மௌனம் – 1
அதிகாலை ஐந்து மணி. கண்களில் அப்பியிருந்த தூக்கத்தை விரட்டியபடியே எழுந்து, கலைந்து கிடந்த கூந்தலைக் கொண்டையிட்ட ஜீவகாருண்யா, ஜன்னல் திரையை லேசாக விலக்கிவிட்டாள். மையிருட்டும் மெல்லிய பூச்சிகளின் சத்தம் மட்டுமே அவளது செவிகளை எட்டின. மற்றபடி அந்தக் காலை வேளை வெகு நிசப்தமாகக் காட்சியளித்தது. சாலையோர விளக்கு மட்டும் அனாதையாக ஒளியை உமிழ்ந்து, நான் உயிருடன் இருக்கிறேன் என உணர்த்திற்று.
உதட்டோரம் காய்ந்து போயிருந்த ஈரத்தைத் தண்ணீரால் கழுவியவள், காலைக் கடன்களை விரைந்து முடித்து, துப்பட்டாவை எடுத்து ஒற்றைப் பக்கத் தோளில் போட்டு, மறுபக்கம் முடிச்சிட்டு வெளியே வந்தாள்.
கூடத்தில் ஒரு ஓரத்தில் பாயை விரித்துக் கைக் கால்களை அகட்டியபடி படுத்திருந்தார் சின்னதம்பி. இரவு குடித்த மது அவரை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தியிருந்தது. மகளின் அரவத்தில் அவரிடம் துளி கூட அசைவில்லை. அவரை ஒரு பொருட்டாக எண்ணாமல், ஆணியில் மாட்டியிருந்த கடைச் சாவியை எடுத்தவள், மெதுவாக வீட்டின் கதவைத் திறந்து வெளியே சென்றாள்.
மின்விளக்கின் பொத்தானை அழுத்தியவளின் விழிகள் எதிரேயிருந்த ஆண்கள் மேன்சனில் ஒரு கணம் படிந்து மீள, இரண்டெட்டுகளில் பக்கத்திலிருந்த உணவகத்தை அடைந்தாள். சஷ்டிகா ஹோட்டல் என நிறம் மங்கிப் போயிருந்தது அந்தப் பலகை. அந்தக் கட்டிடம் கூட பழைய காலத்து வாசனையைத் தாங்கி நின்றது. இவளும் கூட பல வருடங்களாக அதன் ஒரு அங்கம்தான்.
இவள் உணவகத்தின் பெரிய இரும்புக் கதவைத் திறந்ததும், அது மெல்லிய கிரீச் ஒலியுடன் அவளை உள்ளே வரவேற்றது. ஜீவகாருண்யாவிற்கு மெதுவாக இருட்டுப் பழக, கைகள் தன்போல் மின்விளக்கை உயிர்ப்பித்தன. அசுத்தமாகக் கிடந்த கூடத்தைப் பரபரவென ஐந்தே நிமிடத்தில் சுத்தம் செய்தவள், இரவு ஊற வைத்திருந்த உளுந்தை இரண்டு முறை கழுவி அரவை இயந்திரத்தில் போட்டுவிட்டு, நேற்று ஆட்டி வைத்த மாவை எடுத்து தண்ணீர் ஊற்றி இட்லி ஊற்றும் பதத்திற்கு நன்கு கலக்கினாள். வேகமாகக் கலக்கியதில் தோள்பட்டை வலிக்க, இரண்டு முறை கையை உதறினாள்.
பின்னர் பெரிதாக இருந்த இட்லித் தட்டை எடுத்து குழிகளை நிரப்பி, அதை அடுப்பில் ஏற்றிவிட்டு, சாம்பாருக்கு காய்கறிகளை நறுக்கத் தொடங்க, “ஜீவாக்கா…” என்றவாறே பத்தொன்பது வயது வாலிபன் வந்தான். எழுந்து முகம் கூடக் கழுவாமல் அரக்கப் பறக்க ஓடி வந்திருக்கிறான் என்று அவன் அசட்டு சிரிப்பே சொன்னது.
“போய் மூஞ்சி கழுவிட்டு வா பாபு. கோட்டுவா ஓடுனது அப்படியே இருக்கு. இப்படியே நீ சாப்பாடு போட்டா யாருடா சாப்பிடுவாங்க?” அவள் கேலியும் கண்டிப்புமாகக் கூற, அவன் ஓடிச் சென்று முகம் கழுவிவிட்டு வந்து, கடகடவென அவளோடு வேலையைப் பகிர்ந்தான். இருவரும் காலை உணவிற்குத் தேவையான ஆயத்தங்களை எவ்விதப் பேச்சும் அற்று செய்ய, அவர்களின் கரங்கள் அந்த வேலைக்குப் பழக்கம் என்பதை வேகத்தில் தவறாத நிதானம் கூறிற்று.
“ஜீவா…” கிரிஜா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்ததும், பாபு ஓடிச் சென்று அவளுக்கும் தனக்குமான தேநீரை வாங்கி வந்தான். சூடு குறையும் முன்னே அதை படக்கெனக் குடித்த ஜீவகாருண்யா, கடகடவென அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கலானாள். ஆறரைக்கு மத்திம வயதில் ஆணும் பெண்ணும் வந்து அவர்களோடு இணைந்து கொள்ள, காலை ஏழு மணிக்கே சூடாக இட்லி, தோசை, பூரி, பொங்கல் எனக் கரும்பலகையில் அன்றைய உணவை விலையுடன் பட்டியலிட்டான் பாபு.
“கோமதிக்கா… டேபிள் எல்லாம் சுத்தம் பண்ணுங்க ஃபர்ஸ்ட். ஆள் வர ஆரம்பிச்சுட்டாங்க!” என்ற ஜீவா, குழம்பு, சட்னியை அதற்குரிய பாத்திரத்தில் மாற்றி, எல்லாவற்றையும் வெளி மேஜையில் எடுத்து வந்து வைத்தாள். கோமதி மேஜையைச் சுத்தம் செய்ய, மத்திம வயது அசார் தோசைக்கல்லில் சூடாக தோசை சுடத் தொடங்கினார்.
எதிரிலிருந்த மேன்சனிலிருந்து வேலைக்குச் செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் என ஒவ்வொருவராக உண்ண வர, ஜீவாவிற்கு நிற்க நேரமில்லாமல் போனது. கிரிஜா வீட்டு வேலையை முடித்துவிட்டு இங்கு வருவதற்குள் அவளே பரிமாற, கல்லாவில் அமர என அங்குமிங்கும் ஓடினாள். அவர் வந்ததும் கல்லாவில் அமர, இவள் ஒவ்வொருவருக்கும் என்ன வேண்டுமெனக் கேட்டுப் பரிமாறினாள்.
“ம்மா… சாம்பார்!”
“தோசைக் கேட்டு எவ்ளோ நேரமாச்சும்மா!”
“சட்னில உப்பு பத்தலைக்கா!” என ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைக் கூற, பாபுவும் இவளும் அவர்களை முகம் நோகாமல் கவனித்தனர். கோமதியும் உஷாவும் என்னென்ன தீர்ந்ததெனப் பார்த்து மீண்டும் அவற்றைத் தயார் செய்ய, அசார் வியர்த்து வடிய அடுப்பில் எதையோ கிண்டிக் கொண்டிருந்தார்.
“ஜீவா பால்…” எனக் குரல் கேட்டதும், “பாபு… பாலை வாங்கி ப்ரிட்ஜ்ல வை!” என சின்னவனை ஏவியவள், உளுந்த வடையை எடுத்துச் சென்று ஒருவர் தட்டில் வைத்தாள்.
“அம்மா பாய், அக்கா போய்ட்டு வரேன்!” சஷ்டிகாவும் வேலுவும் தனியார் பள்ளிச் சீருடையில் மிதிவண்டியில் அமர்ந்தவாறே இவர்களைப் பார்த்துக் கையசைத்தனர். வேலு வாகனத்தை நிறுத்திவிட்டு தாயிடம் ஓடி வந்தான்.
“ம்மா… கலர் பென்சில் தொலைஞ்சு போச்சு. புதுசு வாங்கணும். இல்ல ட்ராயிங் மிஸ் திட்டுவாங்க!” என கிரிஜாவிடம் கையை நீட்டினான்.
“உனக்கு மட்டும் எப்படித்தான் டெய்லி ஏதாவது தொலைஞ்சு போகுமோ. உடனத்தவளைப் பாரு, ஒரு ரூவா கேட்குறதில்ல!” என மகனைத் திட்டிக் கொண்டே நூறு ரூபாய் தாளை நீட்டினார் கிரிஜா. அவன் அவர் பேச்சைக் காதில் வாங்காமல், ஜீவாவின் கையில் மெலிதாகக் கிள்ளிவிட்டு ஓடினான்.
“பார்த்துப் போ வேலு… ஸ்பீடா போனேன்னு யாரும் சொன்னா தொலைச்சுடுவேன்!” என இவள் கண்டிப்பைக் காற்றில் கலந்தவாறு சின்னவர்கள் பறந்திருந்தனர்.
உணவகத்தில் கசகசவென்றிருந்த கூட்டம் ஒன்பதரைக்கு மேல் மெல்லக் குறையத் தொடங்க, பத்து மணிக்கு ஓரிருவர் வந்தனர்.
பத்து மணி வரைதான் காலை உணவு. ஆனால் அந்த நேரத்தைத் தாண்டியும் ஒரு சிலர் உணவுண்ண வர, ஜீவா மற்ற ஊழியர்களை ஒவ்வொரு ஆளாகச் சாப்பிடப் பணித்துவிட்டு வந்தவர்களைக் கவனித்தாள்.
“ஜீவா… போய் சாப்பிடு!” கிரிஜா காலை என்ன வரவு செலவு எனப் பார்த்தவாறே குரல் கொடுக்க,
“சரிம்மா…” என்றவள் உண்ண அமர, சின்னதம்பி அப்போதுதான் எழுந்து வந்தார்.
“ஜீவா… அப்பாவுக்கு சாப்பாடு போடுமா. பசிக்குது!” என அவர் கூற, இவள் எரிச்சலோடு எழ முயன்றாள்.
“யோவ்… இப்போதான் அவளே சாப்பிட உக்கார்ந்தா. ஏன் நான் சோறு போட்டா ஆகாதா உனக்கு?” எனக் கணவரிடம் சுள்ளென விழுந்த கிரிஜா, அவருக்கு உணவு பரிமாறினார். அவர் எதுவும் எதிர்த்துப் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டார். அடுத்தடுத்து மதிய உணவிற்காக வேலை ஆயத்தமானது.
சாம்பார், ரசம், மோர், வத்தக் குழம்பு, புடலங்காய் பருப்பு கூட்டு, பீட்ரூட் பொரியல், மூட்டைக்கோஸ் அவியல், தயிர் சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், எலும்பிச்சை சாதம், சாம்பார் சாதம் என அன்றைய பட்டியல் நீள, அதற்குத் தகுந்தாற்போல் வேலையும் நடந்தது.