ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 12

“அப்படியா க்கா?”என அவளிடம் வினவி விட்டு, 

“என்னன்னுச் சொல்லுக்கா?”என்று தன் தமக்கையை அவசரப்படுத்தினாள் சுதா. 

அதில் அவளைப் பார்த்துப் புன்னகையுடன்,”இன்னைக்கு நான் வரைஞ்சிக் கொடுத்த டிசைன்ஸ்ஸை என் வழிகாட்டி மேடமும், முதலாளியும், அவரோட அக்காவும் ரொம்பப் பாராட்டினாங்க டி!”என்றவளோ, 

தனது அலுவலகத்தில் நடந்தவற்றை தங்கைக்கு விளக்கிக் கூறி முடித்திருந்தாள் மதுபாலா. 

அதைக் கேட்டதுமே,”அக்கா! உங்களை மத்தவங்கப் பாராட்டிப் பேசுறதை எல்லாம் கேட்கும் போது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்குத் தெரியுமா? உனக்கு ஐடி கார்டுக் கிடைச்சதுக்கு அப்பறம் உன்னோட சம்பளம் எவ்வளவுன்னும் சொல்லிடுவாங்கள்ல? இதுக்கு அப்பறமாவது நாம ரெண்டு பேரும் நம்மளோட அடிப்படை செலவுகளை நாமப் பயப்படாமல் பார்த்துக்கலாம்!”என்று தன்னுடைய விழிகளின் ஓரம் கண்ணீர் கசியத், தொண்டை அடைக்க அவளிடம் உரைத்தாள் இளையவள். 

அதில் அவளைக் கனிவானப் பார்வையுடன் நோக்கினர் மற்ற இருவரும். 

“சுதாம்மா! உன்னோட ஆசைக் கூடிய சீக்கிரமே நிறைவேறிடும்! நீங்க ரெண்டு பேரும் இந்த வேலையால் கிடைக்கிற சம்பளத்தில் உங்க வீட்டுச் செலவுகளையும் பார்த்துட்டு, உங்களோட படிப்பையும் தொடருவீங்க! இப்போ நீ உன்னோட கண்ணைத் தொடைச்சிக்கிட்டு டீயைக் குடி. ஆறிப் போயிடப் போகுது!”என அவளுக்கு அறிவுறுத்தினாள் பிரேமா. 

ஆனால் தங்கையின் கண்ணீரைக் கண்டதும் தானும் உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்ததாலேயே அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூற மறந்து போய் விட்டிருந்தாள் மதுபாலா. 

அதைக் கவனித்து விட்டு,”ஹேய்! நீ என்னடி அப்படியே கொழுப் பொம்மை மாதிரி உட்கார்ந்துக்கிட்டு இருக்கிற? டீயைக் குடி! எனக்கு வேற லேட் ஆகுது! நானும் வீட்டுக்குக் கிளம்பனும்ல?”என்றவளிடம், 

“அட ஆமாம்!”எனக் கூறிச் சில நிமிடங்களிலேயே தங்களது தேநீரைப் பருகி முடித்து விட்டிருந்தார்கள் அந்த அக்காவும், தங்கையும்.

அதற்குப் பிறகு அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏறித் தன் வீட்டை நோக்கிப் பயணம் செய்தாள் பிரேமா. 

அவள் சென்றதுமே தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு ஒன்றாக அமர்ந்து பேசத் தொடங்கினர் மதுபாலா மற்றும் சுதா. 

“நான் முன்னாடியே சொன்ன மாதிரி உனக்கு வேலைக் கிடைச்சதும் நாம ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு வருவோமாக்கா?”என்றத் தங்கையிடம், 

“எனக்கு வேலை இப்போ தான் கிடைச்சிருக்கு டி! சம்பளம் அடுத்த மாசம் தான் வரும். அப்படி இருக்கும் போது நீ உடனேயே உன்னோட சம்பளத்தை இப்படியான விஷயத்துக்குச் செலவுப் பண்றது எனக்கு அவ்வளவாகச் சரின்னுப் படலை”எனத் தன்மையாக அறிவுறுத்தவும், 

“அக்கா! இங்கே பாருங்க! நாம ஒன்னும் பெரிய ஹோட்டலில் எல்லாம் சாப்பிடப் போவதில்லையே? சின்ன நான்வெஜ் ஹோட்டல்ஸ் நிறையவே இருக்கே! நாம அங்கே போய்ச் சாப்பிடலாம். அதுவும் இல்லாமல் நீ இந்த வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பிச்ச அப்போதிருந்தே நான் இதுக்குன்னுத் தனியாகப் பணத்தை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சிட்டேன்! அதனால் இந்த மாச செலவை நினைச்சு நீ கவலைப்படாதேக்கா!”என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தாள் சுதா. 

அதைக் கேட்டதும்,”சரி டி”என்றவளுக்குத் தனது தோழியின் நினைவு வந்தது எனலாம்.

ஏனெனில் இந்த வேலைத் தனக்குக் கிடைத்ததற்கு முழுமுதற் காரணமே அவள் தான் எனும் போது அவளை விட்டு, விட்டுத் தாங்கள் இருவரும் மட்டும் இப்படி உணவகத்திற்குப் போய் உணவுண்பது என்பது அத்துணை நியாயமானதாக இருக்காது! என்ற எண்ணத்தில் ஆழ்ந்து போனாள் மதுபாலா. 

“அக்கா! உங்களுக்கு வேண்டாம்ன்னா நாம சாப்பிடப் போக வேண்டாம்!”என்று கம்மிய குரலில் கூறிய இளையவளை மெல்லிய புன்னகையுடன் ஏறிட்டு, 

“நாமக் கண்டிப்பாக ஹோட்டலில் சாப்பிடப் போகலாம் டி. ஆனால் நம்மக் கூடப் பிரேமாவும் வந்தால் நல்லா இருக்கும்னுத் தோணுது! ஏன்னா, அவளால் தானே இதெல்லாம் நடந்து இருக்கு! அதுக்காகத் தானே ஹோட்டலுக்கேப் போகப் போறோம்? நான் அதைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்”என அவளிடம் தெளிவாக உரைக்கவும், 

உடனே,”ஆமாக்கா! நீங்கச் சொல்வது சரி தான். அப்போ அவங்க கிட்டேயும் இதைப் பத்திப் பேசிட்டு நாம மூனுப் பேரும் சாப்பிடப் போவோம். ஓகேவா?”என்று தமக்கையிடம் வினவினாள் சுதா. 

அதற்கு அவளோ,”சரி டி. நான் கேட்கிறேன்! ஆனால் அவளுமே இதுக்கு ரொம்பச் செலவுப் பண்ணாதீங்கன்னுத் தான் நமக்கு அட்வைஸ் பண்ணுவாள்”என்றுரைத்து விட்டாள் மதுபாலா. 

“அதெல்லாம் நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன்க்கா”என்றதுமே, 

“சரி. அப்போ வாரக் கடைசியில் போவோம்”எனக் கூறி விடவும், 

அடுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் சகோதரிகள் இருவரும். 

அன்று தங்களது வீட்டை அடைந்ததுமே தங்கள் இருவரையும் சுத்தப்படுத்திக் கொண்டுப் புகழேந்தியின் அலுவலகத்தில் நடந்தவற்றை எல்லாம் ஜோதி மற்றும் கபிலனிடம் பகிர்ந்து கொண்டனர் மித்ரனும், வெண்பாவும். 

“ம்ஹ்ம். புகழ் எப்படி இருக்கான்? இங்கே வரச் சொல்லும் போதெல்லாம் வேலை இருக்குன்னு வராமல் இருந்துடுவான்! இங்கே வந்து நம்மக் கூடத் தங்கச் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்”என்று புகழேந்தியைப் பற்றித் தங்களது மகன் மற்றும் மருமகளிடமும் குறைபட்டுக் கொண்டார்கள் மூத்தவர்கள். 

அதில் அவர்களைப் புன்னகையுடன் பார்த்து விட்டு,”அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டா எல்லாம் சரியாகிடும்த்தை, மாமா”என்றிருந்தாள் வெண்பா. 

“ஆமாம். அதை தான் முதல்லச் செய்யனும்! ஆனால் உன் தம்பித் தான் அந்த விஷயத்தில் பிடி கொடுக்க மாட்டேங்கிறானே!”எனத் தானும் சலித்துக் கொண்டார் ஜோதி. 

“நான் இனிமேல் எப்படியாவது அவன் கிட்டே நேரடியாகப் பேசாமல் மறைமுகமாக அதுக்கான முயற்சியை எடுக்கலாம்னு இருக்கேன்த்தை! அதனால் எப்படியும் அவனுக்குக் கூடிய விரைவிலேயே கல்யாணம் நடந்துடும்ன்னு உங்களுக்கு வாக்குத் தர்றேன்”என்றவளிடம், 

“அது எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்ற? ஏதாவது யோசனை வச்சிருக்கியா?”எனக் கேட்டிருந்தார் கபிலன். 

“ஆமாம் மாமா. எங்கிட்ட அதுக்கான ஒரு ஐடியா இருக்கு. ஆனால் அதை இப்போ என்னால் உங்க எல்லார் கிட்டேயும் சொல்ல முடியாது! ஏன்னா, அது நடக்குமா? நடக்காதான்றது எனக்கே பாதிக்குப், பாதி தான் நம்பிக்கை இருக்கு! அதனால் தான் சொல்றேன்! அதை நடத்தி முடிச்சதும் நான் உங்க கிட்ட கண்டிப்பாகச் சொல்றேன்”என்று தன்னுடைய மாமனார், மாமியாரிடம் எடுத்துக் கூறினாள் வெண்பா. 

“சரிம்மா. உன் தம்பி விஷயத்தில் உன்னை விடப் பொறுப்பானச், சரியான முடிவை வேற யாராலும் எடுக்க முடியாது! அதனால் நீயே அதைப் பார்த்துக்கோ!”என்று அவளது தன்னிலை விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தங்களது ஒப்புதலையும் கூறி விட்டிருந்தார்கள் கபிலனும், ஜோதியும். 

ஆனால் தங்களது தனி அறையில்நீ என்ன யோசனை வச்சிருக்கிறன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்ம்மா”எனத் தன்னுடைய மனைவியிடம் கூறிக் கண்ணடித்தான் மித்ரன். 

அதில் அவனை இறுகக் கட்டிக் கொண்டு,”நீங்க அதைக் கண்டுபிடிச்சிடுவீங்கன்னு எனக்குத் தெரியும்ங்க! அது என்னன்னு உங்க வாயாலேயே சொல்லுங்க!”என்று கணவனிடம் கேட்டுக் கொண்டாள் வெண்பா. 

“அந்தப் பொண்ணு மதுபாலாவைத் தானே உன் தம்பிக்குக் கல்யாணம் செய்து வைக்க யோசிச்சு இருக்கிற?”என்றவனை மலர்ந்தப் புன்னகையுடன் நோக்கி, 

“அதே தான்ங்க! ஆனால் அதை உடனே செயல்படுத்தி விட முடியாதுல்ல? அதான், இப்போவே அத்தை, மாமா கிட்டே சொல்லி அவங்களுக்கு நம்பிக்கைத் தர வேண்டாம்னு நினைச்சு சொல்லாமல் விட்டுட்டேன்!”என்று விளக்கம் அளிக்கவும், 

“நானும் உன்னோட அந்த நோக்கத்தைப் புரிஞ்சிக்கிட்டதால் இங்கே நம்ம ரூமில் தனிப்பட்ட முறையில் உங்கிட்ட அதைப் பத்திப் பேசினேன்ம்மா”எனக் கூறி அவளைக் கட்டிக் கொண்டான் மித்ரன். 

இப்படியாக மற்ற அனைவரும் தத்தமது சந்தோஷங்களைத் தங்களது உறவுகளிடம் பகிர்ந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக உறக்கத்தை மேற்கொண்டு இருந்தச் சமயத்தில் ஒருவன் மட்டும் திடீரென்று பாதி ராத்திரியில் தூக்கத்தில் இருந்து விழித்து மெத்தையில் இருந்து எழுந்து உட்கார்ந்து விட்டிருந்தான்! 

அவனது வதனமும், உடலும் தூக்கி வாரிப் போட்டு, ஆங்காங்கே முத்துப் போன்று வியர்வைத் துளிர்த்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது அவனால்! 

உடனே,”அவளால் எப்படி அதை அவ்வளவு பூரணத்துவமாக வரைய முடிஞ்சது?”என வாய் விட்டே மொழிந்து இருந்தான் புகழேந்தி. 

ஏனென்றால், அன்று அலுவலகத்தில் மதுபாலா வரைந்து கொடுத்திருந்தப் புகைப்படங்களை அவன் வெகு நேரம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு இருந்ததற்கான காரணம் என்னவென்றால், 

அதில் ஒரு புகைப்படத்தில் தனது பிம்பமும், அந்தப் பிம்பத்திற்கு ஏற்றவாறான உடை வடிவமைப்பை அவள் வரைந்து வைத்து இருந்தது தான்! 

அப்படியே தன்னைத் தத்ரூபமாக வரைந்து வைத்திருக்கிறாள் அந்தப் பெண் என்பதை இப்போது தான் அவனால் தெளிவாக விளக்கிக் கொள்ள முடிந்திருந்தது. 

அதனால் உருவான அதிர்ச்சியாலும், வியப்பாலும் தான், தனது பாதி உறக்கத்தில் இருந்து விழித்து, நடுச்சாமத்தில் இப்படி பேயைப் போல் எழுந்து அமர்ந்து கொண்டிருக்கிறான் புகழேந்தி. 

‘அப்படின்னா? இது எனக்கு எதை உணர்த்துது? எனக்குப் புரியலையே! அந்தப் பொண்ணுத் தெரிஞ்சே இதைப் பண்ணாங்களா? இல்லைன்னா, தற்செயலாக நடந்துருச்சா? ஆனால் அந்தப் பொண்ணைப் பார்த்தால் அவங்களுக்கு என் மேல் எந்தத் தனிப்பட்ட ஈர்ப்பும் இருக்கிற மாதிரித் தெரியலையே! அப்போ இது தற்செயலாக நடந்ததாகத் தானே இருக்கும்? இப்போ இதைப் பத்தி என்னால் யார் கிட்டே கலந்து பேசி, ஒரு தீர்வுக் காண முடியும்?’என்றக் குழப்பங்கள் அவனை உறக்கத்தை விட்டுத் தூரத் தள்ளிப் போட்டு விட்டிருந்தது என்று கூறலாம்! 

‘அக்கா கிட்டே பேசினால் சரியாக இருக்கும்னுத் தோணுது! அவங்க கிட்ட உடனே பேசி ஆகனும்! ஆனால் இப்போ பேச முடியாது! நாளைக்கே பேசிடலாமா? ஃபோனில் பேசினால் சரியாக இருக்காது! அதனால் நேரில் பேசுவோம்’என்று ஒருவாறு முடிவை எடுத்து விட்டுத் தூக்கத்தை தொடர முயற்சித்து அதில் வெற்றியும் கண்டு விட்டிருந்தான் புகழேந்தி. 

அடுத்த நாள் தனது அலுவலகத்திற்குள் நுழைந்த போது தாங்களும் அதே நேரத்தில் உள்ளே வந்திருந்தார்கள் மதுபாலாவும், பிரேமாவும். 

அவர்களைப் பார்த்தும், பார்க்காததைப் போல் கடந்து செல்ல எத்தனித்தான் புகழேந்தி. 

ஆனால்,,”குட் மார்னிங் சார்”என்று அவனுக்கு வணக்கம் வைத்தனர் அந்த இரண்டுப் பெண்களும். 

அதை கண்டும், காணாமல் போவது தனக்கு மரியாதையாக இருக்காது என்பதாலேயே தானும் அவர்களைப் பார்த்து,”ம்ஹ்ம்! குட் மார்னிங்”என அவர்களுக்கு வணக்கம் வைத்து விட்டு உடனே அங்கேயிருந்து அகன்று முன்னேறிச் சென்று விட்டிருந்தான் புகழேந்தி. 

  • தொடரும்
error: Content is protected !!
Scroll to Top