தேன் 1.1

அத்தியாயம் – 1

அந்த  அடுக்குமாடி குடியிருப்பு  வளாகம் பரபரப்பாக இருந்தது.  அது சற்று உயர்ரக வகுப்பை சார்ந்தது.  அங்காங்கே சிறுமிகளும் சிறுவர்களும்  பள்ளி வாகனத்திற்காக பெற்றோருடன் காத்திருக்க அலுவலகம் செல்லுபவர்களும் கல்லூரி செல்லுபவர்களும் தங்களுடைய வாகனத்தில் பறந்து கொண்டிருந்தனர்.

தனது பையில் உணவை எடுத்து வைத்த சரிதா, “மாயா, கிளம்பிட்டீயா? இன்னும் நீ சாப்பிடக் கூட இல்லை” என்று குரல் கொடுக்க,

கண்ணாடி முன் நின்று  தனது  இரட்டை சடையை சரி செய்தவள், “எஸ் மாம்” என்ற குரல் கொடுத்தவாரே தனது உடையை சரி செய்து உணவின் முன் அமர்ந்தாள்.

“எத்தனை தடவை சொல்றது, சீக்கிரம் கிளம்புனு. இப்ப பார் ஆபீஸ்க்கு டைம்மாகிடுச்சு” என கடிந்தவாரே  சரிதா தயாராக,   “ம்மா, நான் என்ன பண்றது. டெஸ்க்கு படிச்சுட்டு இருந்தேன். அதான் லேட்டாகிடுச்சு” என்று பதில் கொடுத்துக் கொண்டே உணவை விழுங்க,

“ஆமா, அப்படியே படிச்சு கிழிச்சுடுற மாதிரியே பேசுறது. நைட் முழுதும் உட்கார்ந்து படம் பார்க்கிறது. தினமும் வந்து டிவி பார்க்கிறது இல்லை காவ்யா கூட அரட்டை.  எக்ஸாம் டெஸ்ட் சொல்லிட்டா மட்டும் அப்படியே ஞானம் வந்து  புத்தகத்தோட சுத்துறது.  இந்த வருஷம் பதினொன்னு  சரி, அடுத்த வருஷம் மட்டும் ஒழுங்கா படிச்சு
மார்க் ஸ்கோர் பண்ணாம  இரு. அப்புறம் இருக்கு உனக்கு” என்று கடிந்தவர் முறைத்து அமர்ந்திருக்க,

“ம்மா, உங்களுக்கு தேவை நான் மெடிக்கல் சீட் வாங்கணும் அவ்வளவு தான? அது சரியா செஞ்சுடுவேன். சும்மா தேவையில்லாம  பேசாதீங்க” என்று சிடுசிடுத்தாள் மாயா.

“ஆமா, கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. வீட்டை பூட்டிட்டு  காவ்யாவை அழைச்சுட்டு வேகமா வா, அப்பா கால் பண்ணிட்டே இருக்கார். நாங்க பார்க்கிங்ல இருக்கோம்”  என்ற சரிதா கீழே இறங்கி விட   மீதியிருந்த உணவையும்  விழுங்கியவள்  புத்தகப்பையை எடுத்துக் கொண்டு  படிகளில் இறங்கி காவ்யா வீட்டிற்கு சென்றாள்.

சரிதா வங்கியில்  மேலாளராக பணிபுரிய அவரது கணவர் மகேஷ்   சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக  உள்ளார்.  அந்த குடியிருப்பில்  வசிப்பவர்கள்  அனைவருமே  அரசாங்க அல்லது தனியார்  துறையில்  உயர் பதிவியில் இருப்பவர்கள்.  சென்னையில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. வெகு  அதிகமாக அல்லது சற்று செழிப்பான பகுதி தான்.  இவர்களது ஒரே புதல்வி மாயமோகனா.  அங்குள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். 

காவ்யாவின் தாய்   தேன்மொழியும்   சரிதாவும் தோழிகள்.  அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருடன் மற்றொருவர் நெருக்கமில்லை என்றாலும் அவ்வப்பொழுது எதாவது விழாக்கள் மற்றும் பள்ளியில் பெற்றோர்கள் கூட்டம் என்று சந்தித்து கொண்டதில் ஆரம்பித்த  பல வருட பழக்கம்  இன்றும்  நீடித்து வருகிறது. 

தேன்மொழியின் கணவர்   கிருபாகரன் மத்திய அரசாங்கத்தில்  ரயில்வே துறையில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர்களின் தவப்புதல்வன் ராகவ் என்ற  ராகவேந்திரன் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க  காவ்யா ஒன்பதாம் வகுப்பு     படித்துக் கொண்டிருக்கிறாள்.

கதவை தட்டிய மாயா  நேரமாகி விட்டதால்  திறக்காத கோபத்தில்  மீண்டும்   தட்டிக் கொண்டே இருக்க கதவை திறந்த ராகவ் ருத்திரமூர்த்தியாய் நின்று கொண்டிருந்தான்.

‘ஐயோ! இவனா’ என்று நினைத்தவளின் விழிகள் அச்சத்தில் மிரள, “மெதுவா தட்ட மாட்டியா மோகினி பிசாசே” என்றவன்  தனது சட்டை கையை மடித்து  அவளது தலையில் கொட்டுவதற்கு ஆயத்தமாக வேகமாக தலையில் கை வைத்து  மறைத்துக் கொண்டவள்,  “காவ்யா” என்று குரல் கொடுத்தாள் இரண்டடி பின்னால் நகர்ந்து.

ராகவிற்கும் அவளிற்கும் ஏழாம் பொருத்தம்.   ஒரே பள்ளி என்பதால்  அவன் அடிக்கும் லூட்டியை அப்படியே  தேன்மொழியிடம் ஒப்பித்து விடுவாள்.  அதனால் அவன் வாங்கும் வசவு ஏராளம்.   நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம்    தலையில் கொட்டி விடுவான் சிறுவயதிலிருந்தே. 

  வீட்டில் கூறி முறையிட்டாலும் ஒரு வாரம் இரண்டு வாரம் அமைதியாக இருப்பவன் மீண்டும்  அதையே செய்ய அவளும் விட்டு விட்டாள்.   ஆனால் அவ்வப்பொழுது  இருவருக்கும் வாய் தகராறு நீண்டு விட தேன்மொழியே பஞ்சாயத்து செய்திடுவார்.  ராகவிற்கு ஏன் என்று தெரியாது  அவளிடம் மட்டுமே வம்பிலுப்பான். அவளும் சும்மா இருக்காமல் அவனை சீண்டிக் கொண்டிருப்பாள்.

அவன் அவளை முறைத்து கொண்டு நிற்க    அவனை தள்ளி வெளியே வந்த காவ்யா, “வாங்கக்கா போகலாம்” என்று கூற மாயா  அவளுடன் கிளம்பி விட்டாள்‌.

கிருபாகரனும்   தேன்மொழியும் தங்கள் தூரத்து உறவினர் திருமணத்திற்கு அதிகாலையிலே சென்று விட  நேற்றே காவ்யாவை மட்டும் மாயாவுடன் பள்ளிக்கு அழைத்து செல்லுமாறு சரிதாவிடன் கூறி இருந்தார் தேன்மொழி.

காவ்யா மாயாவுடன் பேசிக் கொண்டிருக்க பதில் கொடுத்தவள்  வாகனம் நிறுத்துமிடம் ‌செல்ல மகிழுந்தில் அமர்ந்திருந்த சரிதா கதவை திறந்து விட்டு, “வேகமா வாங்க, எவ்வளவு நேரம்” என்று கூற இருவரும் பின்புறம் ஏறிக் கொள்ள மகிழுந்து வேகமெடுத்தது.

பள்ளி வாசலில் மகேஷ் வண்டியை நிறுத்த,  “ஈவ்னிங் மம்மி வர லேட்டாகும். நீயும் காவ்யாவும் ஆட்டோகார அங்கிள் கூட  வீட்டுக்கு போய்  சாப்பிட்டு  ராகவ் கூட டியூசன் போகணும்” என்று  கூறி  சரிதா அவளை இறக்க விட தலையாட்டியவள் காவ்யாவுடன் பள்ளிக்குள் நுழைந்தாள்.

ராகவிற்கு  மதியம் தேர்வு என்பதால்   வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.   படிப்பில் கெட்டி ஆனால்   செய்யும் சேட்டைகளோ அளவில்லாதது.  வீட்டிலிருந்து ஆளை அழைத்தும் புகார் கூறி விட்டார்கள்  ஆனால் அவன் அடங்கியபாடு இராது.  பள்ளியில் முதல் மாணவன் எப்பொழுதுமே. அதனால் பள்ளி நிர்வாகமும் வேறு வழியின்றி  அவனை எதுவும் கூறுவதில்லை.

error: Content is protected !!
Scroll to Top