“மனோ, நீ குமரனைக் கல்யாணம் பண்ணிக்கோ…” என்று ரங்கா கூறவும் மனோஹரிக்கு அகம் முழுவதும் மகிழ்ச்சி அலைகள் பரவத் தொடங்கின. விழியோரம் நீர் துளிர்க்கப் பார்த்தது. ஆனால், அடுத்த தந்தை கூறிய வார்த்தையில் அவளது மகிழ்ச்சி நொடியில் முகத்திலிருந்து துடைத்து எடுக்கப்பட்டிருந்தது.
“அவனை நீ கல்யாணம் பண்ணிக்கோ, ஆனால் ஒரு அப்பாவா எந்த இடத்திலயும் நான் நிக்க மாட்டேன், வர மாட்டேன். இந்த ஊர்ல இருக்கக் கூடாது நீங்க. வேறெங்கையாவது கண்காணாத இடத்துக்குப் போய்டுங்க. என் கண் முன்னாடி வந்துடாதீங்க. என்னை அசிங்கப்படுத்திடாதீங்க!” என்றவர் குரலில் வெறுப்பும் கசப்பும் மண்டிகிடக்க, பேசும் விஷயத்தின் பிடித்தமின்மையை சுருங்கிய முகமும் புருவமும் பறைசாற்றின. அவரது பதிலில் மனோஹரிக்கு கோபம் சுறுசுறுவென வரத் துவங்கியது. அசிங்கம் என்ற வார்த்தை அவளது மனதை நெருஞ்சியாய்த் தைத்திருக்க, அது கொடுத்தக் கோபத்தை வார்த்தைகளில் கொட்டினாள்.
இருக்கையிலிருந்து எழுந்தவள்,
“எதுக்காக பா நாங்க கண்காணாத இடத்துக்குப் போகணும். என்ன தப்பு பண்ணோம் நாங்க? காதலிச்சு பெத்தவங்க விருப்பத்தோட கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்றோம். இதுல என்ன அசிங்கத்தை நீங்கக் கண்டீங்க?
அப்படியெல்லாம் யாருக்கும் தெரியாம திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியம் இல்லை. பெத்தவங்க நீங்கதான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்?” மனோஹரியின் வார்த்தைகள் பல்லிடுக்கில் வெளிவந்து விழுந்தன.
“என் கண்முன்னாடி நீங்க இருக்கக் கூடாது. அசிங்கம் எனக்குத்தான்!” என்றவரின் பதிலில் கொதித்துப் போனவள்,
“இல்ல, என்ன அசிங்கத்தை நீங்க கண்டீங்க? எனக்குப் புரியலை. எந்த எண்ணத்துல நீங்க எங்களை கண்காணாத இடத்துக்குப் போக சொன்னீங்க? இதுவரைக்கும் எங்கேயாவது ஒரு இடத்துல உங்களை அசிங்கபடுத்தியிருக்கேனா? இல்லை இறங்கவிட்டிருக்கேனா? செத்தா கூட உங்கப் பொண்ணா சாவேனே ஒழிய, அப்படியொன்னும் ஒளிஞ்சு மறைஞ்சு வாழ்ற வாழ்க்கை எனக்கு வேணாம்!” என்ற போது நெஞ்சே வெடித்துப் போனது மனோவுக்கு. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி, உக்கிரமாய் நின்றாள். சம்மதம் தருவது போலொரு பாவனையில் இப்படி நஞ்சை விதைக்கிறாதே இவர் என்ற எண்ணத்தில் மனம் துடித்துப் போக, விழிகளின் வழியே வலி கசியப் பார்த்தது. ரங்காவும் அவளைத்தான் பார்த்தார்.
‘நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை!’ என்றொரு பாவனை அவரது முகத்தில்.
‘எப்படி இவர் இது போல பேசலாம்? என்ன தவறு செய்தேன் நான்?’ என்ற எண்ணத்தில் நெஞ்சம் குமைய, விழிகளில் சரசரவென நீர் கோர்த்தது.
“முடியாது! கீழ் ஜாதிக்காரனோட ரத்தம் அசிங்கம், அவமானம். உனக்கும் அவனுக்கும் கல்யாணமானா குழந்தை பொறக்கும். அதை என்னால கையால கூடத் தொட முடியாது. அது அசிங்கம், அருவருப்பா இருக்கும்!” கசப்பை விழுங்கியது போன்ற அவரது பாவனையில், மனோவின் மனம் பொங்கிவிட்டது. அவளால் அவரது பேச்சை சத்தியமாய் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. தந்தை மீது நேசம் கொண்ட மனது அவரது கீழ்த்தரமான பேச்சிலும் ஜாதி வெறியிலும் ஸ்தம்பித்துப் போனது. இந்த மனிதருக்கு இப்படியொரு முகமா? என அதிர்ந்து ஒரு நொடி பேச்சிழந்து போனாள். ராதாமணியைப் போல தந்தையும் கோபத்தில் பேசுகிறார் என அவள் எண்ணியிருந்த எண்ணத்தை ரங்கா ஒரே வார்த்தையில் சுக்கு நூறாக்கிவிட்டிருந்தார்.
குழந்தையை அசிங்கம் எனக் கூற இவருக்கு எப்படி மனம் வந்தது என நினைப்பில் கோபம் கொண்ட நெஞ்சு விம்மித் தணிந்தது. ஆத்திரமும் கோபமும் பொங்கி வழிய, அதை வார்த்தைகளில் பிரவாகமாகக் கொட்டிவிட்டாள்.
“வாயை மூடுங்க பா… சீ! எப்படி உங்களுக்கு இப்படி கேவலமா பேசத் தோணுது. ஜாதியைக் கட்டி அழுது, அழிஞ்சுப் போய்டாதீங்க பா. அசிங்மா? எனக்கும் அவனுக்கும் பொறக்கப் போற புள்ளை அசிங்கமா? அப்போ அவரைக் கல்யாணம் பண்ணிட்டா, நானும் அசிங்கமாகிடுவேனா பா? எப்படிப்பா இவ்வளவு கீழ்த்தரமா பேச முடிஞ்சது உங்களால? அப்போ இத்தனை நாள் அவரை வீட்டுக்குள்ள சேர்க்கும்போது இந்த எண்ணத்துலதான் சேர்த்தீங்களா? அந்த மனுஷனுக்கு மட்டும் இது தெரிஞ்சு இருந்தா, உடைஞ்சு போய்டுவாரு பா. உங்களை எந்த ஒரு இடத்துல வச்சிருக்காருன்னு தெரிஞ்சும், இப்படி பேசியிருக்கீங்கன்னா, அப்போ உங்களோட எண்ணம்தான் அசிங்கம் பா. அவர் அசிங்கம் இல்லப்பா! அவர் அசிங்கம் இல்லை!” என ஆக்ரோஷமாய்க் கத்தியவளின் பேச்சு அந்தக் கூடத்தையே நிறைத்தது. கண்களில் குபுகுபுவென நீர் வழிய, மனம் முழுவதும் ஆற்றாமை பொங்கியது. ரங்கா பேசிய பேச்சுக்கள் காதில் எதிரொலித்த வண்ணமிருக்க, மெல்லிய உடல் அதிரக் கத்தினாள் மனோஹரி.
“இனிமே இப்படியெல்லாம் பேசுனீங்கன்னா, நான் மனுஷியா இருக்க மாட்டேன் பா!” எனக் கத்தியவள், “தினம் தினம் பேசி சாகடிக்கிறதுக்குப் பதிலா என்னை நீங்க ஒரேடியா சாவடிச்சுடுங்கப்பா… உங்க பொண்ணாவே உங்களோட ஜாதிக்கு எந்த களங்கமும் அசிங்கமும் இல்லாம செத்துப் போயிட்றேன் பா!” எனத் தொண்டை அடைக்கக் கூறியவளின் மனது அந்நொடி மரித்துப் போனது. செத்திருந்தாள், ரங்காவின் மகளாகவே மொத்த உயிர்ப்பையும் அந்நொடி இழந்து போயிருந்தாள். உலகம் ஏனோ தலை கீழாகச் சுற்றுவது போலொரு உணர்வு. இத்தனை நாட்கள் தன்னிடம் பாச முகத்தை மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்த தந்தைக்குப் பின்னே இப்படியொரு அருவருக்கத்தக்க முகம் இருக்குமென கனவிலும் நினைத்திராத மனம் துடித்துப் போனது. இந்நொடி குமரன் அருகே வேண்டும் அவனிடம் அனைத்தையும் கூறி கதறி அழ வேண்டும் என்றொரு உந்துதல்.
“மனோ, அறிவுருக்கா டி… என்ன பேசுற நீ. சாவுறதுக்காடி இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கோம். இன்னொரு முறை இந்த மாதிரி பேசுன, அறைஞ்சுடுவேன்!” ராதாமணி அவள் பேசிய வார்த்தையில் தவித்துப் போனார்.
‘என்ன வார்த்தைப் பேசிவிட்டாள் இந்தப் பெண்? செத்துப் போவதுதான் அனைத்திற்கும் தீர்வா என்ன?’ எனப் பெற்ற உள்ளம் துடித்துப் போனது.
“ப்பா… நீங்க பேசுனதெல்லாம் ரொம்ப அசிங்கமா இருக்கு பா! அவ என்ன சொல்றது, நானே சொல்றேன் பா. நாளைக்கு ஜாதி முக்கியமா, இல்ல நான் முக்கியமான்னு கேட்டா, என்னைக் கொன்னு போடக் கூடத் தயங்க மாட்டீங்க இல்ல நீங்க? ஜாதிதான் முக்கியம்னா, எங்களை எதுக்குப்பா பெத்தீங்க?” திவாகர் தந்தை பேச்சில் கொதித்துப் போனான். எப்படி இந்த மனிதரால் வார்த்தைகளை திராவகமாக வீசி எதிரிலிருப்பவர்களுக்கு ஆறாத காயத்தைக் கொடுக்க முடிகிறது.