அத்தியாயம் – 3
வண்டி அதிக பாரமாக இருந்தததால் தூக்க முடியாது சிரமப்பட்ட சரிதா, “மாயா, என்ன பண்ணீட்டு இருக்க?” என்ற பின்பே சுதாரித்து அவருடன் இணைந்து வண்டியை தூக்க அவர் ராகவை தூக்கி அமர வைத்தார்.
வண்டி பலமாக விழுந்ததில் அவனது வலது கை பயங்கர வலியாக இருக்க கால்களோ அசைக்க முடியாத நிலை. அவனோ வலியின் உச்சத்தில் அரை மயக்கத்தில் இருக்க மாயா வேகமாக தண்ணீரை எடுத்து சரிதாவிடம் கொடுத்து அவசர ஊர்திக்கு அழைத்து விட்டாள்.
அவனது கன்னத்தை தட்டி சிறிதளவு தண்ணீர் குடிக்க வைத்தவர், “ராகவ், ராகவ்” என்றழைக்க முழுவதுமாக மயக்க நிலையை எட்டியிருந்தான். சரிதாவோ சற்று பதற்றமாக இருக்க மாயா அழுக ஆரம்பித்து விட்டாள் அவனது நிலையை கண்டு.
சில நிமிடங்களில் அவசர ஊர்தி வந்து விட அவனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கிருபாகரனுக்கும் தேன்மொழிக்கும் தகவல் அளிக்கப்பட பறந்து கொண்டு ஓடி வந்தனர்.
உயிர்க்கு எந்த ஆபத்து இல்லையென்ற பொழுதிலும் அவனது வலது கையிலும் காலிலும் வண்டி விழுந்த அழுத்தத்தால் சிறியளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
சரிதா தான் தேன்மொழிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்க, “எத்தனை தடவை சொன்னேன். இப்ப வண்டி வேணாம்னு கேட்டானா. பாருங்க, எங்க கொண்டு வந்து விட்டிருக்குனு. இதுல மட்டும் இல்லை எல்லாத்திலையும் பிடிவாதம், எனக்கு ரொம்ப பயமா இருக்கு இந்த பையனை நினைச்சா” என்று அழுது புலம்பி கிருபாகரனை ஒரு வழியாக்கி விட்டார் தேன்மொழி.
“இப்ப எதுவும் பேசாத தேனு, அவன் வீட்டுக்கு வரட்டும். பிரச்சனை வந்திடுச்சு, அதை எப்படி சரி செய்றது தான் பார்க்கணும்” என்று சரிதா சமாதானம் செய்து கொண்டிருக்க வெளியில் வந்த மருத்துவர்,
“இரண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் ஆனா கைக்கால் குணமாக குறைந்தது ஆறு மாசம் ஆகும்” என்று கூறி நகர்ந்து விட தேன்மொழி மீண்டும் அழுக ஆரம்பித்தார்.
அவரை சமாதானம் செய்து, “நீ ராகவை பார்த்துக்கோ, நான் சரிதாவை வீட்டில விட்டு வரேன்” என்ற கிருபாகரன் தன் மகிழுந்தை எடுத்தார்.
ஆம், இவ்வாறு என்றவுடனே மகேஷிடம் விஷயத்தை கூறி காவ்யாவை பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு வந்திருந்தனர். மாயாவிற்கு தான் அங்கிருந்து செல்ல மனதே இல்லை. அவ்வளவு அழுகை, அவன் தனக்காக தான் இவ்வாறு கிடக்கிறான் என்று நினைக்க நினைக்க ஒரு வித ஆற்றாமை.
வீட்டில் விட்டவர், “காவ்யாவை பார்த்துக்கோம்மா” என்று கூற, “என்னண்ணா, நான் இருக்கேன். நீங்க அவனை நல்ல படியா வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க” என்று ஆறுதல் கூறி அனுப்பிய சரிதா மகளுடன் வீட்டிற்கு சென்றார்.
ஏற்கனவே சமைத்து வைத்திருந்ததால் காவ்யாவை சாப்பிட வைத்திருந்தார் மகேஷ். “என்னாச்சும்மா, இப்ப எப்படி இருக்கான்?” என்று விசாரிக்க பதில் கூறிக் கொண்டே மாயாவிற்கு உணவை கொடுத்து தானும் சிறிதளவு உண்டார்.
“இந்த பையன் ரொம்ப வேகம்மா, அன்னைக்கு சிக்னல்ல பார்த்தேன். நானே ரொம்ப அரண்டுட்டேன்” என்று மகேஷ் கூற, “இல்லைங்க, இப்ப என் கூட தான் வந்தான். அவன் மேல தப்பு இல்லை, இடையில வேற வண்டி குறுக்க வந்திடுச்சு” என்றவரின் பேச்சு நீள மாயா தனதறைக்கு சென்று விட்டாள்.
காவ்யா உறங்கி இருக்க மற்றொருபுறம் படுத்தவளுக்கு கண்ணீர் பெருகியது. அவன் மயங்கி சரிந்த நினைவே மீண்டும் தோன்ற ஒரு வித வலி பரவியது. ‘இதுக்கு தான் அத்தனை தடவை சொன்னேன். பிரச்சனை வேணாம்னு கேட்டா தான?’ என்று மனதினுள் அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் தன்னை மறந்து உறங்கும் வரை.
சரிதா இரண்டு நாட்கள் காவ்யாவை தங்களுடனே வைத்து பள்ளிக்கு அனுப்ப கிருபாகரனும் தேன்மொழியும் மருத்துவமனையிலே இருந்தனர். மறுநாள் மகேஷ் உடன் சென்று அவனை பார்த்து வந்தார். மாயாவிற்கும் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஆனால் நேரடியாக கேட்க இயலாது மறுகினாள்.
இரண்டு நாட்களில் வீட்டிற்கு வந்த பின் தான் காவ்யாவுடன் சென்று பார்த்தாள். கண்கள் கலங்க நின்றிருந்தவளை பார்த்தவனுக்கும் மனது வலித்தது. கைக்கால் இரண்டும் அசைக்க இயலாது கட்டு போட்டு படுத்திருந்தான். தேன்மொழி, “காவ்யா” என்று குரல் கொடுக்க அந்த அறையில் இருவர் மட்டும்.
மாயாவிற்கு குற்றவுணர்ச்சி மேலிட, “சாரி, என்னால தான இதெல்லாம்” என்றாள் இழுத்து பிடித்த அழுகையோடு.
“ஏய் ரிலாக்ஸ், ஒன்னுமில்லை” என்றவன் இடது கையால் அவளது கையை பிடிக்க அவனையே பார்த்திருந்தாள். ‘எப்படி இவன் மட்டும் எல்லா சூழ்நிலையிலும் இப்படி இருக்கான்’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
“இன்னும் த்ரீ மந்த்ல எக்ஸாம் இருக்கு. இதோட எப்படி எழுதுவீங்க?” என்றவளுக்கு தொண்டை அடைக்க, “பார்த்துக்கலாம்” என்று முடித்துக் கொண்டான். வேறேதுவும் பேசினால் அவளது அழுகை தான் அதிகமாகும் என்றுணர்ந்து.
காவ்யா அவனுக்கு கறிச்சாறு கொடுப்பதற்கு உள்ளே நுழைய வேகமாக கைகளை பின்னால் இழுத்துக் கொண்டாள். அவளின் பின்பே தேன்மொழியும் வந்து விட அப்படியே பேச்சுக்கள் நீள சிறிது நேரத்தில் கிளம்பி விட்டாள்.