காதல் 16:
“மகிழ் ஸ்டாக்ஸ் ரிப்போர்ட் ரெடி பண்ண சொன்னேனே ரெடி பண்ணிட்டியா?” என்று மடிக்கணினியில் இருந்து பார்வையை அகற்றாது குரு வினவ,
“ஹான் பண்ணிட்டேன் சார். டூ மினிட்ஸ் சேலரி ஸ்டேட்மெண்ட் பைனலைஸ் பண்ணிட்டு இருக்கேன் அது கம்ப்ளீட் ஆனதும் மெயில் பண்ணிட்றேன்” என்று பதில் மொழிந்தாள் மகிழினி.
“நோ ஐ நீட் இட் இம்மிடியட்லி. செண்ட் இட் நவ்” என்று குரு கூறிட,
“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள் மறுப்பேதும் கூறாது அவனுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்.
திருமணமான புதிதில் பணிக்கு செல்லாமல் இருந்தது சிறிது நாளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
போக போக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகு வாழ்க்கை மிகவும் வெறுமையாக இருந்தது.
நிற்காது ஓடி கொண்டிருந்தவளுக்கு திடீரென எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் பொழுதை போக்க சுத்தமாக பிடிக்கவில்லை.
அதற்காக பணிக்கு செல்ல முடியுமா…? இவ்வளவு பெரிய வளமையான குடும்பத்தினர் அவர்கள் வீட்டு மருமகளை பணிக்கு நிச்சயமாக அனுப்ப மாட்டார்கள் என்று தான் தோன்றியது.
அதனால் அந்த ஆசையை கைவிட்டுவிட்டாள். இருந்தும் மனதினோரம் ஒரு சிறு ஏக்கம் இருந்தது.
தங்கள் மகளை மருத்துவம் வரை படிக்க வைத்திருப்பவர்கள் மருமகள் பணிக்கு செல்ல தடை கூற மாட்டார் என்றும் எண்ணம் வந்தது.
பிறை சூடனும் பணிக்கு செல்வதை தடுப்பவராக தெரியவில்லை.
இரண்டு மாதங்கள் தாக்கு பிடித்தவளால் அதற்கு மேல் முடியவில்லை.
ஒரு நாள் கோதையிடம் சென்று வீட்டில் எதுவும் செய்யாமல் இருப்பது பொழுது போகவில்லை தான் பணிக்கு செல்லலாமா…? என்று அனுமதி கேட்க, அவர் கூறிய பதிலில் இவள் தான் ஏன் கேட்டோம் என்று நொந்து போனாள்.
வேறொன்றும் இல்லை கோதை உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை நீ வீட்டிலே இரு. குழந்தை பிறந்ததும் என்னிடம் கொடுத்துவிட்டு நீ வழக்கம் போல பணிக்கு செல்லலாம். குழந்தையை நானே வளர்த்து கொள்கிறேன்.
இப்போது தினமும் நீ அதிக நேரம் பயணம் செய்தால் அது நடக்காது என்று பக்குவமாக கூறி இருந்தார்.
போகலாம் அல்லது வேண்டாம் என்று எதாவது ஒன்றை எதிர்பார்த்தவள் இப்படி ஒரு பதிலை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
சம்மதமாக தலையசைத்துவிட்டு வந்தவள் தன்னை தானே கடிந்து கொண்டாள்.
இது உனக்கு தேவை தான் இனி நீ பணிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பாயா? என்று தன்னை நிந்தித்தவள் அதன் பிறகு அந்த ஆசையை புதைத்திருந்தாள்.
ஆனால் பாவம் அவருக்கு என்ன தெரியும். அவரும் எல்லா பெற்றோர்களை போல பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து பேரக் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று சராசரி ஆசை இருக்கிறது. இதில் என்ன தவறு.
அவரது விருப்பம் நியாயமான ஓன்று தான் தங்களால் தான் அதனை எந்த காலத்திலும் நிறைவேற்ற இயலாது என்று எண்ணி கொண்டாள்.
அதுவும் சில நாட்கள் தான். மீண்டும் சில மாதங்கள் தாக்கு பிடித்தவளுக்கு வாழ்வே வெறுத்த நிலை தான்.
என்ன செய்வதென்று சிந்தித்து வேறு வழியின்றி குருவிடமே சென்று எனக்கு வீட்டில் பொழுது போகவில்லை வீட்டிலிருந்தே செய்யும் படி எதாவது வேலை கொடுக்குமாறு கேட்டுவிட்டாள்.
குரு அதற்கு அலுவலகம் வந்தே அவள் முன்பு பார்த்த அதே வேலையை தொடரும் படி கூறிட,
உடனே மறுத்து கோதையின் பதிலை தயங்கி தயங்கி கூறியிருந்தாள்.
அதனை கேட்டவன் மறுமெழியின்றி மகியை நோக்கிவிட்டு அவளுக்கு வீட்டில் இருந்தே செய்யும் பணியை கொடுத்திருந்தான்.
முதலில் கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளை கொடுத்தவன் போக போக நிறைய வேலைகளை அவளது பொறுப்பில் மகியின் வேலை திறனை கண்டு கொடுத்திருந்தான்.
மகியும் சலிக்காது அவன் கொடுத்த வேலைகளை செய்தாள். வீட்டிலே எதுவும் செய்யாது இருந்தவளுக்கு இது ஒரு நல்ல உதவியாக இருந்தது.
இது மட்டுமின்றி குரு மகிழ் செய்யும் பணிக்கு ஒரு நல்ல தொகையை ஊதியமாக வழங்கினான்.
மகியும் அதனை மறுக்கவில்லை. தான் பணி புரிகிறோம் அவர் சம்பளம் கொடுக்கிறார் என்று எண்ணி கொண்டாள்.
குரு கேட்டவற்றை அனுப்பிவிட்டு தனது பணியை தொடர்ந்தவளுக்கு மனது ஒரு நிலையில் இல்லை.
காரணம் நாளை அவளுடைய பெற்றோர் மற்றும் அண்ணா அண்ணிக்கு நினைவு நாள்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த கோர சம்பவம் தான் மனதிற்குள் வந்து வந்து போனது. உடல் முழுவதும் கருகி உயிரை துறந்திருந்த பொற்றோர் முகம் தான் மனத்திரையில் வந்து போனது.
“மகிம்மா…” என்று அழைக்கும் தந்தையின் குரல் தான் செவியில் ஒலித்தது.
இறூதியாக, “மகிழ்குட்டி பாத்து போய்ட்டு வாங்க. தம்பியை பார்த்து தூக்கிட்டு போ” என்று வழியனுப்பிய தாயின் அமைதியான முகம் அப்படியே வந்து நின்றது.