பள்ளி நிர்வாகத்திடம் கிருபாகரன் பேச அவன் வீட்டிலிருந்தே முடிந்தளவு படிப்பை தொடரட்டும் தேர்வு எழுத துணைக்கு ஒரு ஆள் மருத்துவ அறிக்கையை வைத்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி விட்டனர்.
அவன் வீட்டிற்குள்ளே அடைந்து விட அவனை விட அவளுக்கே மூச்சு முட்டியது. எப்பொழுதும் அவளை சுற்றி அவனது பாதுகாப்பு வளையம் இருக்கும். எந்த பிரச்சனை என்றாலும் யார் மூலமாவது வந்து நிற்பான். தவித்து நின்றாள் பேதை. அவனும் அதற்கு மேல் சுருண்டு கொண்டான். ஆனால் படித்தான் விடாது. அவ்வப்பொழுது சென்று தரிசனம் அளித்து வருவாள் அவனது மோகினி. ஏதோ ஒரு விதத்தில் உயிர்ப்பு அளித்தது அது அவனுக்கு.
கால்கள் ஓரளவு மருத்துவரின் உதவி மூலம் தேறி வர கைகள் அசைக்க முடியாமல் தான் இருந்தது.. தேர்வுகள் வந்து விட மற்றொருவரின் உதவியுடன் எழுதி முடிக்க முடிவுகளும் வெளி வந்தது. அவன் எதிர்பார்த்ததை விட ஒரு நூலளவு விலகி அதாவது பூஜ்யம் புள்ளி ஐந்தில் அவனது மருத்துவர் கனவு உடைந்து சிதறியது.
அவனது வாழ்வில் அதிகமாக விரும்பியது ஒன்று மருத்துவர் கனவு இரண்டாவது தனது மோகினி. அவளுக்காக கனவை தொலைத்து விட்டான். ஆனால் ஒரு துளி அளவு கூட அவன் மனது அவளை வஞ்சித்து விடவில்லை. ஆனால் அவளோ அதிகமாக துடித்தாள் அவன் கனவு கலைந்ததில். யாருக்கும் தெரியாமால் அழுகையில் கரைந்து உருகினாள். அவளது முகமே காட்டியது ஆனால் ஆறுதல் சொல்ல முடியாத தூரத்தில் அவன்.
தேன்மொழி, “தம்பி டாக்டர் இல்லைன்னா என்ன வேறெதாவது படி. உனக்கு இருக்க திறமைக்கு எதுல போனாலும் பெஸ்டா வருவ” என்று மகனை தேற்ற அவன் வெளியளவில் தேறினது போல் காட்டினாலும் மனதால் முழுவதுமாக ஏற்க முடியவில்லை. அதிக மதிப்பெண் வித்தியாசத்தில் தவறி இருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பான். ஆனால் இதுவோ அவனை அதிகமாக வாட்ட மகனை புரிந்த கிருபாகரன், “ராகவ், என் ப்ரெண்ட் பையன்க்கு ரஷ்யால மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கு. என்ன கொஞ்சம் செலவாகும். உனக்கு ஏற்பாடு பண்றேன்” என்றார்.
அவனும் மறுக்க இயலாது தலையாட்டி விட்டான். பிரிவு தான் ஆனால் தற்காலிகமானது தானே என தன்னை தேற்றி வெளி வந்து தேன்மொழியையும் தேற்ற இதோ இன்னும் ஒரு வாரத்தல் ரஷ்யா கிளம்புகிறான் தன் தொலைத்த கனவை நினைவாக்கிடும் நோக்கில்.
அவனது மோகினி தான் அவனது முடிவை கேட்டு வெகுவாக திண்டாடி போனாள். அவன் மருத்துவர் கனவு நினைவாக போகிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஐந்தரை வருட பிரிவு என்பது மனதை ரணமாக அறுத்தது. சில காலங்களிலே அவனது தரிசனமின்றி இன்றி வெகுவாக மயங்கியவள் இப்பொழுது முற்றிலுமாக உடைந்து தான் போனாள்.
அந்த விஷயத்தை கேட்டதிலிருந்து அவனை பார்க்க செல்லவே இல்லை. அவனே வீட்டிற்கு தெரியாமல் டியூசன் சென்றாலும் அவனுக்கு தரிசனம் அளிக்காது கண்ணாமூச்சி ஆடிக் கொணடிருந்தாள் அவனது மாயமோகனி.
அன்று மாலை விமானத்தில் கிளம்ப வேண்டியவன் காலையில் சரிதாவும் மகேஷும் அலுவலகம் செல்லும் முன் கூறுவதற்கும், அவனது மாயாவை காண்பதற்கும் செல்ல அவன் படியேறும் போதே பார்த்து விட்டவள், “ம்மா, நான் என் ப்ரெண்ட்கிட்ட நோட் வாங்கணும், வாங்கிட்டு கீழ கார்ல இருக்கேன்” என்றவள் பதிலை எதிர்பாரமல் மின்தூக்கியில் புகுந்து கொண்டாள். அவளையும் மீறி கன்னங்களில் நீர் வழிய வேகமாக அதை மறைத்துக் கொண்டாள்.
மேலேறி வந்த ராகவ், “போய்ட்டு வரேன்த்தை, மாமா” என அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அவனை வாழ்த்தி தூக்கி விட்ட மகேஷ் அவனுக்கென்று வாங்கி வைத்த உடைகளை கொடுக்க, “எதுக்கு மாமா இதெல்லாம்” என்று மறுக்க,
“என்ன ராகவ் மாமா கொடுத்தா வாங்க மாட்டியா?” என்று சரிதா அதட்ட புன்னகையுடன் பெற்றுக் கொண்டான்.
“புது இடம், பார்த்து இருந்துக்கோ. இங்க இருக்க மாதிரி அங்கயும் கோபப்படக் கூடாது. நல்லா படிக்கணும்” என்று சரிதா அறிவுரை வழங்க புன்னகை மாறாமல் தலையசைத்தவன், “மாயா எங்கத்தை, ஆளவே பார்க்க முடியலை” என்றிட,
“இப்ப தான் கீழ போனா, நீ பார்க்கலையா?” என்றார்.
அதற்குள் மகேஷிற்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்து விட, “சரிப்பா நேரமாகிடுச்சு, நல்ல படியா போய் டாக்டரா திரும்பி வா” என்றவர் அவனை அணைத்து விடுவிக்க அவனுடன் அவர்களும் கீழிறங்கினார்கள்.
வீட்டிற்கு சென்றும் அவளை காண முடியாதது பெரிய ஏமாற்றமாக இருக்க வேறு வழியின்றி எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்தான். இரவு கிளம்பும் வரை நேரமிருக்கிறது எப்படியாவது அவளை கண்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில்.
மாலையில் காவ்யா வீட்டின் உள்ளே நுழைய மாயா வந்திருப்பாள் என யூகித்து மாயா வீட்டிற்கு சென்று அழைப்புமணியை அழுத்த அவள் தான் கதவை திறந்தாள். அவனை பார்த்தவுடன் சின்ன அதிர்வுடன் நிற்க அவளை விலக்கி உள்ளே வந்தவன், “அத்தை, எங்க வந்துட்டாங்களா?” என்று கேட்க, “இல்லை, இன்னும் ஒன் ஹவர் ஆகும்” என்றாள் சுரத்தே இல்லாத குரலில்.
“சரி, நான் போய்ட்டு வரேன் மோகினி” என்று சின்ன சிரிப்புடன் கூற அவளுக்கு எங்கிருந்து வந்ததென்று தெரியாமல் கண்ணீர் ஆறாய் தேங்கி நிற்க, “ஹேய், ரிலாக்ஸ்” என்று கண்ணீரை துடைத்தவன்,
அவள் தோள் மீதே கைப் போட்டு, “சீக்கிரமே வந்திடுவேன், டேக் கேர். நல்லா படி. கவனமா இரு, என்ன பிரச்சனைனாலும் முதல்ல மாதிரி இருக்காத. வீட்டில சொல்லிடு” என்று கூற அவளுக்கு தான் அவனது நெருக்கத்தில் மூச்சடைத்தது. முதல் முறை இவ்வளவு நெருக்கத்தில் அவனது முகம், அந்த புன்னகை கண்மூடி அதை தன்னுள் கிரகித்துக் கொள்ள விலகி விட்டான். மெல்லிய மிக மெல்லிய அணைப்பு சில மைக்ரோ வினாடி நேரத்தில் நடந்தேறி விட அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் பேதையவள்.
“இனிமே ஜாலி தான், உன்னை தலையில கொட்ட ஆள் இல்லைல்ல” என்றவனது கை அவளது தலையை நெருங்க பழக்க தோசத்தில் இருகைகளையும் கொண்டு தலையை மறைத்துக் கொள்ள அவனது புன்னகை மேலும் விரிந்து அவளையும் சட்டென்று தொற்றிக் கொள்ள அந்த நிமிடம் இருவருக்குமே ஏகாந்தம் தான்.
அவளது கையை எடுத்து விட்டு தலையை கலைத்து விட்டவன் கையசைத்து புறப்பட்டு விட்டான்.