“
“காம் டவுன் மிஸஸ் மகிழினி. பர்ஸ்ட் நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்றவர்,
“கவின ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது உங்களுக்கு பிக்ஸ் மாதிரி எதுவும் வந்துச்சா…?” என்று வினவ,
“டாக்டர் அது கவின் என் என்னோட சொந்த பையன் இல்லை. என் அண்ணன் அண்ணியோட பையன்…” என்று அச்சத்துடன் மொழிய,
“ஓ…” என்று யோசனையுடன் இழுத்தவர்,
“சரி கவினோட அம்மாக்கு பிக்ஸ் எதுவும் வந்ததா…?” என்று வினா தொடுக்க,
“இ.. இல்லை டாக்டர்”
“ப்ரெக்னன்ட்டா இருக்கது தெரியாம எதாவது மருந்து சாப்பிட்டாங்களா…? லைக் பீவர் அதுக்கு மாதிரி”
“நோ டாக்டர் அண்ணி பர்ஸ்ட் பார்டி ஃபைவ் டேஸ்லயே ப்ரெக்னன்சி கன்பார்ம் பண்ணிட்டாங்க”
“ஓ… உங்க அண்ணியோட ப்ரெக்னன்சி ரிப்போர்ட்ஸ் இப்போ இருக்கா…?”
“இ.. இல்லை டாக்டர். அது எல்லாம் ஒரு ஆக்ஸிடென்ட்ல மிஸ் ஆகிடுச்சு”
“இப்போ கவினோட பேரண்ட்ஸ்?”
“அவங்களும் இப்போ இல்லை” என்று அழுகையை அடக்கி கூறினாள் மருத்துவர் இவ்வளவு தூரம் வினவும் போதே ஏதோ பெரியதாக ஒன்று என்று புரிந்தது.
“மிஸஸ் மகிழினி கவினுக்கு இருக்கது கன்ஜெனிட்டல் ஹார்ட் டிசிஸ். அதாவது இதயத்தில இருக்க நாலு சுவர்ல ஒன்னு முழுசா வளராம இருக்கது. இது மோஸ்ட்லி ப்ரெக்னென்சி டைம்லயே தெரிஞ்சிடும். ஆனால் உங்களுக்கு தெரியலைனு சொல்றிங்க” என்றிட,
“டாக்டர் அவன் ப்ரீமெச்சூர் பேபி டாக்டர். அவன் பிறக்கும் போது நான் கொஞ்ச சின்ன பொண்ணு. எங்க வீட்ல இருக்கவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. என்கிட்ட தான் சொல்லல போல” என்று அழுகையை வெகு சிரமப்பட்டு அடக்கி,
“டாக்டர் இதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு தானே கவினை கவினை…?” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
“ப்ரீ மெச்சூர் பேபி…?” என்று கேள்வியுடன் நிறுத்தியவர்,
“இதுக்கு ஒரு ஆப்ஷன் இருக்கு. கவினுக்கு அடுத்து இன்னொரு பேபி பிறந்தா அந்த பேபியோட தொப்புள் கொடியில இருந்து ஸ்டெம் செல் எடுத்து இன்ஜெக்ட் பண்றது. அப்படி பண்ணிட்டா இதய சுவர் வளர்ந்து தானா சரியாகிடும். பட் கவினோட பேரண்ட்ஸ் இறந்திட்டதால அதுக்கு சேன்ஸ் இல்லை” என்றிட
“டாக்டர் இதுக்கு வேற வழியில்லையா?” என்று வினவிய மகிழினி ஆயிரம் பாகங்களாக சிதறி கொண்டிருந்தாள்.
குடும்பத்தினர் தன்னிடம் இதனை மறைத்துவிட்டிருக்கின்றனர் என்பதையே அவளால் ஏற்க இயலவில்லை.
“இருக்கு ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்டேஷன். பட் அது ரொம்ப காம்ப்ளிகேட்டடான விஷயம். டோனர் கிடைக்கணும். அவங்களோட திசு கவினோடதோட மேட்ச் ஆகணும். இன்னும் நிறைய இருக்கு. இதுக்கெல்லாம் எப்படியும் மினிமம் பிஃப்டி லேக்ஸாவது தேவைப்படும்” என்று கூறு முடிக்க,
மகிழ் உயிரோடு மரித்திருந்தாள். மருத்துவர் கூற கூற இதயத்தினோரம் பெரிதான இரைச்சல் ஒன்று அவளை நிலை குலைய செய்தது. கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.
“நீங்க உங்க பேமிலி மெம்பர்ஸ்கிட்ட பேசிட்டு சீக்கிரமா ஒரு முடிவை சொன்னிங்கன்னா ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணலாம்” என்றிட,
தலையசைத்து விட்டு வெளியே அரை உயிராக நடந்து வந்தவள் அப்படியே சரிந்து அமர்ந்துவிட்டாள்.
எதுவுமே புரியவில்லை மருத்துவர் கூறிய வார்த்தைகளே எதிரொலித்தது.
ஐம்பது லட்சம் எப்படி புரட்ட போகிறேன். எப்படி என் பிள்ளையை காப்பாற்ற போகிறேன் என்று வேதனையில் உழன்றவள் கையில் இருந்த அலைபேசியை எடுத்து குருவிற்கு அழைப்பை விடுத்தாள்.
குரு ஒரு முக்கியமான சந்திப்பில் இருந்தான். மகியின் அழைப்பை கண்டதும் இவள் எதற்கு இந்நேரத்தில் அழைக்கிறாள் என்று யோசனை வந்தாலும் மிகவும் முக்கியமான சந்திப்பு என்பதால் முடிந்ததும் பேசிக்கொள்வோம் என்று அழைப்பை துண்டித்தான்.
அழைப்பு துண்டிக்கப்பட்டதில் சோர்ந்து போனவள் மீண்டும் அழைப்பை விடுத்தாள்.
ஒரு முறை துண்டித்த போதும் மீண்டும் அழைக்கிறாளே என்று சிறிது எரிச்சல் வர ‘கால் யூ பேக்’ சென்று செய்தி அனுப்பியிருந்தான்.
ஆனால் மகிழ் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. மீண்டும் அழைத்தாள்.
“ஒன் மினிட்…” என்றுவிட்டு அழைப்பை ஏற்றவன்,
“மகிழ் நான் மீட்டிங்கில் இருக்கேன். ஒன் டைம் கால் கட் பண்ணா புரியாதா…? மெசேஜ் பண்ண பிறகும் அகெய்ன் கூப்பிட்ற இடியட்” என்று கடித்த பற்களிடையே வார்த்தைகளை துப்ப,
மறுமுனையில் வார்த்தை வரவில்லை. விசும்பல் மட்டுமே வந்தது அதில் சற்று நிதானித்தவன்,
“மகிழ் என்னாச்சு?” என்று புருவம் நெறிக்க,
அவளது விசும்பலும் அழுகையும் பெரிதாகியது.
“மகிழ் அழாம என்னாச்சுனு சொல்லு” என்று குரு அதட்ட,
“கவின் கவின்…” என்றவள் தேம்பினாள்.
“கவினுக்கு என்னாச்சு?” என்ற குருவிற்கும் பதட்டம்.
“கவினுக்கு முடியலை ஹாஸ்பிட்டல்” என்று திக்க,
அவள் நிலையை உணர்ந்தவன் வேறு எதுவும் வினவாது,
“எந்த ஹாஸ்பிட்டல்?” என்று மட்டும் வினா தொடுத்தான்.
“ஈஸி க்யூர்” என்று கூறியதும்,
“ஓகே இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்” என்றவன் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு விரைந்திருந்தான்.
குருவிற்கும் மகிழினியின் அழுகையில் உள்ளுக்குள் பதட்டம் தான்.
சரியாக பத்து நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு நுழைய வேரறுந்த மரம் போல கீழே சுவற்றின் ஓரம் ஒரு ஆதரவற்ற தோற்றத்தில் அமர்ந்து இருந்தாள் மகிழினி.
குருவிற்கு அவளது நிலையை கண்டு உள்ளம் பதறியது. இப்படி அமரும் அளவிற்கு கவினுக்கு என்ன ஆயிற்று என்று மனம் அடித்து கொள்ள அவளருகே விரைந்தவன்,
“மகிழினி” என்று அழைத்ததும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல சட்டென்று எழுந்தவள் அழுகையுடன் அவனை அணைத்து கொண்டாள்.
குரு, “மகிழ் என்னாச்சு ஏன் இப்படி இருக்க?” என்று வினவ,
அவளிடம் பதிலில்லை. ஒரு பெரிய அழுகை கேவலுடன் வெளிப்பட அவனை இறுக்கி கொண்டவள்,
“கவினை கவினை எப்படியாச்சு காப்பாத்தி கொடுங்க. அவன் இல்லைன்னா எனக்கு வாழ்க்கை இல்லை” என்று தேம்பி கொண்டே சொல்ல,
“மகிழ் பர்ஸ்ட் கவினுக்கு என்னாச்சு சொல்லு?” என்று தன்னிடமிருந்து பிரித்தெடுத்து வினா தொடுக்க,
“அது கவினுக்கு கன்ஜெனிட்டல் ஹார்ட் டிசிஸாம்…” என்று நடந்தவற்றை கூறி,
“எனக்கு என் புள்ளை வேணும். ப்ளீஸ் அவனை எப்படியாவது காப்பாத்தி கொடுங்க. அவன் இல்லைன்னா நான் செத்திடுவேன். ட்ரீட்மெண்ட்க்கு ஐம்பது லட்சம் செலவாகுமாம். அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போவேன்” என்று கதறியவள்,
“இன்னும் இருபது வருஷம் கூட உங்களுக்கு வொஃய்ப்பா நடிக்கிறேன். என் பையனை எனக்கு காப்பாத்தி கொடுங்க” என்று அவனது காலில் விழுந்திருந்தாள்.
குரு “மகிழ் என்ன பண்ற?” என்று ஏகமாக அதிர,
“என் வாழ்நாள் முழுக்க கூட உங்ககிட்ட நான் வேலை பாக்குறேன். என் பையனை எனக்கு முழுசா காப்பாத்தி கொடுத்திடுங்க. ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அவனது காலை இறுக பிடித்து கொண்டவளது கண்ணீர் அவனது காலில் விழுந்தது.
அதில் இன்னும் அதிர்ந்தவன்,
“மகிழ் இப்போ எழ போறீயா இல்லையா…?” என்று தானே அவளை குனிந்து தூக்கிவிட,
“ப்ளீஸ் என் பையனை காப்பாத்தி கொடுங்க” என்றவாறு அப்படியே அவன் மீது மயங்கி சரிந்திருந்தாள்…