தேன் 4.2

அவளது இறுகிய முகம் அவனையும் அதிகமாகவே  தாக்கியது. இதற்காக தான் அவனை பார்க்காமல் கண்ணாமூச்சி ஆடினாள். ஆனால் நேரமோ அவளை இப்படி நிறுத்தி இருந்தது.

“அவ்வளவு தாங்க,  கிளம்பலாம்” என்ற தேன்மொழியின் குரல் கலைத்தது இருவரையும். காவ்யாவும்  கிருபாகரனும் மகிழுந்தினுள் இருக்க மகிழுந்திற்கு  பின்னால்   இவர்கள் இருவரும் நின்றிருந்தனர்.  தேன்மொழி தன் கையிலிருந்த பையை அவனிடம் கொடுத்து, “டியூசன் கிளம்பியாச்சா? அம்மா எங்க மாயா?” என்று பேச்சு கொடுக்க சரிதாவும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து விட்டார்.

“போய் ப்ளைட் ஏத்தி விட்டு வந்திடுறோம்” என்று தேன்மொழி  கூற, “பார்த்து போயிட்டு வாங்க”  என்ற சரிதா மாயாவை பார்க்க பின்னால் ஏறிக் கொண்டாள்.

தேன்மொழியும்  மகிழுந்தில் ஏற ராகவும் ஏறினான் ஆனால் அவனது பார்வை முழுவதும் மாயாவிடமே மண்டியிட்டு நின்றது.

அவனுக்கு அதிகமாக பிடித்தது அவளது கண்களே. அந்த விழிகளில் சூழ்ந்திருந்த கலக்கம் ஆடவனையும் தன்னுள் வாரிச்சுருட்டி கொண்டிருந்தது.

கிருபாகரன் மகிழுந்தை எடுக்க கிளம்பி விட்டான். அவளது இதயத்துடிப்பு அதிகரிக்க சரிதா தோளை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.  “என்னாச்சு மாயா” என்று கேட்க ஒன்றுமில்லை என தலையாட்டியவள், “போகலாம்மா” என்றாள்.

ராகவிற்கு ஒவ்வொரு இடமும் நிறைய நினைவுகளை கொடுக்க  கண்களை மூடி அமரந்து விட்டான்.  விமானநிலையத்தில் தேன்மொழி, காவ்யா என மாற்றி மாற்றி அழுக கிருபாகரன் தான்  அவர்களை சமாளித்து ராகவை விமானம் ஏற்றி விட்டார்.

“ராகவ் கவனம்ப்பா, எந்த பிரச்சனைனாலும் பொறுமையா ஹாண்டில் பண்ணு. ஏன்னா நாங்க ரொம்ப தூரத்தில இருக்கோம் உடனே வரக் கூட முடியாது. நீ படிக்க போற, நல்லபடியா முடிச்சு வெளிய வரணும். உன்னோட ஆசைக்காக மட்டும் தான் இவ்வளவு தூரம் அனுப்புறேன். அம்மாவுக்கு கூட விருப்பமில்லை, என் நம்பிக்கையை காப்பாத்துவனு நினைக்கிறேன்” என்ற  கிருபாவின் கைகளை பற்றிக் கொண்டவன்,  “கண்டிப்பா, உங்க நம்பிக்கைய காப்பாத்துவேன்” என்று உறுதி மொழி கொடுத்து பறந்து விட்டான்.

ஆகி விட்டது ஆறு மாதம். எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. அந்த சூழலோடு பொருந்த முடியாமல் அதிகமாகவே திண்டாடியவன் கடினப்பட்டு ஒரு வைராக்கியத்தில் இருந்து விட்டான். இப்பொழுதும் ஓரளவு நன்றாகவே பொருந்தியும் விட்டது. அவனை போல் இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் வந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து சென்றது சொற்பமானவர்களே.  உணவு முதல் காலநிலை வரை ஒரு படுத்து படுத்தி தான் எடுத்தது பொருந்துவதற்குள். பாடங்களையும் ஓரளவு பிடித்து நன்றாகவே தேறி வந்து விட்டான்.

ஆனால் மாயாவோ கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருந்தாள். அவன் நினைவு இவ்வளவு தாக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  உணவு கூட சாப்பிட மறந்து இளைத்து விட்டாள். படிக்கும் பாடங்கள் கூட வேம்பாக கசக்க ஆரம்பித்தது.  எதிலுமே ஒரு பற்றற்ற நிலை. சரிதா அவ்வப்பொழுது கவனித்து காரணம் கேட்டாலும் உடல்நிலை சரியில்லை அது இது என காரணம் கூறி மழுப்பி வந்தாள்.

பாடங்களில் மதிப்பெண்  முன்பை விட அதிகமாக குறைந்திருப்பதால் பள்ளியில் ஆசிரியர்  சரிதாவை அழைத்து நேரடியாக கூறி விட வீட்டில் பிரளயமே  வெடித்தது. என்றுமே அவளை அடித்திராதவர் கை நீட்டி விட மகேஷ் மனைவியை அடித்து விட்டார்.  வீடே ரணகளமாக இருக்க எதார்தமாக வந்த தேன்மொழி தான், “எதுக்கு இப்படி படுத்துற, அவளால முடிஞ்சளவு படிக்கட்டும். படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை, நீ வா மாயா” என அழுது கொண்டிருந்தவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

ராகவ் சென்றதிலிருந்து அவளிடம் பேசுவது இல்லை. அவள் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக பேசவில்லை. இங்கிருக்கும் பொழுதும் அதிகமாக பேசியதில்லை. தினமும் நேரில் பார்ப்பதால் அதற்கு அவசியமும் வந்ததில்லை என்றே கூறலாம். ஆனாலும் அவன் காவ்யாவிடமும் தேன்மொழியிடமும் மாயாவை பற்றி விசாரித்து விடுவான். அவனது விலகலே அவளை இன்னும் தாக்கியது.

சரியாக அவர்  மாயாவை சமாதானம் செய்து கொண்டிருக்க ராகவ் காணொளி அழைப்பில்  அழைத்து விட்டான். அழைப்பை ஏற்றவர் நலம் விசாரித்து அருகிலிருக்கும் மாயாவை பற்றி கூறிக் கொண்டிருக்க  அடுப்பறையில் இருந்து குக்கர் விசிலடிக்க,  “ஐயோ இதை மறந்துட்டேனே!” என்றவர்  அலைபேசியை அவளிடம் கொடுத்து விட்டு வேகமாக நகரந்தார்.

அவளது அழுது கசங்கிய முகத்தை கண்டவனுக்கோ என்னவோ போல் ஆனது. அவள் எப்பொழுதுமே கண்ணில் இருக்கும் மைக்கூட அழியாமல் இருப்பாள்.   இது போல் என்றுமே அவன் பார்த்தது கிடையாது.  சரிதா அவளை அப்படி விட்டதும் கிடையாது. கன்னமெல்லாம் சற்று வீங்கி சிவந்திருக்க   தலையெல்லாம் கலைந்திருந்தது.

மூச்சை இழுத்து தன்னை  சமன் செய்தவன், “என்ன மாயா ஆச்சு? ஏன் இப்படி பண்ற? இவ்ளோ லோவா ஸ்கோர் பண்ற ஆள் நீ கிடையாது. இப்படியே போனா நீ மெடிக்கல் காலேஜ் வாசல்ல கூட நிற்க முடியாது. அப்புறம் எப்படி நீ டாக்டராகுறது. வாய்ல மட்டும் சொன்னா போதாது. ரொம்பவே கஷ்டபடணும்” என்றவன் சற்று மென்மையாகவே கூற  அவளுக்கு அழுதழுது தொண்டை வேறு வறண்டிருக்க பேச்சு வர மறுத்தது. அருகிலிருந்த தண்ணீரை குடிக்க, ” கண்ணீரை துடைச்சுட்டு போய் முகம் கழுவி வா” என்று கூற அவன் கூறியதை செய்து அலைபேசி முன் அமர்ந்தாள்.

“சொல்லு என்ன பிரச்சனை? ஏன் இப்படி பண்ற?” என்று ஆரம்பிக்க,  “ஏன் இத்தனை நாள் எனக்கிட்ட பேசலை” என்றாள் தேங்கிய கண்ணீரை உள்ளிழுத்து.

அந்த கேள்வி அவனை தடுமாற செய்ய சுதாரித்தவன், “ஹேய், என்ன நான் தினமும் உன்கிட்ட பேசிட்டா இருந்தேன்” என்று எதிர்கேள்வி கேட்க  இருபுறமும் நீடித்த மௌனம்.

அவளது கண்களில் இருந்து தேங்கிய நீர் வழிந்து விட  அங்கே அவனோ  எதுவும் செய்ய  முடியாத இயலாமையில்   கைகளை  இறுகக்கட்டி  அமர்ந்திருந்தான். 

குக்கரில் வைத்திருந்த சாதம் அடிப்பிடித்திருக்க அதை சரி செய்த தேன்மொழி வந்து விட  மாயா  அலைபேசியை அவரிடம் கொடுக்க  வாங்கி சிறிது நேரம் பேசியவர் அழைப்பை துண்டித்தார்.
அதற்கு பிறகு   ராகவ் அவளிடம் பேச முயற்சி செய்த,  மறுத்து விட்டாள்.

அன்று தேர்வு முடிவு வெளியாகி இருக்க     சரிதா மாயாவை  வசைபாடிக் கொண்டிருந்தார்.  மதிப்பெண் குறைவாக இருக்க அழுதிருந்தவள்,  “ப்பா, நானும் ராகவ் மாதிரி ரஷ்யா போய் படிக்கிறேன்” என்று கூற, “ஆமா, நீ இங்க படிச்சு கிழிச்சுட்ட, இதுல அங்க போய் வேற படிக்கப் போறீயா?” என்று சரிதா பேச, 
“சரிதா, அமைதியா இரு” என்று அவரை அடக்கினார் மகேஷ்.

“மாயா, அவ்வளவு தூரம் எல்லாம் வேண்டாம் டா, உன்னை விட்டு எங்களால இருக்க முடியாது. இங்கே படி, எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக்கிறேன். ப்ரைவேட் காலேஜ்ல  படி” என்று கூற தன் பிடித்த பிடியில்  நின்று,  “அங்க போறேன். இல்லை, நான் வேற எதுவுமே படிக்க மாட்டேன்” என்று  உண்ணாவிரத போராட்டம் செய்து   தேன்மொழியை துணைக்கு அழைத்து   ஒரு மாத போராட்டத்திற்கு  பிறகு  சரிதா விருப்பமின்றி மகேஷ் ராகவிடம் பேசி அவளை அனுப்ப சம்மதம் கொடுக்க  கிளம்பி கொண்டிருந்தாள் அவனை காண்பதற்கு.

error: Content is protected !!
Scroll to Top