சாப்பாட்டோட அருமை ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டவங்களுக்கு தான் தெரியும்” என்றவள் அவர்கள் வைத்த உணவை எடுத்து உண்ண தொடங்கிட,
இங்கு இவன் தான் மகியின் வார்த்தையில் என்ன ஆனான் என்று தெரியவில்லை. இது போலவெல்லாம் அவன் சூழ்நிலைகளை சந்தித்தது இல்லை.
பிறந்ததில் இருந்தே கஷ்டம் என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் கூட அறியாது தங்க தட்டில் வைத்து வளர்க்கப்பட்டவன். நண்பர்களுடன் உணவருந்த செல்லும் போதெல்லாம் இதை விட நிறைய உணவுகளை வீணடித்திருக்கிறான்.
ஆனால் அந்த நொடி அவனுடைய வார்த்தையும் செய்கையும் ஒரு நொடி அவனை ஏதோ செய்திருந்தது.
இருந்தும் எல்லாம் ஒரு விநாடி தான் தன்னை சுதாரித்து கொண்டான். அதற்கு மேலும் விட்டால் அவன் குரு பிரசாத் அல்லவே. அதனை சிந்தையில் இருந்து ஒதுக்கிவிட்டு உணவை உண்ண துவங்கினான்.
குரு உண்டு முடித்த பிறகும் கூட மகிழ் உண்டு கொண்டிருந்தாள். இல்லை இல்லை அந்த உணவை உள்ளே தள்ள முயற்சித்து கொண்டிருந்தாள். ஒருவர் வாங்கியது என்றால் உண்டிருப்பாள்.
இருவருடையதையும் அவளால் சாப்பிட முடியவில்லை. இருந்தும் உணவு வீணாய் போய்விடுமே என்று அதனை காலி செய்ய விழைந்தாள்.
மகியின் நிலையை உணர்ந்த குரு,
“ஃபுட் வேஸ்ட் பண்ண கூடாதுனு நீ சாப்பிட்றது சரிதான் பட் சாப்பிட முடியாம ஓவரா சாப்பிட்டா ஹெல்த் தான் ஸ்பாயில் ஆகும். எதையும் ஒரு லிமிட்க்கு மேல நம்மளால கன்ட்ரோல் பண்ண முடியாது. போ போய் ஹாண்ட் வாஷ் பண்ணு” என்று அதட்டிட,
மனமே இல்லாது எழுந்து சென்று கைகளை கழுவி வந்தாள்.
மீண்டும் பயணம் தொடர்ந்தது. சரியாக ஐந்து மணி நேரத்தில் தென்காசி அருகே உள்ள பண்பொழி கிராமத்தினை அடைந்து காசிநாதன் வீட்டின் முன் மகிழுந்தை நிறுத்தினான்.
அவ்வீட்டை கண்ட மகிக்கு வியப்பு தான். குருவின் உறவினர் நிச்சயமாக வசதி படைத்தவராக தான் இருப்பார் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் காசிநாதனின் வீடு ஒன்றும் அத்தனை வளமானதாய் தெரியவில்லை. திண்ணை வைத்த பழங்காலத்து அமைப்பில் ஒரு வீடு அதன் வலது புறம் மாட்டு கொட்டகை இருந்தது. இடது புறம் சிறிய இடம் இருந்தது. அந்த இடத்தில் தான் குரு வாகனத்தை நிறுத்தியிருந்தான்.
விட்டின் முன்புறமும் கம்பி கதவு வரையிலும் கொஞ்சம் இடமிருந்தது. அவ்வளவு தான் மற்றபடி பெரிய வீடு என்று கூறும் அளவிற்கு இல்லை.
அதைவிட பெரிய வியப்பு என்னவென்றால் குரு பிரசாத் இந்த சிறிய வீட்டில் தங்குவாரா என்பது தான்.
காசிநாதன் தம்பதியினர் இவர்களுக்காகவே எதிர்பார்த்து காத்திருந்தனர். மகிழுந்தின் ஒலி கேட்டதும் விரைந்து வந்து இருவரையும் புன்னகை முகமாக வரவேற்றனர்.
பயணத்தினை பற்றி எல்லாம் விசாரித்தனர். விஷாலியும் ஷர்மியும் ஓடி வந்து ஆர்ப்பரிப்புடன் மகியை கட்டி கொண்டனர்.
என்னவோ தெரியவில்லை அமைதியாக இருந்த மகியை இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அந்த கள்ளம் கபடம் அற்ற அன்பை மகியும் ஏற்று கொண்டாள்.
இளையவர்களும் ஷர்மி மற்றும் விஷாலியிடம் ஒட்டி கொண்டனர்.
கோமதி, “போய் ரெண்டு பேரும் கை கால் எல்லாம் அல்ப்பிட்டு வாங்க. நான் காஃபி போட்டு வைக்கிறேன்” என்க,
மகிழ் இளையவர்களை ஷர்மி மற்றும் விஷாலியிடம் விட்டுவிட்டு அவனுடன் சென்றாள்.
வீடுமே இரண்டு படுக்கை அறை ஒரு கூடம், சமையலறை மற்றும் பூஜை அறை என்று அளவாக தான் இருந்தது.
குருவுடன் அறைக்குள் நுழைந்தவளுக்கு அளவில் சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாக இருந்த அந்த அறை மிகவும் பிடித்திருந்தது.
இருவரும் முகம் கை கால் கழுவி வந்து குளம்பியை அருந்தி முடிக்க,
“ப்பா பால்ஸ் போலாம்”
“ப்பா பாத் போலாம்” என்று வந்து நின்றனர் எழிலும் கவினும்.
மகிழ், “அவங்க இவ்ளோ நேரம் ட்ரைவ் பண்ணிட்டு இப்போ தான வந்து உட்கார்ந்து இருக்காங்க. நாம நாளைக்கு போகலாம்” என்று மகி மறுத்துவிட,
“நோ இப்பவே போணும்” என்று அடம்பிடித்தனர்.
“பச் அதான் சொல்றேன்ல” என்று அதட்ட,
இருவருக்கும், “ப்பா…” என்று உதடு பிதுக்கி அழத்தயாரானர்கள்.
அதில் குருவிற்கு சிறு கீற்றாய் புன்னகை முளைத்திட,
“பால்ஸ்க்கு தானே போகலாம் வாங்க” என்று கவினை தூக்கி கொண்டு எழிலை கையில் பிடித்து கொண்டான். ஷர்மியும் விஷாலியும் கூட தயாராகி நின்றனர்.
எழிலையும் கவினையும் தனியாக விட மனமில்லாது தானும் அவர்களுடன் கிளம்பினாள்.
குரு மகிழுந்தை எடுத்த ஐந்தாவது நிமிடத்திலே அந்த அருவியை அடைந்திருந்தனர். அன்று வேலை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் இருந்தனர்.
அவ்வளவு நேரம் ஆர்வம் இல்லாமல் இருந்த மகிக்கே சலசலவென்று வேகமாக பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியின் சத்தத்தில் ஆசை வந்தது.
அது ஒரு சிறிய அளவிலான நீர்வீழ்ச்சி தான்.
“வாங்கக்கா நான் அழைச்சிட்டு போறேன்” என்று ஷர்மி மகிழினியின் கையை பிடிக்க,
“இல்லை நான் வரலை எனக்கு தண்ணினா பயம்” என்று மறுக்க,
“அட வாங்கக்கா. பர்ஸ்ட் அப்டிதான் பயமா இருக்கும். கொஞ்ச நேரத்தில பழகிடும்” விஷாலி கூறினாள்.
“இல்லை நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன். இவங்க ரெண்டு பேரும் தான் நனைய ஆசைப்படுறாங்க. கொஞ்சம் முன்னாடியே நிக்க வச்சு பிடிச்சிக்கோங்க. நான் பக்கத்துல இருக்கேன்” என்று கூறிவிட்டாள்.
குருவே அவர்கள் நால்வரையும் அழைத்து சென்று தன்னருகிலே நனையும் படி நிறுத்தி இருந்தான்.
ஷர்மி, “அத்தான் நீங்களும் வாங்க சூப்பரா இருக்கும்” என்று அவனையும் இழுத்துவிட,
குருவும் அவர்களுடன் இணைந்து கொண்டான். ஒருவர் மேல ஒருவர் நீரை தெளித்து சிரித்து மகிழ,
மகியின் விழிகள் குருவின் மேல் படிந்தது. முகத்தில் மின்னும் சிரிப்புடன் அத்தனை உற்சாகமாக அவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.
இவன் தான் அலுவகத்தில் கடுவன் பூனை போல சுற்றி வருகிறான் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். குழந்தைகளோடு குழந்தைகளாக தான் மாறியிருந்தான்.
அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே இருந்த சிறிய கல்லின் மீது தான் மகிழ் அமர்ந்திருந்தாள். அருவியின் சாரல் அவள் மீது பட்டு தெறிக்க அதில் குளிர்ந்தபடி இருந்தாள்.
ஷர்மி, “க்கா எவ்ளோ நேரம் அங்கேயே உட்கார போறீங்க. வாங்க எங்க கூட வந்து என்ஜாய் பண்ணுங்க” என்றிட,
குரு கூட, “வா வந்து எங்களோட ஜாய்ன் பண்ணிக்கோ” என்று கூறியிருந்தான்.
“இல்லை எனக்கு பயமா இருக்கு. வேணாம் வரலை” என்று மறுத்துவிட்டவள் அவர்களது சந்தோஷங்களை சிரிப்புடன் பார்த்திருந்தாள்.
அப்போது குருவின் அருகே நின்றிருந்த கவின் லேசாய் வழுக்கி விழ செல்ல, அவனுக்கு மறுபுறம் அமர்ந்திருந்த மகி பதறி அவனை பிடிக்க நீருக்குள் சென்றிருந்தாள்.
இதற்குள் குரு கவினை பிடித்திருக்க சற்று விரைந்து வந்த மகி கால் வழுக்கி நீரில் விழுந்திருந்தாள். விழுந்த வேகத்தில் சட்டென்று அவளால் எழ முடியததால் சடுதியில் நீரோடு அடித்து செல்லப்பட்டிருந்தாள்.
எல்லாம் விநாடியில் நடந்திருந்தது. ஷர்மியும் விஷாலியும் பதறி,
“அக்கா…” என்று கத்தியிருக்க,
மகிழோ நீச்சல் தெரியாததால் நீரின் சுழலுக்கேற்ப சுழன்று அதனோடே சென்று கொண்டிருந்தாள்.
குருவும் அதிர்ந்து பதட்டத்தில் மொழியிழந்திருக்க,
“அம்மா அம்மா” என்று அழத்துவங்கியிருந்தனர்…