“இப்படி அடிச்சிருக்கீங்களே, அவனுங்க போலீஸ் புகார் கொடுத்தா என்னாகிறது” என்று கேட்க,
“நீ உன் வேலைய மட்டும் பார், என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்று திமிராக கூற அவளால் பல்லை மட்டும் கடிக்க முடிந்தது. வீட்டிலும் கூட சொல்ல முடியாத நிலை. சரிதாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான். வானத்திற்கும் பூமிக்கும் குதித்து அவளை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றி விடுவார். இன்னொரு இடத்தில் சேர்ந்து அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொருந்தி அதற்கு பின் படிப்பில் கவனம் வருவது ஆகாத வேலை என்பதால் மாயா அமைதியாகி விட்டாள். ராகவிற்கு தெரியும் இது போல் பேசினாள் தான் இவள் மேலும் எதுவும் கூற மாட்டாள் என்று.
அதற்கு பின் எந்த வித பிரச்சனையுமின்றி அவளது நாட்கள் சென்றது. படிப்பில் இருந்த நெருக்கடியும் அவளை வேறெங்கும் சிதற விடாமல் இழுத்து பிடிக்க ராகவ் மட்டும் அவ்வப்பொழுது அவளை சீண்டிக் கொண்டிருந்தான். வெளியில் பிடிக்காது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் இரசிக்கவே செய்தாள். ஆனால் ராகவ் என்றுமே ஒரு வார்த்தை எல்லை மீறி பேசிட மாட்டான். தங்கள் வயதையும் படிப்பையும் அதிகளவு கருத்தில் கொண்டிருப்பான். மற்ற விஷயத்தில் அவன் அடிதடி என்றாலும் மாயா விஷயத்தில் அவன் அதிக சிரத்தையுடன் தான் இருந்தான். அவனுக்கும் மருத்துவத்தில் நுழைய வேண்டும் என்பது சிறு வயது முதலே கனவு.
சொல்லப் போனால் அவனை பார்த்து தான் மாயாவிற்கு அந்த ஆசை துளிர்த்தது. வாயில்லாமல் சரிதாவிடம் உளறி கொட்ட பிடித்துக் கொண்டார் கெட்டியாக.
பிள்ளைகளின் விருப்பத்தை தாண்டி மருத்துவர் என்பது கௌரவம் என்று பெற்றோர் மனதில் அச்சாணி கொண்டு சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டு விட்டது. அவரும் சராசரி தாயாக யோசித்து மகளை அனத்திக் கொண்டிருக்கிறார்.
பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வுகள் நெருங்கி விட ராகவ் அதிக கவனத்துடன் படித்துக் கொண்டிருக்க முன்பை போல் அவனை காண முடிவதில்லை மாயாவால். குறைந்தது ஒரு நாளைக்கு இரு முறையாவது பார்த்து விடுவாள். ஆனால் இப்பொழுது ஒரு வாரமாகி விட்டது. நாளை வீட்டிற்கு சென்று பார்த்து விட வேண்டும் என்று எண்ணியவள் பாடத்தில் கவனமானாள்.
இது காதலா? என்று வினாவினால் இருவரிடமும் பதிலில்லை. அந்த வயதிற்குரிய ஏதோ ஒரு வித ஈர்ப்பு. நட்பை தாண்டியது காதலை தொடாமல் எல்லைக் கோட்டில் நிற்கும் உறவு என்றே வரையறுத்து வைத்திருந்தனர் இருவருமே. என்றுமே பார்வை கூட எல்லை மீறியதன்று.
மறுநாள் காலையில் சரிதாவே, “மாயாம்மா, இன்னைக்கு பௌர்ணமி விரதம் பாயசம் செஞ்சேன். இந்த பாயசத்தை கொண்டு போய் தேனு அத்தை வீட்டில ஒரு எட்டு கொடுத்திட்டு வந்து படி” என்று அவளது தலையை வருட கையில் கிண்ணத்துடன் இறங்கி ஓடி விட்டாள்.
பாயசத்தை கொடுக்கும் ஆர்வமா இல்லை ராகவை காணும் ஆர்வமா என்று தெரியாது.
வீடு திறந்தே இருக்க உள்ளே நுழைந்தவள் நேராக அடுப்பறை செல்ல தேன்மொழி அங்கு தான் நின்றிருந்தார்.
அவளை பார்த்ததும் புன்னகைத்தவர், “மாயா வா, ஆளைவே பார்க்க முடியலை” என்றவர் அவளின் கன்னம் கிள்ள கையில் வைத்திருந்ததை கொடுத்து, “அம்மா கொடுத்தாங்கத்தை” என்று கூற வாங்கி வைத்தவர் சுட்டுக் கொண்டிருந்த வடையை தட்டில் வைத்து அவளிடம் கொடுத்து, “சாப்பிடு” என்று விட்டு அவளுக்கு தேநீர் தயாரிக்க ஆயத்தமாக, “அத்தை படிக்கணும், நேரமாச்சு” என மறுத்தாள்.
“இதை சாப்பிட எவ்வளவு நேரமாக போகுது. பேசுற நேரத்துக்கு சாப்பிட்டு முடிச்சிடலாம்” என்றவர் தேநீரை குவளையில் ஆற்றிக் கொடுக்க மறுக்க முடியாமல் சாப்பிட்டு விட்டு குடிக்க ஆரம்பித்தாள்.
“நின்னுகிட்டே இருக்க, உட்கார்ந்து குடி” என நாற்காலியை இழுத்து போட்டவர், “ராகவ், வடை சுட்டாச்சு வாடா” என்று குரல் கொடுத்து விட்டு தனது வேலையை பார்க்க வந்து தட்டை எடுத்தவன் கண்கள் அவள் மீது ஒரு கணம் படிந்து மீள அவளும் அவனை தான் பார்த்திருந்தாள். இரட்டை சடை போட்டு பூ சுற்றி நன்றாக திருநீறு பூசி மங்களகரமாக அமர்ந்திருந்தாள்.
அவன் வெளியில் நீள்விருக்கையில் அமர்ந்திருக்க ஒரு பாத்திரத்தில் வடையை வைத்து, “அம்மாகிட்ட கொடுத்திடு மாயா” என்று கூற வாங்கிக் கொண்டு கிளம்பியவள் வெளியில் வர வரவேற்நறையில் அமர்ந்திருந்தவன் அவளை வம்பிலுப்பதற்காக காலை இடையில் விட தடுக்கி விழச் சென்றவள் அவனை முறைத்து, “காலை உடைக்கப் போறேன் பார்” என்று கூற அவன் நக்கலாக சிரித்து அமர்ந்திருந்தான்.
அவனை முறைத்தவள் நகர்ந்து விட இதழின் கடையில் அவளை அறியாமல் ஒரு புன்னகை. அன்று தான் அவனை இறுதியாக பார்த்தாள்.
ஒரு வாரத்திற்கு பின் டியூசன் வாயில் நின்று கொண்டிருக்க வெளியில் வந்தவன், “ஏய் கிளம்பாம இன்னும் என்ன பண்ற?” என்று வினவ அதற்குள் சரிதா வந்து விட்டார்.
மாயா அவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறிக் கொள்ள அவனும் அவருடன் பேசிக் கொண்டே மிதமான வேகத்தில் வண்டி ஓட்ட, சற்று இருட்டான பகுதியில் இருந்து திடீரென வந்த வாகனம் ராகவை லேசாக தட்டி விட அப்படியே விழுந்து விட்டான்.
அவன் சரிதாவுடன் பேசிக் கொண்டிருந்ததால் சுதாரிக்க கூட முடியவில்லை. அதுவும் அந்த வண்டி வேண்டுமென்றே வந்தது போல் இருக்க பதறிய சரிதா வேகமாக வண்டியை நிறுத்தி, “ராகவ், என்னாச்சுடா” என அருகில் வர அந்த வண்டியில் பின்புறமிருந்தவன் தலைகவசத்தைக் கழட்டி திரும்பி ராகவை பார்க்க எதிரின் வந்த ஒளியின் மூலம் அவனை கண்ட மாயாவிற்கு தான் தூக்கி வாரி போட்டது. அவளுடன் வம்பிலுத்ததற்காக ராகவ் கையை உடைத்து விட்டவன் தான் அவன் என்பதை மூளை கூற அதை ஏற்க இயலாது சில கணங்கள் தடுமாறி தான் நின்றாள் அப்பேதை.