தேன் 5.1

அத்தியாயம் – 5

அவள் கிளம்புவதற்கு முதல்நாள்  ராகவ் அழைக்க,  எடுத்து விட்டாள். அவள் வேண்டுமென்றே தான் மதிப்பெண் குறைவாக எடுத்திருக்கிறாள் என்பது  அவனுக்கு நன்றாக புரிந்தது.  அவளை பற்றி அவன் அறியாததன்றோ!

“ஏன் டி இப்படி பண்ண?” என்று கேட்க  பதில் கூறாது அமர்ந்திருந்தாள்.

“ஏய் வாயில என்ன  கொழுக்கட்டையா வச்சிருக்க? எனக்கு தான் தலையெழுத்து எல்லாரையும் விட்டு இவ்வளவு தூரம் வந்து கஷ்டப்படுறேன். நீ ஏன் டி வேணும்னே இந்த மாதிரி பண்ற?  நல்லாவா இருக்கு? அத்தை அன்னைக்கு போன் பண்ணி ரொம்ப அழுகுறாங்க” என்று கூற,

“என்னால தான உங்களுக்கு இந்த நிலைமை. அன்னைக்கு நீங்க சண்டை போடலைன்னா அவன் உங்களை ஆக்ஸிடென்ட் பண்ணியிருக்க மாட்டான்ல்ல” என்று உணர்ச்சி வேகத்தில் உளறியவள் நாக்கை கடித்தாள். ஆம், ராகவை  பொறுத்தவரை இந்த விபத்து எதார்த்தமாக நடந்தேறியது. இந்த நிமிடம் வரை  அப்படிதான் நினைத்திருந்தான்.

கோபத்தில் கண்கள் சிவக்க, “அப்ப நீ வேணும்னே தான் என்கிட்ட மறைச்சிருக்க” என்றவனின் ரௌத்திர விழியை காணாது பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

“மோகனா” என்று சற்று  அதட்டலாக அழைத்திட நிமிர்ந்து அமர்ந்தாள்.

“ஏன் சொல்லலை? அங்க  இருந்திருந்தா  அவனுங்களை” என்று பல்லைக் கடிக்க,

“சொல்லி இருந்தா  திரும்பி போய் அடிச்சுட்டு வந்திருப்பீங்க. அப்புறம் அவங்க உங்களை அடிப்பாங்க”  என்றாள் சற்று ஏறிய கோபத்தில்.

“சரி அது இருக்கட்டும், நீ  இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கி இருந்தா அங்கே பெஸ்ட் யூனிவர்சிட்டில்ல கிடைச்சிருக்கும்.  அத்தை மாமாக்கும் இவ்வளவு ப்ரெஷர் இருந்திருக்காதில்லை” என்று கேட்க,

“ப்ளைட் அங்க எத்தனை மணிக்கு லேண்ட் ஆகும்” என்றாள். 

“மோகனா” என்று பல்லைக் கடித்தவன் அழைப்பை துண்டிக்க  லேசான புன்னகை படர்ந்தது அவளது இதழில்.  அவன் தொடங்கிய ஆட்டத்தை அவள் நடத்திக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் அவன் இதெல்லாம் நடந்து விடக்கூடாது என்றே மிக கவனமாக இருந்தும் இப்படி வந்து நின்று விட்டாள் அவனது மோகினி மாயமோகினி. சில இடங்களில் பிடித்தம் எந்த எல்லை வரை வேண்டுமானலும் அழைத்து சென்று விடுகிறது மனித மனதை.

கிருபாகரன் மூலம் தான் எல்லா ஏற்பாடும் நடந்தேற,  “சரிதா, அதான் ராகவ் இருக்கான்ல்ல பார்த்துப்பான். நீ ரொம்ப வொர்ரி பண்ணாதம்மா” என்று அவரை தேற்ற,  “இல்லைண்ணா, அவன் பையன் ஆனா இவ? பிறந்ததுல இருந்து எங்க அம்மா வீட்டில கூட தங்க விட்டதில்லை. என் கைக்குள்ளே வைச்சு வளர்த்திட்டேன். ஆபீஸ் போனாலும் இவளை டியூசன் அழைச்சுட்டு போகணும், வீட்டுக்கு வந்திட்டாளா? என்ன பண்றா இதை தவிர என் மண்டையில எதுவுமே ஓடாது. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. முடியலைண்ணா ஒரே பொண்ணு” என்று முகத்தை மூடி அழுக ஆரம்பித்தார் சரிதா.

“ஐயோ! சரிதா, என்ன இது சின்ன பொண்ணு மாதிரி.  ஐஞ்சரை வருஷம் தானா? பார் எவ்வளவு வேகமா ஓடுதுனு. சீக்கிரமே மாயா குட்டி டாக்டரா வரப் போறா. நானும் ராகவ் போனப்ப இப்படி தான் இருந்தேன். அப்புறம் ஓரளவு பழகிடுச்சு” என்ற தேன்மொழி அவரை அணைத்துக் கொண்டார்.

விமானநிலையத்தில் வைத்து கூட, “மாயா நீ கண்டிப்பா போகணுமா? நீ படிக்கவே வேண்டாம். வீட்டிலே இரு, அம்மா உன்னை திட்ட மாட்டேன்” என்றெல்லாம் பிதற்ற ஆரம்பிக்க   மாயாவின் நிலை இருதலை கொள்ளி எறும்பானது.

மகேஷை விட சரிதாவை அதிகமாவே பிடிக்கும்.  படபடவென பேசினாலும் தவறாக இராது. எப்பொழுதுமே அவளை சுற்றியே எண்ணம் கொண்டவர். எங்கு சென்றாலும்  மகளுகளின் தேவைகளை சரியாக செய்து விடுவார். அவரால் வர முடியாத சூழல் என்றால் தேன்மொழி இல்லையென்றால் பக்கத்து வீட்டுக்கு அழைத்து அவளது தேவையை பூர்த்தி செய்திடுவார். அன்பில் பலவிதம் அதில் சிலது இவ்வாறே அடிதடியான அன்பு.

அவளும் அவரை கட்டிக் கொண்டு அழுதாள்தான் ஆனால் முடிவில் பின் வாங்கவில்லை. அவனை காணும் ஆர்வத்தில்  ஆர்பாட்டம் செய்து   புறப்பட்டு விட்டாள் ஆனால் கிருபா முதலிலே அவளிடம் “நிறைய டொனேசன் கட்டி தான் உன்னை சேர்க்க போறோம்.  கட்டின பின்னாடி வேண்டாம்னு சொன்னா திருப்பி தர மாட்டாங்க மாயா, நல்லா யோசிச்சுக்கோ. நீ அம்மா,அப்பாவ விட்டு இருந்திருவியா?” என்று இரண்டு முறை கேட்டு உறுதி பெற்ற பின்பே  ஏற்பாட்டை துவங்கினார்.

அந்த சூழலில் அவளை பொறுத்தவரை ராகவ் மட்டுமே கண் முன் நின்றான் மற்றதெல்லாம் தூரம் விலகி விட்ட உணர்வு. இப்பொழுது சரிதாவின் கதறல் அவளை  அசைத்திருந்தது. ஆனால் அவளே நினைத்தாலும்   நிறுத்த முடியாத நிலை.   மகேஷ்  இப்பொழுது தான்  வெளியில் இடம் வாங்கி இருந்ததால் அவள் படிப்பிற்கான பணத்தை சரிதா தான் தான் வேலை பார்க்கும் வங்கியில் கடன் வாங்கி கொடுத்திருந்தார்.  மகேஷ் எல்லா நிலையையும் அவள் அறியுமாறே செய்தார்.  வீட்டின் சூழல் உணர்ந்தால் தான் அவள் இன்னும் சற்று சிரத்தை எடுத்து படிப்பாள் என்பது அவரது எண்ணம்.

சரிதாவிற்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. மகளை தன்னுடன் நிறுத்தி விட வேண்டும் என்பதே பிரதானம்.  பிறந்ததில் இருந்து   யாரிடமும் அனுப்பாமல்  பொத்தி பொத்தி வளர்த்து விட்டார். அவரது எண்ணம் அவளை தவிர்த்து வேறெங்கும் சென்றதில்லை. வேலை எல்லாம் இரண்டாம் பட்சம் தான், அவள் பிறந்தவுடன் அவளை  பார்த்துக் கொள்வதற்காக  அரசாங்க வேலையை ராஜினாமா செய்து விட்டார். மகேஷ் கூட,  “சரிதா வேலை கிடைக்கிறது கஷ்டம் நல்லா யோசிச்சுக்கோ” என்றிட, “இல்லைங்க, எனக்கு என் புள்ளை தான் முக்கியம்” என்று விட்டார்.

அவள் ஓரளவு வளர்ந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு மீண்டும் தேர்வெழுதி  தற்போது வங்கியில்  பணிபுரிந்து கொண்டிருக்கிறார். விமானத்திற்க்கான அழைப்பு வந்து விட, “ம்மா, நான் போய்ட்டு வரேன்” என்றவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க  அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

error: Content is protected !!
Scroll to Top