கனவு – 3.2

ஒருபுறம் இன்ப இன்பமாய் சில்லென்ற பனி பொழியும் அண்டை வெளியில் நெடு நேரம் வைத்திருந்ததில் உறைந்து போகிறது அவன் மனம் என்றால் மற்றொருபுறம் சொல்லாமல் கொள்ளாமல் வெய்யோனை ரசிக்கும் பனிகூழாய் அவளிடம் முழுவதுமாக உருகி நிற்கிறது அவனுடைய அகமும் புறமும்.

யார் இவள்? என்னுடன் இத்தனை இயல்பாய் உரையாடி என்னுள் உறவாடி இத்தனை நிமிடங்களில் என்னை மொத்தமாய் தன்னுள் சுருட்டி கொண்டு எதுவும் அறியாத பிள்ளை போல தன் முன்னால் நின்றிருப்பவள்? விடியலின் கனவாய் அவன் முன்னால் சிரிப்பவள்?

இத்தனையாய் அவனுள் அவளிடமாக சில மாற்றங்கள் நிகழ்ந்த போதும் கூட பால்கனியில் கேட்ட சத்தங்களையும் கூர்ந்து கவனித்து கொண்டு தான் இருந்தான் தில்ஷத். யாரோ இருவரின் காலடி ஓசைகள் நன்றாகவே கேட்டது. ஆனாலும் அவர்களின் நோக்கத்தை ஊகித்து விடும் அளவிற்கு அங்கிருந்து வேறு எந்த சத்தமும் வரவில்லை. அவர்கள் இருவரும் சத்தம் எழுப்பாமல் தீவிரமாக எதையோ செய்து கொண்டிருப்பது இவர்களுக்கு புரிந்தது.

வெளியில் இருப்பவர்கள் யார் என்ன என்பதெல்லாம் இருவருக்கும் இப்போது வரை தெரியாது. எதற்காக அவனை தேடி வந்திருக்கிறார்கள் மற்றும் அவர்களின் உத்தேசம் தான் என்ன என்றும் கூட தெரியாது. ஆனாலும் தன் முன் நின்றிருந்தவளையும் இத்தனை நேரத்தில் அவன் கண்டு விட்ட அவளின் வெவ்வேறு பரிமாணங்களையும் ரசிக்க சொல்லி சுகம் சுகமாய் இறைஞ்சியது தில்ஷத்தின் உள்ளம்.

தில்ஷத் கல்பிரிட் இல்லை என்பது பிருந்தாவுக்கு இப்போது நீக்கமற தெரிந்திருந்தது. அவளால் கட்டப்பட்டிருந்த கட்டுக்குள் இருந்து இரு நொடிகளில் வெளியேற முடிந்தவனின் இத்தனை நேர அமைதியும் கண்ணியமும் அவளுக்கு அதை புரிய வைத்திருந்தது. மேலும் அவளுக்கு தன்னை எப்படியாவது புரிய வைத்து விடும் நோக்கோடு தானே அவன் பேசியவைகள் அனைத்தும் இருந்தது.

இப்போதும் கூட அவளை காக்கும் நோக்கில் அவளுக்கு முன் அரணாக வந்து நிற்கிறானே. அவளே தன்னை அறியாமல் அவனை நெருங்கினாலும் அவன் அவளை அழகாக தவிர்த்து விட்டு விலகி நிற்கிறான். இதையெல்லாம் சிந்தித்து பார்த்ததில் அவன் மீதான அவளது சந்தேகம் நைன்டி நைன் பாயிண்ட் நைன் நைன் பெர்செண்ட் நீங்கி விட்டது. ஆனாலும் அவனை முழுதாக நம்ப விடாது எஞ்சிய அந்த பாயிண்ட் ஜீரோ ஒன் பெர்செண்ட் மட்டும் இன்னுமும் அவளுக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை இதுவும் இவன் திட்டமாக இருந்தால்? வெளியில் நிற்பவர்கள் இவனுடைய கூட்டாளிகளாக இருந்தால்? மிகப்பெரிய கொள்ளைகாரர்களா அவர்கள் இருப்பின் அதற்கு தடையாக இருக்கும் அவளை கொன்று விட்டு தப்பிக்க முயன்றால்? அதற்கும் கூட சிறிதளவு வாய்ப்புள்ளது தானே!

அவனோடு இயல்பாக உரையாட துவங்கியவளின் மனதிற்குள் தில்ஷத் பால்கனி வழியாக நுழைந்தது, அவனிடம் இருந்த பொருட்கள் மற்றும் அவன் இன்னுமும் நிரூபித்து விடாத தில்ஷத் என்னும் அடையாளம் என அனைத்தும் அவளை சற்று யோசிக்க வைத்தது. குழம்பிய குட்டையாய் சற்றும் தெளிவில்லாமல் தவித்ததாள் பிருந்தா.

மூடியிருந்த கதவிற்கு முன்னால் நின்றிருந்தவர்களின் மனநிலைகள் இவ்வாறு இருக்க கதவுக்கு மறுபுறம் நின்றிருந்தவர்கள் இதுவரை மௌனமாக இருந்தது போதும் என்று நினைத்தார்களோ என்னவோ அவர்களின் கைங்கரியத்தில் சட்டென்று தில்ஷத்தின் பால்கனி கதவு திறக்கப்பட்டது.

பிருந்தாவை பார்த்து நின்ற தில்ஷத் இதை சற்றும் எதிர்பார்க்காது இறுதி நொடியில் சிலையாக நின்று விட்ட பிருந்தாவை வேகமாக கதவின் மறைவுக்கு தள்ளியதால் அந்த இருவரின் பார்வைக்கு கிட்டியது தில்ஷத் மட்டும் தான். கைகளில் இருந்த துப்பாக்கியை அவன் நெற்றியில் குறி வைத்து பிடித்திருந்த முகமூடி அணிந்திருந்த இருவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் பிருந்தா.

அவர்கள் இருவரும் தில்ஷத்தை மட்டுமே எதிர்பார்த்து அங்கு வந்திருப்பார்கள் போலும் இருவரின் பார்வையும் அவனை விட்டு அங்குமிங்கும் நகரவே இல்லை. அவனை பார்த்தபடியே அவனுடைய கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி பிடிக்குமாறு செய்கையில் கூறினார்கள். தில்ஷத்தும் அவன் கைகள் இரண்டையும் மேலே தூக்கவும் வந்த வேலை சுலபமாக முடிந்து விட்டதாக நினைத்து தெளிந்தவர்கள் தங்களுக்குள் எதையோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் மூவரையும் கதவின் இடுக்கில் இருந்து பார்த்து கொண்டிருந்த பிருந்தாவிற்கு அடுத்து அவர்கள் தில்ஷத்திடம் சென்று எதையோ யாசித்து நிற்பது புரிந்தது. அவர்கள் மூவரும் அந்நாட்டின் தாய் மொழியான ‘ஸ்வென்ஸ்கா’ மொழியில் பேசி கொண்டதால் அவர்கள் சத்தமாக பேசி இருப்பினும் கூட என்னென்ன பேசிக்கொண்டார்கள் என்றெல்லாம் அவளுக்கு புரியவில்லை.

தில்ஷத்தும் சிரித்து கொண்டே அவர்களுக்கு பதில் அளிப்பதும் அவர்கள் இருவரும் தங்கள் முகமூடிகளை அவிழ்ப்பதும் என அதற்கு அடுத்து அங்கு நிகழ்ந்தவைகளை அவளால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியில் விழிகள் விரிய நின்றிருந்தவளை நோக்கி தன் இரு கண்களையும் சிமிட்டிய தில்ஷத்துடன் அவர்கள் இருவரும் தில்ஷத்தை அணைத்து நின்றவாறு புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டார்கள்.

‘எந்த ஊர்ல ஒருத்தவரை கொல்ல வந்த கல்பிரிட்ஸ் அவரோட சேர்ந்து ஃபோட்டோஸ் எடுத்துக்குவாங்க? என்ன தான் நடக்குது இங்க?’

‘ஒருவேளை இதெல்லாம் கூட கனவாக தான் இருக்குமோ? அதுல தான் இப்படி சமந்தமே இல்லாம வரும். தூக்கம் வராம இருந்ததுல தெரியாம வந்து இப்டி ஒரு கூட்டத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன்’

‘இவங்களாம் ஒரே குரூப் தான் போல. இந்த தோர் என்னை காப்பாத்த நினைக்குறானா இல்ல மாட்டிவிட பாக்குறானா?’

அங்கு நிகழ்ந்தவைகளை கண்ட பிருந்தாவிற்கு அவள் அடிமனதில் தொலைந்து போயிருந்த சந்தேகங்கள் மீண்டும் முளைத்தெழுந்தது.

புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு சில நிமிடங்களில் சட்டென அந்த இருவரின் உடல் மொழிகளிலும் பெரிதாக மாற்றம் வந்திருந்தது. இருவரும் தில்ஷத்தின் இருபுறமும் நின்று கொண்டு தங்களின் பிஸ்டலால் அவனை சுட்டுத்தள்ளவே தயாராகி விட்டார்கள். ஆனால் அப்போதும் கூட தில்ஷத்தின் முகத்தில் சிறிதும் பயம் தெரியவில்லை. இருவரையும் கூர்ந்து கவனித்தவன் சட்டென அவர்கள் நின்றிருந்த திசையில் இரு அடிகள் பின்னால் எடுத்து வைக்கவும் எங்கிருந்தோ வந்த பத்து நபர்கள் கொண்ட குழு அந்த இருவரையும் சுற்றி வளைத்தது.

error: Content is protected !!
Scroll to Top