தேன் 4.1

அத்தியாயம் – 4

ராகவ் கிளம்பியும்  மாயமோகனா அதே இடத்தில் நின்றிருந்தாள்.    தனது  கண்ணீரை கட்டுப்படுத்த வழியறியாது திணறியவள்  அப்படியே அமர்ந்து விட்டாள். அவனுடனான நினைவுகளை அவளது மூளை மீட்ட மூச்சு முட்டியது.   அதிக நெருக்கமில்லை காதல் மொழியோ  பரிமாற்றமோ இல்லை ஏன் காதலை  வாய் வழி கூறியது கூட கிடையாது. இது காதலா என்று கேட்டாலும் தெரியாது. ஏதோ ஒரு இனம் புரியா  அன்பு.

இதுவரை அவ்வளவு பாதிப்பு இல்லாது போல் காட்டிக் கொண்டாலும் இந்த நொடி அவளின் கண்ணீரை கண்ட நொடி அவனும் முழுவதுமாக உடைந்து போயிருந்தான். என்ன தான் தனக்கு விருப்பமான  கனவை நோக்கி ஓடினாலும்  அவள் இல்லாதிருப்பது வெறுமை தானே!

ராகவிற்கு  எட்டு வயதிருக்கும் பொழுது மாயாவின் குடும்பம் அங்கு குடிபெய்ர்ந்தனர்.

அவனுக்கும் அவளுக்கும் முட்டிக் கொண்ட தருணங்கள் ஏராளம். இவன் ஆசையாய் நாய் வளர்க்க  அவளுக்கு அதை கண்டாலே அதீத பயம். அது ஆளை கண்டவுடன் கழுத்தில் தான் காலை  தூக்கி ஊன்றும். அவள் தெருவே  கேட்குமளவிற்கு அலறுவாள்.

“ஏய், எதுக்குடி கத்துற. ஸ்ஸ், அது எதுவும் பண்ணாது. பாசத்துல தான இப்படி பண்ணது” என்று மாயாவை  அதட்ட அவள் கோபத்தில் நாயோடு ராகவையும் கல்லை வைத்து எறிந்திடுவாள்.

வேண்டுமென்றே அவள் வந்தாலே நாயை  அவிழ்த்து விடுவான். தேன்மொழியோ  பஞ்சாயத்து செய்து ஓய்ந்து விடுவார்.

  அவள் பத்தாவது  படிக்கும் பொழுது ஒரு முறை சரிதாவும் தேன்மொழியும்  மாலை போல் கோயிலுக்கு  செல்ல    மோகனாவை தேன்மொழி வீட்டில் ராகவிடம் பார்த்துக் கொள்ளுமாறு  விட்டு சென்றனர். அவள் தேர்வென்பதால் படித்துக் கொண்டிருந்தாள். அவள் முன்பு வீட்டில் தனியாக இருக்க பயப்படுவாள் என்பதால். 

அவள்  எழுதி கொண்டிருக்க அவன் உள்ளே படுத்து தொலைக்காட்சி பார்த்திருந்தான்.  மின்சாரம் துண்டாகி விட்டது. இவன் சும்மா இருக்காமல்   அவளை பயமுறுத்துவதற்காக சத்தம் எழுப்ப  பயத்தில்  அவள் அழுத அழுகை இன்றுமே இருவருக்குமே மறக்காது. அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதற்குள் அவன் தலைகீழாய் நின்று  தண்ணீர் குடித்து விட்டான்.

தேன்மொழி எங்காவது செல்லும் சமயத்தில்  அருகிலிருக்கும் நீச்சல் குளத்திற்கு சென்று விடுவான்.  அவர் வருவதற்குள் வந்து விட்டாலும்  மாயா போட்டு கொடுத்து விடுவாள். யாருமில்லாத சமயத்தில் தலையில் கொட்டி வீங்க வைத்து விடுவான்.

ஏதாவது சந்தேகம் என்றால் சரிதா அவனிடம் தான் அனுப்புவார். அவன் அவளை படுத்தும் பாடு இருக்கே. தண்ணீர் கொண்டு வா, அங்க போய் புத்தகத்தை எடுத்து வா, மின்விசிறியை போடு,  அலைபேசியை   மின்னூட்டத்தில் போடு என்று குறைந்தது பத்து முறையாவது வேலை ஏவுவான் அவளை வம்பிலுக்கும் பொருட்டு.

இன்னும் இன்னும் நினைவுகள் ஏராளம் நினைத்து பார்த்தவனுக்கு மெல்லிதாக புன்னகை படர   பொருட்களை மகிழுந்தில் ஏற்றிக் கொண்டிருந்தான். கிருபாகரனும்  தேன்மொழியும் மேலிருந்து இறக்கி வர  காவ்யாவும் அவனும் வண்டியுள் ஏற்றினார்கள். 

வேலை முடிந்து வந்த சரிதா மாயவை டியூசன் அழைத்து  கீழே வர இவர்களும் அங்கு தான் நின்றிருந்தனர்.

“கிளம்பியாச்சா, பார்த்து போய்ட்டு வா ராகவ்” என்று கையசைத்தவர் வண்டியை எடுக்க செல்ல மாயா அவர்கள் அருகில் தான் நின்றிருந்தாள்.

அவளது பார்வை முழுவதும் ராகவிடம் நிலைத்து நிற்க அவனும் அவளை தான் பார்த்திருந்தான்.   ஏதோ ஒரு தவிப்பு, தனக்கு உரிய பொருள் வெகுதொலைவில் செல்வது போன்ற உணர்வு.  அவளையும் மீறி கண்ணீர் தேங்கி கொண்டிருந்தது. தன்னை வெகு சிரமப்பட்டே கட்டுப்படுத்தினாள்.

error: Content is protected !!
Scroll to Top