காதோடு மௌனங்கள் – 3.1

ஈரம் சொட்டிய தலையை விரித்துவிட்டு விரல்களால் நீவி காய வைத்தபடியே நீள்விருக்கையில் விக்ராந்தையாக அமர்ந்திருந்தாள் ஜீவா. அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. எப்போதும் ஞாயிறு மதியம் பன்னிரெண்டு மணி முதல் மூன்று மணிவரை பிரியாணி மட்டும்தான் இவர்கள் உணவகத்தில் கிடைக்கும். காலை, இரவுணவு கிடையாது. அதனாலே தாமதமாக எழுந்து சமைத்து, மூன்று மணிக்கே உணவகத்தை அடைத்துவிட்டு வந்த ஜீவா குளித்து முடித்து தொலைக்காட்சி முன்னே அமர்ந்துவிட்டாள்.

டம்பள் திரைப்படத்தின் இயக்குநர் தேவ்பிரசாத், நாயகி வந்தனா, நாயகன் என அனைவரும் அந்த விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்திருந்தனர். சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குநர் விருது தேவாவிற்கு வழங்கப்பட்டது. அவன் முகம் முழுவதும் புன்னகையுடன் அதை வாங்கிவிட்டு மேடையில் ஒரு சில வார்த்தைகளில் நன்றி கூறிவிடை பெற முனைந்தான்.

“சார்… சார். நில்லுங்க. அப்படியெல்லாம் எஸ்கேப்பாக முடியாது. சரி சொல்லுங்க… உங்க கனவுல வர்ற கன்னி யாரு? எங்க எல்லாருக்கும் எப்போ அண்ணியை அபீஷியலா இன்ட்ரோ பண்ண போறீங்க?” எனத் தொகுப்பாளர் வம்பு பேச, தேவா நாகரீகமாக மறுத்துக் கூறி கீழே இறங்க, அவனையும் வந்தனாவையும் மட்டுமே அடுத்தடுத்துக் காண்பித்தனர்.

தேவா அவளருகே அமர, அவள் ஏதோ கூறி இவன் தோளில் தட்ட, தேவா மென்மையாக முறைத்து வைத்தான். இன்னுமே அவர்கள் இருவரை மட்டுமே ஒளிப்பதிவாளர் அருகுப்படுத்திக் காண்பித்தார். காட்சியாளராக அமர்ந்திருந்த இளைஞர்கள் ஒரு சிலர் இவர்களைப் பார்த்து விசிலடித்தனர். வந்தனா அவன் கையிலிருந்த விருதை உரிமையாக வாங்கி வைத்துக்கொள்ள, அதற்கும் பின்னே யாரோ ஏதோ குரல் கொடுக்க, எதற்கும் எதிர்வினையாற்றாமல் கௌதமபுத்தர் போல தேவா உட்கார்ந்திருந்தான்.

ஜீவா திரையில் தெரிந்தவர்களை முறுவலுடன் அமைதியாகப் பார்த்தாள். பின்னர் அடுத்தடுத்த விருதுகள் வழங்கப்படவும், வேறு ஒலியலை மாற்றிப் பாடல்கள் கேட்டாள். மெல்ல இருள் கவிழத் தொடங்கியது. மட்டைப்பந்து விளையாடி களைத்து வந்த வேலு அப்படியே நீள்விருக்கையில் தமக்கையின் மடியில் படுத்துவிட்டான்.

“வந்ததும் ஃப்ரெஷ்ஷாகாம அப்படியே படுத்துடுவீயாடா. போய் மூஞ்சி, கைகால் கழுவு. தண்ணி குடி. உனக்குத்தான் பிரியாணி எடுத்து வச்சிருக்கேன். சாப்பிட்றதுன்னா சொல்லு, சூடுபண்ணித் தரேன்!” என அவனை அதட்டினாள்.

“கொஞ்ச நேரம்கா. காலைலருந்து பௌலிங் போட்டு கை காலெல்லாம் செம்ம வலி. அப்படியே தோள்பட்டையை பிடிச்சு விடேன்கா!” என அவன் சோர்வாக கூற,

“ஆமா… இண்டியன் டீமுக்கு ஆடிட்டு வந்திருக்கான். இவனுக்கு கைகால் பிடிச்சு விடணும்!” என முணுமுணுப்புடன் அவன் தோள் பட்டையை மெல்ல இவள் பிடித்துவிட்டாள். அவன் சுகமாகப் படுத்துக் கிடந்தவன், படக்கென நினைவு வந்தவனாகத் தன் கால்சராயில் கையை நுழைத்து ஒரு விராலியை எடுத்துக் கொடுத்தான்.

“அக்கா… டம்பள் மூவி கேட்டல்ல. என் ப்ரெண்ட் டவுன்லோட் பண்ணிக் கொடுத்தான். நல்ல ப்ரிண்ட்தான். பட், மூவி ஒன்னும் அவ்ளோ நல்லா இல்லையாம். ஒன் டைம் வாட்சபிள்!” உபரியாகத் தகவலையும் உரைத்தான்‌. அவள் எதுவும் பேசாமல் அந்த விராலியைப் பத்திரப்படுத்தினாள்.

சஷ்டிகா கழுத்தைச் சுற்றி துப்பட்டா ஒன்றைப் போட்டுக் கொண்டே உள் கதவைத் திறக்க, அந்த சத்தம் கேட்டதும் ஜீவா திரும்பிப் பார்த்தாள்.

“சஷ்டி… இந்த நேரத்துல எங்கப் போற?” இவள் கேட்டதும்,

“கடைக்குப் போறேன்கா. நாப்கின் வாங்கணும்!” சின்னவள் பதிலளித்தாள்.

“இருட்டீடுச்சு‌ பாரு. நீ போக வேணாம். வேலு போய்ட்டு வரட்டும்…” என்றவள், “போய் அவளுக்கு நாப்கின் வாங்கிக் கொடுடா” எனத் தம்பியை ஏவினாள்.

“போக்கா… எனக்கே செம்ம டையர்ட். எழுந்திரிச்சுப் போய் மூஞ்சிக் கழுவ சேம்பேறித்தனப்பட்டுட்டுத்தான் படுத்துக் கிடக்கேன்…” என அவள் மடியில் முகத்தை அழுத்தினான்.

“வேலு… நைட் டைம். அவ தனியா போனா சேஃப் இல்ல. நீ போய்ட்டு வா…” அழுத்தம் திருத்தமாக தமக்கைக் கூறியதும், அதை தட்ட முடியாமல் கடுப்போடு எழுந்தான் வேலு.

“போறவ டோரை கொஞ்சம் சத்தமில்லாம தொறந்தா என்னவாம்? ஹம்ம்… நான் இருந்ததை பார்த்துட்டுத்தானே நீ டோரை அப்படி தொறந்த?” சஷ்டியிடம் அவன் சிடுசிடுத்தான்.

“ப்ம்ச்… பக்கத்து தெருவுல இருக்குற கடைக்குப் போக எனக்குத் தெரியாதா? அக்கா சொல்றதாலதான் நின்னேன். இல்லைன்னா நானே போய்ருப்பேன்!” அவள் முகத்தை தூக்கினாள்.

“கிழிச்ச… பொய்யா பேசிட்டு திரியாத‌. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது. காசைக் குடு!” அவள் கையிலிருந்த பணத்தை அவன் கடுப்போடு வாங்க,

“நீ இவ்வளோ சலிச்சுட்டுப் போய் வாங்கவே வேணாம்டா. நானே போய்க்கிறேன்‌‌…” என அவள் சிலிர்க்க,

“அக்கா… இங்கப் பாரு. உனக்காகத்தான் கடைக்குப் போறேன்னு சொன்னேன் நான். ஆனால் இவ வேணாம்னு சொல்றா. நீயே என்னென்னு கேளு!” என பாலு உரக்க குரல் கொடுத்ததும்,

“சஷ்டி… அவன்கிட்டே காசைக் கொடுத்துட்டு உள்ளே வா…” என ஜீவா இவளை அதட்டினாள். வேண்டா வெறுப்பாக அவனிடம் பணத்தைக் கொடுத்த சஷ்டி அறைக்குள் சென்று சுருண்டுப் படுத்தாள். சில நிமிடங்களிலே ஜீவா அவளைத் தேடி வந்துவிட்டாள்.

“என்னாச்சு சஷ்டி… ரொம்ப வலிக்குதா வயிறு. ஹாட் பேக் எடுத்துட்டு வரவா?” என அவள் தலையைத் தடவினாள். அவள் தலையசைத்தும் சூடான தண்ணீரை அந்தப் பையில் நிரப்பி எடுத்து வந்து கொடுத்தாள். அதை வயிற்றில் வைத்ததும் சஷ்டிக்கு ஓரளவிற்கு நன்றாக இருந்தது. வேலு கடைக்குச் சென்று வந்தான். ஜீவா அவனுக்கு உணவை சூடு செய்து கொடுத்து சாப்பிட்டு, தானும் உண்டாள். கிரிஜா உறங்கிக் கொண்டிருந்தார். சின்னத்தம்பி இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொள்வார்கள் என எண்ணியவள், சஷ்டிகாவிற்கு என்ன வேண்டுமென விசாரித்தாள்.

“எனக்கு ஒன்னும் வேணாம்கா. நான் தூங்கப் போறேன்…” என அவள் படுத்துவிட, இவளும் அறைக்குள் நுழைந்தாள். மூன்று படுக்கையறைக் கொண்ட வீடு அது. பெரியவர்கள் ஒரு அறையும், சின்னவர்கள் ஒரு அறையும், ஜீவாவிற்கு மூன்றாவதும் எனப் பிரித்துக் கொண்டனர். முதலில் அவர்கள் பக்கத்து தெருவில் ஒற்றைப் படுக்கையறைக் கொண்ட வீட்டில்தான் குடிபுகுந்தனர். உணவுத் தொழில் நன்கு கை கொடுக்கவும், இந்த வீட்டை விலைக்கு வாங்கி இங்கேயே வந்துவிட்டனர். முன்பு இருந்ததைவிட இந்த இது அவர்களுக்கு நல்ல வசதியாகப் போயிற்று.

ஜீவா அலைபேசியில் விராலியை இணைத்து அந்தப் படத்தை ஒலிக்கவிட்டு தலையணையில் படுத்தவாறே பார்த்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் அவளது கண்கள் சொருகின. முயன்று விழித்தவள், அதற்கு மேலும் முடியாது எனத் தோன்ற, மீதமிருக்கும் படத்தை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என‌ உறங்கிப் போனாள். மறுநாள் காலை எப்போதும் அவளது வழக்கம் போல விடிய, உணவகம் அவளை இழுத்துக்கொண்டது.

தேவா ஒலிப்பதிவகத்தில் இருந்தான். படப்பிடிப்பு முடிந்தக் கையோடு அடுத்ததாக படத்தொகுப்புகளை சரிபார்த்தல், குரல் பதிவு, ஒலிக்கலவை, பின்னணி இசை, காட்சி திருத்தம், வண்ணத் திருத்தம், இறுதி தொகுப்பு, தணிக்கை குழுவிற்கு அனுப்புதல், விளம்பரப் பணிகள் என ஏகப்பட்ட வேலைகள் வரிசைக் கட்டி நின்றன. ஒவ்வொன்றும் சரியாக நடக்கிறதா எனத் தீவிரமாக அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.

“சார்‌… இன்னைக்கு ஈவ்னிங் ஜென் டீவிலருந்து மூவி ப்ரமோஷனுக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. நீங்க, வந்தனா மேம், பார்த்திபன் சார் எல்லாம் கமிட்டாகியிருக்கீங்க!” என கீதன் நினைவுப் படுத்தினான்.

“யெஸ்… யெஸ். எனக்கு ஞாபகம் இருக்கு கீதன். நான் அதைப் பார்த்துக்கறேன். நீ கலர் க்ரேடிங் பண்ற பையனை மட்டும் கொஞ்சம் வாட்ச் பண்ணு. அவன் கரெக்டா பண்றானான்னு நோட் பண்ணு. சொதப்பிட போறான்…” என்ற தேவா, தானே அந்த வாலிபனை அழைத்து எப்படி செய்ய வேண்டுமென தெளிவாக விளக்கி, அறிவுறுத்திவிட்டே அந்த தொலைக்காட்சி நிலையத்தை நோக்கிச் சென்றான்.

வந்தனா சரியான நேரத்திற்கு வர, பார்த்திபன் தாமதமாக வந்து இணைந்து கொண்டான். மூன்று மணி நேரம் இழுத்த அந்த நிகழ்ச்சி ஒருவழியாக நிறைவுற்றது. அவர்கள் கொடுத்த குளிர்பானத்தை நாசூக்காக மறுத்த தேவா, மீண்டும் ஒலிப்பதிவகத்தை நோக்கிச் சென்றான்.

“தேவா.. எப்போ வர்றடா?” ரேணுகா இடையில் அழைக்க,

“ம்மா… எனக்கு வொர்க் இருக்கு. வர டைமாகும். நான் சாப்பிட்டேன். நீங்க தூங்குங்க…” என அவரிடம் கூறியவன், மீண்டும் பாதியிலே விட்ட வேலையைத் தொடரச்‌ சென்றான். சில காட்சிகளைத் திருத்தி தொகுக்கும் வேலை அவனுக்கு இருந்தது.

கீதன் அவனருகே வர, “கீதன், நீங்க கிளம்புங்க டைமாச்சு…” எனத் திரையைப் பார்த்தாவாறே பதிலளித்தான்.

“ஓகே சார்… நீங்க என்கிட்டே ஒரு டீடெயில்ஸ் கேட்டிருந்தீங்களே. ஒரு ஹோட்டல் பத்தி. நானும் விசாரிச்சுட்டேன் சார். ஒரு ஃபேமிலியா ரன் பண்றாங்க போல. ரொம்ப பெருசா பேர் சொல்ற அளவுக்கு எல்லாம் இல்ல சார். சின்ன ஹோட்டல்தான்‌. சாப்பாடும் ரொம்ப சுமார்தான். நான், நீங்க சொன்னதும் டேஸ்ட் பண்ணலாம்னு சாப்பிட்டேன். ரிவ்யூஸ்ல எல்லாம் செம்மையா ஏமாத்துறானுங்க!” என அவன் புலம்ப, தேவா அவனை முறைத்தான்.

“ஹோட்டலை இப்போ ரன் பண்றவங்க நேம் என்ன?” எனக் கண்டிப்பான குரலில் கேட்டான்.

“கிரிஜான்னு ஒரு லேடியும் அவங்க பொண்ணும்தானாம். அந்தப் பொண்ணு பேர் என்னவோ சொன்னாங்க!” என கீதன் தலையைச் சொரிய, “ஜீவா…” என இவன் எடுத்துக் கொடுத்தான்.

“ஆமா… ஆமா சார். ஜீவாதான் அந்தப் பொண்ணு பேர். அவங்கதான் ரன் பண்றாங்க!” என அவன் ஆமோதித்தான்.

“ஓகே தேங்க்ஸ் கீதன்!” என்ற தேவா அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டதா? என்ன செய்கிறாள் எனக் கேட்க வந்து பின்னர் அதை விழுங்கிவிட்டு, அவனை அனுப்பி வைத்தான்.

error: Content is protected !!
Scroll to Top