற்றோர் இருந்திருந்தால் கூட இவ்வளவு துன்பம் பட்டிருப்பார்களோ என்று ஒவ்வொரு முறையும் இரவு அவள் பதறி எழும் சமயம் தானும் உறக்கம் கலைந்திடும் குருவிற்கு தோன்றும்.
இமையாது அவளையே பார்த்திருந்தான். கவின் தூக்கத்தில் லேசாக புரள அதில் பதறி சடுதியில் கண் விழித்த மகிழ் கவின் நன்றாக உறங்குவதை உறுதி செய்துவிட்டு நிமிரந்த போது தான் குருவின் அரவத்தை உணர்ந்தாள்.
குரு, “போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வா. நான் அவனை பாத்துக்கிறேன்” என்று முகத்தில் எந்த உணர்வும் இல்லாது கூற,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள் மாற்று உடையுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.
குரு கவினருகே அமர்ந்து இரண்டு குளம்பியை எடுத்து வருமாறு விடுதி பணியாளருக்கு அழைத்து கூறியவன் அலைபேசியில் வந்த முக்கிய செய்திகளுக்கு மட்டும் பதில் அளித்து கொண்டிருந்தான்.
ஐந்து நிமிடங்கள் கடந்து அழைப்பு மணி அழுத்த தான் கூறிய குளம்பி தான் வந்துவிட்டது என்று எண்ணி குரு கதவை திறக்க சடுதியில் முகம் முழுவதும் புன்னகையுடன் நீர் வீழ்ச்சி போல ஓடி வந்து குருவை அணைத்திருந்தாள் ஹனிகா.
குரு அவளை எதிர்பாராது அதிர்ந்து நோக்க,
“மிஸ் யூ சோ மச் குரு…” என்று அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள் மீண்டும் இறுக்கமாக அணைத்து கொள்ள,
அதே சமயம் குளியலறையில் இருந்து வெளியே வந்த மகிழுக்கு இந்த காட்சி பட அதிர்ந்து நின்றுவிட்டாள்.
அந்த விநாடி குருவின் பார்வையும் சடுதியில் அவள் புறம் திரும்பி அவளது அதிர்ந்த விழிகளை தான் நோக்கியிருந்தது…