தேன் 2.1

அத்தியாயம் – 2

அவள் அருகில் வந்தவன், “ம்ம், என்ன முடிவு பண்ணியிருக்க, பதில் சொல்லு” என்று மிரட்டும் தொனியில் கேட்க அவள் அதை காதில் வாங்காது ராகவ் வருகிறானா என விழிகளால் ஆராய, “ஏய், நான் பேசிட்டு இருக்கேன். நீ என்ன அங்க வேடிக்கை  பார்த்திட்டு இருக்க?” என்றவன் அவள் முன் சொடக்கிட,

‘ஐயோ! சீக்கிரம் வாடா’ என ராகவை மானசீகமாக அழைத்து  கொண்டிருந்தவள் மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை.

“நான் அப்பவே சொன்னேல்ல மச்சான், இவ சரியான திமிர் பிடிச்சவ” என்று ஒருவன் கூற நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

“ஏய் என்ன முறைக்கிற” என்றவன் அவளருகில் நகர  இரண்டடி பின்னால் தள்ளி நின்றாள்.   “பார்டா” என்றவன் அவளது கையை  பிடிக்க வர எரிச்சல் மிகுதியில் சட்டென்று ஓங்கி அடித்து விட்டு,

“பிரச்சனை வேணாம்னு அமைதியா இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவியா? கொன்னுடுவேன்” என்று விரல் நீட்டி மிரட்டினாள்.

அவன் திடீரென  மாயாவின் விரலை   வளைக்க  வலி பொறுக்காமல் அவனை பிடித்து கீழே தள்ளி விட மற்றொருவன்
“என் மச்சானையே தள்ளி விடுறீயா?” என்றவன் அவள் சடையை பிடிக்க ராகவ் வண்டி அவர்களை நோக்கி வேகமாக வந்தது. 

அவனை கண்ட நொடி வேகமாக அவளை பிடித்து  தள்ளி விட்டு ஐவரும் ஓடி விட கீழிறங்கி வந்தவன் அவளை தூக்க  கைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்.

“அடிப்பட்டிருச்சா?” என்றவன் அவளை ஆராய மறுத்து தலையாட்டியவள் கண்களில் நீர் தேங்கி  வழிவதற்கு தயாராகி நிற்க,

“இங்கே இரு வந்திடுறேன்” என்றவன் ஓட எத்தனிக்க எட்டி அவனது கைகளை இறுக பிடித்துக் கொண்டாள்.

“கை விடு மோகனா” என்றவன் கோபத்தில் உச்சத்தில் இருக்க விட மாட்டேன் என்பது போல் அவளது பிடி அழுத்தமாக இருந்தது.  மோகனா என்பது அவன் உணர்ச்சியின் உச்சத்தில்  இருக்கும் போது மட்டுமே வெளி வரும். மனதிற்குள் அவளை அவ்வாறே செல்லமாக அழைத்திடுவான்.

“விடு டி” என்றவன் வேகமாக  உதற இம்முறை அவனது சட்டையை பிடித்துக் கொண்டவள்,  “எனக்கு பயமா இருக்கு. வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்று திக்கி திணறி கூறி நின்ற  சிறு குழந்தை போன்ற அவளது நிலை அவனை எதோ செய்ய கோபத்தை கட்டுப்படுத்தியவன் வேகமாக அவளது பையில் இருந்த தண்ணீரை எடுத்து கொடுத்தான்.

அப்படியே சில நிமிடம்  அருகிலிருந்த வீட்டு திண்ணையில் அமர வைக்க இன்னும் நடுக்கம் விலகாமல் அமர்ந்திருந்தவளின் கைகளை தன்னிரு கைக்குள் கொண்டு வந்தவன், “ஆர் யூ ஓகே” என்று கேட்க தலையை மட்டும் அசைத்தவள், “போகலாம்” என்றாள் அவன் முகம் பார்த்து.

வேறெதுவும் அவளிடம் கேட்காதவன்  வண்டியை எடுத்து இம்முறை இன்னும் வேகமாக செலுத்தினான் கோபத்தில்.

அவள் எதாவது கேட்டால் மேலும் வேகத்தை அதிகரிப்பான் என பயந்தவள் கைகள் அவனது தோளை அழுத்தமாக  பற்றிக் கொள்ள  வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்திட  வேகமாக இறங்கியவள் அவன் முகத்தை பார்த்தாள்.

“வீட்டில எதுவும் சொல்லாத, பயந்திடுவாங்க” என்றவன்  நிற்காமல்  வண்டியை திருப்ப, “ராகவ், ப்ளீஸ் பிரச்சனை வேணாம்” என்ற அவளது கெஞ்சல்கள் காற்றில் கரைய  பறந்து விட்டான்.

அவன் வண்டி கண் மறையும் வரை நின்றவளுக்கு, ‘ஐயோ! என்ன பண்ணி வைக்கப் போறானோ?’ என்று பயம்  தொற்றிக் கொள்ள வேகமாக படியேற எதிரே வந்த சரிதாவை கவனிக்காமல் மேதி விட்டாள்.

“ஏய் மாயா, எங்க பார்த்து வர” என்று அதட்டிய பின்பு சுயநினைவு பெற்றவள்,  “சாரிம்மா” என்றாள் கலக்கத்தோடு.

“ஏன்டி இவ்வளவு நேரம், டியூசன் ஏழு மணிக்கே முடிஞ்சுடுமில்லை” என்றவர் மகளை ஆராய கைகளில்  சிராய்ப்புகளில் சில இரத்ததுளிகளை கண்டு விட்டார்.

“கையில என்னது டி” என்றவர்  கைகளை  பற்றி ஆராய,  “ம்மா, தெரியாம தடுக்கி விழுந்திட்டேன். லேசா தான். வேறெதுவுமில்லை” என்று அவரை சமாதானம் செய்திட விழைய,

“வர வர உன் கவனம் எங்க இருக்குனே தெரியலை,  எதிர்ல யார் வாரானு கவனிக்க மாட்ற. என்ன தான் யோசனையா இருப்பியோ” என்றவர் தன் பாட்டிற்கு புலம்ப ஆரம்பிக்க     இவர்களை தேடி மகேஷ் வந்து விட்டார்.

“சரிதா, படியில நின்னு  என்ன பேசிட்டு இருக்கீங்க. வா மேல” என குரல் கொடுக்க மகளை அழைத்துக் கொண்டவர் மேலே வந்து கணவரிடம் குற்றப்பத்திரிகை வாசிக்க,

“சின்ன காயம் தானம்மா, மருந்து போட்டா சரியாகிட போகுது. அதுக்கு ஏன் இவ்வளவு பேசிட்டு இருக்க. சின்ன பொண்ணு, தெரியாம விழுந்திட்டா” என்று மகளுக்கு ஆதரவாக பேசியவர் அவளை கைப்பிடித்து அழைத்து செல்ல,

“ஆமா, இனிமே கவனமா இருக்கணும்னு சொல்லாம என்னை பேசிட்டு வர்றீங்க. அவ என்ன கைகுழந்தையா கீழ தடுக்கி விழ” என்று  புலம்பிக் கொண்டே வந்தவர் சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைக்க மகளின் காயத்திற்கு மருத்திட்டு அழைத்து வந்து அமர வைத்தார் மகேஷ்.

இருவருக்கும் உணவை பரிமாறியவர் தனக்கு உணவுடன் அமர்ந்து கொள்ள  மாயாவிற்கு உணவு இறங்காமல் இருக்க கைகளால் தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

கண்டிப்பாக  ராகவ் அவர்களை அடிக்காமல் வர மாட்டான் ஆனால் தன் பெயரையும் வெளியில் வர விட மாட்டான் என உறுதியாக தெரியும் அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ற பயம் அவளை ஆட்கொள்ள  உணவு இறங்க மறுத்தது.

அவளை கவனித்த சரிதா கையில் ஒரு  அடி போட்டு, “சாப்பிடாம என்ன பண்ணீட்டு இருக்க?” என கடிய சுதாரித்தவள், “சாப்பிடுறேனம்மா” என்று வேகமாக உணவை உள்ளே தள்ளி விட்டு படுக்கையில் விழுந்தாள்.

அவளது நினைவு முழுவதும் ராகவை சுற்றியே இருக்க  வெகு நேரம் விழித்திருந்தவள்   அதற்கு மேல் பொறுமையின்றி  அவனிற்கு அழைத்து விட்டாள்.

ஆழ்ந்த உறக்கத்திலிருத்தவன் அலைபேசி ஒலியில் திடுக்கிட்டு எழுந்து  பெயரை பார்த்து உடனடியாக அழைப்பை ஏற்று, “சொல்லு மோகினி, இந்த நேரத்தில எதுக்கு கூப்பிட்ட?” என்று  தூக்க கலக்கத்தில் வினவ,

“எங்க இருக்கீங்க?” என்றாள்.

நேரத்தை பார்த்தவன், “ஏய் நல்லா தான இருக்க மண்டையில ஏதாவது கழண்டுடுச்சா” என்று கேட்க கோப பெருமூச்சு விட்டவள், “என்னை பார்த்த பைத்தியம் மாதிரி தெரியுதா?” என்றாள்.

“போன்ல எப்படி பார்க்க முடியும், நேர்ல வா சொல்றேன்” என்று கூற வேகமாக அழைப்பை துண்டித்தவள் அவனை  வசைப்பாடி கொண்டே உறங்கியும் விட்டாள்.

“மோகினி பிசாசுனு பேர் வைச்சது சரியா தான் இருக்கு.  மிட்நைட்ல எழுப்பி விட்டா” என்று புலம்பியவனுக்கு  அவள் நீர் தேங்கிய முகமே நினைவில் வர கண்களை இறுக மூடிக் கொண்டான்.

இங்கிருந்து கிளம்பியவன் நேராக அவர்கள் இருக்கும் மைதானம்  தான் சென்றான். இவனை அங்கு வர  வைக்க அவர்கள் எல்லாவற்றையும் வேண்டுமென்ற செய்ய  தனியாக தான் சென்றான்.

ஐந்து பேர் அவனை சுற்றி வளைக்க அருகிலிருந்த கிரிக்கெட் மட்டை வைத்து அடி வெளுத்து விட அவர்களால் இவன் திமிறலுக்கு ஈடு கொடுக்க முடியாது ஓடி விட்டனர்.  அவ்வளவு கோபம் அவனுக்கு, அவனை  ஏதாவது செய்திருந்தால் கூட இந்தளவிற்கு இறங்கி இருக்க மாட்டான். அவள் மீது கை வைத்தது அவனது கோபத்தை எல்லை மீற செய்து விட்டது.  மாயாவின் சடையை பற்றி இழுத்தவனது கையிலே மட்டையால் போட்டிருக்க   நிச்சயம்  அவனுக்கு எலும்பு விலகி இருக்க வேண்டும்.

மறுநாள்  அந்த பையன்களை காயத்துடன் பார்த்தவள் ராகவ் முன் நிற்க,  “நான் தான் அடிச்சேன், இப்ப என்ன பண்ணனும் சொல்ற? முதல்ல இடத்தை காலி பண்ணு” என்றவன் நகர்ந்து விட   அவளுக்கு  அவனுடைய பேச்சு அதீத கோபத்தை கொடுத்தது.

error: Content is protected !!
Scroll to Top