கனவெனங்கும் தித்தித்தாய் – 4.2

.

அவன் கூறியதற்கு மாறாக ‘இனி இவரை நான் எங்கும் சந்தித்து விடவே கூடாது. என்ன நடந்தாலும் தான் இவரிடம் மீண்டும் போய் நின்று விடக்கூடாது’ என தன் மனதிற்குள் முடிவெடுத்திருந்தாள் தில்ஷத்தை தவிர்க்க நினைத்திருந்த பிருந்தா.

தன் அறைக்கு திரும்பியிருந்த பிருந்தாவின் மனதில் நேற்றைய இரவில் இருந்து அவள் மனதை அழுத்திய அந்த கனவின் பாரங்கள் அனைத்தும் நீங்கி இப்போது இன்று புதிதாக முளைத்திருந்த இந்த குறும்புக்கார வில்லனின் நினைவுகள் தொற்றிக்கொண்டது. தில்ஷத் இன்னமும் அவளுக்கு அப்படி தானே தெரிகிறான்.

அந்த இரவில் அமைதியாக படுத்து உறங்கி இருக்க வேண்டியவள். உறக்கம் வராமல் பால்கனியில் அலைந்ததால் அன்று எத்தனை சம்பவங்களை அவள் சந்தித்தாகி விட்டது. அனைத்தையும் கெட்ட கனவாக நினைத்து மறக்க தான் முயன்றாள் ஆனால் மனம் அதில் அலைபாய்ந்தது. இன்னும் உறக்கம் வராது போகவும் இந்த முறை தன்னுடைய அறையின் பால்கனி கதவை முன்னெச்சரிக்கையாக சாற்றி வைத்து விட்டு சற்று நேரம் அறைக்குள்ளாகவே நடை பயின்றவள் அதிகாலையில் தான் கண்ணயர்ந்தாள்.

பூங்குவியலாய் மலர்ந்த அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் வெகு விரைவாகவே தன்னை தயார் செய்து கொண்டு, அவளுக்கு தேவைப்படும் என்று தோன்றியவைகளை கைப்பை ஒன்றில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. புதுப்புது இடங்களுக்கு சென்று புதிதான அனுபவங்களையும் நினைவுகளையும் சேர்ப்பது அவளுக்கு ரொம்பவும் பிடித்தமான ஒன்று.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஸ்வீடனில் இருக்கப்போவதாக முடிவாகி தான் அவர்கள் மூவரும் இங்கு வந்திருப்பது. சென்னையின் வெயிலுக்கு பழகி இருந்த அவள் தேகம் சில்லென்ற பனிப்பொழியும் ஸ்டாக்ஹோமின் குளிரில் நடு நடுங்கினாலும் ஹோட்டலிற்கு வெளியில் காட்சி படுத்தப்பட்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி ஹோட்டல் வரவேற்பறையில் அமர்ந்தவாறு மற்ற இருவரின் வரவிற்காகவும் காத்திருந்தாள் பிருந்தா.

ஃபுட் கோர்ட்டின் வாயிலின் அருகே இருந்த சோஃபா ஒன்றில் அமர்ந்திருந்தவள் எதேர்சையாக திரும்பி பார்த்தால் அங்கு புன்னகைத்தவாறே நின்றிருந்தது தில்ஷத்தே தான். அவளுக்கு அருகில் இருந்த ஃப்ளோர் ஸ்டாண்டிங் பேனரில் நிழல் உருவமாய் சிரித்தபடி நின்றிருந்தான். முத்து முத்தாக வியர்க்க அதனையே இரு நிமிடங்களுக்கு கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவள் தன் கண்களை அழுத்தமாக மூடித் திறந்து மறுபடியும் அங்கு நோக்கினாள்.

இப்போது அது மற்றொரு காஃபி ஆட்டை தாங்கி நின்றிருந்தது. காட்சி பிழையாய் எண்ணி பிருந்தா அவனை ஒதுக்க நினைக்க அப்போது தான் சிலர் பேனர்களை வரிசையாக நிற்க வைத்தபடியே வருவதை அவள் கவனித்தாள். அடுத்தடுத்து நிற்க வைக்கப்பட்டிருந்த பேனர்களில் மீண்டும் தன் பார்வையை பதித்தவள் தில்ஷத் சிரித்தபடி நின்றிருந்த அந்த பேனரை கண்டுகொண்டாள்.

‘இது உண்மையில் அவன் தானா?’ குழப்பத்துடன் அதையே வெறித்தபடி அந்த குறிப்பிட்ட பேனருக்கு அருகிலேயே வந்தும் விட்டாள். அங்கு வெகு பிரபலமாக விற்கப்படும் ஒரு பிராண்டட் வாட்ச் விளம்பரத்தை குறிக்கும் பேனர் அது. தன் கையில் அணிந்திருந்த வாட்சை காட்டியபடி புன்னகைத்து கொண்டிருந்தான் தில்ஷத். அவனுக்கு அருகில் அழகான வாட்ச்கள் சிலதையும் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

அமைதியாக மறுபடியும் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டவளின் முகத்தில் இப்போது வறண்ட நிலத்தின் நீர் பஞ்சத்தினை நேரில் கண்டுவிட்ட பாவனை. மீண்டுமாக அவள் நிமிர்ந்த போது அவளுக்கு எதிரில் இருந்த எல்.இ.டி டிவியிலும் தெரிந்தது அவன் முகம். ஸ்போர்ட்ஸ் ஷூ ஒன்றிற்கான விளம்பரம் என்பது அவன் வகை வகையாய் சில ஷூக்களை அணிந்தபடி நடைபயின்ற அழகை பார்த்தபோதே புரிந்து விட்டது.

எத்தனை நேரம் திரும்ப திரும்பவும் ஒளிபரப்பான அந்த விளம்பரத்தையே பிருந்தா பார்த்திருந்தாள் என அவளுக்கு தெரியவில்லை அந்த ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண் அவள் அருகில் வந்து, “மேம்! நீங்க ரியான் சாரோட ஃபேனா?” என்று அவள் பார்த்துக் கொண்டிருந்ததை சுட்டிக்காட்டி வினவவும் தான் அதிலிருந்து வெளிவந்தாள் பிருந்தா.

“இல்ல மேம்! மந்த்லி ஒன்ஸ் ரியான் சார் அவரோட ஃபேன்ஸ் கூட டைம் ஸ்பென்ட் செய்வாங்க. அவர் எப்பவும் இங்க ஸ்டே பண்றதால நாங்களும் சிலரை அந்த ஈவென்ட்க்கு அனுப்பி வைப்போம். அதுக்கான டோக்கன்ஸை நாங்க இஸ்யூ பண்ணிட்டு இருக்கோம். அதான் உங்களுக்கு இதுல விருப்பமா? நீங்களும் அட்டென்ட் பண்றீங்களா?”

அவள் குழம்பிய முகத்தை பார்த்து மொத்த விவரத்தையும் கூறினாள் அந்த ஹோட்டலின் மேனேஜ்மென்ட் பிரிவில் பணிபுரியும் அந்த பெண். ‘ரியானா யார் அது?’ என்று தொண்டை வரை எழுந்த கேள்வியை தனக்குள்ளாகவே திரும்பவும் தள்ளி அந்த பெண்ணிடம் சிரித்து மழுப்பினாள் பிருந்தா.

‘யாராம் இந்த ரியான்? நேற்று அவன் நண்பன் கூட அவனை தில்ஷத் என்று தானே அழைத்தான்’ மீண்டும் ஒருமுறை அந்த விளம்பரத்தை நோக்கியவள் சட்டென்று பொங்கி வரும் தன் சிரிப்பை அடக்கமுடியாமல் எழுந்து ரெஸ்ட் ரூமுக்குள் சென்று அங்கிருந்த கண்ணாடியின் முன் நின்று அவள் முகத்தை பார்த்தே சத்தமாக சிரித்தாள்.

‘ஹோய்! நேத்தே சொன்னேன்ல அவங்க கண்டிப்பா ஒரு டிராமா ஆர்டிஸ்ட்டா தான் இருக்கும்னு அவங்க பேக்ல எத்தனை காஸ்மெட்டிக்ஸ் எத்தனை சூட்ஸ் ஹாஹா அதை பார்த்தும் கூட நீ தான் நம்பாம அவங்களை கல்பிரிட்னு நினைச்சு ஹாஹா …’

மனதிற்குள் பேசியபடியே நேற்றைய அவன் நிலையையும் தான் செய்து வைத்திருந்ததையும் நினைத்து தன்னை மறந்து சிரித்தாள் பிருந்தா. ஜெய்யிடம் இருந்து இவளுக்கு கால் வரவும் தான் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியில் வந்து அவர்களோடு இணைந்து கொண்டாள்.

மூவரும் தங்கள் காலை உணவுகளை ஆராய்ச்சி செய்தபடியே ஒரு வழியாக உண்டு முடிக்கவும், “பல்லவி! அப்பா அம்மாவுக்கு நாம வந்துட்ட விஷயத்தை சொல்லிட்டியா? அவங்க மறுபடியும் உனக்கு ஃபோன் ஏதாவது செய்தாங்களா?” என்று நேற்றைய கதையை மறந்து விட்டு பல்லவியிடம் இயல்பாக வினவினாள் பிருந்தா.

அவளை பார்த்து தன் முகத்தை திருப்பிக் கொண்ட பல்லவி, “ஜெய்! அப்பா அம்மா ரெண்டு பேருக்கு நாம வந்ததை சொல்லியாச்சுனு அவங்க கிட்ட சொல்லிடு. அவங்களையும் ரெண்டு பேர் கிட்டையும் ஒரு கால் பேச சொல்லு!” என்று நேற்றில் இருந்து பிருந்தாவுடன் பேசாத அதே கோபத்துடன் கூறினாள்.

“அங்க இப்ப ஒரு இரண்டு மணி இருக்குமா? இதோ இப்பவே கால் செஞ்சுடுறேன்!” என கூறிவிட்டு தன் அலைபேசியில் அவர்கள் இருவரையும் அழைத்து அவர்களிடம் பேசிவிட்டு தான் அடுத்ததை கவனித்தாள் பிருந்தா. அதான் பல்லவி இன்னும் அவளிடம் பேசியிராததற்கு அவளால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தாள்.

“லவி! ஏதோ நேத்து தெரியாம செய்துட்டேன். ஆனா இன்னும் நீ என்னோட அப்பாலஜிய அக்செப்ட் செய்யலையே. மேடமுக்கு இன்னமும் என் மேல ரொம்பவும் கோபமா?”

“ஆமா! ஆமா! கோபம் தான். ஜெய் அவிங்க கிட்ட அப்படி தானு சொல்லிடு. நான்லாம் அவிங்க கிட்டக்க பேசி இனி திட்டு வாங்கிக்க மாட்டேன்!” என்ற பல்லவியின் கூற்றில் பிருந்தாவிற்கு ஏனோ தில்ஷத்தின் முகம் கண் முன்னால் விரிந்தது.

அவனும் தானே கல்பிரிட் வேஷத்தில் இருந்ததாக அவளிடம் நேற்று இரவு திட்டு வாங்கியது. இருவரிடமும் கோபமாக பேசியதை நினைத்து தன் மனதிற்குள் வருந்தியவள் இனி என்றுமே இவ்வாறு செய்து விட கூடாது என்னும் முடிவிற்கு வந்திருந்தாள். சட்டென யாரோ ஒரு சிறுவன் தன் தந்தையிடம் அடம் பிடிப்பது செவிக்குள் நுழைந்ததும் அவளுக்குள் நேற்றிய அவள் கனவின் ஞாபகங்கள்.

கூடவே அவள் கனவின் நாயகனான அந்த சிறுவனின் ஞாபகமும் சேர்ந்து கொண்டதும் தனக்கு எதிரில் அமர்ந்தவாறு புன்னகையுடன் தன் தாய் தந்தையிடம் கதை அளந்து கொண்டிருக்கும் இவனை கண்டு ரசித்தாள். திடீரென அங்கிருந்த தொலைக்காட்சி திரையை நோக்கி கையசைத்து “மாம் மாம்! சீ தேர்… இட்ஸ் மிஸ்டர் ரியான்!” என்று உற்சாக குரல் எழுப்பினான் அந்த சிறுவன்.

அவ்வளவு தான் காலையில் இருந்து எவ்வளவு நேரம் தான் அவளும் பொறுத்துபோவது. எங்கு காணினும் அவனே அவள் முன் வந்தால் அதுவும் அவளுக்கு முதல் பார்வையிலே பிடிக்காமல் போய் விட்டவனை மற்றவர்கள் அவள் முன்னே தூக்கி வைத்துக் கொண்டாடினால்? அங்கு இருந்து சென்றே ஆக வேண்டும் என்று அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்து விட்ட பிருந்தா இனி செல்ல போகும் இடத்திலும் இத்தனை நேரம் இருந்ததை போல நிழலாய் இல்லாது நிஜமாய் இருக்கும் தில்ஷித்தின் முன் அவளே வந்து நிற்க வேண்டி இருந்தால் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வாளாம் அவள்?

error: Content is protected !!
Scroll to Top