கனவெங்கும் தித்தித்தாய் – 5.2

“அது ஃபோன் கால்ல பேசுறதும் நேர்ல பேசுறதும் ஒன்னுன்னு அர்த்தம் கிடையாது. அப்படி எனக்கு கால் பண்றவங்க கிட்ட பேசாம இருக்கற அளவுக்கு நான் ஒன்னும் அத்தனை அடமெண்ட் கிடையாது. ஆனாலும் நான் எப்ப நம்ப சண்டைய முடிச்சிக்கலாம்னு சொன்னேன். அது இன்னும் அப்படியே தான் இருக்குனு அவங்க கிட்ட சொல்லு ஜெய்!”

பல்லவியின் பதிலில் ஜெய் பிருந்தாவை பார்த்து புன்னகைக்க பிருந்தா அவர்கள் இருவரும் முறைத்து வைத்தாள். அதற்குள் அறையின் வெளியே நின்றிருந்தவர்களை அழைத்து விட்ட தில்ஷத் அவர்கள் உள்ளே நுழையும் போது அவன் டேபிளில் இருந்த பேப்பரில் முகத்தை புதைத்திருந்தவன்,

“மிஸ். பிருந்தா!” என நிமிரவும் அங்கு அவனை முறைத்தபடி நின்றிருந்த பிருந்தாவை கண்டு ஃப்ரீஸாகியது அவன் கண்கள். அதுவே அவன் அங்கு அவளை எதிர்பார்க்கவில்லை என்று கூறியது. நேற்று ஹோட்டலில் அவளை பார்த்து போது ஒருவேளை இந்த நிலையில் அவளை சந்திக்க கூடுமோ என்று ஊகித்து இருந்தானே. ஆனால் அதுவே நிஜமாகும் என்று அவன் என்ன கனவா கண்டான்?

அவள் முறைப்பதை தன் கண்களை சுருக்கி பார்த்தவன் லேசாக புன்னகைத்தான். பிருந்தா என்று அவன் அழைத்திருந்தானே அதில் கேள்வியாக அவர்கள் மூவரையும் பார்த்து வைத்தான். அதன் பின்பு அவன் பார்வை அவளிடம் பதிந்து போனதை மற்றவர்கள் கவனித்து விட கூடாதே என்று ஓரிரு முறைகள் பல்லவியையும் ஜெய்யையும் பார்த்து வைத்தான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் பிருந்தாவின் மேல் நீடித்திருந்த அவன் பார்வையின் கனம் அதிகமாக தான் இருந்தது.

ஆச்சரியமான பார்வையுடன் எழுந்து நின்று அவர்களை வரவேற்றவன் மூவரையும் அவனுடனே அமரவைத்து அவர்களுடன் இயல்பாக உரையாட துவங்கி விட்டான். தில்ஷத்துக்கு தமிழ் தெரியும் என்பதிலே அவனோடு மற்ற இருவரும் இயல்பாக பேச துவங்கி விட பிருந்தா தான் அந்த சூழலில் அவர்களோடு ஒன்றவும் முடியாமல் விலகவும் முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் ரொம்பவே நல்லா பேசுறிங்க ஆனா மேடம் மட்டும் வந்ததுல இருந்து சைலண்டா இருக்காங்க மிஸ். பிருந்தா ஏதாவது ப்ராப்ளமா? எனிதிங் சீரியஸ்?” என பிருந்தாவை பார்த்து வினவிய தில்ஷத்தை நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் பிருந்தா.

அவன் அவள் முகத்தை மட்டுமே பார்த்திருப்பதை கண்டதும் தன்னால் தான் பிருந்தா இப்படி அமைதியாக இருக்கிறாள் என்று அவள் அறிந்த வரையில் அந்த முக சுருக்கதிற்கான காரணத்தை யோசித்திருந்த பல்லவி அவர்களின் குட்டி சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணியதும் பிருந்தாவை நோக்கி குனிந்து,

“ஹே! பிந்து! சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன் அதுக்கு ஏன் இப்டி இவ்வளவு சீரியஸா இருக்க? இப்ப நான் என்ன செஞ்சா சிரிப்ப நீ? அப்டி செய்ததுக்கு சாரி கேக்கணும் அவ்வளவு தானே. ஒரு சாரி மட்டும் போதுமா இல்ல வேற எதுவும் வேணுமா?” என விளையாட்டாக வினவினாள்.

“ஹம்! நான் பேச வந்து செவென் டைம்ஸ் நீ என்கிட்ட பேசாம இருந்தல சோ, செவென் டைம்ஸ் எனக்கு சாரி சொல்லணும். அப்ப தான் நான் உன் முகத்தை பார்த்து சிரிக்கவே செய்வேன்!” என வந்தது பிருந்தாவின் உற்சாக குரல்.

“ஹே! பிரிஞ்சி இல! நானும் கூட உன்னை போல கோச்சிக்கிட்டு இப்டி பேசாது இருக்கலாம்னு இருக்கேன். எனக்கு எத்தன சாரி கிடைக்கும் ரெண்டு பேர் கிட்டையும் இருந்து?” என்று தன் பங்கிற்கு அவர்களுக்கு இடையில் ஆஜரான ஜெய்யை மற்ற இருவரும் முறைத்து பார்த்தவாறு,

“அது ஜெய்! நீ பேசாம இருந்தா உன்கிட்ட சாரி எல்லாம் சொல்லிட கூடாது. நியாயமா உன் மொக்கையில இருந்து தப்பிக்கிற நாங்க தானே அதையும் விட புனிதமான தேங்க்ஸை உனக்கு சொல்லி ஆகனும்” என அட்சரம் பிசகாமல் ஒன்று போலவே கூறிவிட்டு மற்ற இருவரும் தங்களுக்குள் கை அடித்துக் கொண்டார்கள்.

இதையெல்லாம் அவர்களுக்கு முன் அமர்ந்திருந்த தில்ஷத் இதழில் தவழும் ஒரு நிறைவான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் நின்றிருந்த ரித்விக் அவனை நெருங்கி அவனிடம் மெல்லிய குரலில் எதையோ மொழிந்ததை கூட உணராமல், “ப்ளீஸ் ஜெய்! நீ அப்படி ஒரு முடிவுக்கு வரணும்னு நாங்க ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்றோம். ப்ளீஸ்! சீக்கிரம் அதை எக்ஸிக்யூட் பண்ற முடிவுக்கு வாயேன்!” என கெஞ்சி கொஞ்சி விளையாடும் பாவையின் மீது படிந்து போனது தில்ஷத்தின் கண்கள் இரண்டும்.

தில்ஷத்தின் கவனம் இங்கில்லை என்பது யாருக்கு புரிந்ததோ இல்லையோ ரித்விக்கிற்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அவனை இப்போதே அங்கிருந்து அழைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் ரித்விக் இருக்கிறான்.

“சார்! உங்களை பார்க்க உங்க அப்பா ஸ்டாக்ஹோம் வந்திருக்கிறதா சொன்னாங்க. டைமாச்சு நாம இப்ப அவரை மீட் பண்ண போகணும்!” என்று ரித்விக் கூறவும் தான் தன் நினைவை அடைந்தவன் அவர்களின் விவாதத்தை தடை செய்ததில் சங்கடமான ஒரு புன்னகையை உதிர்த்து,

“ஓகே கைஸ்! எனக்கு ஒரு முக்கியமான வொர்க் இருக்கு. சாரி! நாம இன்னொரு நாள் பொறுமையா பேசலாம். நௌ ஐ நீட் டூ கோ. சீக்கிரமே நாம மீட் செய்வோம்” என்று கூறினான் தில்ஷத்.

அவர்களும் அவனிடம் விடை பெறவும் தில்ஷத் அங்கிருந்து உடனே கிளம்பி விட்டான். அவன் சென்று விட்டதில் பிருந்தாவிற்கு தான் பரம ஆனந்தம். ஆனாலும் முதல் சந்திப்பிலேயே தன் நண்பர்கள் பல்லவியும் ஜெய்யும் அவனோடு ஒட்டிக் கொண்டு அவர்களை பற்றிய முழு விவரங்களையும் அவனிடம் தெரிவித்து இருந்ததை நினைத்து சிறிது சுணக்கம் கொண்டாள்.

அவனுக்கு தன் பெயரே தெரிந்து விடக்கூடாது என்று அவள் நினைத்திருந்ததென்ன இப்போது அவளை பற்றிய விவரங்களை அவளை வைத்து கொண்டே பல்லவி அவனிடம் தெரிவிக்கும் போது ஒன்றும் கூற முடியாமல் அவளால் அமைதியாக மட்டுமே நின்று வேடிக்கை பார்க்க முடிந்ததென்ன? மீண்டும் அவன் தான் இந்த விஷயத்திலும் அவளிடம் வென்றிருக்கிறான்.

இன்னும் அவனை பற்றிய எதையும் அவளால் அறியவும் கூட முடியவில்லை. அறிந்து கொள்ளவும் அவளுக்குள் எந்த ஆர்வமும் பிறக்கவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் அவன் கூறியிருந்தபடி தில்ஷத் அவர்களை சந்திக்க எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. மியூசியத்திற்கும் அவன் வந்து சென்றதாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. பிருந்தாவிற்கு அவன் தலையீடு இல்லாத அவளுடைய நாட்கள் வெகு அழகாக சென்றதாக தான் தோன்றியது. ஆனால் அதெல்லாம் மீண்டும் தில்ஷத் அவள் எதிரில் வந்து நிற்கும் வரை தான்.

error: Content is protected !!
Scroll to Top