தேன் 6.1

அத்தியாயம் – 6

  அவன் அருகில் நெருங்கியவள் வேகமாக அவனை அணைத்துக் கொண்டாள். அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது இதயதுடிப்பு  நிமிடத்தில் இரட்டிப்பாகி விட அவளது அருகாமை ஆடவனை சட்டென்று தடுமாற செய்தது.

“மோகனா” என்று அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயல  அழுக ஆரம்பித்து விட்டாள். 

“ஹேய் என்னாச்சு?” என்றவன் அருகிலிருக்கும் நாற்காலியில் அமர வைத்து தண்ணீர் கொடுக்க சிறிது ஆசுவாசம் அடைந்தவளுக்கு  சில நிமிடங்கள் என்ன நடந்தது என்றே புரியவில்லை.  அவனை பார்த்து உணர்ச்சி வேகத்தில் இவ்வாறு செய்து விட்டாள்.    இப்பொழுது அவனது முகத்தை காண தயக்கமாக இருந்தது.  தலையை குனிந்து அமர்ந்திருந்தாள்.

எப்பொழுதுமே அவர்களது நெருக்கம் என்பது பார்வையை தாண்டியதில்லை. ராகவ் எப்பொழுதுமே கவனமாக இருப்பான். அவளது படிப்பில் எந்த  இடத்திலும் தன்னாலோ தன் காதலாலோ  தேங்கி விடக் கூடாது என்பதில் உறுதியாகவே  இருந்தான். ஆனால் இந்த ஒரு வருடத்தில் அவனது எண்ணத்தை அவள் உடைத்து கொண்டிருந்தாள். அவனது நினைவுகளே அவளை  இவ்வளவு தூரம் தாக்குதல் செய்து சிதைத்திருந்தது.

“மோகனா, ஆர் யூ ஓகே?” என்றவன்  அவளது கையை இறுக பற்றிக் கொள்ள  ஒரு வித நடுக்கத்துடன் தான் இருந்தாள். அவளது மூளை வெகுவாக குழம்பி இருந்தது.  சரிதாவின் அழுகை அவளை ஒரு உலுக்கு உலுக்கி இருந்தது எனலாம்.  தான் தப்பு செய்து கொண்டிருக்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சி அவளுள் மெதுவாக துளிர் விட்டிருந்தது.

“ஐயம் ஓகே” என்றவள்  மெதுவாக தலையாட்ட, “லெட்ஸ் கோ” என்றவன்  அவளது கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு நடக்க அவன் பின்பு சென்றாள்.  அந்த சூழல் அவளை அதிகமாகவே அச்சுறுத்தியது.  ஏதோ தெரியாத இடத்தில் தொலைந்து விட்டது போன்றதொரு உணர்வு.  வேகமாக நெருங்கி அவனது கையை பற்றிக் கொள்ள திரும்பி பார்த்தவன் அவளது விழிகளில் தெரிந்த  மிரட்சியால்,  “எல்லாமே பழகிடும்” என்று சமாதானம் கூறி அழைத்துச் சென்று மகிழுந்தில் ஏற்றினான்.

  பின்புறம் இருவரும் ஏறிக் கொள்ள  அது அவள் தங்கவிருக்கும் விடுதியை நோக்கி சென்றது.  ராகவ் அலைபேசியை எடுத்து சரிதாவிற்கு அழைத்து, “அத்தை அவ வந்துட்டா, நான் பார்த்துக்கிறேன்” என்று கூற   சரிதா இருவரிடமும் பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.

கல்லூரிக்குள்ளே   மாணவர்கள் மாணவியர்களுக்கென்று தனியாக தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தது.  வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள்  அங்கு தங்கிக் கொண்டனர். சிலர் தங்களது விருப்பம் போல் வெளியிலும் தங்கிக் கொண்டனர்.

ராகவ் அதற்கு பிறகு அவளிடம் எதுவும் பேசிட விளையவில்லை. என்ன தான் அவள் தனக்காக வந்திருக்கிறாள் என்றாலும் இது மிகவும் அதிகப்படியாகவே தோன்றியது.  சரிதா புலம்பியதை அவனறிவான். சிறுவயதிலிருந்தே பார்த்திருந்தததால்  அவள் மீதான அவரின் பற்று அவனையே வியக்க செய்திருக்கிறது. 

     அவனது மனதை  பலவித எண்ணங்கள் ஆக்கிரமித்திருக்க     யோசனையோடு அவளையே பார்த்திருந்தான். அவளோ அவனை கவனிக்காது வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்.  

சிறிது நேரத்தில் ஒரு இடத்தில்  வண்டி நிற்க  இருவரும் இறங்கினார்கள். அவளது பொருட்களை இறக்கி வைத்து  பணத்தை கொடுத்து ஓட்டுநரை அனுப்பியவன்,  “மாயா, இதான் நீ தங்க போற ஹாஸ்ட்டல்.  இன்னும் இரண்டு நாள்ல உனக்கு க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க.  எனக்கு  இன்னைக்கு லேப் இருக்கு. நான் இப்ப கிளம்பிடுவேன், ஆப்டர்நூன்   தான் வருவேன். நீ சாப்பிட்டு ரூம்ல ரெஸ்ட் எடு” என்றவன் அவள் கையிலிருந்த அலைபேசியை வாங்கி தான் ஏற்கனவே  வாங்கி வைத்திருந்த சிம்கார்டை அதில் போட்டு  அவளிடம் கொடுத்தான்.

“என் நம்பர் இருக்குல்ல, ஏதாவது எமர்ஜென்ஸினா கூப்பிடு. பக்கத்தில தான் காலேஜ் வந்திடுவேன்” என்று கூறி வரவேற்பறை சென்று திறவுகோல்  வாங்கி வந்து அவள் கையில் கொடுத்தான்.

அவள் முகம் இன்னும் தெளியாமல் அப்படியே இருக்க, “என்னாச்சு மோகனா?” என்று அவளை நோக்க,   அந்த சூழலை நினைத்து  சட்டென்று பெண்ணின் கண்களில் நீர் தேங்கி விட்டது.

“உப்ஸ்” என்று பெருமூச்சு விட்டவன்,  “என்ன தான் டி உன் பிரச்சனை? எதுக்கு இப்ப அழுதுட்டு இருக்க? இதுக்கு தான் உன்னை  அங்கே படினு சொன்னேன். கொழுப்பெடுத்து மார்க் குறைச்சு வாங்கி எல்லாரையும் கஷ்டப்படுத்தி இங்க வந்து நிற்கிற” என்று சிடுசிடுத்தான். அவனுக்கும் வகுப்பிற்கு நேரமாகிக் கொண்டிருந்தது. ராகவ் வேகமாக கைக்கடிகாரத்தை பார்க்க  கண்ணீரை துடைத்தவள்   தனது உடைமையுடன் நகர ஆரம்பித்தாள். அவளது அழுத முகம் அவளை தாக்க கண்களை மூடி திறந்தவன்,

“சரி ப்ரெஷ்ஷாகிட்டு வா, வெளியில போகலாம். நீ டிஸ்டர்ப்பா இருக்கனு நினைக்கிறேன்” என்று கூற அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் கூறாது படியேற ஆரம்பித்தாள்.

‘படுத்துறாளே ராட்சசி, மோகினி பிசாசு’ என்று அவளை மனதினுள் கடிந்தவன் வேக எட்டுக்களில் அவளை அடைந்து கையை பிடித்து நிறுத்த, “உங்களுக்கு நேரமாச்சுன்னா கிளம்புங்க” என்றாள்.

அவன் கையை விடாது  அவளையே பார்க்க கையை உருவியவள், “க்ளாஸ் போய்ட்டு வாங்க, நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றவள் அதற்கு மேல் நிற்காமல் படியேறி விட்டாள்.

அவள் செல்லும் வரை நின்று பார்த்தவன்   கிளம்பி விட்டான்.  ஆனால் மனம் முழுவதும் அவளின் நினைவு மட்டுமே.

  மேலே வந்தவள்  கையிலிருந்த திறவுகோலில் அறையின் எண்ணை  பார்த்து  சென்று கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.  ஒருவர் மட்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் படுக்கையுடன் கூடிய  சற்று விசாலமான அறை தான். உள்ளே வந்து  பையை வைத்து  அப்படியே படுக்கையில் விழுந்தவள் முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டாள். அவளது மனதிற்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே புரியாத நிலை.

error: Content is protected !!
Scroll to Top