குமரன் முகத்தை அனைவரும் நொடி நேரத்திற்கும் அதிகமாகப் பார்க்க, அவனிடம் பதிலில்லை. யாருக்கு வந்த விருந்தோ என்றொரு பாவனையில் நின்றிருந்தான். அதில் திவாகருக்கு சற்றே எரிச்சல் படர்ந்தது.
‘எல்லாம் சரியாய்க் கூடிவரும் நேரத்தில் இவன் கெடுத்து விடுவானோ?’ என எண்ணிக் குமரனைப் பார்த்தான்.
“என்ன குமரா, எதுவும் பதில் சொல்லமாட்ற. உன் விருப்பத்தை சொல்லு டா!” சிந்து மகனது புறங்கையைப் பிடித்துக் கேட்கவும், அவரை ஒரு நொடி பார்த்துப் பின் பெருமூச்சை இழுத்துவிட்டான்.
“எனக்கு மனோ கூட கொஞ்சம் பேசணும் மா…” குமரன் கூறவும், “என்ன… என்ன பேசப் போற குமரா? அதான் ஏற்கனவே நிறைய பேசிட்டீங்களே!” ராதா குரலில் பதற்றம் அப்பிக் கிடந்தது.
வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்கக் பார்க்கிறானே என்ற பதைபதைப்புடன் அவர் அவனைப் பார்க்க, “என்ன குமரா?” என திவாகர் அவனருகே விரைந்தான்.
“ஒன்னும் இல்ல திவா. நீங்க கல்யாண ஏற்பாட்டை பண்ணுங்க. நான் அவகிட்டே பெர்சனலா பேசணும்!” என்று குமரன் அழுத்திக் கூற, மற்றவர்களுக்கு அவன் சம்மததித்தே பெரிதாய் இருக்க, மற்றைய பேச்சை அப்படியே விட்டுவிட்டனர்.
“அதான் தம்பி சம்மதம் சொல்லியாச்சு. அடுத்து எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிக்கலாம் மாமா!” என்று கோவிந்தனிடம் பேசிய லோகேஷ், “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மா. ஆளும் பேரும் இவ்வளோ பேர் இருக்கோம். எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுடலாம்!” மூத்த மருமகனாய் அவன் பொறுப்பாய் உரைக்கவும், சிந்து தலையை அசைத்தார். பின்னர் அவர் அனைவருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுக்க, குடித்துவிட்டு வந்திருந்தவர்கள் விடைபெற்றனர்.
மனோஹரி காலையில் பெரியவர்கள் கிளம்பியதிலிருந்து வாயிலையேதான் பார்த்திருந்தாள். குமரனின் கோபம் அவளறிந்ததே. அவனுக்கு வேண்டாம் என்றால், கடைசிவரை வேண்டாம் என்னும் உறுதியானவன். அதற்கு சாட்சி தந்தையையும் அவரது குடும்பத்தையும் உதறிவிட்டு வந்ததே. அப்படிபட்டவன் அன்று அறையே எதிரொலிக்கும் வண்ணம் கோபத்தில் கத்திவிட்டு சென்றிருக்க, இன்றைய அவனின் பேச்சு எப்படியிருக்கும் என அவளால் யூகிக்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே குமரன் அவளுக்கொரு புதிர் பெட்டகம்தான். மனம் முழுவதும் பதட்டமிருந்தாலும் அதை வெளியே காண்பிக்காது ஹரியின் குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்து தட்டிக் கொடுத்தாள். அவன் உறங்குவேனா என்பது போல அக்கும் இங்கும் நெளிந்து எதையோ பேச முயன்று கொண்டிருந்தான்.
“அக்கா, எல்லாரும் சீக்கிரம் வந்துடுவாங்க. நீ ஏன் இவ்ளோ நெவர்ஸா இருக்க?” என அக்ஷயா அவளது பார்வைப் போகும் திசையறிந்து நெற்றியோரம் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டவாறே கூறினாள். பதிலில்லாத புன்னகை மட்டும் இவளிடம்.
சிறிது நேரத்திலே பெரியவர்கள் அனைவரும் வீடு திரும்பியிருந்தனர். அவர்களுக்குள்ளே ஆயிரம் சலசலப்பு. திருமணம் எங்கே வைப்பது, என்றைக்கு வைப்பது என பேச்சு அதையொட்டியே இருந்தது. அனைவரது முகத்திலிருந்த மகிழ்ச்சி அவளுக்குச் செய்தியை உரைத்தாலும் அங்கே என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள மனம் பரபரத்தது. யாரிடம் கேட்பது எனத் தெரியாது மனோ பெரியவர்களின் முகத்தையே பார்த்திருக்க, திவாகர் அவளருகே விரைந்தான்.
அவளது முகத்திலிருந்த பதட்டத்தைக் கண்டு கொண்டவனாக, “மனோ, ரிலாக்ஸ். அங்க எந்தப் பிராப்ளமும் இல்லை. எல்லாம் ஓகே, குமரன் உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னான். நாளைக்கு அவனே உன்னைப் பிக்கப் பண்ண வருவான்னு நினைக்கிறேன்!” என்று அவன் கூறவும், இவளது முகம் யோசனையாய் சுருங்கியது.
“என்ன பேசணுமாம்?” மனோ குழம்பியக் குரலில் வினவ, “நோ ஐடியா! எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் பொறுமையா பேசுங்க. இப்போதான் எல்லாம் சரியாகியிருக்கு. நீங்களே அதை கெடுத்துக்காதீங்க!” என்று எச்சரிக்கையான குரலில் கூறி அவன் அகல, மனோ சிந்தனையில் ஆழ்ந்து போனாள்.
ராதா அன்று மாலையே என்றைக்குத் திருமணம் வைக்கலாம் என தேதியைக் குறித்து, பத்திரிக்கைக்குப் பெயர் பட்டியல் வரை தயார் செய்துவிட்டார். கோவிந்தனும் வனிதாவும் இத்தனை விரைவில் முடித்து விட முடியுமா என்று சந்தேகமாகக் கேட்க, “அதெல்லாம் முடிச்சுடலாம் தம்பி. ஆளுக்கொரு வேலையா செஞ்சா போதும். அதான் ரெண்டு வாரம் இருக்குல்ல?” என்று ஊக்கிப் பேசவும், மற்றவர்களுக்கும் நல்லபடியாக திருமணம் முடியும் என்ற நம்பிக்கைப் பிறக்க, நாளையிலிருந்தே திருமண வேலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தனர்.
மறுநாள் காலை மனோஹரி மனதில் படர்ந்த யோசனையுடன் கிளம்பி நிற்க, திவாகர் கூறியது போல குமரன் அவளை அழைத்துச் செல்ல வந்துவிட்டான்.
“ம்மா, நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன் மா!” என்று இவள் கூற, “சரி மனோ, அடுத்த வாரத்துல இருந்து லீவு கேட்டு வச்சிடு. அப்படித் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னா, வேலையைவிட்டுடு. கல்யாணம் முடிஞ்சு அப்புறம் பார்த்துக்கலாம்!” தாய் பேசிய பேச்சுக்களை செவி உணர்ந்தாலும் சிந்தையில் பதியவில்லை. தலையை மட்டும் அசைத்து மனோ குமரனுடைய வாகனத்தில் அமரவும் இருவரும் கிளம்பினர். அவளின் கை அவனது தோளில்தானிருந்தன. அன்றைய முறைப்பிற்கு பின்னே இந்தத் தொடுதல் இயல்பான ஒன்றாய் மாறிப்போயிருந்தது.
வயல்காட்டுப் பகுதியைக் கடந்து அந்த ஒற்றையடிப் பாதையில் குமரன் வாகனத்தை நிறுத்த, மனோ இறங்கி அவன் முகத்தைப் பார்த்தாள். அவனும் வண்டியை ஓரமாய் நிறுத்தி அவளைப் பார்த்தவாறே கைக்கட்டி நின்றான். சில நொடிகள் தன்னை அரித்தப் பார்வையில் புருவத்தை சுருக்கியவள், “என்ன பேசணும்?” என மொழிந்தாள்.
அவளிடமிருந்த பார்வையை அகற்றி சுற்றிலும் பார்வையை மெதுவாய் அலையவிட்டவனிடம் வெகுவாய் அலட்சியமிருந்ததோ என மனோ அவனைக் குறுகுறுவென பார்த்தாள். மூளை அவனது பாவனைகளை உள்வாங்க, சாவகாசமாக அவள்புறம் பார்வையை நகர்த்திய குமரன், “பைனலி உங்கப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாரு போல?” எனக் கேட்டவனின் குரலில் ஏக நக்கல்.
இத்தனை நேரம் என்னப் பேசப் போகிறான் இவன் என்ற முனைப்பிலிருந்த மனோவிற்கு குமரனுடைய இந்தப் பேச்சு சுருக்கென்று தைக்க, விழிகள் ஒரு நொடி கலங்கியது. அதை முகத்தில் காண்பிக்க விரும்பாதவளின் உடல் மொழி இறுக, அவனை நிமிர்ந்து முறைத்தாள்.
‘இதைக் கேட்கத்தான் என்னை அழைத்து வந்தாயா?’ என்ற கேள்வியை முகம் தாங்கி நிற்க, உன்னுடைய பேச்சு என்னைப் பாதிக்கவில்லை என்றொரு அலட்சிய பாவம் அவளிடம் வந்திருந்தது.
அதில் சீண்டப்பட்ட குமரன்,
“அதுக்கு மட்டுமில்ல. இப்போ உங்கப்பா ஒத்துக்கலைனாலும், கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு, அப்புறம் மேடையில வந்து வேணாம்னு சொல்ல மாட்டேன்னு என்ன நிச்சயம்?” என எள்ளலாகக் கேட்டவனின் குரலில் அவனைத் தீப்பார்வை பார்த்தாள். குமரன் குரல் முழுவதும் கோபம்தான். அன்று அத்தனைக் கூறியும் தன்னுடன் வர மறுத்தவளின் மீதிருந்தக் கோபத்தை வார்த்தைகளில் கொட்டியவனை அனல் தெறிக்கப் பார்த்தாள் மனோ.
“உன்னைத்தான் கேட்குறேன் மனோ, பதில் சொல்லு!” இவன் அதட்டலாய்க் கேட்க,
“என்ன பதில் சொல்லணும்?” மனோ பல்லைக் கடித்தாள்.
“எந்த சிட்சுவேஷன்லயும் என்னைவிட்டுப் போக மாட்டேன்னு சொல்லு. உங்கப்பாவுக்காக என்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்னு சொல்லு! நான் வேணும்னு சொல்லு!” என்றவன் குரல், ‘இவளுக்கு வேண்டும் என்றால் நான் வேண்டும். இவளுக்கு வேண்டாம், இவள் அப்பன் சம்மதிக்கவில்லை என்றால் தூக்கியெறிந்து விடுவாளோ?’ என்ற கோபம் கனன்றது. எப்படி அன்று தன்னை வேண்டாம் என மனோஹரி நிராகரிக்கலாம் என்ற எண்ணம் இத்தனை நாட்கள் மனதில் வைத்து அழுத்தியதில் அவனை அத்தனைப் பாடுபடுத்தியிருக்க, அது கொடுத்த சினத்தில்தான் இவன் வார்த்தைகளை திராவகமாக வீசினான். பார்வையில் கூட கொஞ்சம் உஷ்ணமிருந்தது.